Thursday, June 27, 2024

Cave of Shankara - Periyavaa

*ஆதிசங்கரர் தீட்க்ஷை*
 *பெற்ற ஓம்காரேஸ்வரர்* *குகை*


ஸ்ரீ ஆதிசங்கரர் தீட்க்ஷை பெற்ற ஓம்காரேஸ்வரர்  குகை எங்குள்ளது 
என்று உலகில் எவருக்குமே தெரியாமல் இருந்துள்ளது. அதை வெளி உலகிற்கு கொண்டு வந்ததின் பெருமை 1970  ஆண்டுகளில்  மத்திய பிரதேசத்தில் மின்  பொறியாள அதிகாரியாக பணியாற்றி வந்திருந்த  திரு நாகராஜா சர்மா என்பவரையே போய் சேரும். அதை கண்டுபிடிக்க அவர் எடுத்த பகீரதப் பிராயர்த்தனங்களும்,  முயற்சிகளின் பின்னணியும் அதில் அவருக்கு ஏற்பட்ட பிரமிக்கத்தக்க அனுபவங்களும் ஆச்சர்யமானவை. அந்த குகை இருந்த இடத்தைக் கண்டு பிடித்த அவரை தூண்டியதே ஒரு விசித்திரமான நிகழ்வாகும். அதைக் குறித்து அவர் இப்படியாக கூறி உள்ளார்.

ஒருமுறை அவர் நர்மதை ஆற்றின்  கரையில்  நின்று   கொண்டு இருந்தபோது "ஏண்டாப்பா இந்த  பக்கத்தில் உள்ள பல கோவில்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து தமிழ் பத்திரிகைகளில் பிரசுரித்து வருகிறாயாமே, ஆதி சங்கரர் சன்யாசம் பெற்றுக் கொண்டு சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்ட குகை இங்கேதான் இருக்கிறது. உனக்கு ஏதாவது தெரியுமா?"  என்று அந்த நதியில் நீராட வந்திருந்த ஒரு தமிழ் பாட்டி அவரிடம் இந்த கேள்வியைக் கேட்ட பின், அதற்கு பதில்  கூற இயலாமல் அவர் நின்றிருக்க  "சரி தேடிப் பார் கிடைக்கலாம்" என்று தொடர்ந்து  கூறி விட்டு அந்த பாட்டி  அங்கிருந்த கூட்டத்தில் நுழைந்து மறைந்து விட்டாராம். அவர் யார் என்று இன்றுவரை அவருக்கு விளங்கவில்லை என்றாலும்,  அந்த பாட்டி அப்படியாகக் கூறிவிட்டு மறைந்து விட்ட பின்  பலகாலம் மத்திய பிரதேசத்தில் பல இடங்களிலும் பணிபுரிந்து வந்திருந்த திரு நாகராஜா சர்மா அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார். தானே அந்த இடத்தை தேடிக் கண்டு பிடித்தால் என்ன என்ற வைராக்கியம் அவர் மனதில் ஏற்பட அந்த குகையை தேடும் பணியை 1971 ஆம் ஆண்டு துவக்கினாராம்.  துவக்கம் முதலிலேயே அவருடைய முயற்சிக்கு அனந்தஸ்ரீ விபூஷீத் ஜகதகுரு சங்கராச்சாரியார் ஜோதிஷ் பீடாதீஸ்வர் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி அவர்களே ஊக்கம் அளித்து வந்ததும் இல்லாமல் சில அறிவுரைகளையும் கூறினாராம். அவர் கூறிய அறிவுரையின்படி திரு  நாகராஜா சர்மா அவர்கள்  தேடுதல் வேட்டையை துவக்கினார். அந்த அனுபவம் குறித்து அவர் இப்படியாக எழுதி உள்ளார்  " முதலில் ஸாங்கல்காட்  என்ற குக்கிராமத்தை அடைந்தேன். கோட்டேகாவுங் எனும் ரயில் நிலையத்தில் இருந்து  35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நடந்தே செல்ல வேண்டி இருந்தது.  நர்மதையோடு ஹிரன்   என்ற ஆறு கலக்கும் இடமான ஸாங்கல்காட்டின் முற்பெயரான சங்கர்காட்   என்று கூறுவார்களாம். 'நர்மதை ரகசியம்' என்ற இந்தி புத்தகத்தில்  ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு தங்கி உள்ளார் என்று படித்த உடனேயே எனது உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அந்த கிராமத்தை  அடைந்தபோது நடுநிசியாகிவிட்டது. மறுநாள் காலை அசதியாக இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகள் உதவியோடு அங்குள்ள ஒரு குகையைக் காணப் புறப்பட்டேன். குகைகள் எதிர்கரையில் இருந்ததினால் நர்மதை நதியை கடந்து செல்ல வேண்டி இருந்தது. இரு நபர்கள் மட்டுமே அமர்ந்து கொண்டு செல்ல முடிந்த  டோங்கா எனப்படும் குறுகிய சிறு படகில் ஏறி ஆற்றைக் கடக்கலானேன். டோங்காவில் இரு நபர்களே உட்கார முடியும். அதற்கு அனுபவம் வேண்டும். சைக்கில் பாலன்ஸைப் போல இந்த டோங்கா சவாரியிலும் பாலன்ஸ் ரொம்ப முக்கியம்.  நர்மதை நதியில் எனது பாலன்ஸ் திவாலாகிவிடவே, நானும் படகோட்டியும் டோங்காவோடு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கினோம். காவேரியில் நீச்சல் பழக்கம் அப்போது கை கொடுக்கவே உயிர் தப்பினேன். மேற்கொண்டு பயணம் சொட்ட சொட்ட ஈர உடையோடுதான். அதுவும் குளிர் காலத்தில் !"நர்மதை நதியின் ஓட்ட  திசையில் அதன் கரை வழியே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு ஈரத்துடனேயே நடந்து சென்று  நதியின் கரையில் இருந்து   சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவில்  இருந்த ஒரு குகையை அடைந்தேன். புலி முதலிய துஷ்ட மிருகங்கள் அந்த குகையில்  தங்கி கால்நடைகளை திடீர்  என்று தாக்கி வந்ததினால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த குகையின் வாயில் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் வாயில் பகுதியில் கோவில் மணி கட்டியது போல ஒரு பாறை இருக்க, அதை தட்டினால் சங்க நாதம் போன்ற ஒலி எழும்பியது மட்டும் இன்றி அந்தப் பிராந்தியம்   முழுவதும் காலை அழுத்தி வைத்து நடந்தால் வெண்கல நாதம் போன்ற ஓசை எழும்பியது.  அந்த குகைக்குள் வெளிச்சம் செல்ல இரு  துளைகள் இருந்ததாகவும், இரண்டு நாட்கள் அங்கு தங்கி மேலும் சில  செய்திகளையும்  சேகரித்துக் கொண்டு மீண்டும் ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்களை சந்தித்து அனைத்து விவரங்களை தந்தேன். அது மட்டும் அல்லாமல் ஆதிசங்கரர்  தனது குருவை 'சங்கரகங்கா' எனும் இடத்தில்தான் சந்தித்தார் என்றும், அந்த இடம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளுக்கு மட்டுமே  தெரியும் என்பதாகவும் 'சங்கரரும் ஷண்மதமும்' எனும் ஒரு ஆங்கில நூலில் காணப்பட்ட செய்தியையும் அவரிடம் கூறினேன். அதைக் கேட்ட ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்கள் ஒருமுறை காஞ்சி மடத்திற்கு சென்று பரமாச்சார்யாரை தரிசித்துவிட்டு வருமாறு   எனக்கு  அறிவுரை  தந்தார். காஞ்சி மஹா பெரியவரை சந்திக்க முடிவு செய்த திரு நாகராஜா சர்மா காஞ்சிக்கு அருகில் தேனம்பாக்கத்தில்  முகாமிட்டு இருந்த பெரியவரை 15-07-1974 அன்று தரிசிக்க கிளம்பிச் சென்றார். அந்த காலத்தில் பெரியவர் காஷ்ட மௌன விரதத்தில் இருந்துள்ளார் என்பதினால்  யாரிடமும்  பேசுவதில்லை, ஆகவே அங்கு அந்த நேரத்தில் செல்வது வீண் முயற்சி என பலர் தடுத்தும் கேட்காமல் முடிவாக காஞ்சி  பெரியவரை சந்திக்க கிளம்பிச் சென்றவருக்கு அங்கு கிடைத்த அற்புத அனுபவத்தை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. அதைக் குறித்து திரு நாகராஜா சர்மா அவர்கள் எழுதி உள்ளதை படித்தால்தான் அவருடைய உண்மையான உணர்வை புரிந்து கொள்ள முடியும். திரு நாகராஜா சர்மா எழுதி உள்ளார் :"அதிகாலையில் தேனம்பாக்கத்தை அடைந்தேன். அங்கே யாரோ உரக்க பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழவே அருகில் இருந்த நபரிடம் பெரியவர்கள் சன்னதியில் ஏன் இப்படி சப்தம் போட்டு பேசுகின்றார்கள் என வினவினேன். உடனே அவர் என் வாயை பொத்தி 'அபச்சாரம், நீங்கள் இப்படி கேட்பதே அபச்சாரம். பலநாட்கள் கழித்து இன்றுதான் பெரியவா மௌனத்தை கலைத்திருக்கிறார். அவர்கள்தான் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த தெய்வத்தின் திருக் குரலைக்  கேட்க நீங்கள் பாக்கியம் செய்து இருக்கிறீர்களே என்று சொல்ல நான் அசந்து விட்டேன். அடடா …பெரியவாளின்  கருணையே கருணை. எனக்காக அத்தெய்வம் மௌனத்தை கலைத்திருக்கிறதா? இறையருளை, குருவருளும் கண்டு வியந்தேன். நான் அங்கு வந்திருந்ததை ஒரு சிஷ்யர் மூலம் அறிந்த அச்சிரேஷ்டர் என்னை பிற்பாடு கூப்பிடுவதாகவும், அதுவரை நான் எடுத்துக் கொண்டு போன புத்தகங்கள் குறிப்புக்கள், வரைபடங்கள் என அனைத்தையும் மீண்டும் ஒருமுறை பார்த்து வைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தார்கள். எனக்கோ தூக்கிவாரிப் போட்டது.  எதற்காக இங்கு வந்துள்ளேன் என்பதை இதுகாறும் அவருக்கு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்க குகை விஷயமாக புத்தகங்களோடு வந்திருப்பதை எப்படி இம்மகான் அறிந்துள்ளார் என ஆச்சர்யத்தில் திக்கு முக்காடிப் போனேன். பரீட்ஷை  கூடத்தில் புகுமுன் ஒரு பரபரப்புடன் புத்தகங்களை புரட்டி மனப்பாடம் புரியும் மாணவனைப் போல இதுகாறும் திரட்டியவற்றை நான் அவசர அவசரமாக அசை போடலானேன்.  நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த சுப நேரம் வந்தது. என்னை உள்ளே அனுமதித்து நேருக்கு நேர் உட்கார்ந்து அவருடன் பேச வசதி செய்து கொடுத்தார். பேச்சு துவங்கியது .'நீ இதை பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டு இருக்கிறாய், அதை முதலில் சொல்லு!''அப்படி  ஒரு கேள்வியை திரு நாகராஜா சர்மா மஹா பெரியவாவிடம் இருந்து  எதிர்பார்க்கவில்லை. குகை குறித்த விவரத்தை கூற ஆரம்பித்தால் நிறைய நேரமாகும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாகி விடுமே, என்ன பதில் சொல்வது என தெரியாமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து இருந்தபோது மீண்டும் பெரியவர்  மற்றவர்களும் கேட்கும் வகையில் அதை தைரியமாக கூறு என்று ஆணை இடவே அலை பாய்ந்து கொண்டிருந்த தனது மனதை கட்டுப்படுத்திக்  கொண்டு அனைத்து விவரங்களையும்  பெரியவரிடம் கூறியவுடன், சற்று நேரம் கண்களை மூடி தியானம் செய்த பின் மீண்டும் மஹா பெரியவா கூறினாராம் "நீ பார்த்த ஸாங்கட்காட் குகை நதியில் இருந்து தூரத்தில் இருக்கிறது என்கிறாய். ஆகவே அந்த குகை இதுவாக இருக்காது. நதியின் வெகு அருகிலேயே குகை இருக்க வேண்டும். மேலும் நதியின் நீரை குகைக்கு கொண்டு வர ஒரு வசதியும் அக்குகையில் இருக்க வேண்டும். ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அந்த பக்கத்துக்காரர்தானே…நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரைப் பார்" திருப்பி உதைக்கப்பட்ட பந்து போல மீண்டும் ஸ்வாமி ஸ்வரூபானந்தரிடம் சென்று அவரிடம் விவரங்களைக் கூறிய பின் அவருடைய ஆசிகளை பெற்றுக் கொண்டவுடன்  மீண்டும் குகையை தேடி திரு சர்மாவின் ஆராய்ச்சி பயணம் தொடர்ந்தது. குகையின் வாயிலில் ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய பாதுகை இருந்தது என்பதை அடையாளமாகக் கொண்டு குகையில் புகுந்து அவரை ஸ்ரீ ஆதிசங்கரர் தரிசித்தார் என்பதாக 'சங்கர விஜயம்' என்ற நூலில் படித்திருந்த செய்தியை மனதில் கொண்டு  பல  மலைகள், குகைகள் என பார்த்து பார்த்து சலிப்படைந்தார். எந்த அடையாளமும் இல்லாத பல குகைகளில் புகுந்தபோது அங்கிருந்த புலிகள் , மலை பாம்புகள் , விஷ ஜந்துக்கள் என்பவற்றின் ஆபத்தில் இருந்தெல்லாம் தெய்வத்தின் கருணையினால் தப்பித்து வந்துள்ளார்.அந்த ஒரு கட்டத்தில் 1916 ஆம் ஆண்டில்  தண்டலம் ஸ்ரீ சங்கர நாராயண சாஸ்திரிகள் என்பவரால் எழுதப்பட்டு இருந்த 'சங்கரர் காலம்' எனும் நூலை தற்செயலாக திரு நாகராஜா சர்மா படிக்க நேரிட்டது. அதில் ஆதி சங்கரரின் குருவான ஸ்ரீ கோவிந்த பகவத் பாதரும் அவருடைய குருவான ஸ்ரீ கௌடபாதரும் எந்த குகையில் அமர்ந்து கொண்டு தவமியற்றினார்களோ அந்த குகையிலேதான் ஆதி சங்கரரும் தங்கி வேத பாடங்களைக் கற்றறிந்தார் என்றும் அந்த தலத்தில்தான்  ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரும் சித்தி அடைந்தார் என்றும்,  அந்த குகை தற்போதிருந்த இடத்தைக் குறித்தும்  தகவல் இருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் மீண்டும் தமது தேடுதல் படலத்தை தொடர்ந்தார் திரு நாகராஜா சர்மா. 1978 ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று அந்த தலத்தை  காணும் பேறு பெற்றாராம். திரு நாகராஜா சர்மாவின் கூற்றின்படி 'ஆதி சங்கரருக்கு இந்த தலத்தில்தான் சன்னியாசம் அளிக்கப்பட்டது. அந்த தலத்தில்தான் ஆதிசங்கரரின் பரம குருவான ஸ்ரீ கௌடபாதர் வியாகரண பாஷ்யத்தை பிரும்ம ராக்ஷஷன்  ரூபத்தில்  இருந்து கொண்டு  ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருக்கு  இரவு பகலாக போதனை செய்தாராம். குருவின் பாதுகைகளை குகையின் வாசலில் பார்த்த்தவுடன் ஆதி சங்கரரின் நாவில் இருந்து 'குரு பாதுகா பஞ்சகம்' உதயமாயிற்றாம். குகையில் நிஷ்டையில் இருந்த குரு ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரை குகையில் புகுந்த நதியின் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற  நதியின் நீரை தமது கமண்டலத்தில் மொண்டு நர்மதையின் உக்ரத்தை  தணித்தாராம்'. இவ்வளவு மகிமை வாய்ந்த குகையை தேடி தீவீரமாக அலையத்  துவங்கியவர் அங்கு பல குகைகளைக் கண்டார். முடிவாக காஞ்சி முனிவர் தனது ஞான திஷ்டியினால் அந்த குகையின் அமைப்பைக் கூறி இருந்ததை போல  குகையின் உள்ளே   நதிநீர் எடுத்து வர ஒரு சுரங்கம் உள்ளதையும்  கண்டவர் வியந்து நின்றார். அதைத் தவிர அதன் உள்  பகுதியில் ஒம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று வர மேலும் மூன்று சுரங்கங்கள் இருந்ததையும் கண்டார். ஆனால் அவை அடைக்கப்பட்டு இருந்தன. அந்த நதியின்  அருகிலேயே ஒரு சிறு மண்டபம் இருந்ததை கண்டார். அது ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய சமாதி என உள்ளூர் மக்கள் கூறினாலும் பின்னர் அதுவே ஆதி சங்கரர் தீட்ஷை பெற்ற  இடம் என்பது தெளிவாயிற்று. அந்த குகையின் அமைப்பையும் கலைநயத்தையும் விவரித்த திரு சர்மா  அவர்கள், அந்த குகையை அழகிய கலை மண்டபமாக ஆக்கிய பெருமை ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருக்கு பூர்வாஸ்ரமத்தில் பிறந்த புத்திரரும், உஜ்ஜயினியை ஆண்ட மன்னனுமான ஸ்ரீ ஹர்ஷ விக்ரமாதித்தியன் என்பதாக 'பிரஹத் சங்கர விஜயம்' எனும் நூலில் கூறப்பட்டு உள்ள விவரத்தையும் தமது  கட்டுரையில் குறிப்பிட்டு  உள்ளார்.இப்படியாக பல இன்னல்களை தாங்கி கொண்டு ஆதி சங்கரர் சன்னியாசம் பெற்ற குகையை கண்டு பிடித்து விட்ட  திரு நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட   துவாரகா  பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வாமி அபிநவசச்சிதானந்தரும், ஜ்யோதிஷ் மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தரும், 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ,8 தேதிகளில் திரு சர்மா அவர்களுடன் ஒம்காரேஸ்வரர்   தலத்தில் இருந்த அந்த  குகைக்கு சென்று அதை பார்வை இட்டார்கள், அதுவே ஆதி சங்கரர் தவம் இருந்த குகை என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டு, திரு சர்மாவின் மகத்தான சாதனைக்கு பாராட்டு தெரிவித்து இருமகான்களும் அவரை ஆசிர்வதித்தார்கள்.ஆனாலும் நாகராஜ சர்மாவிற்கு மனதில் ஒரு குறை  இருந்து கொண்டே இருந்ததாம். அதாவது காஞ்சி மகானின் அங்கீகரிப்பும் அதற்கு கிடைத்தால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என  நினைத்தவர் ஹம்பியில் முகாம் இட்டு இருந்த அந்த ஞானப் பேரொளியை 29-01-1979 அன்று சந்தித்து அனைத்து de விவரங்களையும் எடுத்துரைத்தாராம்.  'ஆனால் அந்த மாமுனிவரோ திரு சர்மாவிற்கு விளையாட்டு காட்ட வேண்டும் என நினைத்தோ என்னவோ அந்த குகையும்   இருக்காது என கூறி விட்டால் என்ன செய்வதாக உத்தேசம்' என விளையாட்டாக கேட்க அப்படியே அதிர்ந்து போனார் திரு நாகராஜா சர்மா. நர்மதை இரு கரைகளிலும்  இருந்த அத்தனை குகைகளையும் தேடியாயிற்று,  இனி அங்கு தேடுவதற்கு வேறு எதாவது  குகையும்   கிடையாதே என்பதினால் ஆதி சங்கரர் தமது குருவை வேறு எங்காவது குகையில் சந்தித்து இருக்க வேண்டும்   என  தன்  விரக்தியை  வெளிப்படுத்தி விட்டு எழுந்தபோது 'சரி அமர்ந்து கொள்'  எனக் கூறிய பெரியவாள் சுமார் அரை மணி நேரம் தமது கண்களை மூடிக்கொண்டு தியானத்தில்இருக்கலானார். பதட்டமும் படபடப்பும் அடைந்து என் உடலும் உள்ளமும் சம நிலைக்கு வர சற்று நேரம் பிடித்தது. உள் மனம் வெளி மனமாக மாறியது, பெரியவாளிடம் அனாவசியமாக உரக்க  பேசி விட்டேனா? எப்போது எழுந்து நின்றேன் என்று கூட நான் அறியவில்லையே ! வார்த்தைகளில் தடுமாற்றம் நிகழ்ந்ததா? நர்மதை சம நிலத்தில் பாய்கின்றது என்று உண்மைக்கு புறம்பான வார்த்தைகள் என் நாவில் இருந்து ஏன் பிறக்க வேண்டும் ? சே..இவ்வளவோ பொறுப்பற்றவனா நான் சே..? என்னையே நான் கடிந்து கொண்டேன். பலியிடப்போகும் ஆடு போல என் தலை வெட்கத்தால் குனிந்து நிற்க நேரம் போய் கொண்டே இருந்தது.சுமார் அரை மணி நேரம் கழித்தே அவர் தியானம் கலைந்தது. சற்று மெளனமாக இருந்து விட்டு எனது கண்டு பிடிப்பை ஆதரிக்கும் பாவனையில் அந்த  தெய்வம் சிரத்தை அசைத்துக் கொண்டே குபீரென வாய்விட்டு  சிரித்தார்.   அச் சிரிப்பின் ஒலியில்  என் அங்கமெல்லாம் அணு அணுவாக சிலிர்த்தது. ஆதிசங்கரர் நேரில் தரிசனம் தனது பாராட்டியது போன்ற பிரமை! அதுவும் அவ்வரிய காட்சி ஒரு க்ஷணம்தான் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்கள் ஆனந்தத்தால் நீர் சுரக்க உடலெல்லாம் வியர்வைக் கொட்ட வாயடைத்து குரல் எழும்பாமல் அத் தெய்வத்தின் திருமுகத்தையே நோக்கி எவ்வளவு நேரம் நின்று இருந்தேனோ தெரியாது. ஆனால் பழைய நிலையை அடைய சில நிமிடங்களாவது பிடித்து இருக்க வேண்டும்"இப்படியாக பாராட்டு பெற்றவருக்கு இன்னொரு  அபூர்வ சம்பவம் நடந்ததாம். திரு நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு 1980 ஆம்   ஆண்டு ஏப்ரல் மாதம்  அங்கு வருகை தந்த   காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அந்த இடத்தின் புனிதத்தன்மையைக் கண்டு வியந்து அதை சீரமைத்து புனரமைக்க போபாலில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, குகையின் சீரமைப்பு முடிந்ததும் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி  அதற்கு 'குகை மந்திர்' என்ற பெயர் சூட்டி நாட்டுக்கு அர்பணித்தாராம்.குகையின் பெருமையையும், அருமையையும் அறிந்த அன்றைய குடியரசுத் தலைவர் திரு ஆர். வெங்கடராமன் நேரில் வந்து குகையை பார்வையிட்டு பரவசமானதோடு 06-09-1988 அன்று ராஷ்ரபவனுக்கு திரு நாகராஜ சர்மாவை அழைத்து மிகவும் பாராட்டினார். இப்படி ஆதி சங்கரர் சன்யாச தீட்க்ஷை பெற்று தவம் இருந்து அவருடைய குருநாதர் மூலம் அனைத்து சாஸ்திரங்களையும்  கற்றறிந்த புனித குகை திரு நாகராஜ சர்மா   அவர்களின் கடுமையான முயற்சியினால் கண்டு பிடிக்கப்பட்டது.  

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் 
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

No comments:

Post a Comment