courtesy:Sri.SSR
இன்று சிவராத்திரி. சிவ ஸ்மரண செய்ய 25 சிவன் நாமங்கள் வரும் ஒருத் திருப்புகழை பார்க்கலாமா?
விராலிமலை
ஞானம் பெற
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு பெருமாளே
மேரு மலை கலங்கவும், கடல் தீக் கொளுத்தவும், சூரன் இறக்கவும், பேய்கள், பருந்துகள்,கழுகுகள் ஆட போரை நாடிச் சென்று பரிசுத்தமான கடப்ப மாலையை அணிந்தவனே, கருணை மேருவே, பெருமை வாய்ந்த திருவிராலி என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே, யானையின் உடலை அழித்தவரும், திரிபுரம் எரித்த கயிலை மலைத் தலைவரும், பெரிய யோகியும், சுடு காட்டில் நள்ளிருளில் ஆடுபவரும் ஆகிய சிவ பெருமானின் ஞான நிலையில் நான் புகும்படி அருள மாட்டாயோ?
பதம் பிரித்தல் பத உரை
கரி புரம் ஆரி காம ஆரி திரி புரம் ஆரி தீ ஆடி
கயிலையாளி காபாலி கழை யோனி
கரி புர(ம்) அரி = யானையின் உடலை அழித்தவர்
காம அரி = மன்மதனை அழித்தவர்
திரி புராரி = மூன்று புரங்களை அழித்தவர்
தீ ஆடி = நெருப்பு அபிஷேகம் கொள்பவர்
கயிலையாளி = கயிலை மலை இறைவர்
காபாலி = பிரம கபாலத்தைக் கையில் கொண்டவர்
கழை யோனி = மூங்கில் அடியில் தோன்றியவர்
கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடு ஆடி கா யோகி சிவ யோகி
கர உதாசன = கையில் நெருப்பை ஏந்திய
ஆசாரி = தலைவர்
பரசு = மழுவை
பாணி = கையில் உடையவர்
பானாளி = நள்ளிருளை உகந்தவர்
கணமோடு ஆடி = பேயுடன் ஆடுபவர்
கா யோகி = யோகத்தை உடலாகக் கொண்டவர்.
சிவ யோகி = சிவ யோகி
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி
பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி
பரம யோகி = பரம யோகி
மா யோகி = மகா யோகி
பரி அரா ஜடா முடி = பெரிய பாம்பைச் சடையில் சூடியவர்
பகர் ஒணாத = சொல்லுதற்கு அரிய
மா ஞானி = மகா ஞானி
பசு ஏறி = இடப வாகம் உடையவர்
பரதம் ஆடி கான் ஆடி பர(ம) வயோதிக அதீத
பரம ஞான ஊர் பூத அருளாயோ
பரதம் ஆடி = கூத்து ஆடுபவர்
கான் ஆடி = சுடு காட்டில் ஆடுபவர்
பர = மேலானவர்
வயோதிக அதீத= மூப்பைக் கடந்தவர் (ஆகிய)
பரம = பரம சிவபெருமானது
ஞான ஊர் = ஞான நிலையில்
பூத (புகுத) = புகும்படி
அருளாயோ = அருள் செய்ய மாட்டாயோ?
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி
துரக கோப மீது ஓடி வட மேரு
சுருதி ஆடி = வேதங்களை ஓதும்
தாதா = தந்தையாகிய பிரமன்
வி = மிகவும்
வெருவி ஓட = பயந்து ஓடவும்
மூதேவி துரக = மூதேவி அகன்று ஓடவும்
கோபம் மீதோடி = கோபம் மிகவும் கொண்டு
வட மேரு = வடக்கே உள்ள மேருமலை
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி
சுர(த்)தினோடு சூர் மாள உலகு ஏழும்
சுழல = சுழன்று கலங்கவும்
வேலை தீ மூள = கடல் தீக் கொளுத்தவும்
அழுது அளாவி = அழுகை கலந்து
வாய் பாறி = வாய் கிழியும்படி
சுரு(த்)தினோடு = பேரொலியுடன்
சூர் மாள = சூரன் இறக்கவும்
உலகு ஏழும் = ஏழு உலகங்களும்
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள
திரளினோடு பாறோடு கழுகு ஆட
திகிரி மாதிர ஆவார திகிரி = வட்டமாகிய திக்குகளை மறைக்கின்ற சக்ரவாளகிரி
சாய = சாய்ந்து அழியவும்
வேதாள திரளினோடு = பேய்க் கூட்டங்களோடு.
பாறோடு = பருந்தும்.
கழுகு ஆட = கழுகும் ஆட.
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார
திரு விராலியூர் மேவு பெருமாளே.
செருவில் நாடு = போரை நாடிச் சென்ற
வான் நீப = பரிசுத்தமான கடப்ப மாலையை அணிந்தவனே
கருணை மேருவே = கருணை மலையான மேருவே
பார = பெருமை வாய்ந்த
திரு விராலி ஊர் = அழகிய விராலியூரில்
மேவு பெருமாளே =வீற்றிருக்கும் பெருமாளே
அதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ
பாடலின் பொருள் புரிந்து கொண்டோம் பாடலை கேட்கலாமா?
No comments:
Post a Comment