Tuesday, April 10, 2018

Kodumudinathar temple, kodumudi

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
____________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 262*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜கொடுமுடிநாதர் திருக்கோயில், திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி):*
__________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி.

*💥இறைவி:* வடிவுடைநாயகி, சௌடாம்பிகை.

*🌴தல விருட்சம்:* வன்னி.

*🌊தல தீர்த்தம்:* தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி.

*🔥ஆகமம்:* சிவாகமம்.

*ஆலயப் பழமை:* இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் - 1
திருஞானசம்பந்தர் - 1
திருநாவுக்கரசர் - 1

*🛣இருப்பிடம்:*
ஈரோட்டில் இருந்து சுமார் நாற்பது கி.மி. தொலைவிலும், கரூரிலிருந்து வடமேற்கே சுமார் இருபத்தாறு கி.மி. தொலைவிலும் கொடுமுடி தலம் இருக்கிறது.

கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

ரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஐந்து முதல் பத்து நிமிட நடை தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
கொடுமுடி,
ஈரோடு வட்டம்,
ஈரோடு மாவட்டம்.
PIN - 638 151

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும், காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*☎ஆலய தொடர்புக்கு:* தொலைபேசி: 91-04204-222375
ஆலய தங்கும் விடுதி தொடர்புக்கு: தொலைபேசி: 91-04204-225375

*கோயில் அமைப்பு:*
கோயிலுக்கு எதிர்திசையில், காவிரிக்கரை இருந்தது. இதன் கரையில் சக்தி விநாயகர் அருள்புரிந்த வண்ணம் வீற்றிருந்தார்.

இத்தலம் வந்தால் முதலில் இவ்விநாயகரை வணங்கிவிட்டுத்தான் திருக்கோயிலுக்குள் செல்ல வேண்டும். இது இத்தல ஐதீகம்.

காவிரியில் கால்நனைத்து, வானினை நோக்கி இறைவனை நினைந்து *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

சக்தி விநாயகர் முன்பு வந்து நின்று, நம் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவ தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது.

காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்து அழகுகூட்டுகிறது.

இக்கோயிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன.

இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன.

நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம்.

நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றோம். மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் சென்றோம்.

*(நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.)*

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தில் ஆவடையார் சதுர வடிவில்  காட்சியைத் தந்துகொண்டிருந்தார்..

பாணத்தின் மீது விரல் தடயங்கள் இருக்கிறதென குருக்கள் நம்மிடம் கூறினார். சுவாமிக்கு அலங்காரங்கள் நிறைந்து இருந்ததால், நாம் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை.

அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம்.

ஈசனை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் வலஞ் செய்தபோது, நர்த்தன விநாயகரைக் கண்டோம்.

சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.

இதனையடுத்து, சுவாமி சந்நிதிக்கு வலதுபுறத்தகல் அம்பாள் சந்நிதி அமைந்திருந்தது. இங்கேயும் ஈசனிடம் மனமுருகி பிரார்த்தித்துக் கொண்டதுபோல், அம்மையிடமும் பிரார்த்தனை வேண்டுதலை விண்ணப்பித்துவிட்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

வலமும், இடமுமாக சுவாமி, அம்பாள் இதுபோன்று அமைந்துள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்பெறுகிறது..

அம்பாள் சந்நிதியின் உட்பிரகாரத்தில் வலம் செல்கையில், வல்லப கணபதியைக் கண்டு, தலையிக்கு குட்டு வைத்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரைக் கண்டு, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கி துதித்தோம்.

அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி இருந்தது. மனமினிக்க வணங்கிக் கொண்டோம்.

இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் இருக்க, ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கி துதித்தோம்.

தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருந்தன. வணங்கிக் கொண்டோம்.

வடதிசையில் பைரவர் சந்நிதி கொண்டிருந்தார். முன் வந்து நின்று, பவ்யபயத்துடன் கூனக் குறுக குணிந்து வணங்கிப் பணிந்தோம்.

அடுத்து, சனீஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறத்தில், மேற்கில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வன்னி இருக்கிறது. இதன் மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி இருக்கிறது.

இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்கள் முளைத்தும், மற்றொரு பகுதிகளில் முட்கள் இல்லாமலும் இருக்கிறது.

ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை. காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.

இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை.

பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது.

இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்குகிறதென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

*நமச்சிவாய பதிகம்:*
திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடினார்.

திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடினார்.

ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து இங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்.

*தல அருமை:*
ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது.

இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன.

ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.

சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.

மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.

மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

*சிறப்பு:*
வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறதைக் காணமுடிகிறது.

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்கும்.

நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுவது வழக்கமாக உள்ளது.

அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

*திருவிழாக்கள்:*
சித்திரை திருவிழா பதினோறு நாள் நடக்கிறது.

ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

ஆடிமாத பிறப்பு கொங்கு நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விவசாயத் தொழிலே பிரதான தொழிலாக இருந்த காலத்தில் ஆடி பிறப்பு பொன்நாளாக கொண்டாடப்பட்டது.

அருகில் உள்ள அழகிய கொடிவேரி அணையில் குளித்து மகிழ்வார்கள்.

பிரார்த்தனை செய்ய வருவோரில், பெரும்பான்மையோர் திருமணம் வேண்டியும், குழந்தை பிறக்க வேண்டியும் வருகின்றனர்.

உடல் மற்றும் மன நோய்கள் தீர இங்கு வருவோரும் உண்டு.

மகுடேசுவரர் மேல் கொண்ட நம்பிக்கையாலும், பிரார்த்தனைகளாலும், தத்தம் வாழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

நவக்கிரக சாந்தி ஓமங்களுக்கும் பூஜைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். 

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடி நாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது.

எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்து கொடுத்தான்.

பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

கொடுமுடியிலிருந்து காவிரி நதியிலிருந்து நீர் எடுத்து தலையில் சுமந்துகொண்டு இசை வாத்தியங்களுடன் பஜனை செய்துகொண்டு பழனிக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

பழனி கோவிலின் சிவாச்சாரியார்கள் முதலில் கொடுமுடியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது உண்மை.

*கோரிக்கையை ஏற்கும் கொடுமுடி நடராஜர்:*
கொடுமுடி சிவனுக்கு நிகரேது என்கிறார்கள் பக்தர்கள்.

ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கியமான கோயில்களில், முதன்மையான தலமாகப் போற்றப்படுவது, கொடுமுடி ஸ்ரீமகுடேஸ்வரர் கோயில்.

சிவனார் மூலவராகவும்,  வன்னிமரத்தடியில் ஸ்ரீபிரம்மாவும் தனிச்சந்நிதியில் ஸ்ரீவீர நாராயணபெருமாளும் காட்சி தருகிற தலம் இது.

மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிற இந்தத் திருத்தலத்தில், ஸ்ரீநடராஜரும் அழகு ததும்பக் காட்சி தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

பித்ருக்களின் தோஷம் போக்கும் இந்தத் தலத்தில், வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாத கோயில் இது.

சித்திரை மாதத்தில் நடைபெறும் வருஷாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மார்கழியில் கொண்டாடப்படுகிற திருவாதிரைத் திருநாள்  இங்கு, ஆனந்தத் தாண்டவக் கோலத் தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜபெருமானுக்கும் ஸ்ரீசிவகாமி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

அலங்காரங்கள் செய்து, விசேஷ பூஜைகள் செய்கிற வைபவத்தைத் தரிசிக்க, காணக் கண் கோடி வேண்டும்.

தினமும் ஒரு அலங்காரத்தில் ஸ்ரீநடராஜர் திருவீதியுலா வருவார். 

அந்தத் தில்லையம்பலத்தானே இங்கு வந்துவிட்டதுபோல் பிரமிப்பு ஏற்படுகிறது இங்கு தரிசிக்கும் போது.

திருவாதிரை நோன்பு இருந்து, ஸ்ரீஆடல்வல்லானின் திருதரிசனத்தைக் கண்ட பிறகு, விரதத்தை முடிக்கின்றனர் அன்பர்கள்.

இந்த விரதம் மேற் கொண்டால், திருமண பாக்கியம் மட்டுமின்றி, சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருவாதிரை நாளில், இங்கு வந்து, பால், தயிர், பஞ்சாமிர்தம், பழங்கள் ஆகியவற்றால் ஆடல்வல்லானுக்கு அபிஷேகம் செய்து தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்.

ராகு – கேது மற்றும் சனி கிரக தோஷங்கள் விலகும். கலை கல்விகளில் சிறந்து விளங்கலாம்.

தடைப்பட்ட காரியங்கள் யாவும் நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள்.

*அபூர்வம்:*
இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை.

மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது.

ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை.

பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்வது வழக்கம்.

அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள்.

அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது.

புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: காந்தாரம்.

1.🔔பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொருகூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்.

2.🔔தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த் துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர்.

3.🔔சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிகளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர்.

4.🔔நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.

5.🔔போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியனவற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.

6.🔔கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.

7.🔔ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப்பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில்வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.

8.🔔புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர்.

9.🔔திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதாவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார்.

10.🔔புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.

🙏புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர்.

11.🔔கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

           திருச்சிற்றம்பலம்.

🙏மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.

      திருச்சிற்றம்பலம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர்.(அவிநாசி)*

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment