Thursday, July 18, 2024

What to ask from GOD? - Spiritual story

இந்தக் கதை நமக்கு ஒரு உண்மையை உரக்கச் சொல்கிறது. இது ஒரு ஆன்மிகம் சார்ந்த கதை. இந்த கதை சொல்லும் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

ஒரு அரசன் தன்னுடைய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். அவன் தன்னுடைய மக்களுக்கு தேவையானதை, அவர்கள் கேட்கும் தருணத்தில் 'இல்லை' என்று கூறாமல் கொடுத்து வந்தான். அதனால் அவன் மீது மக்களுக்கு அதிக அன்பு உண்டு. மன்னனுக்கும் மக்களின் மீது பெரும் பாசம் இருந்தது.

ஒரு நாள் மன்னனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'எது ஒன்று வேண்டும் என்றாலும் மக்கள் என்னை சந்தித்துதான் பெற்றுச் செல்கின்றனர். அப்படி அவர்கள் என்னை சந்திந்து, அதற்கான விளக்கத்தை அளித்து அந்தப் பொருட்களை பெற்றுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தலைநகரில் ஒரு பொருட்காட்சியை அமைத்து, அதில் எல்லா பொருட்களையும் வைத்துவிடுவது, யாருக்கு எந்த பொருள் வேண்டுமோ அதை மக்கள் இலவசமாக அவர்களின் தேவைக்கு எடுத்துச் செல்லலாம்' என்று நினைத்தான்.

தனக்கு தோன்றிய அந்த யோசனையை தன்னுடைய அமைச்சர்களிடம் பேசி கருத்து கேட்டான். அவர்களும் மனம் மகிழ்ந்து ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து தலைநகரில் பிரமாண்டமான ஒரு பொருட்காட்சி மையம் உருவாக்கப்பட்டது. அதில் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மன்னன் ஏற்பாடு செய்திருந்தான். அதுவும் அனைவருக்கும் போதும் என்னும் அளவுக்கு அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மக்களுக்கு இதுபற்றி முரசறைந்து சொல்லப்பட்டது. பின் நல்லதொரு நாளில் அந்த பொருட்காட்சியை மன்னன் திறந்து வைத்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்றபடி எடுத்துச் சென்றனர். சிலர் பொன், சிலர் உடை, சிலர் வீட்டு உபயோகப் பொருட்கள், சிலர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான தேவைக்குரியவற்றை கொண்டு சென்றனர்.

அந்த பொருட்காட்சிக்கு ஒரு மூதாட்டியும் வந்திருந்தார். அவர் அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, எந்தப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருந்த அரண்மனை அதிகாரிகள், அந்த மூதாட்டியிடம் வந்து "அம்மா.. உங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தயங்கி நிற்கிறீர்கள். மன்னனை நேரில் சந்தித்து நீங்கள் கேட்க தயங்குவீர்கள் என்பதால்தான், மன்னன் இதுபோன்ற ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார். எனவே தயக்கம் இன்றி உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றனர்.

அதற்கு அந்த மூதாட்டி, "இங்கிருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை. ஆனால் எனக்கு அரசனைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்றார்.

அரண்மனை அதிகாரிகள், மூதாட்டியின் விருப்பத்தை அமைச்சர்களிடம் கூறினர். அவர்கள் வந்து மூதாட்டியிடம் பேசியும் கூட, அவர் "எனக்கு எந்தப் பொருட்களும் வேண்டாம். அரசனைத்தான் பார்க்க வேண்டும்" என்று கூறிவிட்டார். இதைஅடுத்து அந்தத் தகவல் மன்னனுக்கு சொல்லப்பட்டது. அவர் தன்னுடைய யானையின் மீது ஏறி, அந்த இடத்திற்கு வந்தார்.

யானையின் மீது அமர்ந்தபடியே பாட்டியிடம், "தாயே.. உங்களுக்கு என்ன வேண்டும். நான் வந்து விட்டேன். வேண்டியதைக் கேளுங்கள்" என்றார்.

அதற்கு அந்த மூதாட்டி, "மன்னா.. எனக்கு நீதான் வேண்டும்" என்றாள்.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. "தாயே.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அதை தெளிவாகக் கூறுங்கள்" என்றான்.

"மன்னா.. எனக்கு இந்தப் பொருட்காட்சியில் இருந்து எந்தப் பொருளும் தேவையில்லை. எனக்கு நீதான் வேண்டும். நான் உனது தாய். உன்னை என் மகனாக அடைந்தால், நான் இந்த நாட்டையே அடைந்தவளாக ஆகிவிடுவேன்" என்றாள்.

அதைக் கேட்ட மன்னன், அந்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று, அவளை தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவளது கடைசி காலம் வரை அவளை எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டான்.

●இந்தக் கதை நமக்கு ஒரு உண்மையை உரக்கச் சொல்கிறது. இது ஒரு ஆன்மிகம் சார்ந்த கதை. ஆம்.. இங்கே அரசன் என்பவன் இறைவன். அவன் இந்த உலக மக்களுக்காக இந்த உலகத்தில் ஏராளமான பொருட்களையும், பணம், பதவி போன்றவற்றையும் படைத்து வைத்திருக்கிறான். பலரும் இறைவன் படைத்த இந்த உலகத்தையும், அதில் உள்ள பொருட்களையும் கண்டு மயங்குகின்றனர். ஆனால் வெகு சிலரே இந்த உலகத்தைப் படைத்த இறைவன் யார் என்று ஆராய்கின்றனர், அவனை அடைய வழி தேடுகின்றனர்.

அப்படிப்பட்ட பக்திக்கு 'அனன்ய பக்தி' என்று பெயர். அது இறைவனைத்தவிர வேறு எதையும் கேட்காத பக்தியாகும்.

No comments:

Post a Comment