Friday, August 29, 2025

Krishna tied

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர் J K  SIVAN

21 கட்டுண்ட மாயன்.

கோகுலத்தில்  உகால்பந்த் ஆஸ்ரமம் என்று ஒரு ஸ்தலம். அங்கே தான் கண்ணனை யசோதை உரலில் கட்டிப்போட்டாள் . அங்கே அந்த  மர உரலை பார்த்தோம்.  5250 வருஷம் ஆனாலும் இன்னும் இருக்கிறது.  பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி உண்டு.  சந்தோஷமாக அதை தொட்டு கண்ணனை நினைத்து வணங்கினோம்.
கோபியர்கள்  எல்லோருமே  பால் தயிர்  வெண்ணெய், நெய்  போன்றவற்றை தயாரிப்பவர்கள், பெரிய பெரிய மண் பாண்டங்களில் அவற்றை சேமிப்பவர்கள்.  கிருஷ்ணனுக்கு வெண்ணெய்  என்றால் அளவற்ற விருப்பம். எவ்வளவு உண்டாலும் அவனுக்கு இன்னும் வேண்டும். 

ஒருநாள்  கோகுலத்தில்  நந்தபவனத்தில் யசோதை  தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். தூங்கிக்கொண்டிருந்த கண்ணன் விழித்துக்கொண்டு அம்மாவைத்  தேடுகிறான்.  அந்த பெரிய  மாளிகையில் அவள் தயிர் கடையும் இடத்துக்கு தத்தி தத்தி  நடந்து செல்கிறான். யசோதை  தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள்.  அவளிடம் அவனுக்கு பால் குடிக்க வேண்டும். 

''கிருஷ்ணா, நீ அவள் தயிர் கடைவதை நிறுத்தி, அவள் மடியில் ஏறி படுக்கிறாய்.  ஆனந்தமாக  அவளிடம் பால் குடிக்கிறாய். பாதியில்  உன் தாமரைச் செவ்வாயைத் திறந்து சிரிக்கிறாய்.  அதற்குள்  யசோதைக்கு அடுப்பங்கரையில்  பாலைக்  காய்ச்சிக்  கொண்டிருந்தது ஞாபகம் வந்து, பால் பொங்குவதற்குள் அடுப்பை அணைக்க எழுந்து ஓடுகிறாள்.  கிருஷ்ணா,  உனக்கு கோபம் வந்துவிட்டது? வராதா பின்னே?  இப்படி பாதியில்  பால் குடிக்கும் போது  கொடுப்பதை நிறுத்திவிட்டு அம்மா எழுந்து போனால்? உன் கோபத்தை எப்படி வெளிப்படுத்தி னாய்?  உன் கண்ணில் அவள் தயிர் கடைந்துகொண்டிருந்த மத்து கண்ணில் பட்டது. அதை எடுத்து  அந்தப்  பெரிய  தயிர் சட்டியின் மேல்  வீசினாய்.  உன் அடியைத் தாங்குமா  தயிர் சட்டி?  மண்டையை போட்டு விட்டு  மோக்ஷம் அடைந்தது.  தயிர் வெள்ளம் எங்கும் ஓடியது.   உள்ளே பால் கொதித்து வழியும் சமயம். நல்லவேளை  பால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து  இறக்கி வைக்க முயலும்போது டமால் என்று தயிர் சட்டி உடையும் சத்தம் காதில் விழுந்தது.  என்ன ஆச்சு?  யசோதை வீட்டின் முன் கட்டுக்கு ஓடி வந்தாள்.   ''அடாடா,  அவள்  கடைந்துகொண்டிருந்த  தயிர் பானை உடைந்து கிடக்கிறதே. தயிர் அத்தனையும் உருண்டு ஓடுகிறதே. உன் சேட்டைகளில் இதுவும் ஒன்று  என்று சொல்லவேண்டுமா? 
என்ன சத்தம் என்று ஓடி வந்தவள் நீ தான் காரணம் என்று தெரிந்து  உன்னை தேடுகிறாள்.  குற்றம் நடந்த இடத்தில்  நீ  காணோம்.  எங்கே அந்தப் பயல்?  வேதங்களால் தேடப்படும் உன்னை அந்த அன்னை தேடினாள் . பின்புறம்  ஒரு உரல் மேல் உட்கார்ந்து கொண்டு  நீயும் சாப்பிட்டுக்கொண்டு ஒரு பூனைக்கும்   வெண்ணெய்  ஊட்டிக்  கொண்டிருந்தாய். உன்னைப்  பார்த்த போது யசோதைக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?  கோபம் உச்சிக்கேறி விட்டது யசோதைக்கு.  ஒளி வீசும்  தாமரை முகத்தையுடைய  கண்ணா,உன்னை கர  கர வென்று பிடித்து இழுத்தாள்.  உன் நண்பர்கள் வேறு உன்னை சூழ்ந்து கொண்டு நீ இருக்கும் இடத்தில்  பூந்தேன் குடிக்க வட்டமிடும் வண்டுகள் போல் சுற்றிக்கொண்டு  இருந்ததை வேறு பார்த்தாள் .  நீ  பயந்தது போல் நடித்தாய்.  மாயா  ஜாலக்காரன் ஆயிற்றே நீ.   யசோதையின் கண்கள் கோபத்தோடு அங்கும் இங்கும் பார்த்தன.  வீட்டின் பின்புறம் தோட்டத்தில் அவள் கண்ணில்  ஒரு மரஉரலும்  சில  மணிக்கயிறுகளும்  தென்பட் டன.  கன்றுக்குட்டிகளை  கட்டிப் போட  உபயோகிப்பவை.

என் தெய்வமே, எவர்க்கும் இதுவரை தோன்றாத ஒரு எண்ணம் அந்த புண்யவதி யசோதா என்கிற பாக்ய சாலிக்கு
 தோன்றியது. உன்னைக் கட்டிப்போட வேண்டும் என்று முடிவெடுத்தாள் .  உன்னோடு சேர  வேண்டும், உன்னோடு பிணையவேண்டும் என்று எத்தனையோ யோகிகள், மஹான்கள், ரிஷிகள் காத்திருக்கிறார்கள்.   எவர் பிடிக்கும் அகப் படாதவன்  நீ.     

கயிறு நீளம்  போதவில்லை உன்னைக் கட்ட,  பல கயிறுகள் எடுத்து முயன்றாள்.  உன்னைக் கட்ட  எந்த கயிறுக்கும் நீளம் போதவில்லையே?  ஒரு சில அங்குலங்கள் குறைவாகவே இருந்தன.  என்னப்பனே ,ஹரி,  யசோதையின் கோபி மார் தோழிகள் கூடிவிட்டனர்.   சிரித்துக்கொண்டே உன்னைக் கட்டிப்போடும் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள்.  கயிறுகள் ஒவ்வொன்றாய் எடுப்பதும் உன்னைச்  சுற்றுவதும், அது போதாமல் எறிந்துவிட்டு அடுத்த கயிற்றை எடுத்து உன் இடுப்பில் சுற்றுவதுமாக  வியர்க்க  விறுவிறுக்க  யசோதை கஷ்டப்படுவதை கண்டு சிரிப்பு வந்தது.  பாவமாக  இருந்தது, உன்னைக் கட்டிப் போடுவதும்,  அவள்  கட்டிப்போட முயல்வதும்  ரெண்டுமே தான்.   உன் உருவம்   எவராலும்  கட்டிப்போட  முடியும்படி  யானதா?  பாவம் அம்மா, என்று அவள் மேல் பரிதாபத்தோடு உன்னை கட்டும் அவள் முயற்சிக்கு இடம் கொடுத்தாய்.
கட்டுண்ட மாயன் நீ.  எதற்கும் எவருக்கும் கட்டுப்படாதவன்  நீ   பாசத்துக்கு  கட்டுப்பட்டாய்.  பாசம்  என்றாலும் கயிறு தானே. 
''அப்பாடா, இந்த விஷமக்காரனுக்கு தக்க தண்டனை கொடுத்தாகிவிட்டது'' என்று ஒருவழியாக திருப்தி பெருமூச்சுடன் யசோதை  உன்னை அந்த கல்  உரலோடு சேர்த்து கயிற்றால் உன்  இடுப்பை கட்டிவிட்டு உள்ளே சென்றாள்.   எல்லோர் எதிரிலும் ''நீ செய்கிற விஷமத்துக்கு இது தான் தண்டனை. இங்கேயே  கொஞ்ச நேரம்  கட்டுண்டு கிட. அப்போது தான் புத்தி வரும்'' என்று சொன்னாள் . நீ  காதில் வாங்கவில்லை.   உரலுக்கு  உள்ளே நீ ஒளித்து  வைத்திருந்த வெண்ணையை எடுத்து ரசித்து சாப்பிட ஆரம்பித்தாய்.  

 எந்த பாச  பந்தத்தோடும் பிணை படாமல் இருப்பவர்களுக்கு தானே நீ  தென்படுபாய்.  எந்த பிணைப்பும் அற்றவர்கள்  தானே உன்னை அடைய முடியும்?   உன்னை  இணைபிரியாத  பாசபிணைப்பில் உள்ள   அன்னை யசோதா எப்படி  உன்னைத் தனியாக  பிரிந்து இருக்க கட்டிப்போட்டாள் ?''  இது தான் உன் தாமோதர லீலை தான். தாமம் என்றால் கயிறு உதரம் என்னால் வயிறு.   கண்ணா, நீ  எதிரே பார்த்தாய். நெடிதுயர்ந்த ரெண்டு அர்ஜுனன் (மருத)மரங்கள்  அருகருகே நிற்பது  கண்ணில் பட்டது. அதே நேரம் உன் கடமை  உனக்கு நினைவுக்கு வந்தது.   நளகூவரன், மணிக்ரீவன் எனும் குபேரனின் ரெண்டு புத்திரர்களும்  தகாத செயலால் நாரதரிடம் சாபம் பெற்றதும், துவாபர யுகத்தில்  உன்னால் தான் சாப விமோச னம் என்பதும் புரிந்தது.

மர உரலில் கட்டுண்ட கிருஷ்ணன்  மெதுவாக  உரலை இழுத்துக்கொண்டு அந்த  இரு மரங்களை நோக்கி தவழ்ந்தான். இரு மரங்களுக்கிடையே நுழைந்தான். அவன் சிறிய உருவம் அவனால்  இடைவெளியில் எளிதாக புக முடிந்தது. உரலால் நுழைய முடியவில்லை, இடம் போதவில்லை.  நீ கயிற்றை பலமாக இழுத்தாய்.  உரல் மரங்களை இடித்து அழுத்தியது. உன்  பலம் தாங்காமல் இரு மரங்களும்  சாய்ந்து விழுந்தன.  குபேர புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று உன்னை வணங்கி விண்ணுலகு சென்றார்கள்.  

தடால் என்று   பெரிய மரங்கள் விழுந்த சப்தம் கேட்டு யசோதை ''ஐயோ குழந்தைக்குஎன்ன ஆபத்தோ'' என்று ஓடிவந்தாள். பெரிய மரங்கள் விழுந்து கிடக்க , நீ கயிறும் உரலுமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதை பார்த்து ஓடிவந்து கயிற்றை அவிழ்த்து உன்னை  அணைத்துக்  கொண்டாள். ''பகவானே  என் குழந்தையை  மரங்கள் அடியில் மாட்டிக்கொண்டு  நசுங்காமல்  காப்பாற்றினாய்'' என்று இரு கை கூப்பி  ஆகாசத்தை நோக்கி வேண்டிக்கொண்டாள்.  உன்னை அவள் ஆகாசத்தில் தேடுவதை நீ  வேடிக்கை பார்த்தாய்.

No comments:

Post a Comment