தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
சமூக விஷயங்கள்
"கணக்காயிருக்கணும்"
பணம் மட்டுமில்லை. இப்படியே வார்த்தைகளை உபயோகிக்கும்போது ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது, அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வளவளவென்றும் பேசாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டாலே புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் (energy) வீண் (waste) ஆகாமல் இருக்கும். எத்தனையோ சண்டை சாடிகளும் மிச்சமாகும்.
"கொட்டிவிடலாம், வாரிவிட முடியுமா?" என்று பாமர ஜனங்கள்கூடக் கேட்கிறார்கள். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப் படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். ஆனால், இப்போது லோகம் முழுக்க ஒரே பேச்சு யுகமாகத்தான் ஆகியிருக்கிறது. நியூஸ் பேப்பர்கள் எல்லாம், 'அவர் பிரசங்கம், இவர் பிரசங்கம்' என்றுதான் போட்டு நிரப்புகின்றன. காரியத்தில் ஏதாவது நடக்கின்றதா என்றால் ஸைபர்தான்.
அநேகமாக, காரியத்தில் நடக்கிவில்லை என்பது தெரியாமலிருப்பதற்கே சண்டப் பிரசங்கமாகப் பேசி ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்ட மாதிரி பிரமையை உண்டு பண்ணி வருகிறார்கள்.
பணம், பேச்சு, அப்புறம் நாம் செய்கிற காரியம் காரியத்திலும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக, அவசியமில்லாத, அல்லது கெட்டதான காரியங்களைச் செய்யவே கூடாது. ஆத்ம சிரேயசுக்கோ, லோகக்ஷமத்துக்கோ பிரயோஜனமில்லாத காரியங்களில் ஈடுபடவே கூடாது.
No comments:
Post a Comment