Tuesday, July 30, 2024

Being Aloof is sweet

சில ஆண்டுகளுக்கு முன்,பயணித்துக் கொண்டிருந்த போது,வழியில்
ஒரு கோயில் கண்ணில் பட்டது.

சாலையிலிருந்து சிறிது தள்ளி இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்.

பழமையான கோயில்.
ஏனோ மனதை கவர்ந்தது.

காரை நிறுத்திவிட்டு கோயில் 
நோக்கி சென்றேன். 

கோயில் உள்ளே நுழைந்த போது 
நிசப்தமாக இருந்தது.

ஓரளவு பெரிய கோயில் தான். வெளி பிரகாரம் தூண்களால் நிரம்பிய மண்டபம். பின் உள்பிரகாரம். அதன் பின் கருவறை.

சிவன் கோவில். 

இறைவன் சிவலிங்க வடிவில்.

மீண்டும் குரல் கொடுத்தேன். 
உள்பிரகார மண்டப தூண் அருகே அமைதியாய் கண்மூடி அமர்ந்திருந்த பெரியவர் குரல் கேட்டு கண் விழித்தார்.

என்னை பார்த்தவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.

சுவாமி தரிசனத்துக்கு வந்தேளா? சந்தோஷம். வாங்க... என்று கூறி, அழகாக மந்திரங்கள் கூறி, தீபாரதனை காட்டினார். தரிசனம் முடிந்தவுடன் இருவரும் உட்பிரகார மண்டப திண்ணையில் அமர்ந்தோம்.

குருக்கள் நல்ல தேஜஸ்.தெய்வகடாட்சம். புன்னகை மாறாத முகம்.

கூட்டம் அதிகம் இருக்காது போல " என்றேன்.

பக்கத்தில் இரண்டு மைல் தூரத்தில் கிராமம் இருக்கிறது. காலையும் மாலையும் சிலர் வருவார்கள். இந்த நேரத்தில் யாரும் வருவதில்லை" என்றார்.

தன்னை பற்றியும் கூறினார்.காஞ்சிபுரம் வேத பாடசாலையில் வேதம் முறையாக  படித்திருக்கிறார். பல சிறப்பு வாய்ந்த கோயில்களில் பணியாற்றி விட்டு, பூர்வீக கிராமத்திற்கே வந்து விட்டார்.

காலை முதல் மாலை வரை தனியாக இருப்பது சிரமமாக இல்லையா? என்று கேட்டேன்.

ஒரு பதில் கொடுத்தார் பாருங்கள் :

என்ன சிரமம்?

தனிமை அது வரம் மாதிரி.
எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

தனிமையில் நம்மை நாமே விசாரம் செய்து கொள்ளலாம்.அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்ற ஞான உபதேசங்களுக்கு உண்மையாக ஆத்மார்த்தமாக விளக்கம் பெறலாம்.

சிவலிங்கத்தின் தத்துவத்தை உணரலாம். நாம் இந்த வெறும் உடல் அல்ல. பின் நாம் யார்? என்ற கேள்வி கேட்டுக் கொண்டு  உள்ளே பயணிக்கலாம். 

விளக்கம் பெற பெற உலக பற்று மெல்ல மறையும். வந்த வேலையை சிறப்பாக செய்து விட்டு, சிவனோடு அந்த மகாசக்தியோடு இணைவதே பிறவியோட  இறுதி நிலை என்ற ஞானம் வந்துடும். 

மனுஷாள் எல்லாமே தெய்வத்தோட குழந்தைகள்தான் என்று புரியும்.... 
சொல்லிக் கொண்டே போனார்.

பிரமித்து விட்டேன். யாருமற்ற இந்த சிவன் கோவிலில் இப்படியொரு ஞான விளக்கம் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலை வழிபாடு குறித்து?

எல்லோருமே ஞான மார்க்கத்தில் ஆரம்பத்திலேயே நுழையறது சிரமம். மனம்பண்படணும.பள்ளிகூடம்முடிச்சுட்டு காலேஜூக்கு போறாப்லே.

முதல்லே சிலை வழிபாடு. மனம் ஒன்றின் மீது கவனம் செலுத்தி தன்னுள் தன்னை அறிய ஒரு குறியீடு வேணுமே.

பின் மனம் செம்மையுற இயல்பாகவே அடுத்த நிலைக்கு போயிடும். 
அது ஞான மார்க்கம்.

செம்மையுறாவிட்டால்?

ஒண்ணும் பிரச்னை இல்லை. 
பக்தி மார்க்கத்திலே ஆழ்ந்து ஆழ்ந்து 
த்வைத தத்துவத்தில் பயணிப்பாங்க.

த்வைதமோ,அத்வைதமோ மனம் உயரிய நிலைக்கு, தானே பயணிக்கணும். அவ்வளவுதான். 

எந்த மார்க்கத்தில், எப்படி பயணித்தாலும் இறுதி இலக்கு அவனே... என்று சொல்லி சிரித்தார்.ஞான சிரிப்பு.

மெய் மறந்து விட்டேன்.

புறப்படும் போது, பணம் கொடுத்தவுடன், கோயில் உண்டியலில் போடுங்கள். எனக்கு பகவான் கொடுக்கிறார். சந்தோஷமாக நிறைவோடு  இருக்கிறேன். அது போதும் " என்று கூறினார்.

புறப்படும் போது கோவில் வெளிப்புறம் வரை வந்து, நான் காரில் ஏறும்வரை பார்த்து கொண்டே இருந்தார்.

கார் புறப்படும் போது வணங்கினேன். 

இரு கைகளையும் உயர்த்தி ஆயுஷ்மான் பவ என்று அவர் ஆசிர்வதிப்பதை உணர முடிந்தது.

கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்று மட்டும் புரிந்தது.

பிடித்த என் பதிவு.

No comments:

Post a Comment