Wednesday, July 4, 2018

A sloka from Prabhoda sudhakaram -Periyavaa

Courtesy: https://dheivathinkural.wordpress.com/author/chandrasekharanr/page/119/

ப்ரபோத ஸுதாகரம்.

(257 சுலோகம், 19 ப்ரகரணம்)

17. அனுக்ரஹம்.

எக்காரியம் செய்தாலும் எண்ணம் நல்லதாயின் நற்கதி கிடைக்கு மென்பது பொதுவான ஸித்தாந்தம். எந்த எண்ணமிருந்தாலும் தன்னிடம் உடலைப் பொருளை அர்ப்பணம் செய்வார்க்கும் நற்கதி அளிக்கத்தக்க அனுக்ரஹம் புரிபவன் ஸ்ரீகிருஷ்ணன்.

விஷத்துடன் பாலைக் கொடுத்த பூதனை, கொல்ல வந்த சகடாசுரன், காற்றாக வந்து தூக்கிச் சென்ற த்ருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்று அவர்களுக்கு நற்கதி யளித்தார் ஸ்ரீகிருஷ்ணன்.

தனகர்வத்தால் ஜலக்ரீடை செய்யும்போது வந்த மஹரிஷியைக் கண்டு எழுந்து உபசரிக்காத தோஷத்தால் இரண்டு அர்ஜுந மரங்களாகத் தோன்றிநின்ற யக்ஷ குமாரர்களைத் தாய்தன்னை உரலுடன் கட்டியபோது அம்மரங்களுக்கிடையே சென்று மரத்தை முறித்து நற்கதியளித்தார். நமது பக்திக்கு வசமாகி நம்மிடந் தேடிவந்தும் அருள் புரியும் குணமுடையவர் பகவான்.

கேசீ, காகன், பகன், அகன் முதலியவர்களைக் கொன்று அருள்புரிந்தார். கோபர்களைச் சூழ்ந்த காட்டுத் தீயை விழுங்கினார். இந்திரன் ஏழுநாள் விடா மழை பொழிய கோவர்த்தன கிரியை ஒரு கையால் தூக்கி கோக்கனையும் கோபர்களையும் காத்தருளினார். அனுக்ரஹத்தினா லன்றோ இதைச் செய்தார்.

கம்ஸனது வண்ணானை ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கொரு வஸ்த்ரம் கேட்க அவன் இவரை நிந்தித்தான். அபராதியான அவனைக் கொன்று வைகுண்டமளித்தார்.

கம்ஸனுக்கு சந்தனம்கொண்டு செல்லும் த்ரிவக்ரா என்றவளிடம் சந்தனம் பெற்று வக்ரத்தை நீக்கி அழகுள்ள சரீரத்தை அனுக்கிரஹித்தார். அணுவளித்தாலும் அருள்புரிவதியல்பு இவர்க்கு.

குவலயாபீடமென்ற யானையைக் கொன்று முஷ்டிக சாணூரனென்ற மல்லர்களுக்கும் கம்ஸனுக்கும் நற்கதி கொடுத்தார்.

தர்மரது ராஜஸூய யாகத்தில் எண்ணிறந்த முனிவர் அரசர் கூடிய ஸபையில் ஓயாது தன்னை நிந்தித்த சிசுபாலனுக்கு ஸாயுஜ்யபத மளித்தார். மத்ஸ்யம் முதலிய தசாவ தாரங்களில் எவரெவர் கொல்லப்பட்டார்களோ எல்லோருக்கும் நற்கதியே யளித்தார்.

மோஹத்தினால் ஜனித்த என்னை, மாயையினிடம் அர்ப்பணம் செய்து துன்பத்தை அனுபவிக்கும்போது ஹே! கிருஷ்ண என்னைக் கண்ணெடுத்துப் பாராவிடில் யான் என்ன செய்வதென மனமுருகி வேண்டு. அருள்புரிவார்.

உதாஸீனனாய் அஸங்கனாய் நீயிருந்துவிட்டால் நான் பிழைப்பதெப்படி? நான் செய்யும் பக்தியையோ க்ஞானத்தையோ எதிர்பாராமல் என்னைக் கரையேற்று, இல்லையேல் மல ஜல ரக்த மாம்ஸம் நிறைந்த உடலில் நீ தான் பந்தப்படுவாய் என கிருஷ்ணனை வேண்டு.

ஓ மனமே! உன் சஞ்சல குணத்தை க்ஷணம் விடு. உலகிலுள்ள ரஸபதார்த்தங்களை யெல்லாம் ஓர்புறத்தே வை. மற்றோரிடத்தே கிருஷ்ணனை வை, இதில் எது ஹிதமோ எது விச்ராந்தியை யளிக்குமோ அதை ஏற்றுக்கொள்.

உலகில் நாம் அனுபவிக்கும் விஷயங்களைவிட மேலானது வந்தால் இது அல்பமாகிவிடுகிறது. அதைவிட மற்றொன்று வந்தால் அதுவும் அல்பமாகும். ஆதலால் ஆசை முடிவடைவதில்லை, மனதில் கிருஷ்ணன் உதயமாகிவிட்டால் மற்றொன்றை நாடாது. ஆசையும் பூர்த்தியாகும் அவன் நிரைந்த பொருளன்றோ?

காம்ய கர்மாவினால் உபாஸனையால் ஸ்வர்க்கம் முதலியதை விரும்புபவர் விரும்பட்டும். யது நாதனின் பாதாரவிந்தத்தைப் பஜிக்கும் நமக்கு அந்த உலகால் ஆகவேண்டிய தொன்றுமில்லை.

இரும்பை அயஸ்காந்தம் இழுப்பதுபோல் கன்ணன் உருவம் எல்லோரையும் இழுக்கும். தனதன்பர்களில் ஏழை தனிகன் சிறியவன் பெரியவன் மூடன் வித்வான் என அவர் பேதம் பாராட்டுவதில்லை. மேகம், ஜாதி சம்பகமென்றும் கள்ளி என்றும் பேதமின்றி வர்ஷிக்கிறது.

ஜலம் ஒன்றைத் தவிர மற்றொன்றையும் அபேக்ஷிக்காமல் மத்ஸ்யம் அதிலேயே ஜீவிப்பதுபோல் பக்தன் அவர் சரீரத்திலே அமர்ந்து ரமிப்பான் வேறெதையும் விரும்பான்.

ஆகாசம் சூன்யமாகத் தானிருக்கிறது. இருந்தாலும் சாதகம் அதைப் ப்ரார்த்தித்த வண்ணமாயிருந்து மழைஜலத்தைக் காலத்தில் புஜித்து சந்தோஷிக்கிறது. வாக் மனசுக்கு எட்டாதவனே கிருஷ்ணன். வேண்டவேண்ட அமிருதத்தை யளிப்பான். அவனை விட்டுவிடாதே.

(ப்ரபோத ஸுதாகரம் முற்றும்)

நன்றி: ஸ்ரீ சங்கரோபதேச ரத்னம். வருடம் 1931. தொகுத்தவர்: ஸ்ரீவத்ஸ. வெ. ஸோமதேவ சர்மா


No comments:

Post a Comment