Friday, April 13, 2018

Athoor veda patasala

அந்த  செங்கல்பட்டு பைபாஸ் பிரிட்ஜ் ஏறியவுடன் அதன்  நடுமுதுகிலிருந்து இடது வண்டியை ஒடியுங்கள். காஞ்சிபுரம் செல்லும் பாதை அந்த குனிந்த பிரிட்ஜுக்குக் கீழே ஓடுகிறது. அதைப் பிடியுங்கள். ஆறு கீ.மி தூரத்திற்கு வண்டிக்கு வலிக்காமல் ஓட்டினால் ஒரு ஏர்செல் ஆஃபீஸ் வருகிறது. ம்.. பூட்டிதான் கிடக்கிறது. யாரோ இந்த ஊர்க்காரர் இரண்டு மாடி ஆஃபீஸ் திறக்கும் செல்வாக்கில் ஏர்செல்லில் உத்யோகத்தில் இருந்திருக்கக் கூடும். சரி அதை விடுங்கள். அந்த ஊர் ஆத்தூர். இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் வலது புறம் ஆத்தூர் வேத பாடசாலை என்றொரு போர்டு இருக்கிறது. அதுதான் நாம் நுழைய வேண்டிய இடம்.

சேப்பாயி இன்று காலை அங்குதான் அழைத்துச் சென்றாள். எண்பது வித்யார்த்திகள் பயில்கிறார்கள். ரிசப்ஷனுக்கு சாப்பிடப் போனது போல பன்னிரெண்டு மணிக்குதான் சென்றோம். அப்போதும் வேதம் ஓதுவது செவியில் விழுகிறது. குழந்தைகளின் ஸ்பஷ்டமான வேதகோஷம் நம்மை மெய் மறக்கவும் மெய் சிலிர்க்கவும் செய்கிறது. 

வாசலில் கோசாலை இருக்கிறது. தலையைத் தூக்கினால் எட்டடி இருக்கும் ஆஜானுபாகுவான மடி பெருத்த பசுக்கள். சாம்பல், வெள்ளை, செம்பட்டை என்று பல வண்ணங்களில் கிடேரியும் காளையுமாக கன்றுகள் மணியாட்டியபடி தலை அசைக்கின்றன. பெரும் மரத்திலிருந்து ஒரு கிளை அகத்திக்கீரைகளை யாரோ கொண்டு வந்து போட்டிருந்தார்கள். பசுக்களுக்கு ஸ்பெஷல் ஃபுட். 

கோசாலையில் மொத்தம் நாற்பது பசுக்கள் வாசம் செய்கின்றன. நாங்கள் சென்றபோது கன்றுகள் கட்டியிருக்க பசுக்கள் மேயப் போயிருந்தது. மின்விசிறி போட்டிருந்த கோசாலையில் ஈக்கள் இல்லை. கொசு இல்லை. வைக்கோலும் புற்களும் கொட்டிலில் தாராளமாக இருந்தது. 

சிறுவயதில் வீட்டு "லக்ஷ்மி"க்களைக் அய்யனார் குட்டைக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டியது ஞாபகம் வந்தது. இங்கிருக்கும் லக்ஷ்மிக்கள் நாட்டு வகையறாக்கள். சீமைப் பசுக்கள் கிடையாது. திமில் அம்சமாக இருக்கிறது. ஒரு ஜெய்ஜாண்டிக் லக்ஷ்மியின் தாவாங்கட்டையை நான் தடவிக்கொடுக்க கண்கள் சொருகி காட்டியது. அதன் மீதிருந்து கையை எடுக்க மனசில்லை. 
 
வேதபாடசாலை ஆகையால் ஸ்ருதி காமாக்ஷி சன்னிதி பிரதானமாக இருக்கிறது. வேதத்தை நான்காக வகுத்த வேதவியாஸரின் படம் ஒன்று காமாக்ஷி சன்னிதி தூணில் ஒட்டியிருந்தது. அவர்கள் சொல்லும் வேதமனைத்தையும் காதுகுளிர கேட்டுக்கொண்டிருக்கிறார். "காமாக்ஷிக்கு அபிஷேகம் கிடையாது. நாங்க சொல்ற வேதபாராயணம்தான் அம்பாளுக்கு அபிஷேகமே" என்றார் பாடசாலை குருஜி @kumara guru ghanapati குமரகுரு கணபாடி. சதுர்வேத கணபதி இருக்கிறார். காமாக்ஷிக்கு ஜடை பின்னி முன்னால் விட்டிருந்தார்கள். கொஞ்சும் அழகு. மஹா பெரியவாளின் வெங்கல சிலை தத்ரூபமாக காட்சிக் கொடுத்து ஆசீர்வதித்தது. வேதரக்ஷணம் மற்றும் கோரக்ஷணம் பற்றி அவர் வாய்க்கு வாய் அருளியது ஞாபகம் வந்தது. தெய்வத்தின் குரலுக்கு நன்றியறிவிப்பு செய்ய நான் யார்?

மாத்யான்னிகம் முடிந்து மதிய சாப்பாட்டிற்கு அந்த வேதக் குழந்தைகள் அமர்ந்தார்கள். உச்சிக் குடுமியுடன் அவர்கள் சட்டையில்லாமல் தட்டின் முன் அமர்ந்திருந்தது வேதநாயகனே ஆதிசங்கரர் ரூபத்தில் அவதரித்து வந்தது போல இங்கேயும் இத்தனை குழந்தைகள் ரூபமாக அவரே அமர்ந்திருக்கிறார் என்றே தோன்றியது. அவர்களையே பார்த்துக்கொண்டிருந்ததில் மனசு அதே வயதில் இலக்கில்லாமல் திரியும் குழந்தைகளைப் பற்றிய எண்ணம் எழுந்தது. சங்கீதா தன் பங்கிற்கு அன்னம் பரிமாறினாள். ராஜமுந்திரி, கிரோம்பேட்டை, திருச்சி, பிஹார், வாரணாசி, மைசூரு என்று எல்லா இடத்திலிருந்தும் வந்து படிக்கிறார்கள். 

மூன்று மாடிகள். வயதுக்கும் சீனியாரிடிக்கும் தகுந்தபடி ஒவ்வொரு மாடியில் குழந்தைகளுக்கு தங்குமிடம். ஆளுக்கொரு அலுமினிய பெரிய பெட்டி. பெட்டியின் பூட்டுப் போடும் நாக்கருகே மஹாபெரியவாளின் அருளாசி வழங்கும் படம். அதன் கீழே தரையில் அவர்களுக்கான தலகாணி, பாய், போர்வை. வேதம் கற்பவனின் இளமைக்கால வாழ்வு இதுதான். ஃபோன் வாட்ஸப் ஊர்வம்பு எதுவுமில்லாத அர்பணிப்பு வாழ்வு. இந்த முறையிலிருந்து ஏன் நாம் தவறிப்போனோம்? என்ற மூளையை அரிக்கிற கேள்வி பிறந்து சில நிமிடங்கள் என்னை அவர்களில் புகுத்தி வாழ்ந்து பார்த்தேன். ஆஹா. மனசு பூராவும் வேதம் நிறைந்து பிராண ஆதாரமாக நிறைந்துவிட்டால் அதன் பரிபூரண நிம்மதியும் சந்தோஷமும் வேறு எந்த வஸ்துவினால் தந்துவிட முடியும்? இதயக் கமலம் மலர்ந்துவிட்டால் கண்ணில் சொர்க்கம் தெரியாதோ?

"காமகோடி சார் காய்கறி வாங்க செங்கல்பட்டுப் போயிருக்கார். எங்கேயிருந்து வரீங்கன்னு கடைக்காரர் கேட்ருக்கார். இவர் இந்தமாதிரி வேத பாட சாலையிலிருந்து வரேன்னாராம். உடனே கடைக்காரர் காசெல்லாம் வேண்டாம்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கறி இனாமா அனுப்பறேன்.. எங்க தாத்தா தாத்தாக்கு தாத்தாவெல்லாம் இதுமாதிரி கொடுத்துருக்காங்க.. நல்லது பண்றீங்க.. அதை தொடர்ந்து செய்யணும்...அப்டீன்னு சொல்லிட்டாராம்.. காமகோடி சார் இப்படிதான் இந்த வேதபாடசாலை நடக்கிறது. சர்வேஸ்வரனும் இதோ சர்வேஸ்வர அவதாரமா இருந்தாரே மஹா பெரியவா அவராலும்தான் இந்தப் பாடசாலை நடக்கிறது" என்றார் என்னை அழைத்து பாடசாலைக் காட்டிய எங்கள் மன்னார்குடி தங்கம் ராஜகோபாலன் சார் (@mannai rajagoapalan). ஃபேஸ்புக்கில் முகம் காட்டாமல் நேரில் இன்று அவரது சேவை மனம் காட்டினார். 

மனதிற்கு நிறைவாக கோபூஜை செய்தோம். தீர்த்தம் விட்டு அன்னம் பரிமாறினோம். சனிக்கிழமை சரியான கிழமையாகக் கழிந்தது. ஸ்ரீ குமரகுரு கணபாடிகள்தான்  @kumara guru ghanapati அனைவருக்கும் உபாத்யாயர். கணீரென்று மந்திரம் சொல்கிறார். வேதம் கேட்பதும் அதில் மனது லயிப்பதும் அவனருள். சுற்றிலும் கான்க்ரீட் காடில்லாத ஆத்தூர் பாடசாலையில் தென்றல் கவரி வீசுகிறது. கண்களை மூடி குழந்தைகள் வேதம் கேட்டால் மனசுக்கு நிம்மதி. துயரங்களும் வியாபாரத்திலும் அலுவலகத்திலும் மற்றவர்கள் போட்டுப் பார்த்த மனதின் வடு ஆறுகிறது. வீக்கெண்ட் விசிட்டிற்கு உகந்த இடம். 

வேதத்தை ரக்ஷிக்க வேதம் நம்மை ரக்ஷிக்கும் என்பது வேதமொழி. நம்முடையது வைதீக மதம். வேதம்தான் பிரதானம். உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வேதம் உள்ளது. ரிஷிகளை மந்த்ர திருஷ்டா என்பார்கள். அதாவது எழுதாக் கிளவி. மந்திரத்தைப் பார்த்தவர்கள். ஒலிவடிவில் கேட்டவர்கள். வேதங்களில் சாமவேதமாக இருக்கிறான் எங்கள் மன்னை மாடு மேய்க்கும் ஸ்ரீகிருஷ்ணாவதார ராஜகோபாலன். கர்ம காண்டமும், உபாசன காண்டமும் இவற்றிற்கு மகுடம் போல ஞானகாண்டமும் வேதத்தின் பிரிவுகள் ஆகும். இந்த வேதங்களின் சாரமே மஹாபாரதத்தில் வரும் ஸ்ரீமத் பகவத் கீதை. சரி.. முடித்துக்கொள்கிறேன். வேதத்தைப் பற்றிய என்னுடைய சொற்ப அறிவு இவ்வளவுதான்.  

எல்லோரும் யத்கிஞ்சிதம் ஆத்தூர் வேதபாடசாலைக்குச் செய்யவேணும் என்பது என் ஆசை. எதிர்பார்ப்பு. திரு. காமகோடி சாரை தொடர்பு கொண்டு அந்த செங்கல்பட்டு காய்கறிக்காரர் செய்தது போல நாமும் செய்தால் மழை தவறாமல் பெய்யும். நிலம் செழிக்கும். பஞ்சம் ஏற்படாது. செல்வம் குவியும். கல்வி வளரும். நாடும் நாமும் சேர்ந்தே உயரலாம்.  

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆத்தூர் பாடசாலையின் ஏழாம் வருட ஆண்டு விழா. உபநிஷதங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளின் மேல் சம்ஸ்க்ருத நாடகங்களும் தமிழ் நாடகங்களும் நடத்துகிறார்கள். வித்யார்த்திகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. ஸ்ரீஸ்ரீ முரளீதர குருஜி வருகை புரிந்து சிறப்பிக்க இருக்கிறார். தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். நாளைக்கோ இல்லை தங்களால் இயன்ற தேதியிலோ பாடசாலை செல்லுங்கள். எதுவேண்டுமானாலும் நல்லது ஒன்றை இன்றே செய்யுங்கள். வேதஸ்வரூபமான சர்வேஸ்வரனின் அருட்கடாக்ஷத்தைப் பெறலாம்.

பின்குறிப்பு: வறண்டு கிடந்த பாலாற்றைத் தாண்டும் போது காவேரி நினைவில் புரள சட்டென்று ஏனோ தி.ஜாவின் "அம்மா வந்தாள்" அப்பு ஒரு முறை சிந்தனையில் பளிச்சிட்டான். 

படங்கள் உதவி: செல்ஃபி, சங்கீதா, ராஜகோபாலன்.

 More details about the Patasalai available in Internet
I went through
Contact phonenumber 
98844 02624