Monday, December 18, 2017

Yoga vasishtam in tamil part6

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

யோகவாசிஷ்டம் - வைராக்ய பிரகரணம் -6

வசிஷ்டர் உரை ;
"தசரதா ! நீ இக்ஷ்வாகுகுலத்தில் பிறந்து தர்மமே 
உருவெடுத்தாற்போல் எல்லா நற்குணங்களும் அமைந்து காணப்படுகிறாய்.
மூவுலகிலும் தர்மவ்ரதன் என்ற புகழ் பெற்ற நீ வாக்குப் பிறழ்வது சரி அன்று. ஜகமெல்லாம் புகழ் பெற்ற முனிவருக்குக் கொடுத்த வாக்கை காப்பாயாக. 
இக்ஷ்வாகு குலத்தோன்றலாகிய நீயே சத்தியத்தை மீறினால் இந்த உலகத்தில் எவர் சத்திய வழி செல்வர்?
சிம்ஹத்தைப் போன்ற இந்த விச்வாமிதிரரால் காக்கப படும் ராமனை அவன் ஆயுதம் ஏந்தினாலும் இல்லாவிட்டாலும் எந்த அரக்கரும் தீங்கு செய்ய முடியாது." 
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தைப் பெற்ற விஸ்வாமித்திரர் இங்கு அவர் வாயாலேயே புகழப் படுகிறார் . சான்றோரை சான்றோரே அறிவர் என்ற விதிப்படி.

ஏஷ விக்ரஹவான் தர்ம: ஏஷ வீர்யவதாம் வர:|
ஏஷ புத்த்யா அதிகோ லோகே தபஸாம் ச பராயணம் ||
" இவர் தர்மமே உருவானவர். வீரர்களுக்குள் சிறந்தவர். உலகிலேயே சிறந்த புத்திமான். தவமே உருவானவர். "

அஸ்திரசஸ்திரங்களில் வல்லவர் . தேவர் முனிவர் அசுரர் எவருமே இவருக்கு பராக்ரம்த்தில் ஈடில்லை.
இவர் அருகில் இருக்கையில் மரண வாயிலில் உள்ளவர் கூட இறவா நிலை அடைவர். 
அதனால் ராமனை இவருடன் அனுப்ப நீ தயங்க வேண்டாம். "

இதைக்கேட்ட தசரதன் ராமனை அழைத்துவர பணியாளரை ஏவினான். அந்த சேவகன் சென்று ஒரு நிமிடத்தில் திரும்பி வந்து ராமன் ஒரு கணத்தில் வருவதாக தெரிவித்ததைக் கூற தசரதன் ராமன் இருக்கும் நிலை பற்றி வினவினான்.

அதற்கு அந்த சேவகன் மறுமொழி கூறினான் .
"அரசே , ராமன் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பியது முதல் எதிலும் இச்சையற்றவனாக்க் காண்கிறான். உணவு உண்பதிலோ உடை உடுப்பதிலோ மற்ற கேளிக்கைகளிலோ சிறிதும் நாட்டமின்றி பித்துப் பிடித்தவன் போல் உள்ள அவனைக் கண்டு அவனுடைய சகோதரர்கள் நண்பர்கள் பணியாளர்கள் அனைவரும் துயருறுகின்றனர். வாழ்க்கையே வெறுத்தவன் போல் உடலும் உள்ளமும் வாடிக் காணப்படும் அவனுடைய மனஇருள் நீங்க எந்த சூரியன்எப்போது உதிப்பனோ என்று அனைவரும் கலங்குகின்றனர்."

அப்போது விஸ்வாமித்திரர் கூறினார். " அப்படியானால் அவனை உடனே அழைத்துவரச்சொல்.
இந்த மனநிலை உடல் ரீதியாலோ அல்லது உள்ளக் குழப்பத்தினாலோ ஏற்பட்டது அல்ல. இது விவேகம் வைராக்கியம் இவற்றின் உதயத்தினால் ஏற்பட்ட அறிவு தாகம். அவன் மனக்கலக்கத்தைப் போக்குவோம். " 
அப்போது ராமனே அங்கு வந்து தந்தையையும் முனிவர்களையும் வணங்கினான். மகனைக் கண்ட தசரதன் அவனைத தழுவி முகம் பார்த்து வினவினான் . " மகனே ஏன் இந்த வருத்தம்? " என்று வினவ , வசிஷ்டரும் விச்வமித்திரரும் அரசனை ஆமோதித்தனர். 
ராமன் பதில் கூற ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment