Courtesy: Sri.Balasubramanian Vaidynathan
இதுவரை எழுதியதில் (ஆரண்யகாண்டம் ஸர்கம் 9) ஸீதா அதிகம் பேசிக் கண்டதில்லை. ஆனால் பேசிய விஷயங்கள் மிகவும் பொருள்பொதிந்தவை. ராமன் வனம் போவேனென்கையில் ஸ்த்ரீதர்மத்தைப்பேசி ராமனுடன் வருவேனென்று கூறியது, அனஸூயாவிடம் தன் திருமணத்தை விளக்கியது என இரு தருணங்கள். ஆற்றைக்கடக்கையில் கங்கையிடம் ப்ரார்தித்தது, விராதனிடம் மாட்டிக்கொண்டபோது கதறியது போன்றவை ஸம்பாஷணையாகததால் விட்டுவிடலாகும்.
தற்போதைய காட்சி- ஶரபங்கர் ப்ரஹ்மலோகத்திற்குச்சென்றபின் தண்டகாரண்யத்து ரிஷிகள் ராமனிடம் அடைக்கலம் வேண்டுகின்றனர். ராமன் அவர்களுக்கு அபயமளித்து ராக்ஷஸர்களை அழிக்க ப்ரதிஞை செய்கிறான். பின் ஸுதீக்ஷ்ணரைச் சந்தித்துவிட்டு கிளம்புகிறான்.
இந்தநேரத்தில் ஸீதா ஹ்ருதயபூர்வமாக,மென்மையாகப்பேசுகிறாள் - "இங்கு காமத்தினின்று பிறந்ததான விசனங்கள் மூன்றே. மித்யாவாக்யம் (உண்மையற்றதைக்கூறுதல்) முக்கியமானது. பர தாரங்களுடன் செல்லுதல், பகையின்றி ரௌத்ரம் ஆகியவிரண்டும் அதனினும் முக்கியமானவை.
त्रीण्येव व्यसनान्यत्र कामजानि भवन्त्युत।
मिथ्यावाक्यं परमकं तस्माद्गुरुतरावुभौ।
परदाराभिगमनं विना वैरं च रौद्रता।
மித்யாவாக்யம் உன்னிடம் இருந்ததில்லை, இருக்கப்போவதில்லை. தர்மத்தை நசிப்பதான வேறு பெண்களிடமான அபிலாஷை உன்னிடம் எங்கே? உன்னிடமில்லை, இருந்ததுமில்லை, எப்போதாகிலும் மனதிலும் தோன்றியதில்லை.
...
மூன்றாவதாகவுள்ளதான பகையில்லாதவிடத்து ரௌத்ரம் என்பதான பிற உயிர்களை ஹிம்ஸிப்பது மோஹத்தினால் உன்னிடம் வந்துள்ளது..."
நான் இங்கே சொல்லவிழைவது தர்மத்தில், தர்மத்தை ராமனுடன் ஸமதையாக நடத்துவதில் உண்மையான ஸஹதர்மிணியாக ஸீதா நடந்துகொள்வது குறித்து. தர்மத்தை ஸமதையாக நடத்துதல் என்றால் சொன்னவற்றையெல்லாம் செய்வதென்பது கிடையாது. தன்வரையில் தர்மத்தில் நின்றுவிட்டு துணைவரின் தர்மமீறலைக் காணமலிருப்பது கிடையாது. தர்மத்திற்கு விரோதமான செயலாக மனதிற்குப்பட்டதை எடுத்துரைத்து ஆற்றுப்படுத்தி தர்மத்தில் மீண்டும் நடக்கச்செய்வது மிகவும் வேண்டியதானது. மனைவியைக்குறிக்கும் பல சொற்களில் எனக்கு மிகவும்பிடித்த சொல் ஸஹதர்மிணி - கூடவே இருந்து தர்மத்தை அனுஷ்டிப்பவள். ஜனகர் கன்யாதானம் செய்கையில் 'இயம் ஸீதா, மம ஸுதா, ஸஹதர்மசரி தவ- இந்த ஸீதா என்னுடைய பெண் உன்னுடன் தர்மத்தில் நடப்பவள்' என்றே கூறித் தருகிறார். அவ்வாறே ஸீதா இங்கே நடந்துகொள்கிறாள்.
இன்னும் விளக்கங்கள் தொடர்கின்றன. அடுத்த ஸர்கத்தில் ராமன் தகுந்த விளக்கங்கள் தந்து ஸீதாவிற்குப்புரியவைக்கிறான்.
#ராமம்பஜேஶ்யாமளம்
No comments:
Post a Comment