மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-211
உத்யோக பர்வம்
..
கிருஷ்ணனின் பேச்சு
சமாதானமே விருப்பம்; போரல்ல
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {சஞ்சயா}, உயர் ஆன்ம வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மேலும் என்ன சொன்னார்கள் என்பதை எனக்குச் சொல். இது குறித்து அனைத்தையும் நான் உன்னிடம் கேட்க ஆவலாக இருக்கிறேன்"
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பணிந்த பார்வையுடனும், கூப்பிய கரங்களுடனும், நன்கு அடக்கப்பட்ட புலன்களுடனும், அந்த மனிதர்களில் தேவர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடன்} கலந்துரையாடுவதற்காக அந்தரப்புரத்திற்குள் நான் நுழைந்தேன்.
அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்_கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனும்}, திரௌபதியும், பிராட்டி சத்யபாமாவும் {the two Krishnas and Draupadi and lady Satyabhama } இருந்த அந்த இடத்திற்கு, அபிமன்யுவோ, இரட்டையர்களோ {நகுலன் மற்றும் சகாதேவனோ} கூடச் செல்ல முடியாது. மலர்மாலைகளால் உடல் அலங்கரிக்கப்பட்டு, இலுப்பம்பூ மதுவினால் மயங்கியிருந்த {exhilarated with Bassia wine} அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை} அங்கே நான் கண்டேன்.
சிறந்த ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களாலும், எண்ணிலடங்கா ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள், பல்வேறு இழையமைப்புகளும், நிறங்களும் கொண்ட தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்த தங்க மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
கேசவனின் {கிருஷ்ணனின்} பாதங்கள் அர்ஜுனன் மடியிலும், உயர் ஆன்ம அர்ஜுனனின் பாதங்கள் கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் சத்யபாமா ஆகியோர் மடிகளிலும் இருந்ததை நான் கண்டேன்.
அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, (நான் அமர்வதற்காக), தங்கத்தாலான ஒரு பாதபீடத்தை எனக்குச் சுட்டிக்காட்டினான். அதை என் கையால் தொட்டபடி, நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். அவன் {அர்ஜுனன்} தனது காலை அந்தப் பாதபீடத்தில் இருந்து எடுத்தபோது, அவனது {அர்ஜுனனின்} இரு பாதங்களிலும் மங்களக்குறிகளை நான் கண்டேன். குதிகால்களில் இருந்து கட்டை விரல் வரை ஓடும் இரு நெடுக்கான கோடுகளை அவை {பாதங்கள்} கொண்டிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கரிய நிறமும், உயரமான தோற்றமும், ஆச்சாமரத் {சாலமரத்} தண்டுகளைப் போன்ற உறுதியும் கொண்ட இளமை நிறைந்த அந்த வீரர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} ஒரே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, பெரும் அச்சம் என்னைப் பீடித்தது.
ஒன்றாக அமர்ந்திருந்த இந்திரனையும், விஷ்ணுவையும் போல அவ்விருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} எனக்குத் தெரிந்தார்கள். ஆயினும், துரோணர் மற்றும் பீஷ்மரையும், வீண்வீராப்புகளை உரத்துப் பேசும் கர்ணனையும் நம்புவதன் விளைவாக, இந்த மந்த புத்தி கொண்ட துரியோதனன் இதை அறியவில்லை. அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும், அந்த நீதிமானான யுதிஷ்டிரனின் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அந்தக் கணமே நான் உறுதியடைந்தேன்.
உணவு மற்றும் பானங்களால், விருந்தோம்பலோடு உபசரிக்கப்பட்டு, மற்ற உபசாரங்களாலும் கௌரவிக்கப்பட்ட நான், எனது கூப்பிய கரங்களைத் தலையில் வைத்துக் கொண்டு, உமது செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தேன்.
பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, நாண்கயிற்றால் தழும்பேறிய தனது கரங்களைக் கொண்டு தன் மடியில் இருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} மங்களகரமான பாதங்களை அகற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பேசத் தூண்டினான். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சக்தியில் இந்திரனைப் பிரதிபலித்த கிருஷ்ணன், இந்திரனின் கொடி போல உறுதியாக அமர்ந்த பிறகு என்னிடம் பேசினான். பேச்சாளர்களில் சிறந்த அவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகள், திருதராஷ்டிரன் மகன்களுக்குத் துயர் நிறைந்தவையாகவும் அச்சம் தருவனவையாக இருந்தாலும், இனிமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருந்தன. எவன் ஒருவன் மட்டுமே பேசத் தகுந்தவனோ, அந்தக் கிருஷ்ணன், உச்சரித்த வார்த்தைகள், முடிவில் இதயத்தை உருக்குவதாக இருந்தாலும், உண்மையில் அவை, சரியான முக்கியத்துவம் கொண்டவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! சஞ்சயரே, ஓ! சூதரே {சஞ்சயரே}, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, முதலில் முதியோர் அனைவரையும் வணங்கி, இளையோரின் நலன்களையும் விசாரித்த பிறகு, குருக்களின் முதன்மையானவரான பீஷ்மரும், துரோணரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஞானியான திருதராஷ்டிரரிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லும். "பெரிய ஆபத்து ஒன்று உம்மை அச்சுறுத்தும் போது, அந்தணர்களுக்குப் பரிசுகளை அளித்து, பல்வேறு வேள்விகளைச் செய்து, உமது மகன்கள் மற்றும் மனைவியருடன் மகிழ்ந்திருப்பீரோ? மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ?" என்று அவன் {கிருஷ்ணன், உம்மிடம்} சொல்லச் சொன்னான்.
நான் தொலைவில் இருந்த போது, கண்ணீருடன் கூடிய அந்தக் கிருஷ்ணன் என்னிடம், "காலத்தோடு திரட்டப்பட்ட கடன், என்னால் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. எரிக்கும் சக்தி கொண்ட காண்டீவத்தைத் தனது வில்லாகவும், உதவும் துணைவனாக என்னையும் கொண்ட சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} நீர் பகை கொண்டிருக்கிறீர். புரந்தரனாகவும் {இந்திரனாகவும்}, ஆயுள் நிரம்பியவனாகவும் இருந்தாலும் கூட, என்னைத் துணைவனாகக் கொண்ட பார்த்தனுக்கு அறைகூவல் விடுக்கத்தகுந்தவன் எவன்? போரில் அர்ஜுனனை {அர்ஜுனனுக்கு} வீழ்த்தவல்ல ஒருவனால், உண்மையில், தன் இரு கரங்களைக் கொண்டு பூமியைத் தாங்கிக் கொள்ள முடியும்; படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் கோபத்தில் எரித்துவிட முடியும்; சொர்க்கத்தில் இருந்து தேவர்களை அவனால் வீசி எறிந்துவிட முடியும்.
தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுக்கு மத்தியிலும்; யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் நாகர்களுக்கு மத்தியிலும், அர்ஜுனனுடன் போரில் மோதவல்ல ஒரு நபரை என்னால் காண முடியவில்லை.
ஒரு புறத்தில் ஒரு தனி மனிதனையும் {அர்ஜுனனையும்ம்}, மறுபுறத்தில் எண்ணிலடங்கா வீரர்களையும் {கௌரவர்களையும்} கொண்டு, விராட நகரத்தில் நடந்த மோதல் குறித்து, என்னால் கேட்கப்பட்ட அற்புதக் கதையே இதற்குப் போதுமான சான்றாக இருக்கும். அதாவது, ஒருவனாக இருந்த பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்}, விராட நகரத்தில் இருந்து நீங்கள் முற்றாக விரட்டப்பட்டீர்கள் என்பதே இதற்குப் போதுமான சான்றல்லவா?
வலிமை, ஆற்றல், சக்தி, வேகம், கரங்களின் இலகு, அயராத்தன்மை, பொறுமை ஆகிய பண்புகள் அனைத்தும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனிடமும் காணப்படாது" என்றான் {கிருஷ்ணன்}.
இப்படிப் பேசிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தன் வார்த்தைகளால் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உற்சாகமூட்டியபடி, ஆகாயத்தில் இருக்கும் மழை நிறைந்த மேகங்களைப் போலக் கர்ஜனை செய்தான். கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனும் அதே தாக்கத்துடன் பேசினான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனது கண்ணையே அறிவாகக் {ஞானமாகக்} கொண்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சஞ்சயனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, நன்மை {எது?} என்றும், தீமை {எது?} என்றும், தான் கருதுவதைக் குறித்துப் பேசினான். தன்னால் இயன்றவரை, நன்மைகள் மற்றும் தீமைகளை விவரமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டவனும், இரு தரப்பின் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாக உறுதி செய்து கொண்டவனும், தனது மகன்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவனும், கல்விமானுமான அந்தப் புத்திசாலி மன்னன் {திருதராஷ்டிரன்}, இரு தரப்புகளின் பலங்களைக் குறித்தும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தான்.
கடைசியாக, மனித வகையிலும், தெய்வீக வகையிலும் பாண்டவர்களே பலத்தோடு இருப்பதாகவும், குருக்கள் {கௌரவர்கள்} பலவீனமாக இருப்பதாகவும் உறுதி செய்து கொண்ட திருதராஷ்டிரன், துரியோதனனிடம், "இந்தப் பதட்டம், ஓ! துரியோதனா, எப்போதும் என்னில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அஃது என்னை விட்டு அகல மறுக்கிறது. அதை நான், எனது கண்களால் காண்பதாக எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. அனுமானத்தால் விளைந்த ஒரு காரியம் அல்ல இந்நம்பிக்கை. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், தங்கள் வாரிசுகளின் மேல் பெரும் பாசத்தைக் காட்டுகின்றன. மேலும், வாரிசுகளுக்கு எது ஏற்புடையதோ? எது நன்மையானதோ? அதைத் தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நன்மை செய்ய விரும்புகிறவர்களின் வழக்கில் எல்லாம் இதுவும் பொதுவாகக் காணப்படுகிறது.
காண்டவ வனத்தில் அக்னி உதவியஅர்ஜுனனும் கிருஷ்ணனும்
நல்லவர்கள், தங்களுக்குச் செய்யப்பட்ட நன்மையைத் திரும்பச் செய்யவும் மற்றும் தங்கள் நலன் விரும்பிகளுக்கு மிகவும் ஏற்புடையவற்றைச் செய்யவுமே எப்போதும் விரும்புகின்றனர். காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தனக்குச் செய்யப்பட்டதை {செய்யப்பட்ட நன்மையைக்} கருதும் அக்னி, குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் இந்தப் பயங்கர மோதலில், அர்ஜுனனுக்குத் தனது உதவியைத் தருவான் என்பதில் ஐயமில்லை. தந்தை பாசத்தால் தர்மனும் {யமனும்}, முறையாக எழுப்பப்பட்ட பிற தேவர்களும் சேர்ந்து பாண்டவர்களின் உதவிக்கு வருவார்கள்.
இடியைப் போன்ற விளைவுகளைக் கொடுக்கும் தேவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்து அவர்களைக் {பாண்டவர்களைக்} காப்பதற்காகவே {நம் மேல்} கோபத்தில் நிறைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
சக்தி கொண்டவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தேவர்களுடன் சேரும்போது, {நமது படையின்} மானுட வீரர்கள், அவர்களைக் காணவும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள்.
தடுக்கப்பட முடியாததும் அற்புதமானதும் தெய்வீகமானதுமான காண்டீவத்தை எவன் தனது வில்லாகக் கொண்டிருக்கிறானோ; பெரியதும், கணைகள் நிறைந்ததும், வற்றாததும், தெய்வீகமானதுமான இரு அம்பறாத்தூணிகளை எவன் கொண்டிருக்கிறானோ; புகை போன்ற செயல்பாடுடையதும், குரங்கு {அனுமன்} படத்தை தெய்வீக வடிவில் கொண்டதுமான கொடி எவனுக்கு உடையதோ; நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியில், ஈடு இணையற்றதும், மேகங்களின் கர்ஜனை போன்ற சடசடப்போசையை மனிதர்களைக் கேட்கச் செய்வதும், உருளும் இடியைப் போல எதிரிகளைப் அச்சங்கொள்ளச் செய்வதுமான தேரை எவன் கொண்டிருக்கிறானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என மக்களால் எவன் கருதப்படுகிறானோ; போர்க்களத்தில் தேவர்களையே கூட வீழ்த்தவல்லவன் எனப் பூமியில் உள்ள மன்னர்கள் எவனை அறிகிறார்களோ; ஐநூறு {500} கணைகளை ஒரே நேரத்தில் எடுத்து, ஒருமுறை கண்மூடித் திறப்பதற்குள், அவற்றைப் பிறர் காணாமல் பெருந்தூரத்திற்கு எவன் அடிப்பானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களான பூமியின் மன்னர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவனென்றும், போரிடத் தயாராக இருந்தால் ஒரே முறையில் ஐநூறு கணைகளை அடிக்க வல்லவன் என்றும், கரங்களின் பலத்தில் கார்த்தவீரியனுக்கு நிகரானவன் என்றும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர மன்னனான சல்யன் மற்றும் பாகுபாடற்ற மனிதர்கள் அனைவரும் உண்மையில் எவனைக் கருதுகிறார்களோ, அவன், தேர்வீரர்கள் மத்தியில் புலியானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பிருதையின் {குந்தியின்} மகனும், பெரும் வில்லாளியுமான அந்த அர்ஜுனன், ஆற்றலில், இந்திரனுக்கோ உபேந்திரனுக்கோ நிகரானவனே. இந்தக் கொடூரமான போரில் அந்தப் பெரும் வீரன் {அர்ஜுனன்} பெரும் அழிவை உண்டாக்குவதை நான் காண்கிறேன்.
ஓ! பாரதா {துரியோதனா}, குருக்களின் {கௌரவர்களின்} நலத்தில் உள்ள பதட்டத்தின் காரணமாக, பகலும் இரவும் இதையே நினைத்து, மகிழ்ச்சியற்றவனாகவும், உறக்கமற்றவனாகவும் நான் இருக்கிறேன். இந்தப் பூசலைத் தீர்க்க சமாதானத்தைத் தவிர வேறெதுவுமில்லை. குருக்களை {கௌரவர்களை} ஒரு பயங்கர அழிவு பீடிக்கப்போகிறது. பார்த்தர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானமே எனக்கு விருப்பமானது; போரல்ல! ஓ குழந்தாய் {துரியோதனா}, குருக்களை {கௌரவர்களை} விட எப்போதும் பாண்டவர்கள் வலிமைமிக்கவர்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரனின் பாசமிகு மகன் {துரியோதனன்}, பெரும் கோபத்தில் பற்றி எரிந்தபடி, பொறாமையால், மீண்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "தேவர்களைத் தங்கள் கூட்டாளிகளாகப் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்றும் நீர் நினைக்கிறீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இந்த உமது அச்சம் விலகட்டும். இச்சை, பேராசை மற்றும் பகை ஆகியவற்றைக் கைவிட்டும், உலகளாவிய காரியங்களில் பாகுபாடற்று நடந்துமே தேவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை அடைந்தார்கள். துவைபாயன வியாசர், பெரும் தவத்துறவுகள் கொண்ட நாரதர், ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்} ஆகியோர் முன்பே இதை நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இச்சை, கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு போதும் மனிதர்களைப் போலத் தேவர்கள் வேலையில் ஈடுபடுவதில்லை. உண்மையில், அக்னியோ, வாயுவோ, தர்மனோ {யமனோ}, இந்திரனோ, அசுவினிகளோ உலகளாவிய ஆசைகளின் காரணமாக எப்போதாவது தங்களை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் துயரத்தில் விழுந்திருக்க மாட்டார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்களுக்குத் தகுந்த காரியங்களிலேயே தேவர்கள் தங்கள் கண்களை எப்போதும் நிலைத்து வைத்திருப்பர் என்பதால், இத்தகு கவலைகளில் நீர் ஈடபடலாகாது.
எனினும், {தாங்கள் கொண்ட} ஆசையின் விளைவால், தேவர்கள் பொறாமையையோ காமத்தையோ கவனிக்கிறார்கள் என்றானால், பிறகு, அந்தத் தேவர்களாலேயே விதிக்கப்பட்ட பொறாமையோ, நீதியோ மேலோங்க முடியாது. அக்னி, அனைத்து உயிர்களையும் எரித்துவிடும்படி சுற்றிலும் சுடர் விட்டெரிந்தாலும், என்னால் வசீகரிக்கப்படும் அவன் {அக்னி}, உடனடியாக அணைக்கப்படுவான். தேவர்கள் பெற்றிருக்கும் சக்தி பெரிதே. ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேவர்களை விட எனது சக்தி பெரியது என்பதை அறிவீராக.
கல் மழை
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி இரண்டாகப் பிளந்தாலும், மலைமுகடுகள் பிளந்தாலும், அனைவரின் கண்களுக்கும் முன்பாக, என் மந்திரங்களின் மூலம், மீண்டும் அவற்றை என்னால் ஒன்றிணைக்க முடியும். இயக்கமுடையன, இயக்கமற்றன, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் அழிவுக்காக ஒரு பயங்கரப் புயலோ, பெரும் கர்ஜனை கொண்ட கல் மழையோ ஏற்படுமானால், படைக்கப்பட்ட உயிரினங்கள் மேல் நான் கொண்ட இரக்கத்தின் காரணமாக, அனைவர் கண் முன்பாகவும் எப்போதும் என்னால் அதைத் தடுக்க முடியும்.
நீர் திடமாதல்
(பனிக்கட்டியாதல்)
என்னால் நீர்நிலைகள் திடமாக்கப்படும்போது, அவற்றில் தேர்களும், காலாட்படையும் நடக்கலாம்.
தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருதரப்பினரின் விவகாரங்கள் அனைத்தையும் நானே அமைக்கிறேன். என்ன காரியத்திற்காகவும், என் அக்ஷௌஹிணிகளுடன் நான் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், நான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் எனது குதிரைகள் நகர்கின்றன. என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அச்சமூட்டும் பாம்புகள் எதுவும் கிடையாது. என் பகுதிக்குள் இருக்கும் உயிரனங்கள் {மனிதர்களும் சேர்த்து}, என் மந்திரங்களால் பாதுகாக்கப்பட்டு, பயங்கரமானவற்றால் எப்போதும் காயப்படுத்தப்படுவதில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரைப் பொறுத்தவரை, மேகங்களே கூட [1], {என் மக்கள்} விரும்பும் அளவுக்கும், விரும்பும் நேரத்திலும் {மழையைப்} பொழிகின்றன. மேலும், எனது குடிமக்கள் அனைவரும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் {தர்மத்தை அனுசரிக்கிறார்கள்}. எனவே காலத்தால் ஏற்படும் துயரங்களுக்கு [2] அவர்கள் {என் மக்கள்} ஆட்படுவதில்லை. அசுவினிகள், வாயு, அக்னி, மருதர்களுடன் கூடிய இந்திரன், தர்மன் {யமன்} ஆகியோர் என் எதிரிகளைப் பாதுகாக்கத் துணியவில்லையே. இவர்களால் {மேற்சொன்ன தேவர்களால்} என் பகைவர்களைப் பாதுகாக்க முடிந்திருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இத்தகு துன்பத்தில் பதிமூன்று வருடங்கள் வீழ்ந்திருக்கமாட்டார்கள்.
[1] மேகங்கள் = பர்ஜனயன் = இந்திரனின் ஓர் உருவம்
[2] அதிக மழை, மழையின்மை, வெட்டுக்கிளிகள், எலிகள், கிளிகள் போன்றவை
எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியவனை {என்னால் பகைக்கப்பட்டவனை} தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ காக்க இயலாது என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். என் நண்பனுக்கோ பகைவனுக்கோ, நான் அளிக்கவோ, தண்டிக்கவோ நினைத்த வெகுமதியில் இருந்து தண்டனை வரை எதுவும் இதற்கு முன்பு பொய்த்ததில்லை. ஓ! பகைவரை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, "இது நடக்கும்" என்று நான் சொன்னால், அஃது எப்போதும் நடந்தே இருக்கிறது. எனவே, மக்கள் என்னை எப்போதும் உண்மை பேசுபவனாகவே அறிந்திருக்கிறார்கள். அனைத்துப் புறங்களிலும் பரவிய புகழைக் கொண்ட எனது பெருமையை மக்கள் அனைவரும் சாட்சியாகக் காண்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவற்றையும் உமது தகவலுக்காகவே சொல்கிறேன்; செருக்காலல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது இழிவானது. ஆகையால், இதற்கு முன்னர் ஒருபோதும் என்னை நானே புகழ்ந்து கொண்டதில்லை. பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், சாத்யகி, வாசுதவேன் {கிருஷ்ணன்} ஆகியோர் என் கைகளில் தோற்றனர் என்பதை நீர் கேள்விப்படுவீர்.
உண்மையில், கடலுக்குள் நுழையும் ஆறுகள் எப்படி முழுதும் தொலைந்து போகுமோ, அப்படி, என்னை அணுகும்போது, தங்கள் தொண்டர்களுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரும் அழிவார்கள். எனது புத்தி மேன்மையானது, எனது சக்தி மேன்மையானது, எனது ஆற்றல் மேன்மையானது, எனது அறிவு மேன்மையானது, எனது வளங்களோ, பாண்டவர்களை விட மிக மேன்மையானது. பாட்டனிடமும் {பிதாமகரான பீஷ்மரிடமும்}, துரோணரிடமும், கிருபரிடமும், சல்லியனிடம், சலனிடமும் என்னவெல்லாம் ஆயுத ஞானம் இருக்குமோ, அவை அனைத்தும் என்னிடமும் உள்ளன" என்றான் {துரியோதனன்}.
இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஓ! பாரதா {ஜமனேஜயா}, எதிரிகளை ஒடுக்குபவனான துரியோதனன், போரிடும் விருப்பமுள்ள யுதிஷ்டிரனின் நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்வதற்காக, மீண்டும் சஞ்சயனிடம் வினவலானான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்துக் {சஞ்சயனிடம்} கேட்பதற்கு இருந்த விசித்திரவீரியன் மகனான திருதராஷ்டிரனைப் பொருட்படுத்தாத கர்ணன், அங்கே கூடியிருந்த குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} உற்சாகத்தை ஊட்டும்படி, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {கர்ணன்}, "பழங்காலத்தில், போலிப் பாசாங்கால் [1], பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்தேன் என்பதை அறிந்த ராமர் {பரசுராமர்}, என்னிடம், "உனது நேரம் {கடைசிக்காலம்} வரும்போது, இவ்வாயுதம் குறித்த உனது நினைவு பொய்த்து விடும். {இந்த ஆயுதம் உனக்குத் தோன்றாமல் போகும்}" என்றார்.
[1] false pretence = பொய் சொல்லி
அப்படிப்பட்ட ஒரு பெரிய குற்றத்திற்கு, எனது ஆசானான அந்தப் பெருமுனிவரால் {பரசுராமரால்} இப்படிச் சாதாரணமாகவே நான் சபிக்கப்பட்டேன். கடும் சக்தி கொண்ட அந்தப் பெரும் முனிவர் {பரசுராமர்}, கடல்களுடன் கூடிய முழுப் பூமியையும் எரித்துவிடவல்லவர். {என்} பணிவிடை மற்றும் தனிப்பட்ட வீரத்தின் காரணமாக நான் அவரது {பரசுராமரின்} இதயத்தை அமைதியடையச் செய்தேன். என்னிடம் அந்த ஆயுதம் {பிரம்மாஸ்திரம்} இன்னும் இருக்கிறது. எனது காலமும் இன்னும் இருக்கிறது. எனவே, (வெற்றியடையத்தக்க அளவில்} நான் முழுத் திறமையுடனேயே இருக்கிறேன். {எதிரியை வெல்லும் இந்தப்} பொறுப்பு எனதாகட்டும். அம்முனிவரின் {பரசுராமரின்} அருளைப் பெற்றிருப்பதால், பாஞ்சலர்கள், கரூசர்கள், மத்ஸ்யர்கள், மகன்கள் மற்றும் பேரர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று, எனது ஆயுதங்களால் வெல்லப்பட்ட எண்ணற்ற பகுதிகளை நான் உனக்கு அளிப்பேன்.
பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்}, துரோணர் மற்றும் மன்னர்கள் அனைவரும் உன்னுடன் இருக்கட்டும். எனது படையின் தலைமை {முக்கிய} போர்வீரர்களுடன் அணிவகுத்துச் செல்லும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களைக்} கொல்வேன். இப்பணி எனதாகட்டும்" என்றான் {கர்ணன்}.
இப்படிப் பேசிய அவனிடம் {கர்ணனிடம்}, பீஷ்மர், "ஓ! கர்ணா, நீ என்ன சொல்கிறாய்? {என்ன பிதற்றுகிறாய்?}, நேரம் நெருங்கி வருவதால் உனது புத்தி மறைக்கப்படுகிறது. ஓ! கர்ணா, தலைவன் {கர்ணனான நீ} [2] கொல்லப்பட்டால், திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? கிருஷ்ணனை மட்டுமே துணைவனாகக் கொண்டு, காண்டவ வனத்தை எரித்து, தனஞ்சயன் {அர்ஜுனன்} செய்த சாதனையைக் கேட்ட பிறகு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீ, மனதை அடக்கிக் கொள்வதே தகும்.
[2] //இங்கே "தலைவன் தலைவனாக இருக்க வேண்டும், நீ தகுதியில்லாதவன்" என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, "குருகுலத்தலைவனான நான் இறந்தால், கௌரவர்கள் இறப்பார்கள்" என்றும் பொருள் கொள்ளலாம்// என்று சொல்லப்படுகிறது. இங்கே பீஷ்மர் வஞ்சப்புகழ்ச்சியைக் கையாள்வதாகத் தெரிகிறது. எனவே, கர்ணனைக் கேலி செய்கிறார் என்றே நாம் கொள்ளலாம்.
ஒப்பற்றவனும் வழிபடத்தகுந்தவனும், தேவர்கள் தலைவனுமான பெரும் இந்திரன் உனக்கு அளித்த கணை {சக்தி ஆயுதம்}, கேசவனின் {கிருஷ்ணனின்} சக்கரத்தால் தாக்கப்படும்போது, {அந்த சக்தி ஆயுதம்} உடைந்து சாம்பலாகப் போவதை நீ காண்பாய். மலர் மாலைகளைக் கொண்டு உன்னால் மரியாதையாக வழிபடப்படுவதும், பாம்பு வாய்க் கொண்டதும், (உனது அம்பறாத்தூணியில்) ஒளிர்ந்து கொண்டிருப்பதுமான மற்றொரு கணை {நாகாஸ்திரம்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் அடிக்கப்படும்போது, உன்னோடு சேர்ந்து அழிந்து போகும். பாணன், பூமியின் மகன் {நரகன்} ஆகியோரைக் கொன்றவனும், கடும்போரில் உனக்கு நிகரான மற்றும் உன்னைவிட மேம்பட்ட எதிரிகளைக் கொன்றவனுமான வாசுதேவனே {கிருஷ்ணனே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.
அதற்குக் கர்ணன் {சபையோரிடம்}, "விருஷ்ணிகளின் தலைவன் {கிருஷ்ணன்} அப்படியே இருக்கிறான். அதில் ஐயமில்லை. மேலும், அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்} அதற்கும் மேலானவனே. எனினும், அவர் உச்சரித்திருக்கும் சிறிய கடும் உரையின் விளைவைப் பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்} கேட்கட்டும். நான் எனது ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன். இனிமேல் பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சபையில் மட்டுமே காண்பார்; போர்க்களத்தில் அல்ல. நீர் அமைதியடைந்த {ஒழிந்த} பின்பே, எனது ஆற்றலை, இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் இவ்வுலகத்தில் காண்பார்கள்" [3] என்றான் {கர்ணன்}.
[3] Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world.
இதற்குச் சற்று முன்புதான் "தன் விருப்பம் இல்லாமல் மரணம் தன்னை அண்டாது என்று தன் தந்தை சந்தனுவிடம் வரம்பெற்றவர் பீஷ்மர்" என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் (உத்யோக பர்வம் பகுதி 55ல்} சொல்கிறான். பீஷ்மர் விருப்பப்பட்டாலொழிய அவருக்கு மரணம் கிடையாது என்பதை அறிந்தும், "நீர் ஒழிந்த பிறகே போரில் பங்கேற்பேன்" என்று கர்ணன் போரில் இருந்து விலகுகிறான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்தப் பெரும் வில்லாளி (கர்ணன்), அந்தச் சபையை விட்டகன்று தனது வசிப்பிடம் சென்றான். எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பீஷ்மர் உரக்கச் சிரித்தபடி, குருக்கள் {கௌரவர்கள்} மத்தியிலிருந்த துரியோதனனிடம், "இந்தச் சூதனின் மகன் {கர்ணன்} வாக்கில் எவ்வளவு உண்மையுள்ளவன்? "அவந்தி மற்றும் கலிங்கத்தின் மன்னர்கள், ஜெயத்ரதன், சேதித்தஜன், வால்ஹீகன் ஆகியோரைப் பார்வையாளர்களாகக் கொண்டு, பகைவீரர்களை ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் நான் கொல்வேன்" என்று மீண்டும் மீண்டும் சூளுரைத்தானே. {இனி} எப்படி அந்தக் கடமையை அவன் {கர்ணன்} நிறைவேற்றுவான்?
எதிர் வியூகத்தால் தனது பிரிவுகளைப் பகிர்ந்து, தலைகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, பீமன் இழைக்கப்போகும் பேரழிவைப் பார். புனிதமானவரும், பழியற்றவருமான ராமரிடத்தில் {பரசுராமரிடத்தில்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன்னை ஒரு பிராமணன் என்று காட்டி, அந்த ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்த அந்தக் கணத்தில்தான், உண்மையில், அந்தப் பாவி {கர்ணன்}, தனது அறம் மற்றும் தவம் ஆகிய இரண்டையும் இழந்தான்" என்றார் {பீஷ்மர்}. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, தனது ஆயுதங்களைக் கைவிட்டு கர்ணன் சென்றதும், பீஷ்மர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட விசித்திரவீரியன் மகனின் {திருதராஷ்டிரனின்} மூட மகனான துரியோதனன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம் பின்வரும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்" என்றார் {வைசம்பாயனர்}.
துரியோதனன் {பீஷ்மரிடம்} சொன்னான், "பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரும் பிற மனிதர்களைப் போன்றோரே. உண்மையில், அவர்கள் {பாண்டவர்கள்} பிற மனிதர்களைப் போலப் பூலோகப் பிறப்புக் கொண்டவர்களே. பிறகு ஏன் அவர்களது வெற்றி உறுதி என்று நீர் நினைக்கிறீர்? சக்தி, ஆற்றல், வயது, புத்திக்கூர்மை, சாத்திர அறிவு, ஆயுதங்கள், போர்க்கலை, கரங்களின் வேகம், திறன் ஆகிய அனைத்திலும் நாங்களும் {கௌரவர்களும்}, அவர்களும் {பாண்டவர்களும்} சமமானவர்களே. அனைவரும் மனிதராய் இருப்பதால், நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. பிறகு, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெற்றி அவர்களுடையது என்று எப்படி நீர் அறிகிறீர்? எனது குறிக்கோளை அடைய நான் {பீஷ்மரான} உம்மையோ, துரோணர், கிருபர், பாஹ்லீகர் {சோமதத்தன்} அல்லது பிற மன்னர்களையோ நம்பி இருக்கவில்லை. {என்று பீஷ்மரிடம் சொன்ன துரியோதனன், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி}
போர்க்களத்தில் {துரியோதனனான} நான், விகர்த்தனன் மகனான கர்ணன், என் தம்பி துச்சாசனன் ஆகியோர் சேர்ந்து எங்கள் கூரிய கணைகளால் பாண்டுவின் ஐந்து மகன்களையும் கொல்வோம். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, பல்வேறு வகையான பெரும் வேள்விகளைச் செய்து, அபரிமிதமான தட்சணைகளையும், பசு, குதிரை, செல்வம் ஆகிய தானங்களையும் கொடுத்து அந்தணர்களை மனம் நிறையச் செய்வோம்.
வேடர்களால் வலையில் இழுத்துவரப்படும் மான்கூட்டம் போலவோ, நீழ்ச்சுழியால் இழுக்கப்படும் படகோட்டிகளில்லா படகைப் போலவோ, போர்க்களத்தில் எனது வலிய கரங்களின் உதவியைப் பெற்ற என் படையால் அந்தப் பாண்டவர்கள் இழுத்து வரப்படும்போது, மக்கள் திரள், தேர்கள் மற்றும் யானைகளால் ஆதரிக்கப்படும். அவர்களது எதிரியான எங்களைக் கண்டதும், {பாண்டவர்கள்} தங்கள் செருக்கைக் கைவிடுவார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} மட்டுமல்ல கேசவனும் {கிருஷ்ணனும்} {தனது செருக்கைக்} கைவிடுவான்" என்றான் {துரியோதனன்}.
இதைக் கேட்ட விதுரன், "பிழையற்ற அறிவு கொண்ட மதிப்புமிக்க மனிதர்கள், 'சுயக்கட்டுப்பாடே' இவ்வுலகில் மிகவும் நன்மையானது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அந்தணர்கள் வழக்கில், இது {சுயக்கட்டுப்பாடே} அவர்களது கடமையாகிறது. சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒருவன், ஈகை, தவம், அறிவு, வேத கல்வி ஆகியவற்றைப் பின்பற்றி, வெற்றி, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தன் தானங்களுக்கான கனி {பலன்} ஆகியவற்றை வெல்கிறான் {அடைகிறான்}. சுயக்கட்டுப்பாடு, சக்தியைப் பெருக்குகிறது. அது {சுயக்கட்டுப்பாடு என்பது} அற்புதமான புனிதமான ஒரு பண்பாகும். பாவத்தில் இருந்து விடுபட்டு, சுயக்கட்டுப்பாட்டால் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் ஒருவன், பிரம்மத்தையும் அதன்மூலமே {சுயக்கட்டுப்பாட்டின் மூலமே} அடைந்துவிடுகிறான்.
ராட்சசர்களைக் கண்டது போல, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களைக் கண்டு, எப்போதும் மக்கள் அஞ்சுவார்கள். இவர்களைப் போன்றோருக்காகத்தான் {சுயக்கட்டுப்பாடு இல்லாதோருக்காகத்தான்}, க்ஷத்திரியர்களைச் சுயம்பு படைத்தான். வாழ்வுமுறைகள் நான்கிலும் சுயக்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகும் எனச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டின் மூலமாக {பிறப்பிடமாக} இருக்கும் பண்புகளை அதன் {சுயக்கட்டுப்பாட்டை நோக்கிச் செல்லும்} அறிகுறிகளாக நான் கருதுகிறேன். மன்னிக்கும் தன்மை, மன உறுதி, ஊறிழையாமை {அஹிம்சை}, அனைத்தையும் சமமாகக் கருதல், உண்மை நிறைந்த பேச்சு, எளிமை, புலனடக்கம், பொறுமை, பேச்சில் மென்மை, பணிவு, உறுதி, பரந்த {தாராள} மனம், மென்மை, மனநிறைவு, நம்பிக்கை ஆகியவையே {இந்தப் பண்புகளே} அந்த அறிகுறிகள். சுயக்கட்டுப்பாடு உடையவன் இச்சை, பேராசை, செருக்கு, சினம், உறக்கம், தற்புகழ்ச்சி, அகங்காரம், கெட்ட எண்ணம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கைவிடுவான்.
தூய்மை, கோணல் புத்தியின்மை, வஞ்சமின்மை ஆகியவையே சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனின் தனித்துவமான அறிகுறிகள். பேராசையின்றி எவன் இருக்கிறானோ, கொஞ்சம் வைத்திருந்தாலும் மனநிறைவுடன் எவன் இருக்கிறானோ, கடலைப் போன்று பயங்கரமான காமத்தைத் தூண்டும் பொருட்களை எவன் விரும்பவில்லையோ, அவனே சுயக்கட்டுப்பாடுடைய மனிதன் என்று அறியப்படுகிறான். நன்னடத்தையும், நல்ல மனநிலையும், நிறைவான ஆன்மாவும் கொண்டு, அறிவுடையவனாகத் தன்னை அறியும் ஒருவன் இங்கே {இவ்வுலகத்தில்} பெரும் மரியாதையைப் பெறுகிறான். இதற்குப் பிறகு {அடுத்த உலகத்தில்} அருள் நிலையை அடைகிறான்.
முதிர்ச்சி கொண்ட அறிவுடன், பிற உயிர்களிடம் அச்சம் கொள்ளாதவன் எவனோ, பிற உயிர்களுக்கு அச்சத்தைத் தராதவன் எவனோ அவனே மனிதர்களில் முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். அனைவருக்கும் நன்மையை விரும்பும் அவன் {பிற உயிர்களுக்கு அச்சம் தராதவன்} இந்த அண்டத்திற்கே நண்பனாகக் கருதப்படுகிறான். யாரும் அவனால் மகிழ்வின்மையை {துயரை} அடைவதில்லை. கடல் போன்ற ஈர்ப்புடன் இருக்கும் ஒரு மனிதன், அறிவின் விளைவால் கிடைத்த மனநிறைவுடன் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான்.
நீதிமிக்கப் பழங்காலங்களிலும், தங்கள் கண்களுக்கு முன்னிலையிலும் {தற்காலத்திலும்} பயிலப்படும் செயல்களின் படி தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் சுயக்கட்டுப்பாடு உடைய ஒருவன், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்து, இவ்வுலகில் இன்புற்று இருக்கிறான். அல்லது, அறிவின் விளைவால் ஏற்பட்ட மனநிறைவால் செயலைத் துறக்கும் அத்தகு மனிதன், தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இவ்வுலகில் விரைந்து நகர்ந்து, பிரம்மத்திற்குள் தான் கரைந்து போகும் அந்தத் தவிர்க்க முடியாத நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.
இறகு படைத்த உயிரினங்கள் {பறவைகள் பறந்து} செல்லும் பாதை காணப்படாததுபோல, அறிவின் விளைவால் மனநிறைவில் மகிழ்ந்திருக்கும் ஒரு துறவியின் பாதையும் கண்களுக்குத் தெரியாது. உலகைத் துறக்கும் அவன், விடுதலையைப் பெறும் நோக்கில் சந்நியாச வகை வாழ்வு முறையை ஏற்று, சொர்க்கத்தில் தனக்காகப் பிரகாசமான நித்தியமான உலகங்களை ஒதுக்கிக் கொள்கிறான்.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment