Monday, May 26, 2025

Simsubaa tree - Periyavaa

*"ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?"* - பெரியவா *ⓀⓃ*

( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு விளக்கம் கொடுத்த பெரியவா)

சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகர், அறிஞர், 
பத்திரிகையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் பண்ணுகிறார்.

என்ன செய்யப் போறே? என்றார் பெரியவா.

பத்திரிகையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறா?

வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம் இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்று சிறிய எழுத்துக்களில் இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.

நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும்.

ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?

தெரியலேயே பெரியவா...

சிம்சுபா மரம்...

அசோக வனத்திலே என்ன மாதிரி விருக்ஷம் எல்லாம் இருந்தது ன்னு வால்மீகி விஸ்தாரமா சொல்றார்.

காஞ்சநீம் ஸிம்ஸுபாமேகாம் ததர்ஸ ஹனுமான் கபி:

சரி, அவர் ஏன் இந்த சிம்சுபா மரத்தின் மேலே இருந்து பார்த்தார், வேறே நிறைய மரம் எல்லாம் இருந்ததே?

இதெல்லாம் யாருக்கு தெரியும்? பெரியவாளைத் தவிர?

சொன்னால் தெரிஞ்சுக்கறேன் பெரியவா... என்றார் அடியார்.

அந்த சிம்சுபா வோட இலை, கிளை, பட்டை எல்லாம் ஸ்வர்ணமயமா இருந்ததாம். வால்மீகி சொல்றார்.

ஆஞ்சநேயர் எப்படி பட்டவர்?

காஞ்சனாத்ரி கமனீய விக்ரகம்... தன்னோட உடம்பு தங்கம் மாதிரி தகதக ன்னு ஜொலிக்கிறவர்...

அப்படியாப் பட்டவர் ஒரு பச்சை, இல்லே வேறு நிறத்திலே இருக்கிற மரத்திலே உட்கார்ந்துண்டா எல்லார் கண்ணுலயும் பட்டுடுவார். அதனால தங்க நிறத்திலே இருக்கிற இந்த சிம்சுபா மரத்திலே இருந்து சீதையை தேடினார்.

பச்சோந்தி என்கிற ஜந்து எந்த மரத்திலே இருக்கோ, அந்த நிறத்துல மாறிக்கும்.

மிலிடரில செடி, கொடி, மலை இதுல எல்லாம் எதிரிகளை ஏமாற்ற வேறே வேறே கலர்ல டிரஸ், தொப்பி, கவசம், மூஞ்சில வர்ணம் ன்னு எல்லாம் போட்டுக்கறாலே, அது Camouflage தானே?

அது சுந்தர காண்டத்திலேயே இருக்கு. அது உனக்கு தெரியணும். இதை நீ நிறைய பேருக்கு சொல்லணும்.

நம்ப புராண இதிகாசம் எல்லாம் வெறும் புளுகு மூட்டை இல்லே, அதை புரிஞ்சுக்கிற அறிவு நமக்கு இல்லே தானே தவிர, அதை பண்ணின பெரியவா எல்லாம் ரொம்ப அறிவானவா...

இன்னும் ஆயிரம் ப்ரவசனம் பண்ணி பரம க்ஷேமமா இருப்பே. 

என்று நிறைவு செய்தது அந்த ராமச்சந்திர மூர்த்தியின் ப்ரத்யக்ஷ பிரதி உருவம்.

No comments:

Post a Comment