குரு என்ற பெரும் ஸ்தானத்துக்கு இந்துக்கள் கொடுத்த இடம் மிக பெரிது, இந்துக்கள் வழிபாடே மூல பரம்பொருளை குருவாக கொண்டு வணங்கி நின்றது
"குருபிரம்மா குரு விஷ்ணு, குருதேவோ மஹேஸ்வர
குரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ"
என இறைவனே தனக்கு குருவாக வந்து வழிநடத்தவேண்டும் என வணங்கி நின்ற மதம் அது, குருவின் ஸ்தானத்தை இறைவனுக்கு நிகராக வைத்து கொண்டாடியது
"மாதா பிதா குரு தெய்வம்" என வரிசையில் தெய்வத்துக்கு முன்பு குருவினை வைத்து உயர்த்தி போற்றி வணங்கிய மதம் அது.
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை "குருவே நமஹ குருவே துணை"
குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.
"குருவில்லாத வித்தை பாழ்", "குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை" என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர்.
குருவுக்கு பாரதம் வகுத்த விதி என்ன? ஏன் குருவினை அப்படி கொண்டாடினார்கள்?
குரு என்பவர் வெறும் பாடம் நடத்துபவர் அல்ல, குரு என்பவர் வெறுமனே பொருளை விளக்கிவிட்டு செல்பவர் அல்ல, குரு என்பவர் காசுக்கு பாடம் சொல்லும் தொழில்செய்பவரும் அல்ல
ஆசிரியர் என்பவர் அறிவு பெற்றவர், அந்த அறிவினை கொண்டு மாணவனுக்கு விஷயங்களை புரிய வைப்பவர் , ஆனால் குரு என்பவர் முழு ஞானம் பெற்றவர் அந்த ஞானத்தினல் மாணவனை முழுக்க செதுக்குபவர்
குரு என்பவர் தள்ளி நிற்பவர் அல்ல, குரு என்பவர் பீடத்தில் ஏறி தனக்கும் மாணவனுக்கும் இடைவெளி விட்டு இருப்பவர் அல்ல, அவர் ஒரு சினேகம் அவர் ஒரு ஞான தூண்டல் செய்பவர், ஒரு வழிகாட்டி ஒரு நண்பன், ஒரு ஆலோசகன், நல்வழி காட்டும் கைகாட்டி என தம்மோடு வருபவர்
குரு என்பவர் ஒரு அனுக்கிரஹம் , குரு என்பவர் பேராசை கொண்டவரோ ஆட்சிக்கும் செல்வாக்குக்கும் ஆசைபட்டு அலைபவரும் அல்ல, குரு என்பது ஒரு ஞானபெருநிலை
குரு என்பவர் உலகை உற்றுபார்ப்பார், தன்னுள் பார்ப்பார் தன்னுள் பார்ப்பதை யாரிடம் இறக்கிவைக்க முடியும், அவனால் இந்த உலகம் பெறும் பலன் என்ன என்பதை கணக்கிட்டு பார்ப்பார், இந்த உலகமும் மாந்தரும் அவனால் நல்வழி அடையும், நன்மை பெறும் என அவருக்கு முழு நம்பிக்கை வரும்பொழுது அவனை செதுக்குவார்
சீடனிடம் இருக்கும் தேவையற்ற விஷயங்களை சிற்பி போல் அகற்றுவார், அவனை வைரம் போல் பட்டை தீட்டுவார், பெரும் அணைகட்டி மக்கள் பயனுற செய்யும் மன்னன் போல தன் சீடனால் மக்களை வாழவைப்பார், அவரும் தள்ளி இருந்து மகிழ்வார்
இதுதான் குரு ஸ்தானம், இறைவன் அனுகிரகத்தால் மிக சரியானோருக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் பாக்கியம்
யார் ஒருவனின் தேடலை நிறைவு செய்கின்றார்களோ அவர்களே அவனுக்கு குரு, யாரிடம் ஒருவன் முழு நம்பிக்கையுடன் சரணடைவானோ அவர்களே அவனுக்கு குரு. அந்த குருதான் அவனை உருவாக்குவார் ஜொலிக்க வைப்பார்
இதைத்தான் அனுபவத்தால் உணர்ந்த இந்துக்கள் குருக்களே தங்கள் சீடன் மூலம் உலகை மாற்றுவார்கள், தர்மத்தை நிலைநிறுத்துவார்கள் என்ற உண்மையினை புராணமாகவும் வரலாறாகவும் நிறுத்திற்று
மகாபாரத்த்தில் அர்ஜூனனுக்கு துரோணர் சரியான குருவாக இருந்தார், பின்னாளில் கண்ணன் எனும் ஞானகுருவினை அர்ஜூனன் சரணடைந்தான், குருவின் வார்த்தைகளுக்கு பணிபவர்கள் பெரும் இடத்துக்கு செல்வார்கள் என்பதற்கு அர்ஜூனனே உதாரணமானான்
ராமாயணத்தில் விசுவாமித்திரருக்கு கீழ்படித்தான் ராமன், அதனாலே அவனுக்கு பலா அதிபலா எனும் சக்திமிக்க மந்திரங்களை போதித்தார் அந்த மாமுனி
குருவினை பணிந்தோரெல்லாம் வாழ்வர் என சொன்ன இந்துமதம் குருவினை மீறியோர், குருவின் வார்த்தைகளை புறக்கணிப்போர் அழிவர் என்பதையும் சில காட்சிகளில் சொன்னது
சுக்கிராச்சாரி எனும் தன் குரு தடுத்ததையும் மீறி தானம் கொடுத்த மகாபலி சக்கரவர்த்தி சரிந்தான், குருவின் சாபத்தால் வீழ்ந்தவன் பெரும் பலசாலியான கர்ணன்
குருவின் நினைவே ஒருவனை வழிநடத்தும் என்பதற்கு ஏகலைவன் உதாரணமாய் நின்றான், குருதடசனைக்கும் குருபக்திக்கும் அதே நேரம் சீடனை நினைத்து மகிழும் குருவுக்குமான உறவாக அவர்கள் இருவரும் வரலாற்றில் நிற்கின்றார்கள்
நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் குருக்களால் பெரும் ஞானம் பெற்றோர் உண்டு,
இந்திய வரலாற்றிலும் குரு சிஷ்ய பாவனை பிரசித்தியானது
எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜகுருவே.
சாணக்கியன் எனும் குருவே சந்திரகுப்தன் எனும் மாமன்னனை உருவாக்கி வரலாற்றில் நிறுத்தினான், பெரும் ஞானி என பெயரெடுத்த அலெக்ஸ்டாண்டரை விரட்டி சாணக்கியனின் மாணவன் நான் என எழுந்து நின்றான் சந்திரகுப்தன்
பாமினி சுல்தான்களுக்கு எதிரான விஜயநகர பேரரசை உருவாக்கிய ஹரிகரர் புக்கருக்கு வித்யாரண்யர் எனும் குருவே சகலமும், அவராலே அந்த இந்து பேரரசு எழுந்தது
வீரசிவாஜிக்கு ராமதாசரே குரு, சரியான வழியில் சரியான நேரம் அவனை நடத்தியவர் அவரே, இந்துராஜ்யம் அவரால் சாத்தியமாயிற்று
மகா ஞானி விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரே குரு, விவேகானந்தர் எனும் பெரும் ஞானஜோதியினை அவர்தான் ஏற்றிவைத்தார்
குரு என்பவர் தெளிவை கொடுப்பார். அறிவை கொடுப்பார், புரிய வேண்டியதை அழகாய் புரியவைத்து அடுத்த படிநிலைக்கு நம்மை உயர்த்துவார், குரு என்பவர் நல்ல சிநேகிதர், நம்மை முழுக்க புரிந்தவர், சரண்டைந்தோரை பெரும் இடத்துக்கு உயர்த்தும் வித்தகர்
வரலாற்றில் குருவுக்கு சான்றாய் நிற்பவன் கண்ணன், சீடனுக்கு சான்றாக அர்ஜூனனும் என்றென்றும் இருப்பார்கள், நல்ல குரு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கண்ணபிரான் எக்காலமும் சான்று
கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர்.
ஒருவன் போய்சேர வேண்டிய இடம் தெரியாமல் திண்டாடி அவனே தேடி அலைந்து அடைவதற்கு பாதை தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்து எளிதாக அடைவதற்கும் வித்தியாசம் உண்டு
குரு என்பவர் இரண்டாம் வகை, அவரை சரணடைந்தால் அவரே செல்லவேண்டிய இடத்துக்கு கொண்டு போய் சேர்ப்பார்
குரு என்பவர் கடைசி நம்பிக்கை, குரு என்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர், குரு என்பவர் உற்சாகம், குரு என்பவர் தோளில் கைபோட்டு அழைத்து செல்லும் தோழன், எவ்வித தயக்கத்துக்கும் கோபத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில் நம்மோடு வருபவர், நம்மை கரைசேர்த்தல் ஒன்றே அவரின் இலக்கு ஆபத்து காலத்தில் நம்மை காக்கும் அரண்
நம்மை நமக்கு யார் புரிய வைப்பாரோ, நம்முள் இருக்கும் நம்மை யார் உணர்வைப்பாரோ அவர்தான் குரு
எந்த இடத்தில் இனி வேறொருவர் வேண்டாம் இவர் போதும் என மனம் முடிவு செய்யுமோ அவர்தான் குரு, குருவில் முழுக்க கரைந்தவர்களுக்கு அதைவிட பெரும் ஆனந்தமோ நிம்மதியோ இருக்கமுடியாது, அவர்தான் குரு
குரு என்பவர் கைபிடித்து நம்மை அழைத்து செல்பவர், புதிய உலகில் நம்மை சஞசரிக்க வைத்து வாழவும் வைப்பார்
நல்ல குரு அமைந்தால் ஒருவன் வளர்ச்சி சரியாக இருக்கும், நல்லவிதமாக அவனை மெல்ல மெல்ல உயர்த்துவார், குருவினை புரிந்துகொள்ளலும் அவசியம் குருவிடம் நம்பிக்கையும் முழு சரணாகதியும் கொண்டால் வாழ்வு இலகுவாகும்
குரு பேதங்களை பார்ப்பதில்லை, பணம் வசதி சாதி அந்தஸ்து என எதையும் அவர்கள் நோக்குவதில்லை, தான் மனதில் தேடும் ஒருவனை தன் பயிற்சிக்கு இவன் சரி என கருதும் ஒருவனை சரியாக அடையாளம் கண்டு அன்போடு நடத்துவார்கள், அவர்கள்தான் குரு
"கருணையினை கொண்டு கருணையினை ஊறவைத்தல்" என்பதுதான் குருதத்துவம்
குருவில் முழுக்க கரைந்தபின், குரு எவ்வளவு சக்தியும் வழிகாட்டுதலும் கொண்டவர் என மனமார அறிந்தபின் எல்லாமும் அதாவது மகிழ்வும் கவலையும் சோகமும் சாகசமும் சந்தோஷமும் நிறைவும் எல்லாமும் குருவே கொடுப்பதாக ஏற்றுகொள்ளும் பக்குவம் வரும், எல்லாம் குருசெயல் எனும் நிம்மதி சூழ்ம், குரு எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றார்
குருவால் கிடைக்கும் பெரும் விஷயம் தெளிவு, அந்த தெளிவுதான் நிம்மதியினை கொடுக்கும், அந்த நிம்மதி எல்லா செல்வங்களை விட திருப்தி தரும் பெரும் செல்வம்
குருவிடம் கொள்ளும் நம்பிக்கையும் பக்தியும் அந்த செல்வத்தை தரும்
சீடன் குருவிடம் தவமிருந்து ஞானம் பெறவேண்டும் என்பார்கள், பத்தினி கணவனுக்கு அமைவது போல் குருவுக்கு நல்ல சீடன் அமைவான் என்பார்கள்
ஒருவகையில் "செம்புல பெயல் நீர்போல" எனும் வரி காதலர்க்கு மட்டுமல்ல, குரு சிஷ்ய பாவனையிலும் அழகாக பொருந்தகூடிய ஒன்று
குருவின் அருமையெல்லாம் உணர்ந்த இந்துமதம், எல்லா தர்மங்களையும் போதித்த இந்து தர்மம் குருக்களுக்கு ஒரு நாளை தேர்ந்தெடுத்தது, அது ஆடிமாதம் வரும் பவுர்ணமி என முடிவும் செய்தது
முழு பவுர்ணமி நாளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
நிலா என்பது சூரியனிடமிருந்து ஒளியினை வாங்கி இருளில் பிராகாசித்து வழிகாட்டுவது போல, குரு என்பவர் இறைவனிடம் இருந்து அருள் பெற்று மக்களை வழி நடத்துவதாக அது சொல்லிற்று
ஆனி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
ஆனி மாதம் தனுசு ராசியில் அன்று வரும் பவுர்ணமி குருவுக்கு என்றார்கள் , ஜாதக பிரகாரம் அந்த ராசி குரு ஆதிக்கம் மிக்கது, அந்த ராசியில் முழுமையான நிலவு நாளை பவுர்ணமி குரு பவுர்ணமி என்றார்கள்
ஆனி மாத பவுர்ணமி குருக்களுக்கானது என குறித்து வைத்தார்கள்
குரு என்பவர் இருளை நீக்கி நம்மை கடவுளின் பாதைக்கு அழைத்து செல்லும் அவதாரம் என அது வலியுறுத்திற்று
குரு பூர்ணிமா என்பது அதுதான். இன்றுதான் அந்த வியாச பவுர்ணமி
இந்நாள் என்பது அந்நாளைய ஞானியர் தினம், உலகின் முதன் முதலாக குருவினை நாள் வைத்து வணங்கிய மதம் இந்து மதமே என்பது மறுக்கமுடியா உண்மை
எந்த மதத்திலும் இல்லா சிறப்பாக குரு வம்சத்தின் அடியாழம் வரை சென்று அது வணங்க சொல்கின்றது, அதாவது உனக்கு யார் குருவோ அவரோடு நின்றுவிடாதே, குருவுக்கும் குரு என பலர் வருவார்கள் அல்லவா? அவர்கள் போதித்த போதனையினை நீயும் பெற்றுகொண்டாய் அல்லவா? அதனால் அந்த மொத்த குரு பரம்பரையினையும் நினைத்து வணங்கு என்கின்றது இந்துமதம்
அதனால்தான் வியாச பவுர்ணமி என அதற்கு பெயர். தனிபட்ட ஒரு குருவினை வணங்காமல் வேதங்களை கொடுத்த வியாசர் வரை எல்லா குருக்களையும் வணங்க சொன்ன நாள் இது, அதனால் வியாச பவுர்ணமி ஆயிற்று
வியாசர் என்பவர் பகவான் நாராயணின் சாயலாக அறியபடுகின்றார் என்பதால் இறைவடிவமான வேதங்களையே தொகுத்தவர் என்பதால் அது சாட்சாத் பகவானையே போய் சேருகின்றது
வியாசர்தான் மகாபாரத்தை கொடுத்தார், அந்த பாரத்தில்தான் கீதையினையும் சொன்னார், வேதங்களை தொகுத்த வியாசர்தான் கீதையினையும் நமக்கு தொகுத்து கொடுத்தார்
உலக நூல்களில் ஒப்பற்றதும்,தத்துவங்களில் முதன்மையானதும், ஞானநூல்களில் எக்காலமும் முதலிடத்தில் இருப்பதுமான கீதையினை தொகுத்ததால் வியாசர் "குருக்களின் குரு" எனும் பெரும் இடத்தை பெற்றார்.
இந்த பிறவியில் நாம் யாரை எல்லாம் குருவாக நினைக்கின்றோமோ அவர்களை எல்லாம் இந்நாளில் வணங்கினால் பல வகை ஆசீகளுக்கும் நல்ல முக்திக்கும் உதவி செய்யும் என்கின்றது சாஸ்திரம்
ஒரு பழமொழி உள்ளது "இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது"
குரு மனம் குளிர்ந்தாலே கோடி நன்மை கூடிவரும் என்பார்கள்
குரு என்பவர் ஞான ஒளி கொடுப்பவர், வாழ வழிகொடுப்பவர், அறிவும் ஞானமும் கொட்டி கொடுப்பவர்
குரு என்பவர் கடவுளால் அனுப்பபட்டு ஒவ்வொருவரையும் கைதூக்கிவிடுகின்றார் என்பதே சரி. சரியான குருவினை கண்டுபிடிக்காதவன் எவனும் வாழ்வில் வெற்றியடைய முடியாது
கல்வி கொடுப்பவர் மட்டுமல்ல, சரியான திசையினை காட்டி ஒருவன் வாழ்வினை திருப்பும் சக்தி கொண்ட எல்லோருமே குரு வகையே
சரியான குருவினை கண்டடைந்தபின் ஒருவன் வாழ்வே மாறிவிடும் என்பதே மானிட வாழ்வியல் தத்துவம், அந்த குருவினை விடாமல் பிடித்து கொள்வதும் அவரை போற்றுவதும் சால சிறந்தது
குருவே சரணம் , குருவே நமஹ என்ற கோஷம் முழங்க இந்த பாரத மண் இந்து தர்மத்துபடி அந்த குரு பவுர்ணமி நிகழ்வினை கொண்டாடுகின்றது
அவ்வகையில் எல்லா குருக்களையும் அவர்களின் குரு பரம்பரையினையும், வேதங்களை கொடுத்த வியாசரையும், அவரின் மூலமான பகவான் நாராயணனையும் நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றது
இந்துக்கள் வாழ்வுமுறை குருபரம்பரை வணக்கமும் வழிபாடும் கொண்டது, குருகுலமும் குருவழி கல்வியும் கொண்ட உன்னத பரம்பரை அது. காவி உடை அணிந்து தங்களை தூய நெருப்பின் சுடர் என காட்டிய அந்த குருக்களை வழிவழியாக வணங்கி வந்த தேசம் இது
காவிஉடை என்பது சன்னியாசிகளின் உடை என இன்று சொல்லபட்டாலும் அந்த உடை உன்னதமான குருக்களை காட்டிய அடையாளம், இறைவனின் அம்சம் கொண்ட குருக்கள் என அவர்களை தனித்து காட்டிய அடையாளம் அது
கோவில்களில் காவிகொடிக்கு அனுமதி கொடுத்த சமூகம் அந்த புனிதத்தை குருக்களுக்குக்கு கொடுத்து குருக்களை வணங்கி வழிபட சொன்னது
அந்த குருகுலம் இன்றிருப்பது போன்ற கல்வி முறை அல்ல, காசுக்கு ஓதும் கூட்டம் அல்ல, அது யாருக்கு எது தேவையோ, யாரை கூர்படுத்தினால் தர்மம் வாழுமோ, யாரை அவர்களுக்கே அடையாளம் காட்டினால் தர்மம் உலகில் செழிக்குமோ அவர்களை குழந்தையாய் நண்பனாய் பாவித்து அவனின் பிறப்பின் நோக்கம் அறிந்து ஞானம் கொடுத்த உன்னத உறவு
அந்த குருபரம்பரை காலம் காவி உடையுடன் ஒரு நாள் இங்கு மீளும், விவேகானந்தர் போன்ற குருக்கள் நிச்சயம் வந்து தேசத்துக்கு நல்ல வழி காட்டும் குருக்களாக அமர்வார்கள் இது நடக்கும் அன்று தேசம் தன் பொற்காலத்தை எட்டும்
100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் என விவேகானந்தர் கேட்கும் பொழுது அவர்களுக்கு அவர் நல்ல குருவாக இருக்க தகுதி கொண்டிருந்தார் என்பதையும் எண்ணிபார்த்தல் வேண்டும், அப்படி நல்ல குருக்கள் காவி அணிந்து வருவார்கள் இத்தேசம் காப்பார்கள்
குருவின் பெருமையினையும் அவசியத்தையும் பாரத ஞானம் எப்படியெல்லாம் கொண்டாடிற்று என்பதையும், அக்குருக்களின் அவசியம் இங்கு எக்காலமும் தேவை என்பதையும் தேசத்தார் உணர்தல் வேண்டும்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குருவின் மேன்மை உணர்ந்து, குருக்களுக்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்து வணங்க சொன்னஇந்து பாரம்பரியம் உலக நாகரீகங்களுக்கெல்லாம் தாய் என்பதை மிக பெருமையாக சொல்லிகொள்ளலாம்
அதுவும் அவர்கள் சொல்லிகொடுத்த ஸ்லோகத்துடன் வணங்கலாம்
"
"அசதுர்முகயத் ப்ரஹ்மா
அசதுர்புஜ விஷ்ணவே
அபால லோசனஃ சம்பு
பகவான் பாதராயண:
வ்யாஸம் வஸிஷ்ட நஃதாரம்
சக்தேஃ பௌத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்
வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோவை ப்ரஹ்ம நிதயே
வாசி'ஷ்டாய நமோ நம"
இன்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது
மாபெரும் ராஜ்ஜியங்கள் அமைத்தவர்களும் வீரர்களும் மட்டுமல்ல , அழியா கலைகள், பெரும் கோவில்கள், சிலிர்க்கும் வரலாறுகள், கங்கை போல் கொட்டும் ஞானங்கள் என வரலாற்றில் யாரெல்லாம் அழியா இடம் பிடித்தார்களோ அவர்களெல்லாம் சரியான குருவினை அடையாளம் கண்டு சரணாகதி ஆனவர்களே
ஆம், நல்ல குருவினை கண்டடைந்தோரெல்லாம் அழியா புகழும் அடையாளமும் பெற்றிருப்பார்கள் இது முக்கால சத்தியம்
குரு வாழ்க, குலம் வாழ்க, குவலயம் வாழ்க
No comments:
Post a Comment