Thursday, September 7, 2017

Madhuvaneswarar temple, Nannilam

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 *பாடல் பெற்ற சிவதலங்கள் தொடர்.89.* 🌸
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🌷
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாமருளு நாயகா போற்றி!
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
      🌷 *திருநன்னிலம்.* 🌷
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்.*

*இறைவன்:* மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்.

*இறைவி:* மதுவனநாயகி, பிரஹதீஸ்வரி, 

*தல விருட்சம்:* வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி,சண்பகம்

*தல தீர்த்தம்.* பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம்.

*புராணப் பெயர்:*
மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில்.

*ஆலயப் பழமை:*
ஆயிரத்திலிருந்து-  இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதாக.

*பூஜை:* சிவாகம முறைப்படி.

*திருமேனி:* சுயம்புவானவர். 

பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்தொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணம்-நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் இருக்கிறது.

மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலிருந்தும் செல்லலாம்.

நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் அரசு மருத்துவமணை வரும். அதன் எதிரிலுள்ள சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

கும்பகோணம் -திருவாரூர் பாதையில், கும்பகோணத்திலிருந்து முப்பது கி. மி. தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
 
*ஆலய முகவரி:* 
நிர்வாக அதிகாரி
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்,
நன்னிலம்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 610 105.

*ஆலயபூஜை நேரம்:*
தினந்தோறும் காலை 7.00  மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4.00  மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத எழுபது மாடக் கோவில்களாக கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.

நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவிலாகும்.

சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசி பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருப்பார்.

முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில், இருநூற்று எழுபது அடி நீளமும், நூற்று முப்பத்தைந்து அடி அகலமும் கொண்டது. 

கோவிலுக்கு நாம் செல்கையில், இரண்டு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் காணப் பெற்றதும், சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை தரிசித்து வணங்கிக் கொண்டோம். 

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிரகாரத்தை அடைந்தோம்.

நேர் எதிரில் பிரமன் வழிபட்ட பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் இருந்ததைக் கண்டு கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

இந்த பிராகாரத்தில் வலம் வந்த போது முதலில் சித்தி விநாயகரைக் கண்டோம், விடுவோமா?.. வழக்கமான விநாயக வணக்கத்தை அவருக்குச் செலுத்திக் கொண்டோம்.

அடுத்ததாக இருக்கும் சுப்பிரமணியர், மகாலட்சுமியையும் வணங்கி நகர்ந்தோம்.

சண்டிகேஸ்வரர் சந்நிதி வந்து அவர் முன் நின்று அவர் தியாணம் கலையாது சப்தமில்லா முறையில் வணங்கிக் கொண்டோம்.

சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கும் தனியாக சன்னதிகள் இருந்தன.

நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாம். அவளையும் கைதொழுது கொண்டோம்.

மூலவர் சந்நிதிக்கு வந்தபோது, ஒரு கட்டுமலை மீது இவர் ஆலயம் அமைந்திருந்தது. 

மேலே செல்ல படிகளேறி வேண்டியதிருந்ததால் படயேறி கட்டுமலை மீதுள்ள பிராகாரத்திற்கு வந்து சேர்ந்தோம். 

பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி கொண்டிருந்தார். இவர் கருணையுடன்  அழகு வடிவமாக காட்சிதரும் விழுந்து வணங்கி எழுந்தோம்.

மூலவர் மதுவனேஸ்வரர் சதுர ஆவுடையாராகவும், சற்றுயுர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலித்துக்  கொண்டிருந்தார்.

இவர் கருவறை கிழக்கு நோக்கிய வண்ணம் இருந்தது. நாங்கள் சென்றிருந்த சமயம் விஷேச நாட்கள் ஆகும்.

ஆதலால், இறைவன் மீது குவளை, நாகாபரணம் சார்த்தப்பட்டிருப்பதைக் கண்டோம். அந்தத் தரிசனம் எங்களுக்கு ஆனந்தத் திருப்தியாக இருந்தது. 

அடுத்ததாக அம்மையை வணங்க அவளாலயம் புகுந்தோம். அவளருளும் அழகும் ஒருங்கிணைந்த திருக்கோலம் அற்புதத் தரிசனமாக இருந்தது.

*மதுவனநாயகி* என அம்பிகையையின் பெயரை உச்சரிக்கும் போதே, பக்தியின் நாக்கால் உரோமக்கால்கள் சிலிர்த்தன.

அவள் வலக்கரத்தில் மணிமாலையும், இடக்கரத்தில் தாமரையும் தாங்கி, வரத அபய ஹஸ்தத்தோடு அருளியவண்ணமிருந்தாள். மனநிம்மதியுடன் அம்மையை வணங்கி, அவளருட்பிரசாதக் குங்குமம் பெற்று வெளி நகர்தோம்.

அடுத்து கோஷ்டத்திற்கு வந்தோம். மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இருக்க, தொடர்ச்சியாக அவர்களை வணங்கிக் கொண்டோம்.

சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனையே பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், கண்டோம். இந்த அமைப்பு சற்று வித்தியாசமாக நமக்குத் தோன்றியது.

சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். 

*( உடலில் சர்ஜரி ஒன்று செய்திருப்பவர்கள் எமவாயிலிருந்து மீண்ட சம்பவம் என் சொல்வார்கள். என் துணைவியாருக்கும் சமீபத்தில் பெரிய சர்ஜரி ஒன்று செய்யப்பட்டிருந்தது. ஆகையால், சர்ஜரிக்குப் பின் சித்ரகுப்தன் இருக்கும் சன்னிதி சென்று வழிபட்டு வர வேண்டும் என்று பலர் கூறியிருந்தனர். இவ்வலாயத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டோம் இங்கேயும் சித்ரகுப்தன் சந்நிதி கொண்டிருக்கிறார் என்று.  அவரிடம், எம் அடியார் யாவருக்கேனும் உடலில் கத்தி வைக்கும் சர்ஜரியை கொடுத்து விட வேண்டாம் என மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கி வெளி வந்தோம் )* 

இங்கு தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.

இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர்களும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம் ஈசன். 

இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். 

அதனால் அங்கு சக்கரத்தால் தீர்த்தம் உருவானதால்  இத்தீர்த்தத்தை சக்கரக்குளத் தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. 

இத் தீர்த்தம் ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் அமைந்து உள்ளது.

*தல அருமை:*
துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக உருமாற்றி வைத்துவிட்டார். 

அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில், ஈசன் தேவர்களை தேனீக்களாக உருமாற்றி வைத்திருந்த தேவர்களை இங்கேயே கூடுகட்டி வசிக்க  செய்து லிங்க வழிபாடும் செய்துகொள்ளும்படியும் கூறினார். 

தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் *"மதுவனேஸ்வரர்"* என்றும் அம்மன் *"மதுவன நாயகி"* என்றும் பெயர் பெற்றனர். 

தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் *மதுவனம்* என்று பெயர் பெற்றது.

இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.

ஒருசமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார்.

வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர்.

தேவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். 

வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது. 

சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீதே கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

*தல பெருமை:*
ஈசனின் அளவற்ற கருணைக்கு ஓரறிவு, ஈரறிவு உயிரினங்கள், மானிடர்கள் என்று பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் தலமே திருநன்னிலமாகும்.

ஒருமுறை அந்த பாக்கியம் தேவர்களுக்கு கிட்டியது. விருத்திராசூரன் என்பவன் தேவலோகத்தின் எல்லையை அடைந்தான்.

இந்திரன் அதிர்ந்துபோய் சபையை கூட்டினான். எங்கு செல்வது என்று தெரியவில்லை. நமக்கு மரணமில்லைதான்; ஆனால், சிறையிலேயே என்றென்றும் இருக்க வேண்டி வந்தால் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். 

ஆபத்து காலத்தில்தான் நாம் ஈசனை நினைவோமே? அதுபோல்தான் போல....இவனும் நினைத்தான்.

அப்போது தேவர்களில் ஒருவர் யோசனை தெரிவித்தார்: ''இந்திரரே, இம்முறை நாம் சீந்தராவணிக்கு செல்வோம். விருத்திராசூரன் இருளில் கூட நிழலை கண்டுபிடிப்பான். ஒன்று சிறையில் வாழ வேண்டும்; இல்லையேல் ஓடியபடி இருக்க வேண்டும். இனி நாம் தேவர்களாக இருக்க வேண்டாம். ஒளியுடல் உதறுவோம். சூட்சும ரூபத்தை சுருக்கிக் கொள்வோம். தேனீக்களாக மாறுவோம். 

தேனை உறிஞ்சி ஈசனை பூஜிப்போம். காற்றில் மிதந்து வேதங்களையே ரீங்காரிப்போம். ஈசனின் அருளிருந்தால் அசுரனை வதம் செய்வோம். இல்லையெனில், நிரந்தரமாக தேனீக்களாகவே வாழ்வோம்.'' என்றார்.

அனைவரும் இந்த யோசனையை அப்போதே ஏற்றார்கள். கண நேரத்தில் ஒளியுடல் சுருங்க, தேனீக்களாக மாறினார்கள். பிறைச்சந்திர வடிவில் வானில் நின்றனர். தேவலோக நகரமான அமராவதியின் வாயிலிலிருந்து பூலோகத்தை நோக்கி ரீங்காரமிட்டபடி சீந்தராவணி எனும் திருநன்னிலம் நோக்கிப் பறந்து வந்தனர்.

லிங்க ரூபமாக வில்வ வனத்திற்கு மத்தியில் பேரரசனாக திகழ்ந்தருளிக்கொண்டிருந்தார். 

கண் பார்வை மங்கும் தொலைவு வரை மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன் வாசம் விண்ணுலகு வரை வீசியது. மகேசன் கூட சற்று மயங்கியிருந்தார். 

பூக்குள் குமிழ் குமிழாய் தேன் பளிங்குபோல் ஒளிர்ந்து மலர்ந்திருந்தது.

தேவ தேனீக்கள் வட்டமடித்து ஒவ்வொரு மலரின் இதழ்களையும் ஆசனமாக மாற்றி அமர்ந்தனர். அதில் யோகி போன்று தியானித்தனர். 

மனித உரு எடுக்காது, மாயையில் சிக்காமல், கடமைத் தளைகளால் கட்டப்படாமல், தேனீக்களாக இருப்பது எத்தனை சுகம் என்று ஆனந்தமாக அப்பூக்களில் அமர்ந்து அமர்ந்து அலைந்தனர்.

விஸ்தாரமான சோலைகளில் புஷ்பம் மலரும் வரை காத்திருந்து தேனீக்கள் தேன் சேகரித்தன. 

முன் சிறுவாயில் தேனினை உறிஞ்சி அதன் மென்சூடு குறையும் முன்பு வில்வ வனத்தினுள் உறைந்திருக்கும் ஆதிசிவனை நோக்கிச் பிறகு விரித்துப் பறந்தனர். 

தேக்கிய தேனை அபிஷேகமாக ஈசனின் மீது சிந்தி பூசி மெழுகினர்.

ஈசனும் தேவ தேனீக்களின் வினோத பக்தியின் ஆராதிப்பைக் கண்டு வியந்தான். 

காலங்கள் உருண்டன. பெரிய தேனடைகள் தோன்றின. தைல தாரைபோல கண நேரம்கூட விடாது அபிஷேம் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

தேவ தேனீக்கள். நாளாவட்டத்தில் தனிமைத் தவமிருந்த தேவர்கள் நெஞ்சுரம் மிக்கவர்களாக மாறிவிட்டிருந்தனர்.

தவத்தின் பலனால் வரங்கள் பல குவிந்தன. தேவ தேனீக்களுக்கு இனியதொரு நாளில் ஈசன் காட்சி தந்தார். தனக்கு அபிஷேகித்த தேன் எத்தனை இனித்தது என்பதுபோல பேரானந்தத்தில் தேவதேனீக்களை மூழ்க்கினார்.

தேவதேனீக்கள் மீண்டும் தங்கள் பழைய உருவம் பெற்றனர். 

*"மதுவனேஸ்வரா, மதுவனநாதா"* என்று சிரசுக்கு மேல் கைக்கூப்பி தேவர்கள் வழிபட்டனர்.

வேதமந்திரங்களால் மதுவனத்தை நிறைத்தனர்.  நெஞ்சில் வீரத்தோடும், பலமேறிய புஜத்தோடும் தேவர்கள் விருத்திராசூரனோடு போரிடப் புறப்பட்டுப் போயினர்.

தெய்வத்தை துணை கொண்ட தேவர்கள் வெற்றி பெற்றனர். 

தான் தெய்வத்திற்கும் மேலானவன் என்று ஆணவத்தோடு திரிந்த விருத்திராசூரன் வீழ்ந்தான். 

ஈசனின் சிருஷ்டிகளில் அவனை வழிபட ஈ, எறும்பு, தேனீ, பாம்பு என்று எல்லா ஜீவன்களுக்கும் உரிமையுண்டு என்று காட்டும் தலங்களில் இதுவும் ஒன்று என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இத்தலத்தின் ஆச்சரியமே இக்கோயிலை கட்டிய கோச்செங்கட்சோழன்தான். கோச்செங்கணான் தன் முந்திய பிறவியில் சிலந்தியாக இருந்ததும், தேனீக்கள் பூஜித்த மதுவனேஸ்வரருக்கு ஆலயம் எடுத்ததும், பூச்சியினத்தின் பக்தி ஒற்றுமைக்குள் ஒளிரும் அற்புதம். 

இவன் எழுப்பிய கட்டுமலைக்கோயில் என்ற அமைப்பிலேயே இந்த ஆலயமும் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது பதிகத்தில் இதை உறுதி செய்கிறார். 

பல யுகப் பெருமைகளும், சமயக் குரவர்கள் பாடிய பெருமையும் கொண்டது திருநன்னிலத்து ஆலயம். 

கட்டுமலைக்கோயிலின் நேர்த்தியான கட்டமைப்பு மனதை ஈர்க்கும். நீங்கள் இவ்வாலயம் செல்ல நேரும்போது, மூலவர் ஆலயப் படிகளின் மேலேறும்போது, வலப்பக்கத்தில் பிரம்மனால் நிறுவி வழிபட்ட *பிரம்மபுரீஸ்வரரை* தவறாமல் கண்டு வணங்கிக் கொள்ளவேண்டும். இவர் மிக சக்திக்குரியவர்.

கருவறை சந்நிதியை நெருங்கும் போது.........
உண்மையான பக்தனுக்கும் அடியார்க்கும் இவ்விடத்தில் அருட்தேன் அருவமாகப் பாய்வதை உணரப் பெறமுடியும்.

யுகாந்திரங்களாக ஈசன் இங்கிருக்கிறார் எனும் தொன்மை நம் மனதை நெகிழ வைக்கும்.

அமுதத்திற்கு நிகரான, நிவேதனத்தில் சமர்ப்பிக்கப்படும் *மதுபர்க்கம்* எனும் தேனால் ஈசனை அபிஷேகம் செய்ததால் இவருக்கு *மதுவனேஸ்வரர்* என்று திருநாமம் ஏற்பட்டது.

தேனில் இனிப்பு தவிர வேறெந்த சுவையும் இருக்கப்பெறவில்லை.

அதுபோல மதுவனேஸ்வரர் உங்கள் வாழ்வில் இன்பங்களை மட்டுமே அருள்வார். உங்கள் தேவைகள் நிறைவேற இவரை தேனால் அபிஷேகம் செய்யுங்கள். மலர் மாலை சூட்டி அழகுறச் செய்யுங்கள். உங்கள் வாழ்வு மலர் போல் மணந்து தேன் போல் இனிப்பை பல் பெறுவீர்கள்.

மதுவனேஸ்வரர் எனும் திருநாமமிட்டுள்ளதால் மயங்கவைக்கும் சகல கலைகளுக்கும் அதிபதியாக இவர் விளங்குகிறார்.

இசையோ, ஓவியமோ, காவியமோ, வியாபாரமோ,  அதை விரும்புவர்கள் இத்தல நாதரை கரைந்துருகி துதித்தால் போதும், கலைஞானம், தனஞானம் ஓடோடி வந்து உங்களை அரவணைத்துக் கொள்ளும். உண்மை. 

*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்
ஏழாம்ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🍀1. தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி பண்ணியல் மென்மொழி யார்இடக் கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀2. வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச் சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான் பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவ நலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀3. கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார் உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான் நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார் நச்சிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀4. பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச் சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லி நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀5. பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன் நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான் நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀6. வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான் பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும் நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀7. தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட் படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான் மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னி நடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀8. குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும் மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர் தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும் நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀9. கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய் அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான் தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்க நமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀10. கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதற ஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

🍀11.கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில் நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனைச் சேடியல் சிங்கிதந் தைசடை யன்றிரு வாரூரன் பாடிய பத்தும்வல் லார்புகு வார்பர லோகத்துள்.
           திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை. 
மேற்க்கண்ட மூன்று விழாக்களுக்கும் சுவாமி புறப்பாடு உண்டு.

ஆடி சுவாதியில், சுந்தரருக்குக் குருபூஜை.

பிரதோஷம், மாத சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்குரிய விஷேசங்கள் அனைத்தும்.

*தொடர்புக்கு:*
91- 94426 82346
91- 99432 09771

*நாளைய தலம்...திருக்கொண்டீச்சரம்.*

            திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment