everyonefollowme ஒரு புனித oயாத்ரை 3 - நங்கநல்லூர் J K SIVAN
மத்திய பிரதேசத்தில் உள்ள சித்ரகூடம் எனும் க்ஷேத்ரத்தில் ஒன்பது நாள் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம் ப்ரம்ம ஸ்ரீ சேங்காலிபுரம் சுப்ரமணிய தீக்ஷிதர் நடத்துகிறார் என்று அறிந்து, அதில் பங்கேற்க நூற்றுக்கு மேல் பக்தர்கள் தேசத்தின் பல இடங்களிலிருந்தும் வந்து சேர்ந்தார்கள். சென்னையில் இருந்து கிட்டத்தட்ட அறுபது பேர் கயா எஸ்பிரஸில் இடம் பிடித்தோம். வாரத்துக்கு ஒருநாள் ஓடும் ரயில் அது. இடம் பிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒருமாதம் முன்பே இடம் பிடித்தேன். 16-17 மணி நேர பிரயாணம்.காலை உணவு, பகல் உணவு இரவு உணவு எல்லாம் முன்பே ஜபல்பூர், விஜயவாடா போன்ற சந்திப்புகளில் வண்டி ஐந்து நிமிஷம் நிற்கும்போது கொண்டுவந்து தேர ஒரு நண்பர் ஏற்பாடு செய்தார். ரயிலில் எதையும் வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை. பாத்ரூம் தண்ணீர் டீயாக விற்கப்படுகிறது என்று கேள்விப்பட்டால் எப்படி எதை வாங்குவது?.
சித்ரகூடம் பரதன் ஆறாயிரம் ஏழாயிரம் வருஷங்களுக்கு முன் அயோத்தியிலிருந்து ராமனைக் காணச் சென்ற ஸ்தலம். பரதன் சென்றபோது இருந்த சித்ர கூடம் இப்போது இல்லை. எங்கும் ஒரே காடு, விலங்குகள், ராக்ஷஸர்கள் நடமாட்டம்.
ரயிலோ, பஸ்ஸோ, தெருக்களோ , பாதைகளோ, தீப வெளிச்சமோ இல்லாத காலம் அது.
சித்ரகூட மலைக்கும் கங்கை நதிக்கும் இடையே ஒரு வனப்பிரதேசம் . சித்ர கூட மலையில் வடக்கு தெற்காக, கிழக்கு மேற்காக விசாலமான இரு பர்ண சாலைகளை லக்ஷமணனும் பாரத்வாஜ மஹரிஷியின் சிஷ்யர்களும் நிர்மாணிதார்கள்.
பரிசுத்தமான அந்த குடில்களில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் வாசம் செய்தனர். சித்ரகூட ரிஷிகள், முனிவர்கள், மக்கள் அனைவரும் ராமனை சூழ்ந்து கொண்டு சீதா ராம லக்ஷ்மணர்களுக்கு உபசாரம், சிஸ்ருஷை செய்தும் ஆசீர்வாதம் பெற்றும் மகிழ்ந்தனர்.
சித்ரகூட மலை அருகில் இருந்த வால்மீகி ஆஸ்ரமத்தை ராமலக்ஷ்மணர்கள் சீதா ஆகியோர் அடைந்தனர். சித்ரகூட பர்வதத்தில் எப்போதும் அநேக முனிவர்கள் ரிஷிகள் தவம் செய்வார்கள், மிருகங்களும் பக்ஷி இனங்களும் நிறைந்திருந்தது. அவை ஆனந்தமாக வயிறு நிறைய உணவருந்தி பாடிக்கொண்டிருந்தன. ரிஷிகளும் விலங்குகளும் நட்புறவோடு வாழ்ந்த ஜீவன்கள். கனிவகை பல ஜாதி புஷ்பம் நிறைந்த மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. அந்த வனப்பகுதியில் ஆஸ்ரமம் ஒன்றில் இருந்த வால்மீகி முனிவர் ராமன் வருகை அறிந்து எதிர் கொண்டு அழைத்து வணங்கி னார். சீதா ராம லக்ஷ்மணர்களை கண்குளிரக் கண்டு ஆனந்தித்தார். அன்போடு உபசரித்து காய் கனி கிழங்குகள் அளித்து மகிழ்ந்தார். ராமர் வால்மீகி முனிவரிடம் அந்த வனத்தில் தங்குவது பற்றி வினவும்போது,
''லோக நாயகா, சகல உயிர்களும் தங்கும் அடைக்கல மாளிகை நீ, உனக்கு தங்க வசதி செய்வது என் கடமை. நீ தங்கவேண்டியது என் மனத்தில். சீதா லக்ஷ்மண சமேத ராமா, எவர் உன்னை மனமார பூஜிக்கிறார்களோ அவர்கள் இதயம் நீ தங்கும் இடம். உலக இயல் விருப்பு வெறுப்புகளில் சிக்காது உன் நாமம் ஒன்றே இருப்பிட மாக கொண்ட பக்தர்களின் நெஞ்சம் நீ தங்கும் இடம். நான் பிராமணனாக பிறந்தும், ஒரு காலத்தில் வேடுவ னாக அலைந்தேன், கொலை செய்தேன், திருடினேன் ,சகல பாப கார்யங்களையும் புரிந்தேன்.காட்டில் ஒரு தரம் சப்த ரிஷிகளை பார்த்தேன். அவர்கள் பொருள் ளைக் கவர பின் தொடர்ந்தேன். அவர்கள் என்னை பார்த்து, ''ஏ, பிராமணப் பதரே, எதற்கு எங்களைப் பின் தொடர்கிறாய்'' என்றார்கள். என் மனைவி மக்கள் பசியால் வாட அவர்களுக்கு உதவ உங்கள் பொருள் களை அபகரிக்க வந்தேன்'' என்று உண்மையைச் சொன்னேன். அவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்துவிட்டு, 'நீ முதலில் உன் வீடு திரும்பு, நீ செய்யும் பாப கார்யங்களில் உன் மனைவி மக்களுக்கு பங்கு ஏற்க சம்மதமா'' என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவா. நாங்கள் இங்கே உனக்காக அதுவரை காத்திருக்கி றோம்.'' என்றார்கள். நான் அவ்வாறே வீடு திரும்பி அவர்கள் சொல்லியவாறே என் மக்களைக் கேட்டேன். என் மனைவி மக்கள் எவருமே என் பாபத்தில் பங்கேற்க மறுத்து விட்டு, என் வருமானத்தில் மட்டுமே பங்கு கேட்டார்கள். எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. வருத்தத்துடன் காடு சேர்ந்து ரிஷிகளை சந்தித்தேன். அவர்களிடம் என் குடும்பத்தினர் சொன்ன பதிலைக் கூறினேன். அவர்களைக் கண்ட வினாடியே என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. என் வில் அம்பு கத்தி, எல்லாவற் றையும் வீசி எறிந்துவிட்டேன். அவர்கள் காலடியில் வீழ்ந்தேன். ''நரகத்தை நோக்கி செல்லும் என்னைக் காத்தருள்வீர் '' என்று கதறினேன். '' உனக்கு உபதேசம் செய்கிறோம். இனி நீ உய்வாய்'' என்று 'ஒ, ராமா, உன் பெயரை மாற்றி '' மரா மரா '' என்று இடைவிடாது நாங்கள் இங்கு மீண்டும் திரும்பி வரும் வரை ஜெபம் செய்து வா'' என்று உபதேசித்தார்கள். ஏகாக்ர (ஒன்று பட்ட மனத்தோடு ) சித்தத்தோடு அவ்வாறே இடை விடாது இரவும் பகலும் ஜெபம் செய்தேன். என்னையே மறந்தேன், காலம் நேரம்,இரவு பகல் எண்ணங்கள் எல்லாம் மெதுவாக நின்றன. ''மரா மரா '' ஜெபம் ஒன்றே எனது மூச்சு''. என்று ஒரே மூச்சில் வால்மீகி தனது சரித்திரம் சொல்கிறார்.
ஒருநாள் வழக்கம்போல விடியற்காலை சீதா தேவி கண் விழித்தாள். சித்ரகூடம் அமைதியான சூழ்நிலையில் எப்போதும் போலவே மூழ்கி இருந்தது. பட்சிகள் குரல் மட்டுமே அந்த அதி காலை நேரத்தில் கேட்டது. காலை யில் ராமன் காலைத் தொட்டு வணங்கி வெளியே வந்த சீதா தான் முதலில் யாரோ ஒருவர் வந்து எதிரே நிற்பதைப் பார்த்தாள் .
''ஆஹா அது பரதன் அல்லவா, அடையாளமே தெரியாமல் மிகவும் வாடி வருத்தத்தோடு நம்மைப் போல் மரவுரி தரித்து அல்லவோ நிற்கிறான்'' என்று வியந்தாள். பரதனோ கை கூப்பியவாறு அந்த பர்ணசாலையை வணங்குவதும் ராமன் சீதா லக்ஷ்மணன் பாத சுவடு பட்ட மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுமாக நின்றான். ராமன் திருவடி பட்ட மண்ணில் விழுந்து புரள என்ன பாக்கியம் செய்தேனோ'' என கீழே விழுந்து புரண்டான்.
ராமன் பர்ணசாலையில் இருந்து விஷயமறிந்து வெளியே வர,ஆஸ்ரம வாயிலிலே பரதன் ராமனைக் கண்டான்.
அருகம்புல்லின் துளிர் பச்சை நிறம். அகன்ற கரிய விழிகள். ஜடா மகுட கோபுரம் தலையில். மரவுரி ஆடை இவற்றிடையே அன்றலர்ந்த தாமரை முகம். அளவற்ற சந்தோஷத்தில் பரதன் ஓடிச் சென்று ராமனின் பாத கமலங்களைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டான். ராமன் பரதனை வாரி அணைத்தான். தாய்ப் பசு கன்றைக் காணாமல் தேடிக் கண்டுபிடித்ததைப் போல் கோசலை ராமனைக் கண்டு அருகில் ஓடி வந்தாள். ராமன் அவளைக் கண்டதும் அருகில் சென்று அவள் காலில் விழுந்து வணங்கினான். கண்ணீர் மல்க அவளும் ராமனை இறுக அணைத்தாள். ராமன் பரதன் அருகே நின்றிருந்த வசிஷ்டர் அருகே சென்று அவரையும் வணங்கினான்.
''முனி புங்கவரே, என் தந்தை நான் விடைபெறும்போது வாட்டத்தோடு இருந்தாரே இப்போது அவர் உடல் நலம் நன்றாக இருக்கிறதா?'' என்று ராமன் கேட்டபோது வசிஷ்டர் கண்களில் நீர் துளிர்த்ததைக் கண்ட ராமன் கலங்கினான்.
'' குருநாதா, ஏன் கண் கலங்குகிறீர்கள்? என்ன நடந்தது உடனே சொல்லுங்கள்''
''ராமா, உன் பிரிவை தாங்கமுடியாத உன் தந்தை '' ராமா. சீதா. லக்ஷ்மணா'' என்று அரற்றியவாறே உயிர் நீத்தார்''
இடி காதில் விழுந்ததைப் போலாயிற்று ராமனுக்கு. ''என் அன்புத் தந்தையே, எங்களை அனாதை யாக்கி விட்டீர்களே '' என்று கண்களில் நீர் ஆறாக பெருக மாளா துயரத்தோடு ராமனும் லக்ஷ்ம ணனும் கீழே அடியற்ற மரமென சாய்ந்தார்கள். ராமனின் துயரம் மற்றவர்கள் கண்களைக் குளமாக்கியது. மெழுகாய் உருகினார்கள்.
நடந்ததை எல்லாம் வசிஷ்டர் சொல்லக் கேட்ட ராமர் லக்ஷ்மண சீதை மற்றோருடன் சேர்ந்து அருகிலே இருந்த மந்தாகினி நதிக்கு சென்று நீராடி தந்தைக்கு தர்ப்பணம் செய்தார்.
நாம் எந்த உணவை விரும்புகிறோமோ அதுவே பித்ருக்களுக்கும் பிடித்தது. தேன் கலந்த நாவல் பிண்ணாக்கு தசரதன் ஆத்மாவுக்கு படைக்கப்பட்டது. மற்றவர் அனைவரும் நீராடி தீட்டைப் போக்கிக் கொண்டார்கள். இரவு ஒன்றும் ஆகாரம் உண்ணாமல் ராமரும் மற்றவர்களும் உபவாசம் இருந்தனர் . இரவெல்லாம் பரதன் ராமனை மன்றாடி அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொள்ள வற்புறுத்தி னான். ராஜ்ய பாரம், மக்களுக்கு கடமை எல்லாவற்றை யும் எடுத்து உரைத்தான். கெஞ்சினான். தனது அன்னை யின் பாதகச் செயலுக்கு மன்னிப்பு கேட்டான். அமைதி யாக எல்லாவற்றையும் கேட்ட ராமன் பதிலளித்தான்.
''பரதா, நன்றாகக் கேள், நம் தந்தை மிகத் தெளிவாக அயோத்தி ராஜ்ஜியம் உனக்கு. தண்டகாரண்யம் எனக்கு 14 வருஷம்'' என்று தந்தை கட்டளை இட்டதை நாம் மீற முடியாது. அதை வழுவாமல் காப்பது நமது கடமை. எனவே நாட்டை நீ ஆள்வாயாக, காட்டை நான் ஆள்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கவனத்தில் கொள்.''
''அப்பா, உங்கள் வாக்கை நான் மெய்யாக்குகிறேன் என்று நான் அவர் ஆசியோடு புறப்பட்டவன், சத்யம் தவற மாட்டேன். நீயும் தவறக்கூடாது. நாம் ரகுவம்சத் தில் தோன்றியவர்கள். சொன்ன சொல் பொய்யாகக் கூடாது. ''
'அண்ணா, 'நான் இப்போதே லக்ஷ்மணனைப் போலவே மரவுரியொடு ஜடாமுடியோடு காட்டில் உங்களுக்கு சேவை செய்ய அனுமதி கொடுங்கள். இலையேல் இங்கேயே உங்கள் கண் எதிரே ப்ராயோபவேசம் ( தற்கொலை போன்று உயிர் நீத்தல்) செய்து கொள்கி றேன்.'' என்ற பரதனின் பிடிவாதம் ராமரை வசிஷ்டரை நோக்க வைத்தது. ராமன் ஜாடை காட்ட வசிஷ்டர் புரிந்து கொண்டார்.
பரதனை தனியே அழைத்து வசிஷ்டர் சொன்னது:
''பரதா உனக்கு ஒரு தேவ ரகசியம் சொல்லும் நேரம் வந்து விட்டது. ராமன் மகா விஷ்ணு அம்சம். தேவர்கள் வேண்டுகோளுக் கிணங்கி ராவண வதம் நிமித்தமாக ராமனாக அவதரித்திருக்கிறார். யோகமாயை சீதை யாக உள்ளாள் . ஆதிசேஷன் தான் லக்ஷ்மணன். ராமனைப் பாதுகாப்பது அவன் கடமை. கைகேயியைக் குறை கூறாதே. எல்லாமே தேவர்கள் தூண்டுதலால் தான் என்பதை உணர்ந்து கொள். ராமனைத் திரும்ப அயோத்திக்கு வா' என்று சொல்லாதே. பிடிவாதத்தைக் கை விடு. நீ திரும்பச்சென்று உனக்கிட்ட கடமையைச் செய். ராமன் தனது உரிய காலத்தில் திரும்ப வருவான்.''
பரதன் பிரமித்தான். தைர்யம் அடைந்தான் ராமனை வணங்கி ''சுவாமி தங்கள் கட்டளைப் படி என்னால் ராஜ்யம் நிர்வாகம் எல்லாம் நன்றாகவே நடக்கும். கவலை வேண்டாம். பதினான்கு ஆண்டுகள் நீங்கள் திரும்பி வரும் வரை அயோத்திய ராஜ்யத்தை நிர்வகித்து தங்களிடம் பொறுப்பாக ஒப்படைப்பேன். ஆனால் ஒன்று. சிம்மானத்தில் அரசனாக மட்டும் உங்களது பாதுகைகள் தான் எனக்கு கட்டளையிடும். நான் அதன் சேவகனாக நாடாள்வேன் ''
பரதனின் சமயோசிதம் ராமனை மகிழ்வித்தது. தனது பாதுகைகளை பரதனிடம் அளித்தார் . அவற்றை பய பக்தியோடு சிரமேற் தாங்கி பரதன் திரும்பிச் செல்லு முன் '' அண்ணா, தாங்கள் 14 ஆண்டுகள் முடிந்த மறுநாளே வரவேண்டும். இன்றேல் நான் அக்னி ப்ரவேசம் செய்து கொள்வேன். ''
''பரதா, அப்படியே செய்வேன். நீ செல்வாயாக.''
அருகில் நின்றிருந்த கைகேயி ராமனை அணுகி தன் தவறுக்கு வருந்த ராமன் அவளை வணங்கி பதில் சொன்னான்;
''அன்னையே, நீங்கள் பொம்மலாட்டத்தில் ஒரு ஆட்டு விக்கப்பட்ட பொம்மை. ஆட்டுவித்தபடி ஆடியவர்கள். எந்த தவறும் நீங்களாகவே செய்ததாக வருந்த வேண் டாம். என் சங்கல்பத்தாலேயே நீங்கள் சொன்னது நடந்தது என அறிவீர்களாக. இனி வரும் நாளை
நாரயணன் மேல் பக்தி செலுத்தி மோக்ஷ பெறுவீர்க ளாக. கர்மத்தளைகளோ, தடைகளோ உங்களை ஒட்டாது.'' என்று ராமன் உபதேசித்தார்.
ராமனை வலம் வந்து வணங்கி திருப்தி அடைந்தவளாக கைகேயி புது வாழ்க்கை மேற்கொள்ள திரும்பினாள்.
பரதன் அனைவரோடும் அயோத்திக்கு பயணமானான். அங்கிருந்து தான் மட்டும் நந்திக்ராமம் என்ற அயோத்தி எல்லையில் அருகே உள்ள கிராமத்துக்கு சென்றான். அங்கே ராஜாவின் சிம்மாசனத்தில் ராமனின் பாதுகை களை வைத்து பய பக்தியுடன் பூஜித்து எப்போது 14 ஆண்டு முடியும் என்று ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டு ஒரு பிரம்ம ரிஷியாக, ராஜ்ய பரிபாலனம் செய்தான். ராமன் இருப்பதை அறிந்த அநேக மக்கள் கூட்டம் சித்ரகூடம் வருவதை உணர்ந்து ராமன் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தான்..
No comments:
Post a Comment