Thursday, June 27, 2024

Sita jayanti

*சீதா ஜெயந்தி : *

சீதா தேவி தோன்றிய நாளான சித்திரை அமாவாசைக்கு பின் வரும் (வளர்பிறை) நவமி அன்றே , "சீதா ஜெயந்தி" என்றும் "சீதா நவமி" என்றும் பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர். பூமா தேவியின் பொறுமை அன்னையிடம் திகழ்வதால் பூமி மாதாவையும் அந்த தினத்தில் போற்றி புகழ்கின்றனர். வட மாநிலங்களான பீகார், அயோத்தியா, ஆந்திராவில் இத்திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

மிதிலையின் அரசராக இருந்த ஜனக மகாராஜா ஒரு பெரிய ஞானி. ஒரு சமயம் ஜனக மகாராஜா நிலத்தை உழுதுகொண்டிருக்கும்பொழுது, பூமியில் இருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. அயோத்தியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றிய ராமபிரானை திருமணம் செய்துகொள்வதற்காக, மகாலக்ஷ்மியின் அம்சமாக ஜனக மகாராஜாவுக்குக் கிடைத்த அந்தக் குழந்தைதான் சீதை.

சீதை பரிசுத்தமான துளசிச் செடியைப் போன்றவள். நிலத்தில் தோன்றிய அந்தக் குழந்தை சீதை என்னும் பெயர் கொண்டு , மிகச்செல்லமாக மாளிகையில் வளர்ந்து வந்தாள். ஒருநாள் சீதை பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பந்து ஒரு பெட்டியின் இடுக்கில் சென்றுவிட்டது. அந்தப் பெட்டியில்தான் சிவதனுசு வைக்கப்பட்டு இருந்தது.

வில்லை தூக்கி நிறுத்துவதே கஷ்டம். அப்படி இருக்கும்போது, சீதை சிவதனுசு இருந்த பெட்டியை தன் மலர் போன்ற கைகளால் சற்றே தள்ளிவிட்டு, இடுக்கில் இருந்த பந்தை எடுத்தாள்.

அதை மாடத்தில் இருந்து பார்த்த ஜனக மகாராஜா, அந்த வில்லை எடுத்து வளைப்பவனுக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அயோத்தி ராமபிரான் வில்லை எடுத்து வளைத்து சீதையை திருமணமும் செய்துகொண்டார். பிறந்த வீடும், புகுந்த வீடும் பெருமை வாய்ந்த ராஜகுலங்கள்.

இத்தனை சுகபோகங்களில் வாழ்ந்தாலும் ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபொழுது, தானும் கணவனுடன் சென்றாள் தீராத துயரையும் அனுபவித்தாள். சீதை உலகம் புகழும் பதிவிரதையாகவும் பரிணமித்தாள்.

*சீதா தேவி விரத பலன்கள்:*

வம்புப் பேச்சுக்களை குறைத்து அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மைஉணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னைஅருள்வாள். அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும்சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள்.

*ஸ்ரீராமஜயம்*🙏🙏🙏🙏

No comments:

Post a Comment