Tuesday, July 11, 2017

Elephant of Jains destroyed

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
              *(153-வது நாள்.)*
          *22- வது படலம்.*
🌻  *திருவிளையாடல்புராணத் தொடர்.* 🌻
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
*சமணர் ஏவிய யானை வதம் செய்த படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
விக்கிரம பாண்டியன் தந்தையின் உத்தரவுப்படி கர்ப்பக் கிரகத்தின் வடமேற்கில் சித்தருக்கு கோவில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜித்தான்.

சிற்றரசர்களால் வணங்கப்பட்டு, நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான்.

நாடு பிணியற்று சுபீட்சமாக இருந்தது. எங்கும் மகிழ்ச்சி, திருவிழா பூஜைதான்.

காஞ்சியை அப்போது சோழன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை. 

அவனை எப்படியாவது வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது. உடனே சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர்.

"பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரில் வெல்ல முடியாது. 

ஆபிசாரப்பிரயோகம் செய்துதான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும். "அவனை அழித்தால் பாதி இராஜ்ஜியம் தருகிறேன்" என ஆசை காட்டினான்.

சைவர்களின் விரோதியாயிற்றே சமணர்கள்! இவ்வளவு போதாதா? கரும்பு தின்னக் கூலி கொடுத்தா மறுக்கவா போகிறோம்! 

உடனே அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்து ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை இட்டு, தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும், நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களாலும், விலங்குகள், பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமம் செய்தனர்.

மேகம் இடி இடிப்பது போல் பிளிறிக் கொண்டு துதிக்கையில் ஒரு உலக்கையோடு பெருத்த யானையொன்று தோன்றியது. 

அது நடந்தால் பூமி நடுங்கியது. காதுகளை சிலிப்பியபோது மேகங்கள் கலைந்து அலைந்தன. கொம்புகளால் மழையைப் பிளந்தது........
அப்போது சமணர்கள், யானை அருகாக வந்து *மதுரையையும் அதன் அரசனையையும் அழிப்பாயாக!* என ஏவினார்கள்.

பேரொலியுடன், மிருகங்களும் நடுநடுங்க யானை தென் திசை நோக்கி விரைந்தோடியது. 

செய்தியறிந்த விக்கிரமன் ஆலயத்திற்கு ஓடி வந்து ஆண்டவனிடம், 
மகா மேருவை வில்லாகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும்,
 பூமியைத் தேராகவும், வாசுகியை நாணாகவும், வேதங்கள் நான்கும் குதிரைகளாகவும், 
பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகவும் கொண்டு முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவா! 
ஆனால் இவையனைத்தையும் உபயோகம் செய்யாமல் சிரித்தே முப்புரங்களையும் பஸ்பமாக்கியவனே! 
அன்று மலர்ந்த ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு பூஜித்தும், உன் அருள் கிடைக்காமல் தனது கண் மலரால் பூஜை செய்த மகா விஷ்ணுவுக்கு சக்கராயுதம் அருளியவனே! மார்க்கண்டேயனுக்காகக் காலனைக் காலால் உதைத்தவனே! 
ஆலாலகண்டனே!
அங்கயற்கண்ணி மணாளா!
சுந்தரத் தாண்டவா!
கங்கை அணிந்தவா!
பிறை சூடியனே!
சூரிய, சந்திர அக்கினியை விழியாகக் கொண்டவனே!
நாகாபரண மூர்த்தியே!
வாமபாகத்தை தேவிக்குத் தத்தம் செய்தவனே!
இந்த யானை உனக்கொரு பொருட்டா!
என்னையும், மதுரை மக்களையும் உன்னையன்றி எவர் காத்திடுவார்! எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டான்.

*"மன்னா!, வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை விரைவில் கட்டி முடி. நான் வில் வீரனாக வந்து அம்மண்டபத்தின் மேலிருந்து கொண்டு யானையை வதைக்கிறேன்"* என அசரீரி கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான்.

உடனடியாக மண்டபத்தை கட்டி அமைத்தான். அதன்மேல் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவினான்.

அப்போதுதான் அந்த விந்தை நடந்தது....

கருநிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி, பதினாறு வயதோனவனாய், இடுப்பில் கத்தியுடனும், இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும், வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும், காதுகளில் சங்குக் குண்டலம், கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில்வீரன் தோன்றி நின்றான்.

அப்போது யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. சுவாமி வலது காலைப் பின்னால் வைத்து, இடக்காலை முன்னால் வைத்து 'ஹுங்'கார சப்தத்தோடு நரசிம்மத்தை நினைக்க விட்ட அம்பு யானையின் உயிரை ஒரு நொடியில் பறித்து விட்டது.

இந்த இடமே *ஆனைமலை* எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் இதுவே....

பாண்டியன், வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் 'பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக் கென்று பற்றிக் கொண்டான்.

"எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும்" என விண்ணப்பித்தான்.

இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார்.

அது மட்டுமா? ராஜசேகரன் என்ற சிறந்த புதல்வனும் பிறக்க வரமளித்தார். 

விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொண்டார் சோமசுந்தரப் பெருமான்.

          திருச்சிற்றம்பலம்.

*திருவிளையாடல் புராணத் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*