பேயனும், விளக்கெண்ணையும்"
( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்')
(வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். 'தெய்வத்தின் குரல்' உரையில் & BY MAHESH &-கார்த்தி நாகரத்தினம்
அந்த இடம் விழுப்புரம் வேத பாடசாலை. நடந்தது 1960 களில்.
இன்று போல், (இன்றும் பெருவாரியாக அப்படித் தான்) அன்றும் வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு, முரட்டு நாலு முழ சோமன், உண்டக்கட்டி, மட்ட ரக அரிசியில் சாதம். ஒருவேளை தான் சுடுசாதம், காலை மிஞ்சியது தான் இரவுக்கும். .போட்டதைத் தின்றுவிட்டு, சாகை, சந்தம் என்று தொண்டை கிழிய கத்தினதுகள் அந்த சிறுசுகள். படுத்துக் கொள்ளும் பாயிலேயே தூக்கத்தில் மூச்சா போகும் ஐந்து, ஆறு வயது குழந்தைகள் கூட அந்த பாட சாலையில் இருந்தன.
ஒரே வார்த்தையில் சொல்வோமா?
அந்த குழந்தைகள் செய்தது 'த்யாகம்'. லோக க்ஷேமத்திற்காக.
அதில் கொஞ்சம் வயது முதிர்ந்த குழந்தைகள். ஒரு தவறு செய்துவிட்டன.
என்ன தவறு?
கலியின் கொடுமை. அந்த வேத பாடசாலைக்கு பின்புறமே ஒரு திரை அரங்கு வந்தது. சுவர் தாண்டிக் குதித்தால் திரைப் படம் காணப் போய்விடலாம். போயும் விட்டார்கள்.
வேதபாடசாலை மேற்பார்வை செய்துகொண்டிருந்த அன்பருக்கு விவரம் தெரிந்தது.
பெற்றவர்கள் மற்றும் உறவினர் சிலர் வந்தால் வெளியில் சென்று கண்ட இடத்தில் கண்டதை தின்றுவிட்டு வந்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கூடவே.
ஸ்ரீமடத்துக்கு கடிதம் எழுதினார், மனக்குமுறலை.
ஐயனிடம் இருந்து உத்தரவானது.
வேதபாடசாலைக் குழந்தைகளுடன் முகாம் நோக்கி வருமாறு. கார்வேட் நகரில் முகாம் அப்போது . பாடசாலை மேற்பார்வை அன்பர், குழந்தைகளுடன் சென்றார் கார்வேட் நோக்கி.
ஸ்ரீ சரணரிடம் இருந்து உத்தரவு, குழந்தைகளுக்கு வாய்க்கு பிடித்த மாதிரி அவர்கள் கேட்கும் உணவு பதார்த்தங்களை சமைத்து போடச் சொல்லி.
ஒரு வாரம் போல் ஆனது. குழந்தைகள் ஏதோ 'தாத்தா' ஆத்துக்கு, விடுமுறைக்கு வந்த குழந்தைகள் போல், கோவில், குளக்கரை என்று பொழுது போக்கிக் கொண்டு, வாய்க்கு பிடித்ததை சாப்பிட்டுக் கொண்டு.
'தாத்தா' கூப்பிட்டபோது மட்டும், போய், அவர் 'திருமுன்' சந்தம், சாகை சொல்லிவிட்டு வருவர். அன்பருக்கோ வருத்தமான வருத்தம். யாரையும் கூப்பிட்டு 'கண்டிப்பா?, கேட்கக் கூட இல்லையே?, பாடம் வேறு போகிறதே?'.
ஒரு வாரம் போல் கழிந்த பின், பாடசாலை ஆசிரியரோடு, குழந்தைகளுக்கு ஆசி வழங்கி, பிரசாதம் அருளி ஊர் அனுப்பிவிட்டார்
.பரம கருணா மூர்த்தி. மறந்தும் வேதக் குழந்தைகளை கண்டிக்கவில்லை.
அன்பர் மட்டும் நிறுத்தி வைக்கப் பட்டார்.
மறுநாள் உத்தரவானது.
'உன் நக்ஷத்ரம் என்ன?'
'கிருத்திகை'
'உன் ஆம்படையாளுக்கு?'
'ரேவதி'.
'நீ ஒண்ணு பண்ணு. ஒன் நக்ஷத்ரத்துக்கும், ஒன் ஆம்படையாள் நக்ஷத்ரத்துக்கும் பாடசாலை கொழந்தேளுக்கு ஒரு ஸ்வீட் பண்ணி ஒன் கையால போடு. வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்'
'நிச்சயமா பண்றேன். எனக்கு ரெண்டு புள்ளேள். அவாளுக்கு ஆருத்ரா, அப்புறம் புனர்பூசம்'.
'தாராளமா பேஷா பண்ணேன். நாலு நாள், கொழந்தேள் ஒன் உபாயத்தால இனிப்பு சாப்பிடட்டுமே'.
ஊருக்கெல்லாம் தெரிந்தது. இருபத்தேழு நக்ஷத்திரம் தானே…வேதக் குழந்தைகளுக்கு பண்ணிப் போட்டால் அத்தனை விசேஷமாமே, தலைமுறை தலைமுறைக்கு அந்த புண்ணியம் காபந்து பண்ணுமாமே?
தினம் தினம் வடை பாயசத்தோடு சாப்பாடு.
ஐயன் அழைத்தார் அன்பரை, திரும்பவும்.
"நீ என்ன பண்ணு…தினமும் பேயன் பழத்தை வெளக்கெண்ணையில நறுக்கி போட்டு, ஒரு துண்டு பேயன் பழம், கொஞ்சம் ஒரு உத்ரிணி வெளக்கெண்ணை அத்தனை கொழந்தைகளுக்கும் ஒன் கையால ராத்திரி படுத்துக்க போறதுக்கு முன்னாடி ஊட்டி விடு…கடலைமா பக்ஷணம், நெய் வேற…வயித்துக்கு ஆகாது…வெளக்கெண்ணை, வயித்தை சுத்தம் பண்ணும்…கொழந்தேள் தொண்டை கிழிய வேதம் சொல்றதுகள். ஒடம்பு சூடு வேறே. ஒடம்புக்கு குளிர்ச்சியும்…வெளக்கெண்ணை தரும். நீயும் அவா கிட்டே பாடசாலையிலே ஒரு ஓரமா படுத்துக்கோ."
கொஞ்ச நாள் போனது. அன்பர் ஐயன் தரிசனம் போனார்.
'இப்போ எந்த கொழந்தையாவது செவுறு தாண்டி போறதோ? கண்ட எடத்திலே சாப்பிடறதோ?'
அவரிடமிருந்த கண்ணீர் மட்டும் தான் பதிலாய் வந்தது. அது நன்றிக் கண்ணீர் மட்டுமல்ல. ஆனந்தக் கண்ணீர்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்பது வள்ளுவ வேதம்.
இதன்பொருள்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
ஆங்கிலத்தில், இன்றைய நவீன மேலாண்மை யுகத்தில் 'ROOT CAUSE ANALYSIS' என்று 'CAUSAL ANALYSIS' என்றெல்லாம் சொல்வார்கள்.
ஐயனை விடவும் ஓர் அதியற்புத உளவியலாளர் காணமுடியுமோ?
காமகோடி பீடத்தின் அதிபராய் வெறுமனே சந்திர மௌலீச்வர பூசை மட்டுமா அவர் செய்தது?
இது போல் இன்னும் எத்தனை எத்தனை அற்புதங்களோ?
அவருக்கு மட்டுமே வெளிச்சம்…
அவர் தான் அந்த வெளிச்சம்…
அது காட்டிக் கொடுத்தால் மட்டுமே உண்டு…
வேதம் வாழ வந்த வித்தகர்… வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்'
வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)
No comments:
Post a Comment