மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-210
உத்யோக பர்வம்
..
ஊசி முனை அளவு நிலம்கூடத் தரமாட்டேன்
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. போர் நிகழும்போது, காண்டீவத்தால் க்ஷத்திரியர்களின் அழிவு நிச்சயம் ஏற்படும். எனினும், எப்போதும் ஞானியாக இருக்கும் உம்மால், குறிப்பாகச் சவ்யசச்சினுடைய {அர்ஜுனனுடைய} ஆற்றலை அறிந்த உம்மால் எப்படி உமது மகன்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆரம்பத்திலிருந்தே காயமேற்படுத்தி, உண்மையில், அப்பாவத்தை மீண்டும் மீண்டும் செய்த பின்பு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி வருந்துவதற்கு) இது நேரமில்லை.
தந்தை அல்லது நண்பன் என்ற நிலையை அடைந்த ஒருவன், எப்போதும் கண்காணிப்புடனும், நல்ல இதயத்துடனும் இருந்தால், (தன் பிள்ளைகளுக்கு) நன்மையை நாடுவான்; ஆனால் காயமேற்படுத்துபவனைத் தந்தை என்று அழைக்கலாகாது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் பாண்டவர்களின் தோல்வியைக் கேட்டு "இது வெல்லப்பட்டது, இஃது அடையப்பட்டது" என்று சிறுபிள்ளையைப் போல நீர் சிரித்தீர். பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நோக்கி கடுஞ்சொல் பேசப்பட்டபோதோ, உம் மகன்கள் முழு நாட்டையும் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ந்தீர். எனினும், உமக்கு முன்னால் இருந்த தவிர்க்கப்பட முடியாத வீழ்ச்சியை நீர் காணவில்லை.
ஜாங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியோடு கூடிய குருக்களின் நாடே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தந்தைவழி நாடாகும். எனினும், அவ்வீரர்களால் {பாண்டவர்களால்} முழுப் பூமியையும் நீர் அடைந்தீர். தங்கள் கரங்களின் வலிமையால் வென்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இந்த விரிந்த பேரரசை உமக்காகச் செய்தார்கள் {உம்மிடம் ஒப்படைத்தார்கள்}. எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் உம்மால் அடையப்பட்டது என்று நீர் நினைத்துக் கொள்கிறீர்.
கந்தர்வர்களால் உமது மகன்கள் பிடித்துச் செல்லப்பட்ட போது, கரைகளற்ற கடலில், தங்களைக் காக்க ஒரு படகு கூட இல்லாமல் மூழ்கும் நிலையில் இருந்தவர்களை {உமது மகன்களை}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனே {அர்ஜுனனே} மீட்டு அழைத்து வந்தான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீரோ, பகடையில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் சென்ற போது சிறுபிள்ளையைப் போல திரும்பத் திரும்பச் சிரித்தீர். முனைப்புள்ள கணைகளை அர்ஜுனன் மாரியாகப் பொழிகையில், கடல்களே கூட வற்றிவிடும் எனும்போது சதையும் இரத்தமும் எம்மாத்திரம்.
அடிப்பவர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} முதன்மையானவன்; விற்கள் அனைத்திலும் காண்டீவமே முதன்மையானது; அனைத்து உயிரினங்களிலும் கேசவனே {கிருஷ்ணனே} முதன்மையானவன்; ஆயுதங்கள் அனைத்திலும் சுதர்சனமே முதன்மையானது; தேர்களில், சுடர்மிகும் குரங்குக் {அனுமன்} கொடி கொண்ட அந்தத் தேரே முதன்மையானது. இவை யாவையும் தன்னில் கொண்டு, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அவனது {அர்ஜுனனின்} தேர், உயர்ந்த காலச்சக்கரம் போலப் போரில் நம் அனைவரையும் எரித்துவிடும்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனக்காகப் போரிட, பீமனையும், அர்ஜுனனையும் கொண்டவனுக்குத்தான் இந்த முழுப் பூமி இப்போதும் சொந்தம். அவனே {பீமனையும் அர்ஜுனனையும் கொண்டவனே = யுதிஷ்டிரனே} மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவன். பீமனால் தாக்கப்படும்போது, நம்பிக்கையிழந்து மூழ்கும் துரியோதனன் தலைமையிலான படையால் வெற்றியை அடைய இயலாது.
மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், சூரசேனர்கள் ஆகிய அனைவரும் உம்மை மதிக்காமல் இப்போது அவமதிக்கிறார்கள். எனினும், அந்த அறிவுள்ள மன்னனின் {யுதிஷ்டிரனின்} சக்தியை அறிந்த அவர்கள் அனைவரும், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்துள்ளனர். அவனிடம் தாங்கள் கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாக எப்போதும் உமது மகன்களை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
அறம்சார்ந்தவர்களும், அழியத்தகாதவர்களுமான பாண்டுவின் மகன்களைத் தன் தீச்செயல்களால் துன்புறுத்தியவனும், அவர்களை {பாண்டவர்களை} இப்போதும் கூட வெறுப்பவனுமான அந்தப் பாவி, வேறு யாருமல்ல உமது மகனைத்தான் {துரியோதனனைத்தான்} சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனும் {துரியோதனனும்}, அவனைப் பின்பற்றுபவர்களும் எல்லாவகையிலும் தடுக்கப்பட {அடக்கப்பட} வேண்டும்.
இந்தச் சோர்வான நேரத்தில் {இந்த அழுத்தத்தில்} நீர் புலம்பியழுவது உமக்குத் தகாது. பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே ஞானியான விதுரராலும், என்னாலும் இதுவே {கௌரவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று} சொல்லப்பட்டது. ஏதோ நீர் ஓர் ஆதரவற்ற நபர் போல, பாண்டவர்கள் தொடர்பாகச் செய்யும் இந்த உமது புலம்பல்கள் அனைத்தும் பயனற்றவையே" என்றான் {சஞ்சயன்}.
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஞ்சாதீர். எங்களுக்காக வருந்தவும் செய்யாதீர். ஓ !ஏகாதிபதி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நாங்கள் போரில் எதிரிகளை வீழ்த்த வல்லவர்களே. பார்த்தர்கள் {பாண்டவர்கள்} நாடுகடத்தப்பட்டு {காட்டிற்கு} அனுப்பப்பட்ட போது, பகை நாடுகளை நசுக்க வல்லவனான, மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} பரந்திருக்கும் தனது படையுடன் அங்கே வந்தான்; மேலும் அங்கே கேகயர்களும், திருஷ்டகேதுவும், பிரஷத [1] குலத்தின் திருஷ்டத்யும்னன் மற்றும் எண்ணிலடங்கா பிற மன்னர்களும் தொடர்ந்து வந்தனர்; அந்தப் பெரும் தேர்வீரர்களான அனைவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மிக அருகில் கூடினர்; அங்கே கூடிய அவர்கள் உம்மையும், குருக்கள் {கௌரவர்கள்} அனைவரையும் நிந்தித்தனர்.
[1] பிரஷதன் = துருபதனின் தந்தை.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரும், மான்தோலுடுத்தி தங்கள் மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் தனது நாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அவர்கள் அனைவரும் உம்மையும், உமது தொண்டர்கள் அனைவரையும் கொல்ல விரும்பினர்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட நான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நம் குடும்பத்தின் அழிவைக் கருதி ஏற்பட்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டு பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம் பேசினேன். நான் அவர்களிடம், "தாங்கள் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு பாண்டவர்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்; நமது முழுமையான அழிவை வாசுதேவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். அப்படுகொலையில், குருக்களின் தலைவரும், அறநெறி அறிந்தவருமான திருதராஷ்டிரர் சேர்க்கப்படாவிட்டாலும், விதுரரைத் தவிர்த்து உங்கள் அனைவரையும் கொன்று, ஓ! ஐயா, நமது முழுமையான அழிவைத் தோற்றுவித்து, யுதிஷ்டிரனுக்கு குருக்களின் {கௌரவர்களின்} முழு நாட்டையும் அளிக்க ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்புகிறான் என்று நான் நினைக்கிறேன்.
{இப்போது} நாம் என்ன செய்வது? சரணடைவதா? தப்பியோடுவதா? அல்லது உயிரை விட்டாவது பகைவருடன் போரிடுவதா? உண்மையில், அவர்களுக்கு எதிராக நாம் நிற்போமெனில், நமது தோல்வி உறுதியானது. ஏனெனில், பூமியின் மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் கட்டளைக்குக் கீழ் {கட்டளையை எதிர்பார்த்து} இருக்கிறார்கள். நாட்டின் மக்கள் அனைவரும் நம்மிடம் எரிச்சலடைந்திருக்கின்றனர், மற்றும் நமது நண்பர்கள் அனைவரும் கூட நம்மிடம் கோபத்திலிருக்கின்றனர். பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் நம்மைக் குறித்துத் தவறாகப் பேசுகின்றனர். நினைவுக்கெட்டாத காலம் முதல், பலமற்ற கட்சியே சமாதானம் கொள்ளும் என்பது அறியப்பட்டதே. எனவே, நாம் சரணடைந்தால், அதில் தவறு ஒன்றும் இருக்க முடியாது.
எனினும், என் நிமித்தமாக, முடிவிலா துன்ப துயரங்களால் பீடிக்கப்படும் அந்த மனிதர்களின் தலைவரான. பார்வையற்ற என் தந்தையைக் {திருதராஷ்டிரரைக்} குறித்தே நான் கவலைகொள்கிறேன். [ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மற்ற மகன்கள் அனைவரும் என்னை மகிழ்விப்பதற்காக மட்டுமே, பகைவரை எதிர்த்தார்கள் {பாண்டவர்களுக்குக் கெடுதல் செய்தார்கள்} என்பது இதற்கு முன்பே உமக்குத் தெரியும்]. அந்தப் பலமிக்க தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், ஆலோசகர்களோடு {அமைச்சர்களோடு} கூடிய மன்னர் திருதராஷ்டிரரின் குலத்தை முற்றாக அழித்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காகப் {அநீதிகளுக்காகப்} பழிதீர்ப்பார்கள் என்பது நிச்சயம்." என்று ({துரியோதனனான} நான் அவர்களிடம் {பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம்} {அப்போது} இப்படியே பேசினேன்).
பெரும் கவலையால் நான் பாதிக்கப்படுவதையும், உணர்வுகளால் நான் அடைந்த சித்திரவதையையும் கண்ட துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்னிடம், "ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, அஞ்சாதே. நாங்கள் களங்காணும்போது, நம்மிடம் பகை கொள்ளும் எதிரிகளால் எங்களை வீழ்த்த இயலாது. நாங்கள் ஒவ்வொருவரும் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனியாகவே வீழ்த்தும் வல்லமை பெற்றிருக்கிறோம். அவர்கள் வரட்டும். கூர்முனை கொண்ட கணைகளால் நாம் அவர்களது ஆணவத்தைத் தடுப்போம்.
பழங்காலத்தில் {முற்காலத்தில்}, தனது தந்தையின் மரணத்தால் கோபத்தில் அழற்சியுற்ற (நம் மத்தியில் இருக்கும்) இந்தப் பீஷ்மர், ஒரே தேரில் {தனியாகச்} சென்று பூமியின் மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டார். ஓ! பாரதா {துரியோதனா}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்தக் குருக்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, அவர்களில் எண்ணற்றோரை அடித்தார். அதனால் அச்சமுற்ற அவர்கள், தங்கள் பாதுகாப்பைக் கோரி இந்தத் தேவவிரதனிடம் {பீஷ்மரிடம்} சரணடைந்தனர். நம்முடன் இருக்கும் அந்தப் பீஷ்மர், இப்போதும் போரில் எதிரியை வீழ்த்தவல்லராவார். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது அச்சங்கள் அனைத்தும் அகலட்டும்" என்றனர்" என்றான் {துரியோதனன்}.
துரியோதனன் தொடர்ந்தான், "அளவிலா சக்தி கொண்ட இந்த வீரர்களால் {துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோரால்} அன்று செய்யப்பட்ட உறுதி இதுவே. முன்பு, இந்த முழு பூமியும் எதிரியின் {யுதிஷ்டிரனின்} அதிகாரத்திற்குள்ளேயே இருந்தது. எனினும், இப்போது, அவர்கள் {பாண்டவர்கள்} நம்மைப் போரில் வீழ்த்தவல்லவர்களாக இல்லை. எனெனில், நமது எதிரிகளான பாண்டுவின் மகன்கள் இப்போது கூட்டாளிகள் இன்றி, சக்தி இன்றி உள்ளனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியதிகாரம் இப்போது என்னிடமே குடிகொண்டிருக்கிறது.
என்னால் கூட்டப்பட்டிருக்கும் இந்த மன்னர்கள் செழிப்பிலும், துக்கத்திலும் நான் கொண்டிருக்கும் அதே மனமுடையவர்களாக இருக்கிறார்கள். ஓ! குருக் {கௌரவக்} குலத்தில் சிறந்தவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் எனக்காக நெருப்பிலோ, கடலிலோ நுழையவல்லவர்கள் என்பதை அறிந்து கொள்ளும். பகைவரின் தற்புகழ்ச்சியைக் கண்டு அஞ்சி, கவலையில் நிறைந்து, மதியிழந்தவர் போலப் புலம்பிக் கொண்டிருக்கும் உம்மைக் கண்டு இப்போது இவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இம்மன்னர்களில் ஒவ்வொருவரும் பாண்டவர்களைத் தனியாகவே எதிர்க்கவல்லவர்கள். உண்மையில், அனைவரும் அவ்வாறே தங்களைக் கருதுகின்றனர். எனவே, உமது அச்சங்கள் அகலட்டும்.
பரந்திருக்கும் எனது படையை வீழ்த்த வாசவனாலும் {இந்திரனாலும்} இயலாது. அந்தப் படையை அழிக்க சுயம்புவான பிரம்மனே நினைத்தாலும் முடியாது. நான் கூட்டியிருக்கும் படைக்கும், எனது சக்திக்கும் அஞ்சியே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நகரத்திற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, {ஒரு நகரத்தைக் கூடக் கேட்காமல்} ஐந்து கிராமங்களை மட்டுமே யுதிஷ்டிரன் கெஞ்சிக் கேட்கிறான்.
குந்தியின் மகனான விருகோதரனின் {பீமனின்} ஆற்றல், நீர் பாராட்டும்படி எங்குமே காணப்படவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் எனது ஆற்றலின் அளவை அறியவில்லை. கதாயுத மோதலில் எனக்கு நிகரானவர் பூமியில் எவரும் இல்லை. இத்தகைய மோதலில் எவரும் எப்போதும் என்னை விஞ்சியதில்லை, {இனிமேல்} யாரும் என்னை விஞ்சவும் மாட்டார்கள்.
பல இடர்பாடுகளை அனுபவித்து, அர்ப்பணிப்போடு கூடிய முயற்சியுடன் எனது ஆசானின் {பலராமரின்} வசிப்பிடத்தில் வாழ்ந்தவன் நான். எனது அறிவு மற்றும் பயிற்சிகள் அங்கேயே நிறைவுபெற்றன. இதன் காரணமாகவே நான், பீமனிடமோ பிறரிடமோ அச்சங்கொள்வதில்லை. நான் (எனது ஆசானான) சங்கர்ஷணருக்காகப் {பலராமருக்காகப்} பணிவுடன் காத்திருந்தபோது {அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது}, கதாயுதத்தில், துரியோதனனுக்கு நிகர் எவனும் இல்லை என்பதே அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. போர்க்களத்தில் சங்கர்ஷணருக்கு {பலராமருக்கு} நிகரானவன் நான். பலத்தில் எனக்கு மேலானவன் எவனும் இப்பூமியில் இல்லை.
போரில் எனது கதாயுதத்தின் வீச்சை பீமனால் தாங்கிக் கொள்ள இயலாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பீமனை நோக்கி நான் வீசும் ஒரே வீச்சு, ஓ! வீரரே {திருதராஷ்டிரரே}, அவனை {பீமனைத்} தாமதமின்றி யமனுலகிற்கு அழைத்துச் செல்லும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதத்துடன் இருக்கும் பீமனைக் காண நான் விரும்புகிறேன். இதுவே எனது நீண்ட கால ஆசையாக இருந்திருக்கிறது. போரில் எனது கதாயுதத்தால் தாக்கப்படும் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, தன் அங்கங்கள் சிதற, தரையில் செத்து விழுவான்.
எனது கதாயுத வீச்சில் அடிபட்டால், இமயத்தின் மலைகளே கூட நூறாயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகும். கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் துரியோதனனுக்கு யாரும் நிகரில்லை என்று வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் போலவே விருகோதரனும் {பீமனும்} அறிவான். எனவே, விருகோதரன் நிமித்தமாக உண்டான உமது அச்சங்கள் விலகட்டும். ஏனெனில் கடுமையான ஒரு மோதலில் நான் நிச்சயம் அவனை {பீமனைக்} கொல்வேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனக் கவலைக்கு வழி கொடுக்காதீர் {இடமளிக்காதீர்}. நான் அவனை {பீமனைக்} கொன்ற பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்குச் சமமான அல்லது மேன்மையான சக்தி படைத்த எண்ணற்ற தேர்வீரர்கள் அவனை {அர்ஜுனனை} விரைவாக வீழ்த்துவார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், பூரிஸ்ரவஸ், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியொருவராகவே பாண்டவர்களைக் கொல்லவல்லவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணையும்போது, நொடிப்பொழுதில் அவர்கள் அர்ஜுனனை யமனுலகுக்கு அனுப்புவார்கள்.
உண்மையில், இம்மன்னர்கள் அனைவரின் ஒன்றிணைந்த படைகளால், தனஞ்சயன் என்ற ஒருவனை {அர்ஜுனனை} வீழ்த்த இயலாது என்பதற்கு {என்ற உமது எண்ணத்திற்கு} எந்தக் காரணமும் இல்லை. பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோரால் அடிக்கப்படும் அளவிலாக் கணைகளால் நூறு முறை மறைக்கப்பட்டும், தன் பலத்தையெல்லாம் இழக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} யமனுலகு செல்ல வேண்டியிருக்கும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கங்கைக்குப் பிறந்தவரும் {கங்காதரரும்}, சந்தனுவுக்கும் மேலானவரும், இருபிறப்பாள {பிராமண} முனிவனைப் போன்றவரும், தேவர்களாலும் எதிர்க்கப்பட முடியாதவருமான நமது பாட்டன் {பிதாமகன் பீஷ்மர்}, மனிதர்களுக்கு மத்தியில் தனது பிறப்பை எடுத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொல்ல இப்பூமியில் எவருமில்லை. ஏனெனில், இவர் {பீஷ்மர்}, "உனது விருப்பமில்லாமல் நீ இறக்கமாட்டாய்" என்று {தன்னிடம்} நிறைவடைந்த தன் தந்தையிடம்{சந்தனுவிடம்} வரம் பெற்றவர்.
துரோணர், இருபிறப்பாளரான {பிராமணரான} தவசி {பிரம்மரிஷி} பரத்வாஜர் மூலம் நீர்க்குடத்தில் {கலசத்தில்} பிறந்தவர். துரோணருக்குப் பிறந்த மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவனைத்தையும் அடைந்திருக்கிறார். ஆசான்களில் முதன்மையானவரான இந்தக் கிருபர் பெரும் முனிவரான கௌதமருக்குப் பிறந்தவராவார். நாணற்கட்டில் பிறந்தவரான இந்த ஒப்பற்றவர் கொல்லப்பட இயலாதவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமனின் தந்தை, தாய், தாய்மாமன் ஆகிய மூவரும் பெண்ணின் கருவறையில் பிறவாதவர்களாவர் {என்பதை நினைவில் கொள்ளும்}. அந்த வீரரையும் {அஸ்வத்தாமனையும்}, நான் என் கட்சியில் கொண்டுள்ளேன்.
தேவர்களைப் போன்ற இந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} வலியை உண்டாக்கக் கூடியவர்கள். இவர்களில் ஒருவரைக் காணக் கூட அர்ஜுனன் சக்தி படைத்தவனல்ல. மனிதர்களில் புலிகளான இவர்கள் ஒன்றாக இணைந்திருக்கும்போது, தனஞ்சயனை {அர்ஜுனனை} நிச்சயம் கொல்வார்கள்.
கர்ணனும், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோருக்கு நிகரானவனே என நான் கருதுகிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, "நீ எனக்கு நிகரானவன்" என்று ராமரே {பரசுராமரே}, அவனிடம் {கர்ணனிடம்} சொல்லியிருக்கிறார். பெரும் பிரகாசமும் அழகும் உடைய இரு காது குண்டலங்களுடன் கர்ணன் பிறந்தான்; சச்சியை {இந்திராணியை} மனநிறைவு கொள்ளச் செய்ய, பொய்க்காத, பயங்கரமான ஒரு கணைக்கு மாற்றாக, எதிரிகளை ஒடுக்கும் அவனிடம் {கர்ணனிடம்} அவற்றை {அந்தக் காதணிகளை} இந்திரன் இரந்து பெற்றான். எனவே, அந்தக் கணையால் பாதுகாக்கப்படும் கர்ணனிடம் இருந்து தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எப்படி உயிரோடு தப்ப முடியும்?
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கைப்பிடிக்குள் உறுதியாகப் பற்றப்பட்டிருக்கும் கனியைப் போல {உள்ளங்கை நெல்லிக்கனி போல}, எனது வெற்றி உறுதியானது. எனது எதிரிகளின் அப்பட்டமான தோல்வி, பூமியில் ஏற்கனவே பேசப்படுகிறது.
இந்தப் பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் படை வீரர்களையேனும் கொல்வார். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோர் அவருக்கு நிகரான வில்லாளிகளே.
மேலும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, "ஒன்று, நாங்கள் அர்ஜுனனைக் கொல்வோம், அல்லது குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன் {வானரக் கொடியோன் அர்ஜுனன்} எங்களைக் கொல்லட்டும்" என்று சம்சப்தக வீரர்களின் கூட்டம் தீர்மானித்திருக்கிறது. சவ்யசச்சின் {அர்ஜுனன்} தங்களுக்கு நிகரானவன் அல்ல என்று கருதும் பிற மன்னர்களும் அவனை {அர்ஜுனனைக்} கொல்ல உறுதியாகத் தீர்மானித்திருக்கிறார்கள். பாண்டவர்களால் ஏற்படும் ஆபத்துக்காக இனியும் நீர் ஏன் வருந்துகிறீர்?
பீமசேனனே கொல்லப்படும்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (அவர்களில்) எவன் போரிட முடியும்? எதிரிகளின் மத்தியில் அப்படி எவரேனும் உண்டெனில், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, அதை எனக்குச் சொல்லும்.
ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன், சாத்யகி ஆகிய ஏழு போர்வீரர்களே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் முக்கிய பலம் எனக் கருதப்படுகிறார்கள். எனினும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, அவந்தியின் இரு மன்னர்கள் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்முகன், துஸ்ஸகன், ஸ்ருதாயு ஆகியோரும், சித்ரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சலன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகியோரும் நமது முக்கிய போர்வீரர்களாக இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் பதினோரு{11} அக்ஷௌஹிணிகளைக் கூட்டியிருக்கிறேன். ஏழு{7} அக்ஷௌஹிணிகளை மட்டுமே கொண்ட எதிரியின் படை எனதை விட அளவில் சிறியதே. பிறகு நான் எப்படித் தோற்பேன்? மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஓர் படையுடன் மோதலாம் என பிருஹஸ்பதியே சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியை விட எனது படை, மூன்றில் ஒரு பங்குக்குப் பெரியதாக இருக்கிறது. [2]
[2] கௌரவர்களின் பதினோரு அக்ஷொஹிணியில் மூன்றில் ஒரு பங்கு என்பது 3.66 ஆகும். பாண்டவர்களின் படையோ ஏழு அக்ஷௌஹிணி ஆகும். எனவே தன் படையில் மூன்றில் ஒரு பங்கை நீக்கினாலும் {11 – 3.66 = 7.33}, அதைவிட எதிரிகளின் படை {7} குறைவாகவே இருக்கிறது என்று துரியோதனன் சொல்வதாகக் கருதுகிறேன்.
இதையே வேறுவிதமாக, பாண்டவர்களில் ஏழு{7} முக்கிய வீரர்கள், கௌரவர்களில் தன்னையும் சேர்த்து இருபத்தோரு{21} {மேலே துரியோதனனைச் சேர்க்காமல் இருபத்திரண்டு பேர் இருக்கின்றனர்} முக்கிய வீரர்கள். எனவே, பாண்டவப்படையை விட கௌரவப்படை மூன்று மடங்கு பெரியது என்று துரியோதனன் சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.
இதுதவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளின் பல குறைகளை நான் அறிவேன், அதே வேளையில், நான் பல குணநிறைவுகளுடன் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும், எனது படையின் மேன்மையையும், பாண்டவர்களின் தாழ்வையும் அறிந்தும், உமது மதியை நீர் இழப்பது உமக்குத் தகாது" என்றான் {துரியோதனன்}.
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்} "ஓ! பாரதா {ஜனமேஜயா}, பகை தலைவர்களை வெல்பவனான துரியோதனன், இதைச் சொன்ன பிறகு, பாண்டவர்களின் செயல்பாடுகளை அறியும் ஆவலில், மீண்டும் சஞ்சயனிடம் கேட்கலானான் ".
துரியோதனன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயரே, ஏழு{7} அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படையைத் திரட்டிய பிறகு, பிற மன்னர்களின் துணையுடன், குந்தியின் மகனான யுதிஷ்டிரன் என்ன செய்ய நினைக்கிறான்?"
சஞ்சயன் {துரியோதனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, போரைப்பொறுத்தவரை யுதிஷ்டிரன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். பீமசேனனும், அர்ஜுனனும் அதே போலவே இருக்கின்றனர். இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} முற்றிலும் அச்சமற்றிருக்கின்றனர். (தான் பெற்ற) மந்திரங்களைச் சோதித்துப் பார்க்கும் நோக்கத்தில், குந்தியின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் ஒளியூட்டியபடி தனது தெய்வீகத் தேரைப் பூட்டினான். கவசம் தரித்த அவன் {அர்ஜுனன்}, மின்னல்களால் சக்தியூட்டப்பட்ட மேகக்குவியல் போலத் தெரிந்தான். சிறிது நேரம் சிந்தித்த அவன் {அர்ஜுனன்}, என்னிடம் மகிழ்ச்சியாக, "ஓ! சஞ்சயரே, இதோ இந்தத் தொடக்க நிலை அறிகுறிகளைப் பாரும். நாங்கள் நிச்சயம் வெல்வோம்" என்றான். உண்மையில், பீபத்சு {அர்ஜுனன்} என்ன சொன்னானோ, அஃது எனக்கு உண்மையாகவே தோன்றியது." என்றான் {சஞ்சயன்}.
துரியோதனன் {சஞ்சயனிடம்}, "பகடையில் தோற்ற பிருதையின் {குந்தியின்} மகன்களைப் புகழ்வதில் நீர் மகிழ்ச்சியடைகிறீர். இப்போது, அர்ஜுனனின் தேரில் எவ்வகைக் குதிரைகள் பூட்டப்படுகின்றன என்றும், எவ்வகைக் கொடிகள் {துவஜங்கள் [dhvajaḥ]} அதில் நிறுவப்பட்டுள்ளன என்றும் எங்களுக்குச் சொல்லும்" என்றான்.
சஞ்சயன் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, தஷ்டிரி என்றும், பௌமானன் என்றும் அழைக்கப்படும் தெய்வீகத் தச்சன், சக்ரன் {இந்திரன்} மற்றும் தத்ரி {ஆதித்யர்களில் ஒருவர், ஆரோக்கியம் மற்றும் உள்நாட்டு அமைதிக்கான தெய்வம்} ஆகியோரின் உதவியுடன், பல்வேறு வகை உருவங்களை அமைத்து அர்ஜுனனின் தேருக்கு பெரும் அழகூட்டினான். மேலும், பீமசேனனின் வேண்டுகோளுக்கிணங்க, காற்று தேவனின் {வாயுவின்} மகனான ஹனுமனும் தனது உருவத்தை அதில் {அத்தேரில்} நிறுவினார்.
செங்குத்தாகவும் {நெடுக்கிலும்}, பக்கவாட்டாகவும் {குறுக்கிலும்}, ஒரு யோஜனை பரப்பை ஏற்கும் அக்கொடியை {துவஜம் [dhvajaḥ]}, மாயையால் பௌமானன் உருவாக்கியிருக்கிறான். {தன்னொளியாலான} அதன் வழியில் மரங்கள் குறுக்கே நின்றாலும் கூட, அவற்றால் அதன் போக்கைத் தடுக்க முடியாது. வானில் காட்சியளிக்கும், பல்வேறு நிறங்களாலான சக்ரனின் வில் {வானவில் [அ] இந்திரவில்] எதனாலானது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அது போல, உண்மையில், பௌமானனால் திட்டமிடப்பட்ட அதன் வடிவம் மாறுபட்டதாகவும், எப்போதும் மாறுவதாகவும் இருக்கிறது.
விண்ணை முட்டி எழும் புகையோட கூடிய நெருப்பு, பல்வேறு பிரகாசமான நிறங்களையும் வடிவங்களையும் காட்டுவது போல, பௌமானனால் வடிவமைக்கப்பட்ட அந்தக் கொடி இருக்கிறது. உண்மையில் அதற்கென்று ஓர் எடையும் {பாரம்} கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. அத்தேரில், (கந்தர்வ மன்னன்) சித்திரசேனனால் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெண்ணிற தெய்வீகக் குதிரைகள் இருக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, பூமியிலோ, வானத்திலோ, சொர்க்கத்திலோ கூட அவற்றின் {அந்தக் குதிரைகளின்} போக்கைத் தடுக்க முடியாது. எத்தனை முறை கொல்லப்பட்டாலும், அவற்றின் {அக்குதிரைகளின்} எண்ணிக்கை எப்போதும் முழுமையாக {நூறு என்று} நிறைந்திருக்கும்படி முன்னரே வரமருளப்பட்டிருக்கிறது.
யுதிஷ்டிரனின் தேரில், தந்தம் போன்ற வெண்ணிறத்தில், சம ஆற்றல் படைத்த பெரிய குதிரைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. பீமசேனனின் தேரில், காற்றின் வேகமும், ஏழு முனிவர்களின் [1] பிரகாசமும் கொண்ட சிறப்புமிக்கவை {சிறப்புமிக்கக் குதிரைகள்} பூட்டப்பட்டிருக்கின்றன. கருநிற மேனியும், தித்திரி பறவை {சதுப்புநிலக் கௌதாரி} போன்று பல வண்ணங்களிலான முதுகு கொண்டதும், மனநிறைவு கொண்ட தன் சகோதரன் பல்குனனால் {அர்ஜுனனால்} கொடுக்கப்பட்டதும், பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட மேன்மையானதுமான குதிரைகள் சகாதேவனை மகிழ்ச்சியாகச் சுமக்கின்றன. விருத்திரனைக் கொன்ற இந்திரனைத் தாங்கும் அற்புதக் குதிரைகளைப் போன்றிருப்பவையும், பலமிக்கக் காற்றைப் போலப் பெரும் வேகம் கொண்டவை மாத்ரியின் மகனான, அஜமீட குலத்து நகுலனைச் சுமக்கின்றன. அளவில் பெரியவையும், வயதிலும், பலத்திலும் பாண்டவர்களின் குதிரைகளுக்கு நிகரானவையும், பெரும் வேகம் கொண்டவையும், அழகானவையும், தேவர்களால் கொடுக்கப்பட்டவையுமான அற்புத குதிரைகள், இளம் இளவரசர்களான சுபத்திரை மற்றும் திரௌபதியின் மகன்களைச் சுமக்கின்றன" என்றான் {சஞ்சயன்}.
[1] ஏழு முனிவர்கள் என்பது ஏழு நட்சத்திர மண்டலங்கள் என்ற பொருளைக் கொள்ளும். "ரிஷ்யப்ரக்யா" "ṛśya prakhyā" என்பது மூலச் சொல். ரிக்ஷப்ரக்யா என்பதற்கு "கரடிகள் போன்றவை" என்ற பொருளும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து பிரகாசம் என்ற சொல்லும் வருவதால், அது நட்சத்திரக்கூட்டங்களைக் குறிப்பதாகவே நாம் கொள்ளலாம்.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, பாசத்தால் அங்கே வந்தவர்களும், பாண்டவர்கள் சார்பாக என் மகனின் {துரியோதனனின்} படைகளுடன் போரிடப்போகிறர்வர்களுமான யாரையெல்லாம் நீ கண்டாய்?"
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில் முதன்மையானவனான கிருஷ்ணனையும், சேகிதானனையும், யுயுதானன் என்று அழைக்கப்படும் சாத்யகி ஆகியோர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். தங்கள் பலத்தில் செருக்கும், அகில உலகப் புகழும் கொண்ட {சேகிதானான் மற்றும் சாத்யகி ஆகிய} அவ்விரு தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் பாண்டவர்களை வந்தடைந்தனர்.
பாஞ்சாலர்களின் மன்னான துருபதன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான சத்யஜித் மற்றும் பிறரைக் கொண்ட தனது பத்து {10} மகன்களால் சூழப்பட்டு, சிகண்டியால் நன்கு பாதுகாக்கப்பட்டு, தனது படைவீரர்களுக்கு அனைத்து அடிப்படை பொருட்களையும் கொடுத்து, யுதிஷ்டிரனைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒரு முழு அக்ஷௌஹிணியுடன் அங்கே வந்திருக்கிறான்.
பூமியின் தலைவனான விராடன், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, தனது மகன்களான சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய இருவருடனும், மதிராக்ஷன் தலைமையிலான சூரியதத்தன் மற்றும் பிற வீரர்களுடனும், தன் தம்பிகள் மற்றும் மகன்களின் துணையுடனும், பிருதையின் {குந்தியின்} மகனை {யுதிஷ்டிரனை} வந்தடைந்திருக்கிறான்.
ஜராசந்தனின் மகனான மகத மன்னன் {ஜயத்சேனன் [சகாதேவன்]} மற்றும் சேதிகளின் மன்னன் திருஷ்டகேது ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் அங்கே வந்திருக்கின்றனர்.
ஊதா நிறக் கொடிகளுடன் கூடிய கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, பாண்டவர்களை வந்தடைந்திருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகத் தார்தராஷ்டிர படைகளுடன் {திருதராஷ்டிர படைகளுடன்} மோதப்போகும் இந்த அளவு எண்ணிக்கையிலான படைகள் அங்கு கூடியிருப்பதை நான் கண்டேன்.
மனித, தெய்வீக, கந்தர்வ, அசுர வகைகளிலான போர் வியூகங்களை அறிந்தவனும், பெரும் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன் அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்குகிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகன் பீஷ்மர், சிகண்டியின் பங்காக {இலக்காக} நிர்ணயிப்பட்டிருக்கிறார்; தன் மத்ஸ்ய வீரர்கள் அனைவருடன் விராடன் சிகண்டியை ஆதரிப்பான் {பின்பலமாக இருப்பான்}.
பெரும் பலமிக்க மத்ர மன்னன் {சல்யன்}, பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனின்} பங்காக நிர்ணயிப்பட்டிருக்கிறார். எனினும், இவர்கள் இருவரும் சரியான {சமமான} இணையல்ல என்பது சிலரது கருத்தாக இருக்கிறது.
துரியோதனனும், அவனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களும், மேலும், கிழக்கு மற்றும் தெற்கின் ஆட்சியாளர்களும் பீமசேனனின் பங்காகக் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர்.
விகர்த்தனன் மகன் கர்ணன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் அர்ஜுனனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தப் பூமியில் வெல்லப்பட முடியாத வீரர்களையும், தங்கள் பலத்தில் செருக்குடையோரையும், அர்ஜுனன் தனது பங்காக ஏற்றுக் கொண்டான்.
வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.
[1] விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.
துரியோதனனின் மகன்கள், துச்சாசனன், மன்னன் பிருகத்பலன் ஆகியோர் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} பங்காகக் நிர்ணயிக்கப்பட்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்க, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கொடிகளுடைய தேரைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான திரௌபதியின் மகன்கள், திருஷ்டத்யும்னன் தலைமையில் துரோணருக்கு எதிராக முன்னேறுவார்கள்.
சேகிதானன் தனது தேரில் இருந்து கொண்டு சோமதத்தனுடன் தனிப் போரில் மோத விரும்புகிறான். அதே வேளையில் சாத்யகி, போஜர்கள் தலைவனான கிருதவர்மனுக்கு எதிராகப் போரிட ஆவலுடன் இருக்கிறான்.
போர்க்களத்தில் பயங்கரக் கர்ஜனை புரியும் மாத்ரியின் வீரமகனான சகாதேவன், உமது மைத்துனனான சுபலனின் மகனைத் {சகுனியைத்} தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
மத்ராவதியின் {மாத்ரியின்} மகனான நகுலன், வஞ்சகம் நிறைந்த உலூகனையும், சாரஸ்வதர்கள் [2] என்ற பழங்குடியினரையும் தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
[2] சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்த மன்னர்கள்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரிடப்போகிறவர்களான பூமியில் உள்ள பிற மன்னர்கள் அனைவரையும், ஒவ்வொருவராகப் பெயரைச் சொல்லி, {அவர்களைத்} தங்கள் ஒவ்வொருவருக்குமான பங்காகப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, பிரித்துக் கொண்டார்கள். இப்படியே பாண்டவப் படை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப்போது, உமது மகன்களுடன் கூடிய நீர் எது சிறந்தது என்று கருதுவீரோ, அதைத் தாமதமின்றிச் செய்வீராக" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொன்னான், "ஐயோ, ஏமாற்றுகரப் பகடைக்கு அடிமையான எனது மூட மகன்கள் அனைவரும், யாருடன் போர்க்களத்தில் மோத வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த வலிமைமிக்கப் பீமனால் ஏற்கனவே மாண்டுவிட்டார்கள். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல, வேள்விக்காக மரணத்தால் {காலனால்} புனிதமாக்கப்பட்டவர்கள் போல {வேள்வி விலங்கைப் போல}, பூமியின் மன்னர்கள் அனைவருமே கூடக் காண்டீவத்தை நோக்கி விரைவார்கள். என்னால் காயமுற்ற அந்த ஒப்பற்ற வீரர்களால் {பாண்டவர்களால்} எனது படை ஏற்கனவே துரத்தப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், பாண்டுவின் மகன்களால் {பாண்டவர்களால்} மோதலில் உடைக்கப்பட்ட எனது வீரர்களின் தலைவர்களை யார் பின்தொடர்வார்கள்?
அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், வலிமை மிக்கத் தேர்வீரர்களாவர். பெரும் துணிவும், புகழ்மிக்கச் சாதனைகளும், பெரும் ஆற்றலும், எரியும் சூரியனுக்கு நிகரான சக்தி ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் வெற்றிவாகை சூடுபவர்களாவர். யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவனாகவும், மதுவைக் கொன்றவனை {மதுசூதனன்_கிருஷ்ணனைத்} தங்கள் பாதுகாவலனாகவும், வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் போர்வீரர்களாகவும், நகுலன், சகாதவேன், பிரஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சாத்யகி, துருபதன், தன் மகனுடன் கூடிய திருஷ்டகேது, உத்தமௌஜஸ், பாஞ்சாலர்களின் வெல்லப்பட முடியாத யுதாமன்யு, சிகண்டி, க்ஷத்திரதேவன், விராடனின் மகன் உத்தரன், காசயர்கள் {காசி நாட்டவர்}, சேதிக்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், விராடனின் மகன் பப்ரு, பாஞ்சாலர்கள், பிரபத்திரகர்கள் ஆகியோரைத் தங்களுக்காகப் போரிடுபவர்களாகக் கொண்டவர்களிடம் இருந்து இந்திரனாலும் இந்தப் பூமியைப் பறிக்க முடியாது. போரில் அமைதியும் உறுதியும் கொண்ட அவ்வீரர்களால் மலைகளையும் பிளக்க முடியும். ஐயோ, தொண்டை கட்டுமளவுக்கு நான் கதறினாலும் கூட, என்னைப் புறக்கணித்து, ஓ சஞ்சயா, அனைத்து அறங்களையும் கொண்ட அந்தத் தெய்வீக ஆற்றல் படைத்தோரிடம் {பாண்டவர்களிடம்} எனது தீய மகன் {துரியோதனன்} போரிட விரும்புகிறானே."
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம், "பாண்டவர்களும் நாங்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களும் நாங்களும் ஒரே பூமியில் தான் நடக்கிறோம். பாண்டவர்களுக்கே வெற்றி கிட்டும் என்று நீர் தீர்மானிப்பது எப்படி? வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர், கிருபர், வெல்லப்பட முடியாத கர்ணன், ஜெயத்ரதன், சோமதத்தன், அஸ்வத்தாமன் ஆகிய அனைவரும் பெரும் ஆற்றல் படைத்தவர்களாவர். தேவர்களோடு கூடிய இந்திரனே ஆனாலும் அவர்களை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கையில், ஓ! தந்தையே, பாண்டவர்களைக் குறித்து நீர் என்ன சொல்வீர்?
ஆயுதம் தாங்கி நிற்கும் இந்த உன்னதமான வீர மன்னர்கள் அனைவரும், ஓ! தந்தையே, எனக்காகப் பாண்டவர்களை எதிர்த்து நிற்க இயன்றவர்களே, அதே வேளையில் பாண்டவர்கள் எனது துருப்புகளைப் பார்க்கக்கூட இயன்றவர்களல்லர். பாண்டவர்களையும், அவர்களது மகன்களையும் போரில் சந்திக்கப் போதிய பலம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனது நலனில் ஆவலுள்ள இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், இளம் மான்களை வலையில் பிடிப்பது போல, பாண்டவர்கள் அனைவரையும் நிச்சயம் பிடிப்பார்கள். நமது தேர்க்கூட்டங்கள் மற்றும் கணைகளின் கண்ணிகளின் விளைவாகப் பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படுவார்கள் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்" என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, இந்த எனது மகன் {துரியோதனன்} பைத்தியக்காரனைப் போலப் பேசுகிறான். நீதிமானான யுதிஷ்டிரனைப் போர்க்களத்தில் வீழ்த்த இயலாதவனாக இருக்கிறான். அந்த ஒப்பற்றவர்களுடன் {பாண்டவர்களுடன்} இந்தப் பீஷ்மர் போரை விரும்பவில்லை. ஆகையால், புகழ்வாய்ந்த, பலமிக்க, அறம்சார்ந்த, உயர்ஆன்ம பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வலிமையை இவர் {இந்தப் பீஷ்மர்} உண்மையில் அறிந்திருக்கிறார். ஆனால், ஓ! சஞ்சயா, அவர்களது {பாண்டவர்களின்} நடவடிக்கைகளை எனக்கு மீண்டும் சொல். (ஹோம) நெருப்பைத் தெளிந்த நெய்யைக் கொண்டு தூண்டும் புரோகிதர்களைப் போல, அந்த ஒப்பற்ற, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகளை {பாண்டவர்களை} யார் தூண்டி விடுகிறார்கள் என்பதை எனக்குச் சொல்" என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, "பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, போரிடுவீராக. சிறு அச்சத்தையும் ஊக்கப்படுத்தாதீர். திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} உள்ள பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், வரப்போகும் கடும் மோதலில் ஆயுத மழைக்கு இலக்காவார்கள். உண்மையில், சிறு மீன்களை நீரில் பிடிக்கும் திமிங்கலம் போல, அங்கே தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து, சினத்துடன் கூடியிருக்கும் அந்த மன்னர்கள் அனைவருடனும் நான் ஒருவனே {தனியனாக} மோதுவேன். பெருகும் கடலைத் தடுக்கும் கரையைப் போல, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்யன், சுயோதனன் {துரியோதனன்} ஆகிய அனைவரையும் நானே {ஒருவனாகவே} தடுப்பேன்" என்று பாண்டவர்களிடம் எப்போதும் போருக்காகத் தூண்டுகிறான் {திருஷ்டத்யும்னன்}.
அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்}, "உனது ஆற்றலையும், உறுதியையுமே பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் முழுமையாக நம்பியிருக்கிறோம். போரிலிருந்து எங்களைப் பாதுகாப்பாக மீட்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, க்ஷத்திரிய வகைக் கடமைகளில் நீ உறுதியாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உண்மையில், கௌரவர்களிடம் தனியொருவனாகப் போரிட நீ தகுந்தவனே. போரிட விரும்பி, அவர்கள் {கௌரவர்கள்} நம் முன்னிலையில் நிற்கும்போது, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {திருஷ்டத்யும்னா}, நீ எதைச் செய்வாயோ, அஃது எங்களுக்கு நன்மையானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். படுதோல்வி அடைந்து, பாதுகாப்பு நாடி போரில் இருந்து தப்பியோடுபர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில், தன் ஆற்றலை வெளிக்காட்டும் ஒரு வீரனை ஆயிரம் {விலை} கொடுத்தாவது {ஒருவன்} வாங்க வேண்டும் என்பதே சாத்திரமறிந்தோர் கருத்து. போர்க்களத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களை விடுவிப்பவன் நீ என்பதில் {யாருக்கும்} ஐயமில்லை. {அதாவது, நீ எங்களுக்கு மதிப்புமிக்கவன் என்பதில் ஐயமில்லை}" என்றான் {யுதிஷ்டிரன்}.
நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் இதைச் சொன்ன போது, அச்சமற்ற வகையில் திருஷ்டத்யும்னன் {சஞ்சயனான} என்னிடம், "ஓ! சூதரே {சஞ்சயரே}, நீர் தாமதமில்லாமல் சென்று, துரியோதனனுக்காகப் போரிட வந்திருக்கும் அனைவரிடமும், பாஹ்லீகர்களோடு கூடிய பிரதீப குல குருக்களிடமும், சரத்வான் மகன் {கிருபர்}, கர்ணன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன், துச்சாசனன், விகர்ணன், மன்னன் துரியோதனன் மற்றும் பீஷ்மர் ஆகியோரிடமும் "தேவர்களால் பாதுகாக்கப்படும் அர்ஜுனனால் நீங்கள் கொல்லப்பட வேண்டாம். அது நடப்பதற்குள், ஏதேனும் ஒரு நல்ல மனிதன் யுதிஷ்டிரரைத் அணுகி, மனிதரில் சிறந்தவரான அந்தப் பாண்டுவின் மகனிடம், {பாண்டவர்கள் ஒப்படைத்த} நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி தாமதமில்லாமல் வேண்டிக் கொள்ளட்டும். கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவரான பாண்டுவின் மகன் சவ்யசச்சினைப் {அர்ஜுனரைப்} போன்ற வீரர் எவரும் இந்தப் பூமியில் இல்லை. காண்டீவத்தைக் கொண்டிருப்பவரின் {அர்ஜுனரின்} தெய்வீகத் தேர் தேவர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களால் அவர் {அர்ஜுனர்} வெல்லப்படத்தக்கவர் அல்ல. எனவே, போரிடத் துணியாதீர்" என்று சொல்லும்" என்ற இந்தச் சொற்களைப் {திருஷ்டத்யும்னன்} பேசினான்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன்{துரியோதனனிடம்} சொன்னான், "பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் க்ஷத்திரிய சக்தியைக் கொண்டு, தன் இளமைக்காலத்தில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொள்கிறான். ஐயோ, இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைப் புறக்கணித்து, எனது மூட மகன்கள், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} போரிட விரும்புகின்றனரே. ஓ! துரியோதனா, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பகைமையில் இருந்து விலகும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எந்தச் சூழ்நிலையிலும் போர் மெச்சத் தகுந்ததல்ல. உன்னையும், உனது தொண்டர்களையும் பரமாரித்துக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களுக்குரிய பங்கைத் திருப்பிக் கொடுப்பாயாக. உயர் ஆன்ம பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதே நீதியின் பாற்பட்டது எனக் கௌரவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். ஓ! மகனே {துரியோதனா}, இப்படி நினைத்துப் பார். இந்த உனது படை, உனது மரணத்தின் உருவமே என்பதைக் காண்பாய்.
நீ கொண்டிருக்கும் மடமையின் காரணமாக, உன்னால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நானோ, பாஹ்லீகனோ, பீஷ்மரோ, துரோணரோ, அஸ்வத்தாமனோ, சஞ்சயனோ, சோமதத்தனோ, சல்யனோ, சத்தியவிரதனோ, புருமித்ரனோ, பூரிஸ்ரவசோ போரை விரும்பவில்லை. உண்மையில், இவர்களில் யாருமே போரை விரும்பவில்லை. உண்மையில், எதிரிகளால் தாங்கள் பாதிக்கப்படும்போது, கௌரவர்கள் யாரைச் சார்ந்த இருப்பார்களோ, அவர்கள் அனைவரும் போரை அங்கீகரிக்கவில்லை. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அதுவே {அக்கருத்தே} உனக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும். ஐயோ, நீ உனது சொந்த விருப்பத்தின் பேரில் இதை மேற்கொள்ளவில்லை. கர்ணன், தீய மனம் கொண்ட துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரே உன்னை அதற்கு {அம்முடிவிற்கு} வழிநடத்துகிறார்கள்." {என்றான் திருதராஷ்டிரன்}.
அதற்குத் துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, "உம்மையோ, துரோணரையோ, அஸ்வத்தாமரையோ, சஞ்சயரையோ, விகர்ணனையோ, காம்போஜனையோ, கிருபரையோ, பாஹ்லீகனையோ, சத்தியவிரதனையோ, புருமித்ரனையோ, பூரிஸ்ரவசையோ, உமது கட்சியைச் சேர்ந்த எவரையும் சார்ந்திராமலே போரிடும்படிக்கு நான் பாண்டவர்களுக்கு அறைகூவல் விடுகிறேன். ஆனால், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, நானும், கர்ணனும் மட்டுமே இருந்து, யுதிஷ்டிரனைப் பலியாக {வேள்வி விலங்காக} வைத்து, ஓ! தந்தையே, தேவையான அனைத்துச் சடங்குகளுடன், போரெனும் வேள்வியைத் தனியாகக் கொண்டாடத் தயாராக இருக்கிறோம்.
அவ்வேள்வியில் எனது தேரே வேள்விப்பீடம்; நீர்க்காணிக்கைகள் செலுத்த எனது வாளே சிறு கரண்டி, கதாயுதம் பெரிய கரண்டி; எனது கவசமே பார்வையாளர்கள் கூட்டம்; எனது குதிரைகள் நான்கும் அவ்வேள்வியைச் செய்யும் புரோகிதர்கள்; எனது கணைகளே குசப் புற்கள் {தர்ப்பை}; புகழே தெளிந்த நெய். [1]
[1] ரதம் வேதி, கத்தி ஸருவம், கதை ஸருக்கு; கவசம் மான்தோல், எனது குதிரைகள் நான்கு ஹோதாக்கள், பாணங்கள் தர்ப்பைகள், புகழானது ஹவிஸ் என்றும் சொல்லப்படுகிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனுக்கு மரியாதை செலுத்தி, எங்கள் பொருட்களை மட்டுமே கொண்டு இத்தகு போரெனும் வேள்வியைச் செய்யப் போகும் நாங்கள், பகைவர்களைக் கொன்ற பிறகு, புகழோடு கூடிய வெற்றியுடன் திரும்புவோம். ஓ! தந்தையே, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் சேர்ந்து, போர்க்களத்தில் பாண்டவர்களைக் கொல்வோம்.
ஒன்று பாண்டவர்களைக் கொல்லும் நான், இப்பூமியை ஆள்வேன், அல்லது என்னைக் கொன்ற பிறகு, பாண்டவர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கட்டும். ஓ! மன்னா, ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, உயிர், நாடு, செல்வம், ஏன் அனைத்தையும் நான் தியாகம் செய்வேன், ஆனால் பாண்டவர்களுடன் அருகருகே வாழ்வதென்பது என்னால் இயலாது. ஓ! மதிப்பிற்குரியவரே {திருதராஷ்டிரரே}, ஊசியின் கூரிய முனை மூடும் அளவிலான நிலத்தைக்கூட நான் பாண்டவர்களுக்குத் திருப்பித் தர மாட்டேன்" என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன், "நான் இப்போது, துரியோதனனை என்றென்றைக்கும் கைவிடுகிறேன். மன்னர்களே, இந்த மூடனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து யமனுலகு செல்லப் போகும் உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். மான்கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் புலிகளைப் போல, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் கூடியிருக்கும் உங்கள் முக்கியத் தலைவர்களை அடித்து வீழ்த்துவார்கள்.
நீண்ட கரங்கள் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்} நசுக்கி தூர வீசப்படும் போது, பாரதப் படை ஆதரவற்ற பெண்ணைப் போல இருக்கும் என நான் நினைக்கிறேன். சாத்யகி இல்லாமலேயே, ஏற்கனவே போதுமானதாக இருந்த யுதிஷ்டிரனின் படைக்கு கூடுதல் பலமாக, அந்தச் சினியின் மகன் {சாத்யகி}, போர்க்களத்தில் தனது நிலையை உறுதி செய்து, உழுத நிலத்தில் வீசப்படும் விதைகளைப் போலத் தன் கணைகளைச் சிதறுவான்.
எதிரிகளுடைய அந்தப் படையின் முன்னணியில், தனது நிலையைப் பீமசேனன் ஏற்பான். அச்சமற்ற அவனது வீரர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னால் அரணாக இருப்பார்கள். ஓ! துரியோதனா, பெரும் மலைகளைப் போன்ற யானைகள், தங்கள் தந்தந்தங்கள் ஒடிந்து, தலை நசுக்கப்பட்டு, உடல்களில் ஆகோரமாகச் சாயம் ஏற்றப்பட்டு, பிளக்கப்பட்ட மலைகளைப் போல போர்க்களத்தின் தரையில் கிடப்பதைக் கண்டு, உண்மையில், அவனுடன் {பீமனுடன்} மோதுவதற்கு எப்போது நீ அஞ்சுவாயோ, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
தேர்கள், குதிரைகள், ஆகியவற்றைக் கொண்ட உனது படை, பீமசேனனால் எரிக்கப்பட்டு, வெறும் காட்டுத் தீயாக பரந்து விரிந்து இருப்பதை எப்போது நீ காண்பாயோ, அப்போது, இந்த எனது வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
பாண்டவர்களிடம் நீ சமாதானம் கொள்ளவில்லையென்றால், பேரிடர் உனதாகும். பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட பிறகு, நீ அமைதியாக ஓய்வாய். உண்மையில், பெரும் கானகம் ஒன்று வேரோடு சாய்க்கப்பட்டதைப் போல, முழு கௌரவப்படையையும் எப்போது அவன் {பீமன்} தரையோடு தரையாக்குவானோ, அப்போது நீ எனது இந்த வார்த்தைகளை நினைவுகூர்வாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பூமியின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இதைச் சொன்ன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் சஞ்சயனிடம் பின்வருமாறு கேட்டான்."…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment