ஆதிசேஷன் அளித்த தீர்ப்பு
விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு ஒருநாள் வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் ஆன்மிக விஷயங்களைப் பற்றிப் பேசினர். விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அன்பளிப்பு அளிக்க எண்ணி ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் ஏற்ற வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் செல்ல நேர்ந்தது. ஆன்மிக விஷயங்களை பேசி மகிழ்ந்தனர். விடை பெற எழுந்த வசிஷ்டர் அன்பளிப்பாக, "இப்போது ஆன்மிக விஷயங்களை பேசியதால் கிடைத்த புண்ணியத்தை அளிக்கிறேன்" என்றார். இதை கேட்டு விஸ்வாமித்திரர் அதிர்ச்சிக்கு ஆளானார்.
"அன்று நீங்கள் அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பலனும், இந்த அரைமணி நேரம் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் சமமாகுமா என்று தானே யோசிக்கிறீர்கள்" என்றார்.
விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.
''சரி... இப்போதே சத்தியலோகம் புறப்படுவோம். எது உயர்ந்தது என்பதை பிரம்மாவிடம் கேட்போம்'' என்றார். சத்தியலோகம் சென்று பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர்.
"தீர்ப்பு சொல்ல என்னால் முடியாது. மகாவிஷ்ணுவிடம் முறையிடுங்கள்" என்றார் பிரம்மா. மகாவிஷ்ணுவிடம் கேட்டபோது, ''சிவனுக்குத் தான் தவத்தில் அதிக அனுபவம். அவரிடம் விசாரித்தால் உண்மை புரியும்" என்றார்.
கைலாயம் சென்று சிவபெருமானிடம் விளக்கம் கேட்டனர்.
"பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேஷனின் உதவியை நாடினால் உண்மை விளங்கும்" என பதிலளித்தார் சிவன்.
விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் பாதாளலோகம் சென்று ஆதிசேஷனிடம் சந்தேகத்தை கூறினர்
"யோசித்து பதிலளிக்க வேண்டிய விஷயம் இது. நான் சுமந்து நிற்கும் இந்த பூமியை சற்று நேரம் ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள்" என்றார்.
உடனே விஸ்வாமித்திரர் "நான் ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெறட்டும்" என்றார். எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆதிசேஷனின் தலையிலேயே பூமி நின்று கொண்டிருந்தது.
வசிஷ்டர் தன் பங்குக்கு, "அரைமணி நேரம் நல்ல விஷயங்கள் பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்" என்றார். உடனே ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. மீண்டும் பூமியை தன் தலையில் வைத்துக் கொண்ட ஆதிசேஷன், "நல்லது... நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்து விட்டது" என்றார்.
"தீர்ப்பு செல்லாமல் போகச் சொன்னால் எப்படி" என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.
"நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்ல என்ன இருக்கிறது... ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்தது பார்த்தீர்களா! நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விடச் சிறந்தது" என்றார் ஆதிசேஷன்.
From face book-; Chandra Seshadri
No comments:
Post a Comment