Wednesday, June 5, 2024

Thirukoshtiyoor nambi - Acharya of Ramanuja

ராமாநுஜரிடம் எம்பெருமானைக் கண்ட
திருக்கோஷ்டியூர் நம்பிகள்-(பதிவு 1)
🌍🌎🌏🌐🗺🌍🌎🌏🌐🗺
நாளை (06/06/2024)வைகாசி ரோஹிணி-ராமாநுஜரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பிகளின், ஆண்டு திருநட்சித்திரம்.

நம்பிகள் தனியன்:

"ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம்,
ஸ்ரீமத் கோஷ்டிபூரணம்,
தேசிகேந்திரர் பஜாமஹே"

"மஹாலக்ஷ்மி நாதன் ஸ்ரீமந்நாரயணன் திருவடிகளில்,
ஞானாம்ருத பக்தி அமிர்தக்கடல் போன்றவரும் , ஆசார்ய சிரேஷ்டரும் ஆன, திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்"

இவருக்கும் உடையவருக்கும் இடையே நடந்த சில சம்பிரதாய வைபவங்களைப் பார்ப்போம்.

1.ஆசார்யரின் மேன்மையை,
அகிலத்துக்கு உணர்த்திய அண்ணல்.
             ☝👆👌👍👏👏
ராமாநுஜர் நம்பிகளிடம் இருந்து திருமந்திர, அர்த்தம் தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் (சிவகங்கைக்கு அருகில்) சென்றார்.அந்த ஊருக்குச்
சென்றுஅங்குள்ளோரிடம்,"திருக்குருகைப்பிரான்' ஸ்வாமியின்(நம்பியின் இயற்பெயர்),திருமாளிகை எது என்று கேட்டார்.அவர்கள் அதோ தூரத்தில் தெரிகிறதே என்று காட்டினர்.இவர் அந்த இடத்திலேயே,
திருமாளிகை திசை நோக்கி,
வேரற்றமரம் போல் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.எழுந்து மீண்டும் முடியிடத்தில்,அடிபடுமாறு அவர் திருமாளிகை வரை தண்டம் சமர்ப்பித்து,திருமேனியால் அளந்து சென்றார். இதைப் பார்த்து வியந்த ஊராருக்கு, அப்பொழுது தான் புரிந்தது-தங்கள் ஊரில் இருக்கும் அந்தப் பிராமணர் ஒரு பெரிய ஸ்வாமிகள் என்று. அவர்களும் மகிழ்ந்து நம்பிகளைக் கொண்டாடினர்.

2.பழுத்தவேர்ப்பலாவும்,தேனில் ஊறிய பலாச்சுளைகளும்
        🍍🍍🍍🍍🍌🍌🍌🍌
திருக்கோஷ்டியூர் நம்பி மரத்தில் இருக்கும் பலாப்பழம் போன்றவர். முள்தோல் மூடி,சக்கைகள்சூழ்ந்து,
கொட்டைகளுடன் ஒட்டிக் கொண்டிரு க்கும் பலாச்சுளை.அவ்வளவு எளிதில் சுளை கிடைக்காது.
அவருடைய  ஆசார்யர்,ஆளவந்தாரே ராமாநுஜருக்கு,ரஹஸ்யத்ரயங்களின் அர்த்தங்களைச் சொல்ல வேண்டும் என்று நியமித்திருந்தும் கூட,ராமாநுஜருக்கு பல பரீட்சைகள் வைத்து,18 முறை வரச் செய்து 18 ஆவது முறைதான் அர்த்த விசேஷங்களைச் சொன்னார்-அதுவும் நிபந்தனைகளோடு.
முதல்முறை ராமாநுஜர் வந்து சென்றபிறகு,ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு வந்த நம்பியிடம்,
பெரியபெருமாளே,''நம்மிராமாநுசனுக்கு,ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும்''என்று அர்ச்சகர் முகேன கட்டளையிட்டார்-ஆயினும் மீண்டும் 17முறை, திருக்கோஷ்டியூருக்கு நடக்க வைத்தார்!!

18வது முறை அர்த்தங்களைப் பெற்றறிந்த ராமாநுஜர், இத்தகைய மோட்சம் தரும் உயர்ந்த மந்திர அர்த்தத்தை அனைவருக்கும் தெரிவித்து, அவர்கள் உஜ்ஜீவனம் அடைய வழி செய்யலாம் என்று கருணையுள்ளம் கொண்டார். சௌம்யநாராயணப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள, தெற்காழ்வான் சந்நிதிக்குச் சென்று,இவற்றின் பவித்ரத்தை உணர்ந்து,தெரிந்து கொள்ளும் ஆசையுடையோர்க்கெல்லாம்,சொன்னார்!!(எவ்விதப் பரீடசையுமின்றி) !அவர் கோபுரத்தின் மேலே ஏறித் தெருவில் போவோர், வருவோருக்கு எல்லாம் சொல்லவில்லை ராமாநுஜர் பற்றிய பல நூல்களில் அவ்வாறு குறிப்பிட்டிருப்பது சரியல்ல !!

எவ்விதப்பரீட்சையுமின்றி, ஆசை
ஒன்றே தகுதி என்று கொண்டு ,எளிதில் உரைத்தார் காரேய் கருணை இராமானுசர்!! ஓராண் வழியாய் உபதேசம் பெற்று வந்த நிலையை மாற்றி, அனைவரும் பெற ஏதுவாக 74 சிம்மாசனாதிபதி
களையும் நியமித்தார்.ஆசார்யர் சொல்லை மீறி,ஆசையுடையோருக்
கெல்லாம் தாம் உபதேசித்ததால்,
தாம் நரகம் புக வேண்டும் என்று தெரிந்திருந்தும், அவ்வாறு செய்தார், வாழ்கின்ற வள்ளல் ராமாநுஜர். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களுள் ராமாநுஜரே 'கிருபாமாத்ர ப்ரசந்நாசார்யர்' (நமக்கு எந்த சிறு தகுதியும் இல்லாவிட்டாலும் அவருடைய கிருபை/கருணை ஒன்றாலேயே நம்மைக் கடைத்தேற்றுபவர்).அவருக்கு முன்னால் இருந்தவர்கள்-திருக்கோஷ்டியூர் நம்பி வரை 'அநுவிருத்திப் பிரசந்நாசார்யர்கள்'
(பல பரீட்சைகளில் தேறியும், அவர்கள் நினைத்தால் மட்டுமே உபதேசிப்பார்கள்).மலைத்தேனில் ஊறவைத்த பலாச்சுளையாகத் தித்திப்பவர் ராமாநுஜர்.

3.எம்பெருமானார் ஆன ராமாநுஜர்:
          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர்,தம் நியமனத்தை மீறி பலருக்கும் மந்திர அர்த்தத்தை உபதேசித்ததைச் செவியுற்ற, திருக்கோஷ்டியூர் நம்பி ராமாநுஜரிடம்,

"ஒருவருக்குஞ் சொல்ல வேண்டாம் என்று நியமித்தன்றோசொன்னோம்;
அத்தை மறுத்துச் சொன்ன உமக்குப் பலம் எது?" என்று கேட்க,

உடையவரும்,"ஆசார்ய நியமனத்தை மறுத்த அடியேனுக்கு நரகமே பலம்" என்று கூற,

"இதையறிந்தும் சொல்லுவானேன்" என்று கேட்க,

"அடியேன் ஒருவனே அன்றோ நரகம் புகுவது?தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொல்லுகை
யாலே,இவ்வாத்ம கோடிகள் எல்லாம்,தேவரீர் திருவடி சம்பந்தத்தாலே, உஜ்ஜீவிப்பார்கள் என்று சொன்னேன்" என,

நம்பிகளும் "இந்தப் பர ஸம்ருத்தி நமக்குக் கூடிற்றில்லையே!"
என்றருளி,

"🙏எம்பெருமானேரே🙏"வாரும்!'என்று அணைத்துக் கொண்டு," 👌அவரோ நீர் !! (பள்ளிகொண்டிருக்கும் பெரியபெருமாளோ) 👏" என்றருளி,
'"இதுவரையில்இத்தர்சனம்(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம்),பரமவைதிக சித்தாந்தம் என்றிருந்தது; இன்று முதல்

"எம்பெருமானார் தர்சனம்" என்னுங்கோள்'
என்று எல்லோருக்கும் அருளிச் செய்தார்.

மிகுந்த உகப்பிலிருந்த நம்பிகளும், எம்பெருமானாருக்குப் பரமரஹஸ்யமான சரமஸ்லோகத்தின் திவ்ய அர்த்தத்தை யும் அருளிச்செய்ய விழைந்தார். எம்பெருமானார் நம்பிகள் அருளிச்செய்த திருமந்திர அர்த்தத்தை நன்கு பேணி உணர வேண்டியிருப்பதை விண்ணப்பித்தார். நம்பிகளும் இப்போது போய்விட்டு,மீண்டும்வந்து கேட்டறியுமாறு சொன்னார். ஸ்ரீரங்கம் திரும்பிய எம்பெருமானார் மீண்டும் திருக்கோஷ்டியூர் சென்று நம்பிகளிடம் சரமஸ்லோக அர்த்தம் கேட்டு அறிந்தார்.

4.பதினெட்டும்(18)தந்து,பெருங்கீர்த்தி
 பெறச்செய்த 'கோஷ்டிபூரணர்'(நம்பி)
        18 18 18 18 18 18 18 18 18 18

தகுதி வாய்ந்தவர்களுக்கே, மந்திரங்களின் அர்த்த விசேஷங்களைச் சாதிக்க வேண்டும்;அப்போது தான் அவற்றின் விலைமதிப்பில்லா மேன்மை புரியும் என்று வைத்திருந்தனர் பூர்வாசார்யர்கள்."ரஹஸ்ய மந்திரங்களில் பிரதம ரஹஸ்யம் திருமந்திரம்;திருமந்திரத்தினுடைய சீர்மைக்குப் போரும்படி,
ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க வேணும்" என்பதற்கு ஏற்ப திருமந்திரத்தை அதற்கான அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த அதிகாரிக்கே உபதேசித்தனர்.
அப்படியென்றால் ராமாநுஜருக்கு தகுதி இல்லையா?அவருக்கே இவ்வளவு கடுமையான பரீட்சையா? என்று எண்ணத் தோன்றும்.
ராமாநுஜர் பற்றியும், அவருடைய ஆதிசேஷ அவதாரம் பற்றியும் அறியாதவர் அல்ல திருக்கோஷ்டிநம்பி.மந்திரங்களின் மாண்பு,ராமாநுஜரின் மேன்மை, ஆசார்யபக்தி ஆகியவற்றை நம் போன்றோர் போற்றித் தெரிந்த கொள்ளவே,நம்பி இப்படிச் செய்தார். ஒவ்வொரு முறை வரும்போதும் ஒவ்வொரு தகுதி பெற்று வருமாறு, ராமாநுஜரைத் திருப்பி அனுப்பினார்.
அவை 18 ரஹஸ்யங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப் படுகின்றன.
அவையாவன:

1.சம்சார பீஜம் அற்று வாரும்.
2.அகங்கார,மமகாரம் தொலைத்து வாரும்.
3.தேக, ஆத்மா அபிமானம் தொலைத்து வாரும்.
4.ஆத்மஞானம் கைவந்து வாரும்.
5.ஐஸ்வர்ய,கைவல்ய போகங்களில் ஆசையற்று வாரும்.
6.பகவத் விஷ்யத்தில் ஆசையோடு வாரும்.
7,விஷ்யாந்திரத்தில் ருசி அற்று வாரும்.
8 பாரதந்தர்யம் கைவந்து வாரும்.
9.அர்த்த,காம,ராக துவேஷம் அற்று வாரும்.
10.ஸ்ரீவைஷ்ணத்துவம் கிடைத்ததா என்று பார்த்து வாரும்
(இவை 18 படிகள் மாதிரி.ஒவ்வொரு படியாகக் கடந்து தான் அடுத்த படிக்குச் செல்ல வேண்டும்.9 படிகள் கடந்து 10ஆவது படியில் ஸ்ரீவைஷ்ணவரா என்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம்,இதில் ஒரு படியாவது கடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும்!!)
11 சாத்வீகப் பரிக்கிரஹம் இருக்கிறதா?
12 பாகவதப் பரிக்கிரஹம் இருக்கிறதா?
13 பகவத் பரிக்கிரஹம் இருக்கிறதா?
14.அநந்யாக சேஷபூதனாக/ அநந்யப் பிரயோஜனராக வாரும்
15 ஓங்காரத்தின் அர்த்தம் புரிந்து வாரும்
16.அநந்ய சரண்யன் என்று புரிந்து வாரும்.
17.அதிகாரி புருஷனாகி வாரும்
18.ரஹஸ்யார்த்தம் உபதேசம்.

ராமாநுஜரும் சற்றும் தளர்வே இல்லாமல் மிகுந்த ஆர்த்தியுடன் ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கத்திலிருந்து,
திருக்கோஷ்டியூர் சென்று கொண்டே இருந்தார்.(அந்த ஆர்த்தியானது,
"பூர்வாசார்யர்கள் திருமந்திர அர்த்தம் அறிவதற்கு முன்பு,
தங்களைப் பிறந்தார்களாக நினைத்திரார்கள்" என்பதை உணர்த்துகிறது)

5.சீலமிக்க சிஷ்யரின் ஆத்மசுகம் மட்டுமின்றி,தேகசுகத்தையும்
பேணிய பேராசார்யர்!!
🍋🍒🍓🍅🍎🍇🍏🍈🍑
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிஷ்யரின் ஆத்மசுகத்தை ஆசார்யர் நல்லுபதேசங்கள் சொல்லி நன்றாகப் பேணுவார்.சிஷ்யர் ஆசார்யரின் தேகசுகத்தை-அவருடைய அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி அவரை நன்றாகப்பேணவேண்டும்.
"ஆசார்யன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்,தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை , ஆசையுடன் நோக்குமவன்" என்னும்படி.
ஆசார்யரின் இந்த நடைமுறைத் தேவைகளை சிஷ்யர்கள் பார்த்துக் கொண்டால் அவர் ஆத்ம,சம்பிரதாய விசாரங்களில் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வார்.நம்பிகள் ஓர் அற்புத ஆசார்யர்;தம் சிஷ்யர் ஜகதாசார்யர் என்று உணர்ந்தவர்.
அவர் ராமாநுஜருக்கு ஆத்மானுகூல விஷ்யங்களை உபதேசித்ததோடு அவருடைய தேகநலத்தையும் கவனித்துக் கொண்டார்.

ஒரு முறை ஸ்ரீரங்கத்தில், ராமாநுஜரின்,சீர்திருத்தங்களைப் பிடிக்காத சிலர், அவருக்கு உணவில் விஷம் கலந்து விட்டனர்!!.இதை அறிந்த உடையவர் அந்த உணவை உட்கொள்ளாமல் காவிரியில் கரைத்துவிட்டார். அன்றிலிருந்து எதுவும் உண்ணாமல்,15 நாட்களாக உபவாசம் இருந்துவந்தார். இதைச் செவியுற்ற நம்பிகள் திருக்கோஷ்டியூரிலிருந்து ஓடோடிவந்தார்.தம் ஆசார்யர் ஸ்ரீரங்கம் வருகிறார் என்னும் செய்தி அறிந்து,அவரை எதிர்கொண்டு அழைக்க உடையவர் திருக்காவேரிக்குச் சென்றார்.தம் ஆசார்யரைக் கண்டதும்,
காவிரி மணலில் சாஷ்டாங்கமாக தண்டம் சமர்ப்பித்தார்.தண்டனிட்டு வணங்கினால்,வணங்கப்படுபவர்,
உடனே நல்லாசி கூறி அவரை எழச்சொல்ல வேண்டும். ஆனால் அன்று சிறிது நேரமாகியும்,நம்பிகள்
உடையவரை எழச்சொல்லவில்லை.
சித்திரை மாத,மத்யான சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி மணலில்
எம்பெருமானார்(15 நாட்களாக உபவாசம் இருப்பவர்) விழுந்து கிடக்கிறார்!!பெருங்கூட்டம் நின்று கொண்டிருக்கிறது.யாரும் வாய்திறக்கவில்லை .சிறிது நேரம் கழித்து கூட்டத்திலிருந்து 'கிடாம்பியாச்சான்'என்பவர் வேகமாக வந்து,ராமாநுஜரை எடுத்து வாரி அணைத்துக் கொண்டு,நம்பிகளைக் கோபமாகப் பார்த்து,

"இது என்ன சிஷ்ய ஆசார்ய க்ரமம்? கருமுகை மாலையை வெயிலிலே போகடுவார்களா?"என்று கேட்டார்.

உடனே நம்பிகள் "உம்மை மாதிரி ஒருவர்,ராமாநுஐரைப் பொங்கும் பரிவுடன் பேண வருவாரா என்றுதான் இந்நேரம் எதிர்பார்த்து இருந்தேன். இன்றிலிருந்து நீரே ராமாநுஜருக்குத் தளிகை செய்யும் கைங்கர்யத்தை ஏற்று செவ்வனே நடத்தும்"என்று நியமித்தார்.
அந்த நியமனத்துக்குத் தக்க,
கிடாம்பியாச்சான் ராமாநுஜரையே தெய்வமாக ஏற்று,அவருக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் மிகப் பரிவாக/பக்குவமாகச் செய்து வந்தார்.

6.ஆசார்யர்(தந்தை),சிஷ்யருக்கு(மகற்கு)ஆற்றும் உதவி அவயத்து,
முந்தியிருப்பச் செயல்:
🌺🌻🌼🌷⚘🏵💮🌸
ராமாநுஜரின் மற்றொரு ஆசார்யர், ஸ்ரீதிருமாலை ஆண்டானிடம், அவர் திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றறிந்து வந்தார்.ஆனால் ராமாநுஜரோ "சொல்லார் தமிழொருமூன்றும்,சுருதிகள்
நான்கும் எல்லையில்லா அறநெறி"
யாவும் அறிந்தவர்.எனவே அவர் பல பாசுரங்களுக்குத் திருமாலை ஆண்டான் சொல்வதிலிருந்து மாறுபட்டு,உயர்ந்த விளக்கங்களைச் சொன்னார்.திருமாலை ஆண்டான்,
அவர் ஏதோ இல்லாத புது அர்த்தங்களைச் சொல்வதாக நினைத்து,அவருக்குக் கற்றுக் கொடுப்பதை நிறுத்தி விட்டார்.
இதைக் கேள்விப்பட்ட நம்பிகள் திருக்கோஷ்டி யூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து திருமாலையாண்டானிடம்
"ராமாநுஜரை யாரென்று நினைத்தீர்?அவர் உரைத்த விளக்கங்களை நம் ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தார் உரைக்கக் கேட்டிருக்கிறேன்.பகவான்
ஸ்ரீகிருஷ்ணர் எப்படி,உலகோருக்
காக சாந்தீபினி முனிவர் குருகுலத்தில் கல்வி கற்றாரோ,
அப்படி ராமாநுஜர் உம்மிடம் கற்கிறார்.எனவே உடனே வகுப்பு ஆரம்பிக்கவும்" என்று நியமித்தார்.
மீண்டும் கற்றுத்தர ஆரம்பித்த திருமாலையாண்டான் ராமாநுஜரிடம்,தம் ஆசார்யர் ஆளவந்தாரைச் சேவித்தேன் என்றார்!!

7.திருக்கோஷ்டியூர் நம்பி  ஆராதனை செய்த ராமாநுஜர்!
நம்பிகளின் பிள்ளைகள், ஆஸ்ரயித்த ராமாநுஜர்!!
        💐🏵🌺🌻🌼🌹💐
நம்மாழ்வார் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நாலாயிரம் தந்தருளிய போது, பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர் விக்ரகத்தையும் அருளிக் கொடுத்தார்.(ராமாநுஜர் அவரிப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே!).அந்த விக்ரகம் நாதமுனிகளிக்குப் பின்னால் வந்த ஆசார்யர்கள் உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி,ஆளவந்தார் வழியாக திருக்கோஷ்டியூர் நம்பியிடம் வந்து அடைந்தது.இந்த ஆசார்யர்கள் அனைவருமே பவிஷ்யதாசார்யருக்கு திருவாராதனை செய்தார்கள்.இந்த பவிஷ்யதாசார்யர் ராமாநுஜரை இன்றும் திருக்கோஷ்டியூரில் சேவிக்கலாம்.

திருக்கோஷ்டியூர் நம்பி,தம் திருக்குமாரர் தெற்காழ்வானையும்,திருக்குமாரத்தி தேவகியையும் ராமாநுஜரிடம் சீடர்களாக ஆஸ்ரயிக்குமாறு செய்தார்.பூமிப்பிராட்டி ஆண்டாளும்,பெரிய தம்பதிகளின் குமராத்தி அத்துழாயும் உடையவரை "அண்ணன்" ஆக வரித்ததைப் போல், தேவகியும்  அவரை அண்ணனாக வரித்தார்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment