மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-209
உத்யோக பர்வம்
..
அக்ஷௌஹிணி என்பது என்ன?
...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நமக்கு மகிழ்வூட்டும்படி இங்கே கூடியிருக்கும் பெரும்படையைக் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, பாண்டவ மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} என்ன சொன்னான்? வரப்போகும் மோதலைக் கருத்தில் கொண்டு யுதிஷ்டிரன் எப்படிச் செயல்படுகிறான்? ஓ! சூதா {சஞ்சயா}, அவனது உத்தரவைப் பெற விரும்பி, அவனின் {யுதிஷ்டிரனின்} சகோதரர்களிலும், மகன்களிலும் யாரெல்லாம் அவனது {யுதிஷ்டிரனது} முகத்தைப் பார்க்கிறார்கள்? அதே போல, எனது தீய மகன்களால் ஏமாற்றப்பட்டவனும் அறநெறி அறிந்தவனும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரெல்லாம், "அமைதியை ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவுரைசொல்லித் தடுக்கிறார்கள்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "பாண்டுவின் {யுதிஷ்டிரனைத் தவிர்த்த} பிற மகன்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீர் அருளப்பட்டிரும். அவனும் {யுதிஷ்டிரனும்} அவர்கள் அனைவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறான். குந்தி மகனான யுதிஷ்டிரனை மகிழ்விப்பதற்காக, பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களுக்குச் சொந்தமான தேர்க்கூட்டங்கள் போர்க்களத்தில் அணிவகுக்கத் தயாராகத் தனித்தனி அணிகளாக வந்து கொண்டிருக்கின்றன.
சூரியன் உதிக்கும்போது பிரகாசிக்கும் வானத்தைப் போன்றதும், ஒளிவெள்ளம் எழுந்தது போன்றதுமான சுடர்மிகும் பிரகாசத்தைக் கொண்ட குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} தாங்கள் கொண்ட கூட்டணியால் பாஞ்சாலர்கள் மகிழ்கிறார்கள். பாஞ்சாலர்கள், கேகயர்கள், ஆடுமாடுகளைக் கவனித்துக் கொள்ளும் பசுமந்தையாளர்களுடன் கூடிய மத்ஸ்யர்கள் ஆகியோர் தாங்களும் மகிழ்ந்து, பாண்டு மகனான யுதிஷ்டிரனையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். விளையாட்டு மனநிலையுடன் கூடிய பிராமண மற்றும் க்ஷத்திரியப் பெண்களும், வைசியர்களின் மகள்களும், கவசம் தரித்த பார்த்தனை {அர்ஜுனனைக்} காண பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றனர்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நம்முடன் போரிடும் முனைப்புடைய, திருஷ்டத்யும்னன், சோமகர்கள் மற்றும் பிறர் ஆகியோரின் படைகள் அனைத்தையும் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "குருக்களின் மத்தியில் இப்படிக் கேட்கப்பட்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஒருக்கணம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நீண்ட ஆழமான பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விடுவதாகத் தெரிந்தது. திடீரென எந்த வெளிப்படையான காரணமுமின்றி, அவன் {சஞ்சயன்} மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான்.
பிறகு அந்த மன்னர்கள் கூட்டத்தில் விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சஞ்சயன் உணர்வற்றுத் தரையில் விழுந்துவிட்டான். தன் அறிவு மறைக்கப்பட்டு, உணர்வற்றிருக்கும் அவனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்க இயலவில்லை" என்று உரக்கச் சொன்னான் {விதுரன்}.
திருதராஷ்டிரன், "பெரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் மகன்களைச் சஞ்சயன் கண்டிருக்கிறான். மனிதர்களில் புலிகளான அவர்களின் {பாண்டவர்களைக் கண்டதன்} விளைவாகவே அவனது மனம் பெரும் கவலையால் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மீண்டும் உணர்வையும் தேறுதலையும் அடைந்த சஞ்சயன், அந்தச் சபையில் கூடியிருந்த குருக்களின் கூட்டத்திற்கு மத்தியில் இருந்த மன்னன் திருதராஷ்டிரனிடம், "ஓ! மன்னர்களுக்கு மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், மத்ஸ்ய மன்னனின் இடத்தில் வாழ்ந்து, அங்கே இருந்த கட்டுப்பாடுகளின் விளைவாக உடல் மெலிந்திருந்த பெரும் போர்வீரர்களான குந்தியின் மகன்களை நான் கண்டேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யார் யாருடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள் என்பதைக் கேட்பீராக.
வீரனான அந்தத் திருஷ்டத்யும்னனைத் தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} உம்மை எதிர்த்து போரிடுவார்கள். அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனும் {தர்மாத்மாவும்}, கோபத்தாலோ, அச்சத்தாலோ, மயக்கத்தாலோ, செல்வத்துக்காகவோ, வீண் தர்க்கத்திற்காகவோ ஒருபோதும் உண்மையை {சத்தியத்தைக்} கைவிடாதவனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம்சார்ந்த விவகாரங்களில் அனைத்து அதிகாரத்தையும் பெற்றவனும், அறம்பயில்வோரில் சிறந்தவனும், ஒருபோதும் யாரையும் எதிரியாக்காதவனாக இருப்பவனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
கரங்களின் வலிமையால் இவ்வுலகில் தனக்கு இணையில்லாதவனும், தனது வில்லைக் கொண்டு அனைத்து மன்னர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனும், காசி, அங்கம், மகதம், கலிங்கம் ஆகிய அனைத்து மக்களையும் பழங்காலத்தில் வீழ்த்தியவனுமான பீமசேனனோடு சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
உண்மையில், எவனது வலிமையால் பாண்டுவின் நான்கு மகன்களும் (எரிந்து கொண்டிருந்த) அரக்கு மாளிகையில் இருந்து வெளிப்பட்டு, விரைந்து பூமியில் இறங்கினார்களோ, அவனுடன் {பீமனுடன்}; மனித ஊனுண்ணியான ஹிடிம்பனிடம் இருந்து அவர்களை மீட்பற்கு காரணமாக இருந்த அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; யக்ஞசேனன் மகள் {துருபதன் மகள் திரௌபதி}, ஜெயத்ரதனால் கடத்தப்பட்ட போது அவர்களின் {பாண்டவர்களின்} புகலிடமான அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; உண்மையில், வாரணாவதத்தின் நெருப்பில் இருந்து அங்கே கூடியிருந்த பாண்டவர்களை மீட்ட அந்தப் பீமனுடன் சேர்ந்து அவர்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
கிருஷ்ணையை {திரௌபதியை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, மேடு பள்ளம் நிறைந்த, பயங்கரமான கந்தமாதன மலையில் ஊடுருவி எவன் குரோதவசர்களைக் கொன்றனோ, எவனுடைய கரங்களுக்குப் பத்தாயிரம் {10,000} யானைகளின் பலம் கொடுக்கப்பட்டதோ அந்தப் பீமசேனனோடு சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, பழங்காலத்தில் போரில் புரந்தரனையே {இந்திரனையே} எந்த வீரன் வென்றானோ; தேவர்களின் தேவனும் {தேவாதி தேவனும்}, திரிசூலம் தாங்குபவனும், உமையின் கணவனும், மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனுமான மகாதேவனையே {சிவனையே} போரில் எவன் மனநிறைவு கொள்ளச் செய்தானோ, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கிய போர்வீரர்களில் முதன்மையான அந்த விஜயனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உம்மோடு போரில் மோதுவார்கள்.
மிலேச்சர்கள் நெருக்கமாகவுள்ள மேற்கு உலகம் முழுமையையும் எவன் வீழ்த்தினானோ அந்த அற்புத வீரனான நகுலன், பாண்டவர்கள் கூடாரத்தில் தற்போது உள்ளான். அழகிய வீரனும், நிகரற்ற வில்லாளியுமான அந்த மாத்ரியின் மகனைக் {நகுலனைக்} கொண்டு, ஓ! கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
காசி, அங்கம், கலிங்கம் ஆகியவற்றில் உள்ள போர்வீரர்களைப் போரில் வீழ்த்திய அந்தச் சகாதேவனைக் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு மோதுவார்கள். இந்தப் பூமியில், அஸ்வத்தாமன், திருஷ்டக்கேது, ருக்மி மற்றும் பிரத்யும்னன் ஆகிய நான்கு மனிதர்களை மட்டுமே தனது சக்திக்கு நிகராகக் கொண்டவனும், வயதில் இளையவனும், மனிதர்களில் வீரனும், மாத்ரியின் இதயத்தை மகிழ்விப்பவனுமான அந்தச் சகாதேவனிடம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழிவைத் தரும் போரில் நீர் ஈடுபட வேண்டியிருக்கும்.
எவள் பழங்காலத்தில் காசி மன்னனின் மகளாக {அம்பையாக} வாழ்ந்து, தவநோன்புகள் பயின்றாளோ; ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எவள் அடுத்தப் பிறவியில் பீஷ்மரின் அழிவை நிர்ணயிக்க விரும்பினாளோ, அவள் {அம்பை}, பாஞ்சாலனின் {துருபதனின்} மகளாக {சிகண்டினியாகப்} பிறவி எடுத்து, பிறகு தற்செயலாக ஆணாக {சிகண்டியாக} மாறியிருக்கிறாள். ஓ மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, இப்படி, எவன் இரு பாலினங்களின் நன்மை தீமைகளை அறிந்திருக்கிறானோ, அவனே கலிங்கர்களிடம் போரில் மோதிய பாஞ்சால இளவரசன் {சிகண்டி} ஆவான். அனைத்து ஆயுதங்களிலும் திறன்பெற்ற அந்தச் சிகண்டியைக் கொண்டு, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள். பீஷ்மரின் அழிவுக்காக, ஒரு யக்ஷனால் எவள் ஆணாக {சிகண்டினியாக இருந்து சிகண்டியாக} மாற்றப்பட்டாளோ, அந்த வல்லமை மிக்க வில்லாளியைச் {சிகண்டியைக்} கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
வலிமைமிக்க வில்லாளிகளும், சகோதரர்களும், ஐந்து கேகய இளவரசர்களுமான அந்தக் கவசம் பூண்ட வீரர்கள் அனைவரையும் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
நீண்ட கரங்கள் கொண்ட போர்வீரனும்; ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் வேகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றையும், கலங்கடிக்க முடியா ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான யுயுதானனிடம் {சாத்யகியிடம்} நீர் போரிட வேண்டியிருக்கும்.
உயர் ஆன்மா கொண்ட பாண்டவர்களுக்கு ஒரு காலத்தில் புகலிடமாக இருந்த விராடனுடன் நீர் போரில் மோத வேண்டியிருக்கும்.
காசியின் தலைவனும், வாராணசியை ஆள்பவனுமாக இருப்பவன் அவர்களது நண்பனாகியிருக்கிறான்; அவனோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
வயதில் இளையோரானாலும், போரில் ஒப்பற்றவர்களும், கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போல அணுகப்பட முடியாதவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான {மகாத்மாக்களுமான} திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
சக்தியில் கிருஷ்ணனைப் போன்றவனும், சுயக்கட்டுப்பாட்டில் யுதிஷ்டிரனைப் போன்றவனுமான அந்த அபிமன்யுவுடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
போர்க்குணமிக்கவனும், பெரும் புகழைக் கொண்டவனும், ஒப்பீடுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவனும், போர்க்களத்தில் சீறும்போது தாக்குப்படிக்கப்பட முடியாதவனும், சேதிகளின் {சேதிநாட்டு} மன்னனும், ஓர் *அக்ஷௌஹிணி படையுடன் பாண்டவர்களுடன் சேர்ந்திருப்பவனும், சிசுபாலனின் மகனுமான திருஷ்டகேதுவுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
முனிவர்கள், ``'ஓ! சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு," என்றனர்.
18 அக்ஷௌஹிணி படைகள்
சௌதி சொன்னார், 'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பத்தி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.
தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போல, பாண்டவர்களின் புகலிடமாக இருக்கும் வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சேதிகள் {சேதி நாட்டு} மன்னனுடைய {திருஷ்டகேதுவின்} சகோதரனான சரபன், அவனோடு கூடிய {மற்றுமொரு சகோதரன்} கரகார்ஷன் [1] ஆகிய இருவரைக் கொண்டும் பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள்.
[1] சகோதரர்களான திருஷ்டகேது, சுகேது, சரபன், கரகார்ஷன் ஆகியோர் சிசுபாலனின் மகன்களாவர். சிசுபாலன், வசுதேவரின் தங்கை சுரூதகீர்த்தியின் மகனாவான். குந்தியும், சிசுபாலனின் அன்னையும் உடன் பிறந்தோராவார்.
போரில் நிகரற்றவர்களும், ஜராசந்தனின் மகன்களுமான சகாதேவன், ஜயத்சேனன் ஆகிய இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவது எனத் தீர்மானித்துள்ளனர்.
பெரும் படை பின்தொடர வரும் பெரும் வலிமை கொண்ட துருபதனும், தனது உயிரைத் துச்சமாக மதித்துப் பாண்டவர்களுக்காகப் போரிடத் தீர்மானித்திருக்கிறான்.
கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இருதிசை நாடுகளில் இருந்து வந்திருக்கும் இவர்களையும், பிற நூற்றுக்கணக்கான மன்னர்களையும் நம்பியே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் போருக்குத் தயாராக இருக்கிறான்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "உன்னால் பெயர் சொல்லப்பட்ட அனைவரும் உண்மையில் பெரும் வீரர்களே. ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்தாலும் கூடத் தனியனான பீமன் ஒருவனுக்குத்தான் சமமாக இருப்பார்கள்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, வெஞ்சினம் கொண்ட பீமனிடம் நான் கொண்ட அச்சம், கோபமுற்றிருக்கும் புலியிடம் கொழுத்த மான் கொண்டதைப் போன்று மிகப் பெரியது. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, சிங்கத்தைக் கண்டு அஞ்சும் பிறவகை விலங்கைப் போல விருகோதரனுக்கு {பீமனுக்கு} அஞ்சி, ஆழமான வெப்பப் பெருமூச்சுகளைவிட்டபடி எனது இரவுகள் அனைத்தையும் தூக்கமின்றிக் கடத்தி வருகிறேன்.
வலிய கரங்களும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான சக்தியும் கொண்டவனுமான அவனைப் {பீமனைப்} போரில் தாக்குப்பிடிக்க {எதிர்கொள்ளக்} கூடிய ஒருவனைக்கூட நான் இந்த மொத்தப் படையிலும் காணவில்லை.
வெஞ்சினம் கொண்டவனும், தீர்மானமான பகைமை கொண்டவனும், கோபவெறி கொண்டவனும், சாய்ந்த பார்வைகளை வீசுபவனும், இடிபோன்ற குரலில் பேசுபவனுமான அந்தக் குந்தி மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} விளையாட்டுக்குக் கூடச் சிரிக்க மாட்டான்.
பெரும் மூர்க்கமும், பெரும் துணிவும், நீண்ட கரங்களும், பெரும் வலிமையும் கொண்ட அவன் {பீமன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்களில் ஒருவனைக் கூட உயிரோடு விட மாட்டான். உண்மையில், போர்க்களத்தில் தன் கதாயுதத்தைச் சுழற்றும் குருக்களில் காளையான அந்த விருகோதரன் {பீமன்}, கைகளால் கதாயுதம் கொண்ட இரண்டாவது யமனைப் போல, கனத்த ஆபத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது மகன்கள் அனைவரையும் கொன்றுவிடுவான்.
கதை+ ஆயுதம் = கதாயுதம்
அந்தணச் சாபம் போல உயர்த்திப் பிடிக்கப்பட்டதும், எஃகால் செய்யப்பட்டதும், எட்டுப் பக்கங்களைக் கொண்டதுமான அவனது பயங்கரக் கதாயுதத்தை இப்போதும் நான் {மனதால்} காண்கிறேன்.
மான்மந்தைக்கு {மான்கூட்டத்திற்கு} மத்தியில் பெரும் வலிமை கொண்ட ஒரு சிங்கத்தைப் போல, எனது துருப்புகளுக்கு மத்தியில் பீமன் உலா வருவான். (அவனது சகோதரர்களுக்கு மத்தியில்) அவன் {பீமன்} மட்டுமே எப்போதும் என் மகன்கள் மீது தனது பலத்தைக் கொடூரமாகக் காட்டியிருக்கிறான். பெருவேட்கையுடன் {பெரும் பசியுடன்} உணவை உண்பவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான அவன் {பீமன்}, குழந்தைப் பருவம் முதலே என் பிள்ளைகளிடம் பகைமையுடன் நடந்து வருகிறான்.
குழந்தைப் பருவத்திலேயே கூட, அவனுடன் {பீமனுடன்} (விளையாட்டாக) சண்டையிடுகையில், துரியோதனனும் எனது பிற மகன்களும் யானை போன்ற அந்தப் பீமனால் எப்போதும் தரையில் அடிக்கப்பட்டார்களாகையால் (அதை நினைத்துப் பார்க்கையில்) எனது இதயம் நடுங்குகிறது. ஐயோ, அவனது {பீமனது} வலிமையால் எனது மகன்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டார்களே, பயங்கர ஆற்றல் கொண்ட அந்தப் பீமனே இந்த முறிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறான்.
கோப வெறி கொண்டவனான பீமன், படையின் முன்னணியில் நின்று போரிட்டு, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களாலான எனது மொத்த படையையும் விழுங்குவதை இப்போதுகூட நான் {மனதால்} காண்கிறேன். ஆயுதங்களில் துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான அவனது {பீமனின்} வேகம் காற்றின் வேகத்துக்கு நிகரானது. கோபத்தில் மகேஸ்வரனைப் {சிவனைப்} போன்றவனும், போரில் வெஞ்சினமும், பயங்கரமும் கொண்டவனுமான அந்த வீரனைக் {பீமனைக்} கொல்ல, ஓ! சஞ்சயா, இங்கே எவனிருக்கிறான்?
இத்தகு சக்தியைக் கொண்டவனும், பகைவர்களைக் கொல்பவனுமான அவனால் {பீமனால்}, அப்போதே எனது மகன்கள் கொல்லப்படவில்லை என்பதையே நான் பெரிய ஆதாயமாக நினைக்கிறேன். முற்காலத்திலேயே, பயங்கர வலிமை கொண்ட ராட்சசர்களையும், யக்ஷர்களையும் கொன்ற அந்தப் போர் வீரனின் {பீமனின்} மூர்க்கத்தனத்தைப் போரில் எந்த மனிதனால் தாக்குப்பிடிக்க முடியும்?
ஓ! சஞ்சயா, அவனது {பீமனது} குழந்தைப்பருவத்திலேயே கூட அவன் {பீமன்} எப்போதும் எனது முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இப்போது எனது தீய மகன்களால் காயப்படுத்தப்பட்டதால், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, எனது கட்டுப்பாட்டுக்குள் எப்படி இருப்பான்? கொடூரமும், மிகுந்த வெஞ்சினமும் கொண்ட அவன் {பீமன்} உடைந்து போனாலும் போவான், வளைய மாட்டான். {அழியத் துணிவான், வணங்க மாட்டான்}. சாய்ந்த பார்வையும், சுருங்கிய புருவமும் கொண்ட அவன் {பீமன்}, அமைதியடையும்படி, அவனை {பீமனை} எப்படி இணங்கச் செய்ய முடியும்?
வீரமும், ஒப்பற்ற வலிமையும், சிவந்த நிறமும், தெளிவில்லாத உச்சரிப்புகள் கொண்ட பேச்சும், தேன் நிறக் கண்களும், பனைமரம் போன்ற உயரமும் கொண்டவனும், அர்ஜுனனைவிடக் கட்டை விரலளவு உயர்ந்தவனுமான அந்தப் பாண்டுவின் இரண்டாவது மகன் {பீமன்}, வேகத்தில் குதிரைகளையும், பலத்தில் யானைகளையும் விஞ்சுபவனாவான். உருவம், வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவன் {பீமன்} குழந்தைப் பருவத்திலேயே இப்படித்தான் இருந்தான் என்பதை வியாசரின் உதடுகளால் முற்காலத்திலேயே நான் கேட்டிருக்கிறேன்.
பயங்கரமானவனும், கொடூர வலிமை கொண்டவனுமான அவன் {பீமன்}, கோபம் கொண்டால், போரில் தனது இரும்பு கதாயுதத்தைக் கொண்டு, தேர்களையும், யானைகளையும், மனிதர்களையும், குதிரைகளையும் அழித்துப் போடுவான். எப்போதும் வெஞ்சினத்துடனும், மூர்க்கத்துடனும் இருக்கும் அடிப்பவர்களில் முதன்மையான அவனது {பீமனது} விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்ட வகையில், முன்பே அவன் {பீமன்} என்னால் அவமதிக்கப்பட்டிருக்கிறான்.
நேரானதும், எஃகால் ஆனதும், தடித்ததும், அழகிய பக்கங்களைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நூறுபேரைக் கொல்லவல்லதும், எதிரியின் மீது வீசப்படும் போது பயங்கர ஒலியை உண்டாக்குவதுமான அவனது {பீமனது} கதாயுத்தை, ஐயோ, எனது மகன்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, உண்மையில் கரைகளற்றதும், அளவிலா ஆழமுடையதும் அம்புகளின் பாய்ச்சல் போல வேகமான நீரோட்டங்கள் நிறைந்ததுமான பீமன் எனும் அணுகமுடியாத கடலை, எந்தப் படகும் இன்றி, ஐயோ, எனது முட்டாள் மகன்கள், கடக்க விரும்புகிறார்களே. உண்மையில் முட்டாள்களாக இருந்து கொண்டு, தங்கள் அறிவைக் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கும் எனது பிள்ளைகள், ஐயோ, என்னதான் நான் கதறினாலும் எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்களே. தேனை மட்டுமே காணும் அவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் பயங்கரமான வீழ்ச்சியைக் {பெரும் பள்ளத்தைக்} காணாதிருக்கிறார்களே.
மனித உருவத்தில் இருக்கும் மரணத்துடன் {காலனுடன்_பீமனுடன்} போரிட விரைவோர், சிங்கத்தின் பார்வைக்குள் இருக்கும் விலங்குகளைப் போல, தெய்வத்தால் நிச்சயமாக அழிக்கப்படுவார்கள். முழுதாக நாலு முழ நீளமும், ஆறு பக்கங்கங்கள் கொண்டதும், பெரும் வலிமை மற்றும் மரணத்தீண்டலைக் கொண்டதுமான தனது கதாயுதத்தைப் பொறியில் இருந்த அவன் {பீமன்} வீசினால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, அதன் தூண்டுவிசையை எனது மகன்கள் எவ்வாறு தாங்குவார்கள்?
தனது கதாயுதத்தைச் சுழற்றி, அதைக் கொண்டு (பகையணியின்) யானைகளின் தலைகளை உடைத்து, தனது நாவால் வாயின் ஓரங்களை நக்கிக் கொண்டு, நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டபடி, வலிமைமிக்க யானைகளை எதிர்த்து அவன் {பீமன்} விரைந்து ஓடும்போதும், தன்னை எதிர்த்து வலிமையுடன் விரைந்து வரும் அந்த மதங்கொண்ட விலங்குகளின் பிளிறல்களுக்கு எதிர் கர்ஜனை செய்து கொண்டு, அவன் {பீமன்} விரைந்து வரும்போது, தேர்க்கூட்டங்களின் நெருக்கத்தில் வந்து போர்வீரர்களில் தலைமையானவர்களின் மீது சரியான குறியை வைத்துக் கொல்லும்போதும், சுடர்மிகும் நெருப்பென இருக்கும் அவனிடம் {பீமனிடம்} இருந்து, எனது அணியில் எந்த மனிதன் தப்புவான்?
எனது படைகளை நசுக்கி, அவற்றினூடே பாதையை அமைத்துக் கொள்ளும் அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பீமன்}, நடனம் செய்து கொண்டே, யுகத்தின் முடிவில் ஏற்படப்போகும் உலகளாவிய அழிவைக் காட்சிப்படுத்துவான். மதங்கொண்ட யானை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களை நசுக்குவதைப் போல, போர்க்களத்தில், விருகோதரன் {பீமன்}, எனது மகன்களின் படையணிகளுக்குள் மூர்க்கமாக ஊடுருவுவான்.
தங்கள் தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள், கொடிக் கம்பங்கள் ஆகிவற்றை என் போர்வீரர்களை இழக்கச் செய்தும், தேர்மீதும், யானைகளின் முதுகின் மீதும் இருந்து போரிடும் வீரர்கள் அனைவரையும் துன்புறுத்தியும், ஓ! சஞ்சயா, தன் கரைகளில் நிற்கும் பல்வேறு மரங்களைப் பிடுங்கிச் செல்லும் வேகமான நீரூற்றுடைய கங்கையைப் போல, எனது மகன்களின் துருப்புகளைப் போர்க்களத்தில் அந்த மனிதர்களில் புலி {பீமன்} நொறுக்குவான். ஓ! சஞ்சயா, எனது மகன்களும், அவர்களது தொண்டர்களும் மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மன்னர்களும் என அனைவரும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பாதிப்படைந்து, பல்வேறு திசைகளுக்குப் பறந்தோடுவார்கள். ஓ! சஞ்சயா, முற்காலத்தில் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உதவியைக் கொண்டு, வீரம் மிகுந்த மன்னனான ஜராசந்தனின் அந்தப்புரத்திற்குள்ளேயே நுழைந்து, பூமாதேவியைத் தனது கட்டுக்குள் முழுதும் கொண்டு வந்து, அந்த **மகதத்தின் தலைவனை, அந்தப் பலமிக்க ஜராசந்தனை வீழ்த்தியது இந்தப் பீமனே. பீஷ்மரின் ஆற்றலின் விளைவாகக் கௌரவர்களும், தங்கள் கொள்கையின் {தந்திரத்தின்} விளைவாக அந்தகர்களும் விருஷ்ணிகளும், நற்பேறின் காரணமாக மட்டுமே அவனால் {ஜராசந்தனால்} வீழ்த்தப்படாமல் இருந்தனர். அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை}, எந்த ஆயுதங்களுமின்றி, தனது கரங்களின் வலிமையை மட்டுமே கொண்டு பாண்டுவின் வீர மகன் {பீமன்} கொன்றதைக் காட்டிலும் வேறு என்ன அற்புதம் இருக்க முடியும்?
வலிமையான கரங்களைக் கொண்ட பாண்டுவின் வீர மகன் {பீமன்}, எந்த ஆயுதமும் இன்றி, அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை} அணுகி, நொடிப் பொழுதில் அவனைக் கொன்றதைவிட வேறு எது அற்புதம் மிகுந்ததாக இருக்க முடியும்?
ஆண்டாண்டுகாலமாகத் திரட்டப்பட்ட நஞ்சைக் கொண்டிருக்கும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போல, ஓ! சஞ்சயா, போர்க்களத்தில், தனது கோபமெனும் நஞ்சை எனது மகன்கள் மீது பீமன் உமிழ்வான்! தேவர்களில் முதன்மையானவனான பெரும் இந்திரன், தனது வஜ்ரத்தைக் கொண்டு தானவர்களை அடித்தது போல, தனது கரங்களில் கதாயுதத்தைக் கொண்டிருக்கும் பீமசேனன், எனது மகன்கள் அனைவரையும் கொல்வான்!
எதிர்க்கப்படவோ தடுக்கப்படவோ முடியாதவனும், கடும் உத்வேகமும் சக்திகளும் கொண்டனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, என் மகன்கள் மீது விழுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன். கதாயுதமோ வில்லோ இல்லாமல், தேரோ, கவசமோ இல்லாமல், தனது வெறும் கரங்களைக் கொண்டே போரிடும் இவனது {பீமனின்} எதிரில் எந்த மனிதனால் நிற்க முடியும்?
புத்திசாலியான பீமனின் சக்தியை, பீஷ்மர், இருபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் என்னைப் போலவே அறிந்திருக்கின்றனர். உன்னதமானோரின் {ஆரியர்களின்} பயிற்சியை {நடத்தையை} அறிந்த இந்த மனிதர்களில் காளைகள் {இந்த மூவரும்}, போர்க்களத்தில் மரணத்தை விரும்பி, நமது படையின் முன்னணியில் தங்கள் நிலையை அமைத்துக் கொள்வார்கள்.
போர்க்களத்தில் பாண்டவர்களின் வெற்றியை {மனதால்} கண்டாலும், நான் எனது மகன்களை இன்னும் தடுக்காமல் இருக்கும்படியால், எல்லா இடங்களிலும், குறிப்பாக ஆண்களின் வழக்கில் விதி சக்தி வாய்ந்தது என்றே ஆகிறது. எனது இந்த வலிமைமிக்க வில்லாளிகள் {பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூவரும்}, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பழங்காலத்துப் பாதையில் நடக்க விரும்பி, உலகப்புகழை கவனத்தில் கொண்டு, போர்க்களத்தில் தங்கள் உயிர்களையே கூட விடுவார்கள்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எனது மகன்கள் எப்படிப் பீஷ்மருக்குப் பேரன்களும், துரோணருக்கும், கிருபருக்கும் சீடர்களும் ஆவார்களோ, அதே போலப் பாண்டவர்களும் இருப்பதால், அவர்கள் அனைவரும் {என் மகன்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும்} இந்த வலிமைமிக்க வில்லாளிகளுக்கு ஒன்றே. ஓ! சஞ்சயா, நாம் இந்த மூன்று மதிப்பிற்குரியவர்களுக்கும் செய்யும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறிய சேவைகளால், தாங்கள் கொண்டுள்ள உன்னத மனநிலையின் காரணமாக அதை {அவற்றுக்குப் பதிலுதவிகளை} அவர்கள் நிச்சயம் திருப்பித் தருவார்கள்.
ஆயுதங்களை எடுத்து, க்ஷத்திரிய பயிற்சிகளை {நடத்தைகளை} மேற்கொள்ள விரும்பும் க்ஷத்திரியர்களுக்குப் போர்க்களத்தில் மரணம் என்பது உண்மையில் நன்மை, தகுதி {புண்ணியம்} ஆகிய இரண்டையும் தரும் என்று சொல்லப்படுகிறது.
எனினும், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடப்போகும் அனைவருக்காகவும் நான் அழுகிறேன். முன்பே விதுரனால் முன்னறிவோடு காணப்பட்ட அந்தப் பெரும் ஆபத்து இப்போது வந்திருக்கிறது. ஓ! சஞ்சயா, அறிவால் துயரைக் களைய முடியாது என்றே தெரிகிறது; மறுபுறம், துயர் மேலிடும்போது அஃது அறிவை விலக்குகிறது.
உலகக் கவலைகள் அனைத்திலும் இருந்து விடுதலை பெற்றவர்களும், அண்டத்தின் அனைத்து விவகாரங்களில் இருந்து தனியே நின்று அதைக் காண்பவர்களுமான முனிவர்களே கூட, செழிப்பினாலும், வறுமையினாலும் பாதிக்கப்படும்போது, மகன்கள், அரசு, மனைவிகள், பேரர்கள், உறவினர்கள் போன்ற ஆயிரம் காரியங்கள் மீது எனது பற்றை {பாசத்தை} வைத்திருக்கும் நான் வருந்துவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
இதுபோன்ற ஒரு பயங்கரமான ஆபத்தில் சிக்கப்போகும் எனக்கு, என்ன நன்மை காத்திருக்க முடியும்? ஒவ்வொரு சூழ்நிலையையும் நினைத்துப் பார்க்கையில், நான் குருக்களின் அழிவையே உறுதியாகக் காண்கிறேன். பகடை ஆட்டமே, குருக்களின் இந்தப் பெரும் ஆபத்துக்குக் காரணமாகத் தெரிகிறது.
ஐயோ, செல்வத்தில் விருப்பமுள்ள மூடன் துரியோதனனின் மயக்கத்தால் செய்யப்பட்ட பாவம் இஃது; அனைத்தையும் கொண்டு வருவதும் எப்போதும் விரைந்து வருதுமான காலத்தின் விரும்பத்தகாத விளைவே இது {காலத்தின் விபரீதம் இது} என நான் நம்புகிறேன். காலச்சக்கரத்தில் கட்டுண்டிருக்கும் அதன் விளிம்பைப் {சக்கரத்தின் ஓரங்களைப்} போல, நானும் அதில் இருந்த தப்ப இயலாதவனாக இருக்கிறேன்.
ஓ! சஞ்சயா, எனக்குச் சொல். நான் எங்கே செல்வேன்? நான் என்ன செய்வேன்? நான் அதை எப்படிச் செய்வேன்?
இந்த மூடக் கௌரவர்கள் அனைவரும் அழியப் போகிறார்கள். அவர்களுக்கான காலம் வந்துவிட்டது. எனது நூறு மகன்களும் கொல்லப்படும்போது, பெண்களின் புலம்பலை {அழுகுரலை} ஆதரவற்ற நிலையில் நான் கேட்க வேண்டியிருக்கும். ஓ!, எனக்கு மரணம் எப்படி ஏற்படும்?
கோடை காலத்தில் நெருப்பு, காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த புற்களை எரிப்பதைப் போல, கையில் கதாயுதம் கொண்ட பீமன், அர்ஜுனனுடன் சேர்ந்து, எனது பக்கத்தில் உள்ள அனைவரையும் கொல்வான்!
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "எவன் எப்போதுமே பொய்பேசாதவன் {யுதிஷ்டிரன்} என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, எவன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனக்காகப் போரிடக் கொண்டிருக்கிறானோ, அவனால் {யுதிஷ்டிரனால்} மூன்று உலகங்களின் ஆட்சியையும் பெற முடியும்.
நாளுக்கு நாள் சிந்தித்தாலும், போர்க்களத்தில் தனது தேரில் முன்னேறி, காண்டீவந்தாங்கியை {அர்ஜுனனை} எதிர்க்கக்கூடிய எந்தப் போர்வீரனையும் என்னால் காணமுடியவில்லை. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இறகு படைத்த கணைகளையும், நாளீகங்களையும் {Nalikas}, போர்வீரர்களின் மார்பைத் துளைக்கவல்ல காணிகளையும் அடித்தால், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிரி ஒருவனும் அங்கே இருக்கமாட்டான்.
ஆயுதங்களை அறிந்த வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் ஒப்பற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்கள், அவனை {அர்ஜுனனைத்} தாக்குப் பிடித்தாலும், அதன் முடிவு ஐயத்திற்கிடமானதே. ஆனால் வெற்றி எனதாகாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன்.
கருணை மற்றும் கவனமற்ற தன்மை ஆகிய இரண்டையும் கர்ணன் கொண்டிருக்கிறான். முதிர்ந்தவராகவும், இந்த மாணவனிடம் {அர்ஜுனனிடம்} பாசம் கொண்டவராகவும் ஆசான் {துரோணர்} இருக்கிறார். அதேவேளையில், திறன் மற்றும் பலம் கொண்டவனாகவும், (வில்லில்) உறுதியான பிடியைக் கொண்டவனாகவும் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கிறான். அவர்களுக்குள் ஏற்படும் மோதல், யாருக்கும் தோல்வி என்ற முடிவை எட்டாத {முடிவை எட்டவே முடியாத} வகையில் பயங்கரமானதாக இருக்கும். ஆயுதங்களின் அறிவையும், வீரத்தையும் கொண்ட அவர்கள் அனைவரும் {கர்ணன், துரோணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} பெரும் புகழைப் பெற்றவர்களாவர். தேவர்களின் ஆட்சியையே விட்டாலும் விடுவார்களேயன்றி, தாங்கள் வெற்றி அடையும் வாய்ப்பை அவர்கள் விட மாட்டார்கள். இந்த இருவர் (துரோணரும், கர்ணனும்} அல்லது பல்குனன் {அர்ஜுணன்} ஆகியோரில் எவர் வீழ்ந்தாலும் அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், பல்குனனைக் கொல்லவோ, வீழ்த்தவோ இயன்றவர்கள் எவனும் இல்லை.
ஐயோ, எனது மூட மகன்களின் மீது அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது? ஆயுதங்களை அறிந்தவர்களில் வெல்பவர்களும், வெல்லப்படுபவர்களுமாகவே பிறர் அறியப்படுகிறார்கள்; ஆனால், இந்தப் பல்குனன் {அர்ஜுனன்} எப்போதும் வெல்பவன் என்றே கேள்விப்படப்படுகிறான்.
**காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னியை அழைத்து, தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அவனை {அக்னியை} அர்ஜுனன் மனநிறைவு கொள்ளச்செய்தது முதல் முப்பத்தைந்து {35} வருடங்கள் கடந்துவிட்டன. ஓ! குழந்தாய், இவனது {அர்ஜுனனின்} தோல்வியை நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.
குணத்தாலும், மனநிலையாலும் தன்னை {அர்ஜுனனான தன்னைப்} போன்ற ரிஷிகேசனை {கிருஷ்ணனை} சாரதியாகக் கொண்ட அர்ஜுனனுக்கு, வெற்றி, இந்திரனைப் போன்று எப்போதும் உரியதாகிறது. ஒரே தேரில் இருக்கும் இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான_அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனும்}, நாணேற்றப்பட்ட காண்டீவமும் என மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை, அது போன்ற வகையிலான வில்லையோ, அர்ஜுனனைப் போன்ற போர்வீரனையோ, கிருஷ்ணனைப் போன்ற சாரதியையோ {தேரோட்டியையோ} நாம் கொண்டிருக்கவில்லை.
துரியோதனனின் மூடத் தொண்டர்கள், இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லை. ஓ! சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் எதையும் அழிக்காமல் விடுவதில்லை.
அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தனது அம்புகளை அடித்தபடி, தனது கணை மழையால் உடல்களில் இருந்து தலைகளைக் கொய்ந்தபடி, சுற்றிலும் அழிவை ஏற்படுத்துவதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றிலும் சுடர்விட்டுச்செல்லும் நெருப்பைப் போன்ற அம்புகள், எனது மகன்களின் படையணிகளைப் போர்களத்தில் எரிப்பதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். பல்வேறு படையணிகளைக் கொண்ட எனது பரந்த படை, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேர்ச்சடசடப்பால் {தேரொலியால்} பீதியடைந்து எல்லாப்புறங்களிலும் தப்பியோடுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன்.
பெருகும் சுடர்களுடன் எல்லாப்புறங்களிலும் உலவும் மிகப்பெரிய நெருப்பு, காற்றால் உந்தப்பட்டு, காய்ந்த இலைகளையும் புற்களையும் எரிப்பதைப் போல, அர்ஜுனனுடைய ஆயுதங்கள் கொண்டிருக்கும் பெரும் புகழ், எனது துருப்புகள் அனைத்தையும் எரித்துவிடும் {அழித்துவிடும்}. பிரம்மனால் கட்டளையிடப்பட்ட அனைத்தையும் அழிப்பவனுமான காலனைப் போல, போரில் எதிரியாகத் தோன்றி, எண்ணிலடங்கா கணைகளை உமிழும் கிரீடி {அர்ஜுனன்}, தடுக்கப்பட முடியாதவனாக இருப்பான். குருக்களின் {கௌரவர்களின்} வீடுகளிலும், அவர்களைச் சுற்றியும், போர்க்களத்திலும் ஏற்படும் பல்வேறு வகையான தீய சகுனங்களைக் குறித்து நான் எப்போது தொடர்ச்சியாகக் கேட்பேனோ, அப்போது, பாரதர்களுக்கு அழிவேற்படும் என்பதில் ஐயமில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும் ஆற்றலும், வெற்றியில் ஆர்வமும் கொண்ட பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைப்} போலவே, அவர்களது தொண்டர்களும், தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்து, வெற்றியை வென்றெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். ஓ! மகனே {சஞ்சயா}, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள் ஆகியோரின் பெரும்பலமிக்க மன்னர்கள் எனது எதிரிகளாவர் என்று நீயே சொல்லியிருக்கிறாய்.
மேலும், தான் விரும்பினால், இந்திரனின் தலைமையைக் கொண்ட மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எவனால் கொண்டுவரமுடியுமோ, இந்த அண்டத்தையே எவன் படைத்தானோ, அந்தப் பெரும்பலமிக்கக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு வெற்றியளிக்க உறுதியுடன் இருக்கிறான்.
சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் அர்ஜுனனிடம் இருந்து முழு ஆயுத அறிவியலையும் விரைவில் அடைந்தவனாவான். அந்தச் சினி குலக் கொழுந்து, விதைகளை விதைக்கும் உழவனைப் போல, தனது கணைகளை அடித்தபடி போர்க்களத்தில் நிற்பான்.
கருணையற்ற செயல்கள் புரியும் வலிமைமிக்கத் தேர்வீரனும், மேன்மையான அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன் எனது படையுடன் போரிடுவான்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, யுதிஷ்டிரனின் கோபம், அர்ஜுனன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் பீமசேனனின் ஆற்றல் ஆகியவற்றால் நான் கொள்ளும் அச்சம் பெரிதாக இருக்கிறது. அந்த மனிதர்களின் தலைவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட தங்கள் கணைவலையை எனது படைக்கு மத்தியில் விரிக்கும்போது, அதிலிருந்து எனது துருப்புகள் மீளாது என்றே நான் அஞ்சுகிறேன். ஓ! சஞ்சயா, இதற்காகவே நான் அழுகிறேன்.
பாண்டுவின் மகனான அந்த யுதிஷ்டிரன், அழகானவனாகவும், பெரும் சக்தி படைத்தவனாகவும், உயர்ந்த அருள், பிரம்ம சக்தி, புத்திக்கூர்மை, பெரும் அறிவு {ஞானம்}, அறம்சார்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.
கூட்டாளிகள் மற்றும் ஆலோசகர்களோடும், போருக்குத் தயாராக இருக்கும் நபர்களுடன் ஒன்றிணைந்தும், வீரர்களாக இருக்கும் தம்பிகள், மாமனார் ஆகியோரைக் கொண்டும் இருக்கும் மனிதர்களில் புலியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பொறுமைசாலியாக, தனது ஆலோசனைகளைக் கமுக்கமாக {இரகசியமாக} வைத்திருக்கும் திறன் கொண்டவனாக, கருணை மற்றும் பணிவு கொண்டவனாக, கலங்கடிக்கப்பட முடியாத சக்திகளைக் கொண்டவனாக, பெரும் கல்வி கொண்டவனாக, முறையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஆன்மா கொண்டவனாக, எப்போதும் வயது முதிர்ந்தோருக்குக் காத்திருப்பவனாக {பணிவிடை செய்பவனாக}, புலன்களை அடக்கியவனாக, என இப்படி அனைத்து சாதனைகளையும் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} எரியும் நெருப்பு போலல்லவா இருக்கிறான். அழிவுக்கு விதிக்கப்பட்டு, அறிவை இழந்து, தடுக்கப்பட முடியாததும், எரிந்து கொண்டிருப்பதுமான அந்தப் பாண்டவ நெருப்பில் விட்டில் பூச்சியைப் போல எந்த மூடன் விழுவான்.
ஐயோ, நான் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வஞ்சகமாக நடந்து கொண்டேனே. உயர்ந்து எரியும் நெருப்பைப் போல, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்கள் அனைவரில் ஒருவனையும் உயிரோடு விடாமல் அழித்துவிடுவான். எனவே, அவர்களுடன் போரிடுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.
கௌரவர்களே, நீங்களும் அதே மனம் கொள்ளுங்கள் {அதை அறிந்து கொள்ளுங்கள்}. பகைமை பாராட்டினால், குருக்களின் {கௌரவர்களின்} இனம் முற்றாக அழியும் என்பதில் ஐயமில்லை. இஃது எனக்குத் தெரிவாகத் தோன்றுகிறது. இதன்படி நாம் செயல்பட்டால், எனது மனம் அமைதியடையும். அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு நன்மையாகத் தெரியவில்லை என்றால், நாம் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவோம். நாம் துன்பப்பட்டால் யுதிஷ்டிரன் அலட்சியம் செய்ய மாட்டான். ஏனெனில், அவன் {யுதிஷ்டிரன்} இந்த அநீதியான போருக்கு {திருதராஷ்டிரனான} நான்தான் காரணம் என்றே கண்டித்துவருகிறான்" என்றான் {திருதராஷ்டிரன்}.
..
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment