Friday, February 7, 2025

G D Naidu, technical genius from coimbatore

மிக மிக லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலை,

"நான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும் அது எவ்வளவு லாபகரமாக இயங்குகிறது என்பது பற்றியும் தங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

என் நிறுவனம் மூலம் வரும் லாபத்தில் நான் மட்டுமே பலனடைகிறேன்.அதில் எனக்கு உடன்பாடில்லை.எனவே அதை உங்களுக்கு விற்க முடிவு செய்திருக்கிறேன்.நீங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிறுவனத்தை நான் துவக்க எனக்கு என்ன செலவானதோ அந்தத் தொகையை மட்டும் எனக்குக் கொடுங்கள்.எனக்கு அது போதும்.வேறு எந்தவிதமான லாபமும் எனக்கு வேண்டாம்.இந்தத் தொகையைக் கூட நான்கே வருடங்களில் பல மடங்காக நீங்கள் எடுத்து விடுவீர்கள் என்பது மிக உறுதி...."

--- என்று யாராவது அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவார்களா? 

உண்மையிலேயே அப்படி ஒருவர் கடிதம் எழுதினார்.

23 செப்டம்பர்,1936 ல் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு இப்படி ஒரு கடிதத்தை ஒருவர் எழுதினார்.

கிட்டத்தட்ட 600 பேருந்துகளோடு லாபத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த தன் நிறுவனத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்படி ஒருவர் கடிதம் எழுதினார்.

ஒரே ஒரு நிபந்தனையுடன்.

"என் நிறுவனத்தை நீங்கள் வாங்கிய பிறகு அதில் வரும் லாபத்தை வைத்து நீங்கள் பள்ளிகளை,தொழில்நுட்பக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்.அதன் மூலம் மக்களுக்கு கல்வியை இலவசமாக தர வேண்டும்..." 

-- என்றொரு நிபந்தனையை மட்டும் வைத்தார்.

ஆனால் அன்றைய கோயம்புத்தூர் ஜில்லா போர்டு அதை ஏற்க மறுத்து விட்டது.

அவரது நிறுவனத்தின் லாபம் மூலம் நமக்கு வரும் வரி வருவாய் மிக அதிகம்.ஒருவேளை அந்த நிறுவனத்தை நாமே எடுத்துக் கொண்டால்,அந்த வரி வருவாய் நமக்கு வராது என்று கருதி அவர் வைத்த அந்த கோரிக்கையை அன்றைய கோயம்புத்தூர் ஜில்லா போர்டு மறுத்து விட்டது.

வியப்பாக இருக்கிறதா? 

யார் அவர் என்ற கேள்வி வருகிறதா?

அவர் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு எழுதி வைப்பதாக சொன்ன அந்த நிறுவனம் தான் கிட்டத்தட்ட 600 பேருந்துகளுடன் இயங்கிக் கொண்டிருந்த United Motor Service எனும் UMS நிறுவனம்..

அந்த UMS பேருந்து நிறுவனத்திற்கு நிறைய மெக்கானிக்குகள் தேவைப்பட்டனர்.அந்த காலத்தில் அதற்கு தாறுமாறான தட்டுப்பாடு நிலவியது.எனவே தரமான மெக்கானிக்குகளை உருவாக்கித் தரும் வகையில் ஒரு கல்லூரியை நாமே உருவாக்கினால் என்ன என்ற எண்ணத்தில் தன் சொந்தப் பணத்தைப் போட்டு அவர் ஒரு தொழில்நுட்ப கல்லூரியைத் துவக்கினார்.

பிற்காலத்தில் அந்த கல்லூரியையும் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு எழுதி வைத்தார்.

அந்த கல்லூரி தான் Sir Arthur Hope College of Technology என்ற பெயரில் 1945 ல் துவக்கப்பட்டு,பின்னர் Government College of Technology என்று பெயர் மாற்றம் அடைந்த கோயம்புத்தூரின் மிக புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியான GCT.

ஒன்றாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதை தான்,இன்றைக்கு கோவையில் செயல்படும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை,கல்லூரிக்குத் தன் பெயரை வைக்க வேண்டும்,தன் குடும்பத்தார் பெயரை வைக்க வேண்டும் என ஒரு வார்த்தை கூட எந்த விதமான நிபந்தனைகளையும் வைக்காமல்,மக்கள் படித்தால் போதும் என ஒரு நயாப் பைசா கூட வாங்காமல், முழுக்க முழுக்க இலவசமாக எழுதி வைத்தவர்.

அவர் தான்...அந்த மாமேதை தான் கோயம்புத்தூர் தந்த ஜி.டி.நாயுடு.

இன்று அந்த மாமேதை ஜி.டி நாயுடுவின் 51 வது நினைவு நாள்.

ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்தையும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்த அந்த மாமேதையின் வாழ்க்கைக் கடலின் சில துளிகள் 

ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்தும் இடத்தை,தனியாக ஜி.டி.சயின்ஸ் மியூசியம் என்றும்,பொதுவான அறிவியல் கோட்பாடுகளை விளக்கிக் கூற தனியாக ஒரு இடமும்,கார்கள் தொடர்பான கண்காட்சிக்கு என தனியாக ஒரு இடமும் ஒதுக்கி இருந்தார்கள்.இது போக STEM பயன்பாட்டிற்கு என தனித்தனியாக அறைகள் இருக்கின்றன.




அறிவியல் மையத்தை விட்டு வெளியே வந்தால்,அதற்கு கீழ் தளத்தில் கார்கள் அரங்கம் இருக்கிறது.

அங்கே ஜி.டி.நாயுடு அவர்கள் சர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் கடன் வாங்கி முதன் முதலாக ஓட்டிய பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தட பேருந்து இருக்கிறது.


இந்தியாவை அறிவியல் தொழில் நுட்பத்தில் இருநூறு ஆண்டுகள் முன்னனியில் வைத்திருக்க மாமேதை ஜி.டி.நாயுடு செய்த ஆராய்ச்சிகளின் சாட்சிகள் அங்கே காட்சிகளாக இருக்கின்றன.

ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டு உலகம் அப்போது தான் Vaccum Tube கருவிகளைக் கொண்டு ரேடியோக்களை தயாரித்த போது,

மாமேதை ஜி.டி.நாயுடு Printed Circuit Board கள் கொண்டு ரேடியோக்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு,அதை வெற்றிகரமாக செயல்படுத்தி,வியாபாரமும் செய்து காட்டினார்.வேக்கயூம் டியூப் ரேடியோ 1000 ரூபாய் என்றால்,ஜி.டி.நாயுடு Printed Circuit Boards கொண்டு தயாரித்த ரேடியோக்கள் நூறு ரூபாய்களுக்கு விற்றது.

மாமேதை ஜி.டி.நாயுடு இந்த சாகசங்களை செய்த போது,இன்றைக்கு செமிகண்டெக்டர் துறையில் முன்னனியில் இருக்கும் எந்த நிறுவனமும்,ஜி.டி.நாயுடு செய்து வந்த ஆராய்ச்சியின் முதல் பக்கத்தை கூட எட்டவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்படவே இல்லை.

இண்டெல் நிறுவனம் உருவாகவே இல்லை.

ஆனால் ஜி.டி.நாயுடு Printed Circuit Board களை வைத்து ரேடியோ,கால்குலேட்டர்,ஓட்டு போடும் இயந்திரம்...என அசுர வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.இந்தியாவின் முதல் Printed Circuit Components களை தயாரித்ததும் அவரே.

இப்படி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மெக்கானிக்கல் கருவிகள் வரிசையில் ஒரு ஓரத்தில் ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்கும் ஒரு கருவி இருந்தது.அந்த கருவிக்கு கீழே Automatic Orange Juice Extractor என்று மட்டும் எழுதியிருந்தது.

அதைப் பார்த்தும்,"இது ஒரு சாதாரண ஆரஞ்சு பழ ஜுஸர் தானே..இதை ஏன் ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பாக காட்சிப்படுத்த வேண்டும்?அதுவும் இந்தியாவின் முதல் மின் மோட்டார், இந்தியாவின் முதல் SMD Components,முதல் ஓட்டு இயந்திரம் போன்ற அட்டகாசமான கண்டுபிடிப்புகளுக்கு இணையாக?" 

--- என்ற கேள்வியும் வியப்பாக வந்தது.

ஆனால் அதற்கான பதிலைத் தேடி பிடிக்கையில் தான்,அந்த ஆரஞ்சு பழ ஜுஸர் எப்பேர்ப்பட்ட ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பு என்பது புரிந்தது.

1930 களில் தொழில் முறை பயணமாக ஜி.டி.நாயுடு அமெரிக்கா சென்றார்.அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை சந்தித்தார்.

"இருக்கும் பழங்களிலேயே ஆரஞ்சுப் பழத்தில் தான் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது.அந்த வைட்டமின் சி கூட ஆரஞ்சுப் பழ சுளைகளை விட,அதன் உட்புற தோலில் தான் மிக அதிகமாக இருக்கிறது.அதோடு உடலுக்குத் தேவையான காப்பர், மெக்னீசியம்,கால்சியம், வைட்டமின் ஏ என எக்கச்சக்க சத்துகள் தோலின் உட்புற சுளையில் இருக்கின்றன.ஆரஞ்சுப் பழ சுளைகளை விட அதன் உட்புற தோல் தான் சத்தானது..." என்று விளக்கம் கூறி, ஆரஞ்சுப் பழத்தில் இருந்து அதன் பழரசத்தைப் பிழிந்து எடுக்க தான் கண்டுபிடித்த ஒரு கருவியையும் காட்டினார்.

"ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும்,அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறை இந்த கருவியை வைத்து பிழிந்து எடுக்கையில்,இது தரும் அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகளும் நொறுங்கி,கூழாகி,பழச்சாறுடன் சேர்ந்து விடுகிறது.இதனால் பழச்சாறு கசப்பாக இருக்கிறது.பழச்சாறும் பிழிய வேண்டும்.அதே வேளை விதைகளும் நொறுங்கக் கூடாது.என்ன செய்வதென்று தெரியவில்லை..உங்களால் உதவ முடியும?..." என்று தன் கருவியில் இருந்த பெரும் சவாலையும்,மாமேதை ஜி.டி.நாயுடுவிடம் அந்த பேராசிரியர் விளக்கினார்.

அந்தப் பேராசிரியர் பேசிக் கொண்டிருக்கும் போதே கருவியை ஆராய்ந்த ஜி.டி.நாயுடு,

"இது ஒரு விசயமா?இந்த பிரச்சினையை ஒரு Coil Spring வைத்து சரி செய்து தருகிறேன்..." என்று ஒரு நிமிடத்தில் ஒரு தீர்வைத் தந்தார்.

பேராசிரியரால் நம்பவே முடியவில்லை.

"உங்களால் முடியுமா?" என்று வியப்பு விலகாமல் கேட்டார்.

அடுத்த நொடியே ஜி.டி.நாயுடு செயலில் இறங்கினார்.ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்க அந்த கருவியில் தர தேவைப்படும் Pressure அளந்து கொண்டே வந்தார்.அதோடு எந்த அளவு அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகள் நொறுங்குகிறது என்பதையும் கண்டறிந்தார்.மிக துல்லியமாக 230 lbs அழுத்தத்தில் அந்த விதைகள் நொறுங்கின்றன என்பதை கண்டறிந்தார்.எனில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாத ஒரு Coil Spring வடிவமைத்து அதை அந்த கருவியின் மேலே படத்தில் இருப்பது போல் பொருத்தி விட்டார்.

இப்போது அந்த கருவியில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாததால் விதைகள் நொறுங்கவில்லை.

ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும்,அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறு அட்டகாசமாக வெளியே வந்தது.விதைகள் நொறுங்காமல் அப்படியே தனித்து வெளியே வந்தது.

அந்த பேராசிரியரால் நம்பவே முடியவில்லை.

அந்த ஆண்டிலேயே மாமேதை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துத் தந்த அந்த Orange Juice Extractor அமெரிக்காவில் தாறுமாறாக விற்பனையானது.

சுமார் 92 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஜி.டி.நாயுடு அநாயாசமாக செய்து காட்டிய அந்த Orange Juice Extractor ல் ஒன்றைத் தான் கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு மியூசியமில் ஒரு ஓரத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

 ஆராய்ச்சி வரலாற்றை தனக்குள் வைத்துக் கொண்டு அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்கிறது அந்த Orange Juice Extractor....

பொதுவாக யாரிடமாவது,ஜி.டி.நாயுடு என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்ன? என்று கேட்டால்,

புதிது புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகள்,அதை வைத்து வித விதமான தொழில்கள்,தொழில் நுட்பம்....என்று தான் சட்டென பதில்கள் வரும்.

ஆனால் அந்த மாமேதை ஒரு ஆகச் சிறந்த மனிதநேயர்.

பதினாறு அடி உயரத்தில் சோள கதிரை வளர்த்து அதில் 32 கதிர்களை ஒரே ஒரு சோளப் பயிரில் உருவாக்கிக் காட்டினார்.அவர் உருவாக்கித் தந்த சோளத்தைப் பயிரிட்டால் சாதாரண சோளப் பயிர் ஒரு ஏக்கர் நிலத்தில் தரும் விளைச்சலை விட ஐந்து மடங்கு அதிக விளைச்சலைத் தந்தது.

அதிகம் போனால் இரண்டடி உயரத்திற்கு வளரும் பருத்திச் செடியை ஒரு மரம் போல பத்தடி உயரத்திற்கு வளர்த்து,அதன் விளைச்சலையும் பல மடங்குகள் பெருக்கிக் காட்டினார்.அந்த பருத்திச் செடியின் ஆயுளையும் எட்டு வருடங்களாக்கிக் காட்டினார்.

பத்து ஏக்கர் நிலத்தில் சாதாரண துவரை போட்டால்,அது என்ன விளைச்சல் தருமோ,அதை ஒரு ஏக்கர் நிலத்தில் தரும் வகையிலான துவரை செடிகளை ஜி.டி.நாயுடு உருவாக்கிக் காட்டினார்.

ஒரே பப்பாளி மரத்தில் ஆறு வகையான பப்பாளிகளை உருவாக்கிக் காட்டினார்.அது ஆறு வகையான சுவையில் வளர்த்துக் காட்டினார்.

"இதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று..." என்று நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் ஒப்பற்ற அறிவியல் மேதை சர்.சி.வி.இராமன் கூறிய போது,அவரை தன் கோயம்புத்தூர் வீட்டுக்கு அழைத்து வந்து பப்பாளியை சாப்பிட தந்தார்.

சர்.சி.வி.இராமன் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் போத்தனூர் விவசாய ஆராய்ச்சிப் பண்ணையை சுற்றிப் பார்த்து விட்டு,

"ஜி.டி.நாயுடு கோடியில் ஒருவர்.மகத்தான மனிதர்.." என்று தன் கைப்பட எழுதி வைத்து விட்டுப் போனார்.

இந்தியாவில் வீடு இல்லை என எவருமே இருக்கக் கூடாது என்பது ஜி.டி.நாயுடுவின் பெருங் கனவாக இருந்தது.அதற்காக 1000 சதுர அடியில்,மிகக் குறைந்த விலையில் ஒரே நாளில் கட்டப்படும் வகையிலான வீடுகளை உருவாக்கினார்.

காலை எட்டரை மணிக்கு அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை வைத்து அடிக்கல் நாட்ட வைத்து,அன்று இரவு ஒன்பது மணிக்கு அவரை வைத்தே திறப்பு விழாவும் காணச் செய்தார்.

"ஜி.டி.நாயுடுவின் இந்த மலிவு விலை வீடு திட்டத்தை செயல்படுத்தினால் நான்கே வருடங்களில் இந்தியாவில் அனைவருக்கும் வீடு கிடைத்து விடும்.." என வி.வி.கிரி புகழாரம் சூட்டினார்.



இந்தியாவின் முதல் மின் மோட்டாரை 1942 களில் ஜி.டி.நாயுடுவின் UMS நிறுவனம் தான் தயாரித்தது‌.அந்த மோட்டாரில் Double Cotton Covered என்ற தாமிர வயர்களை பயன்படுத்தினார்கள்.அந்த வயர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்தார் ஜி.டி.நாயுடு.

இதை அன்றைக்கு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை.

தாங்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக வருவதை அவர்கள் விரும்பவில்லை.எனவே அந்த வயர்களுக்கு தாறுமாறாக இறக்குமதியை விதித்தார்கள்.

பார்த்தார் ஜி.டி.நாயுடு...அந்த வயர்களை கோயம்புத்தூரிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

தாமிர கம்பிகளில் எனாமல் கோட்டிங் தந்து அதை நன்றாக சூடாக்கி,அதன் பின் தடிமனான பருத்தி நூல்களை அந்த கம்பி மேல் சுற்றி DCC வயர்களை ஐரோப்பாவில் உருவாக்கினார்கள்.வயர்களை சூடு செய்ய Electric Furnace களை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இங்கே கோயம்புத்தூரில் Electric Furnace அமைக்க முடியாது எனவே ஜி.டி.நாயுடு முயற்சி தோற்று விடும் என பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பிக் கொண்டிருந்தது.

ஜி.டி.நாயுடு செங்கல்களை அடுக்கி ஒரு சிறு செங்கல் சூளை போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தாமிர வயர்களை சூடாக்கி ஐரோப்பிய நாட்டின் DCC வயர்களை விட மிக மிக தரமான வயர்களை உருவாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூக்கை உடைத்தார்.

இந்தியாவின் முதல் DCC வயர்களை தயாரித்துக் காட்டினார்.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் மின் மோட்டார்களில் பயன்படும் Steel Lamination களை இறக்குமதி செய்ய தடை விதித்தது.

அதையும் கோயம்புத்தூரில் ஒரு சிறு கட்டிடத்தில் உருவாக்கிக் காட்டினார் ஜி.டி.நாயுடு.

இனி எதுவும் செய்ய முடியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ஜி.டி.நாயுடுவின் UMS நிறுவனத்திற்கு மின் மோட்டார்களை தயாரிக்க உரிமம் தந்தது.

இப்படி தான் வாழ்ந்த காலத்திலேயே ஒரு வரலாறாக வாழ்ந்த ஜி.டி.நாயுடு அவர்களுக்கு அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம் தன்னால் எப்படி எல்லாம் முட்டுக்கட்டைகள் போட முடியுமோ அப்படியெல்லாம் இடைஞ்சல்கள் தந்தது.அதை எல்லாம் தன் புத்திக் கூர்மையால் முறியடித்தார் அந்த மாமேதை.




எந்த விதமான பின்புலமும் இல்லாத,ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து,இந்தியாவை ஒட்டு மொத்த அறிவியல் உலகில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுத்திய மாமேதை ஜி.டி.நாயுடு பற்றி இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமேதை ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்தில் அவருக்கு கிடைக்காத அங்கீகாரத்தை,அவர் காலம் கடந்தாவது அவருக்கு கிடைக்க வேண்டும்......

No comments:

Post a Comment