பஞ்சாரண்யத் தலங்கள்
ஈசன் அருளும் பஞ்சாரண்யத் தலங்களாக அறியப்படுபவை,
முல்லைவனத்தலம்
ஈசன் அருளும் பஞ்சாரண்யத் தலங்களாக அறியப்படுபவை.
1.முல்லைவனத்தலம் திருக்கருக்காவூர்.
2. பாதிரிவனத்தலம் திருஅவளிவநல்லூர்.
3. வன்னிவனத்தலம் அரித்துவார மங்கலம்.
4. பூளைவனத்தலம் ஆலங்குடி.
5.வில்வ வனத்தலம் திருக்களம்பூர்.
ஒரே நாளில் இவ்வைந்து தலங்களையும் தரிசித்தால் கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். அப்படி தரிசனம் செய்வதற்கென முன்னோர் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியுள்ளனர்.
முதலில் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருக்காவூர். இங்கு உஷத் கால பூஜை காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள் வழிபட வேண்டும்.
இரண்டாவது அவளிவநல்லூரில் காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபட வேண்டும்.
மூன்றாவது அரித்துவாரமங்கலத்தில் உச்சிகாலத்தில் முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வழிபடவேண்டும்.
நான்காவதாக ஆலங்குடி, இங்கு சாயரட்சையில் மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக திருக்களம்பூர், இங்கு அர்த்த ஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும். இந்த ஐந்து தலங்களும் கும்பகோணத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
ஒருமுறை திருஞான சம்பந்தர் பஞ்சாரண்ய தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யும் எண்ணத்துடன் முதல் நான்கு தலங்களையும் தரிசனம் செய்து அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொள்ள திருக்களம்பூர் வந்தார். ஆனால் கோயிலுக்கு செல்ல முடியாதபடி வெட்டாறு எனப்படும் முள்ளியாற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அந்நிலையில் துடுப்புகூட இல்லாத படகில் தன் அடியார்களுடன் ஏறிய திருஞானசம்பந்தர் இறைவனை நினைத்து பதிகங்கள் பாடி மறுகரையை அடைந்தார். அங்கு இறைவன் உமையுடன் இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார்.
இதற்கிடையில் ஆலயத்தில் அர்த்த ஜாமபூஜை செய்ய இருந்த அர்ச்சகர்களிடம் அசரீரியாக ""என் பக்தன் சம்பந்தன் வந்து கொண்டிருக்கிறான். எனவே பூஜையை சற்று தாமதமாக செய்யுங்கள்'' என்று கூறினார்.
ஞானசம்பந்தர் கோயிலை வந்தடைந்தபொழுது மறுநாள் அதிகாலை வந்து விட்டது. அதனால் அப்பொழுது நடக்க வேண்டிய உஷத்கால பூஜையின்
பொழுது முதல்நாள் இரவு நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜையை அர்ச்சகர்கள் செய்தார்கள். அன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசை திதியாகும். அதாவது தீபாவளித்திருநாள்.
இன்றளவும் இதனை நினைவு கூறும் விதமாக ஐப்பசி மாத அமாவாசையன்று நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜை மறுநாள் காலையிலேயே நடத்தப்படுகிறது. மேலும் முள்ளியாற்றில் "ஓடத் திருவிழா'வும் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment