மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-208
உத்யோக பர்வம்
..
வாசுதேவன் என் கூட்டாளி
..
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, "தங்கம் மற்றும் ஒளி பொருந்திய ரத்தினங்களின் பிரகாசத்துடன் கூடியதும், வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படுவதும், குரங்கு {அனுமன்} இலச்சனை பொறித்த பதாகை {கொடி} தாங்கியதும், கேசவனால் {கிருஷ்ணனால்} வழிநடத்தப்படுவதுமான எனது பயங்கரத் தேரை எப்போது காண்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
தோலுறைகளால் பாதுகாக்கப்படும் விரல்களைக் கொண்டு, எப்போதும் வளைத்தே வைக்கப்பட்டிருக்கும் எனது வில்லான காண்டீவத்தின் நாண் கயிற்றில் இடி உருளுவது போன்று உரத்து உண்டாக்கும் பயங்கர ஒலியை எப்போது கேட்பானோ, பசுக்களைப் போலப் போர்க்களத்தின் எல்லாப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் தனது துருப்புகளால் தான் கைவிடப்பட்டதை எப்போது காண்பானோ, அப்போது எனது அம்பு மழையால் உண்டாகும் இருளில் மூழ்கும் அந்த இழிந்த துன்மார்க்கான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.
அழகிய இறகுகள் படைத்தவையும், உயிர்நிலையையே துளைக்கவல்லவையும், காண்டீவத்தின் நாணில் இருந்து அடிக்கப்படுபவையும், மேங்களில் இருந்து உமிழப்படும் பயங்கரமான கடுமையான மின்னல்க்கீற்றுகளைப் போன்றவையுமான எண்ணிலடங்கா கூரிய கணைகள், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழித்தபடி, கவசம் பூண்ட யானைகளையும், எண்ணிலடங்கா குதிரைகளையும் விழுங்கியபடி செல்வதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எதிரியால் அடிக்கப்படும் கணைகள், எனது கணைகளால் அணைக்கப்பட்டோ, திருப்பப்பட்டோ, அல்லது எனது கணைகளால் குறுக்கு வெட்டாக வெட்டப்பட்டுத் துண்டுகளாக்கப்பட்டோ போவதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது மூடனான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எனது கைகளால் அடிக்கப்படும் அகன்ற தலை கொண்ட கணைகள், மர உச்சிகளில் இருக்கும் கனிகளைப் பறவைகள் கொய்வதைப் போல, இளம் போர்வீரர்களின் தலைகளை எப்போது கொய்யுமோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
தங்கள் தேர்களில் இருந்தும், யானைகளில் இருந்தும், குதிரைகளில் இருந்தும் எனது அம்புகளால், களத்தில் உயிரற்று உருளும் அற்புத போர்வீரர்களை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
போரில் எதையும் சாதிக்காமலே, பகைவனின் {என்னுடைய} ஆயுத எல்லைக்குள் வரும் முன்பாகவே, சுற்றிலும் தனது தம்பிகள் இறந்து விழுவதை எப்போது காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
விரிந்த வாயுடைய மரணத்தைப் {காலனைப்} போன்ற எனது சுடர்மிகும் கணைகளைத் தடையில்லாமல் பொழிந்து, அனைத்துப் புறங்களிலும் உள்ள தேர்க்கூட்டங்களையும், காலாட்படை வீரர்களையும் எப்போது நான் அழிப்பேனோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
அனைத்துப்புறங்களிலும் உலவும் எனது தேர் எழுப்பும் புழுதியால் மூடப்பட்டும், எனது காண்டீவத்தால் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டும், தன் படைகள் மதிமயங்கி நிற்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
உறுப்புகள் சிதைக்கப்பட்டும், உணர்வுகள் இழந்தும், அச்சத்தால் தனது படைகள் எல்லாப்புறங்களிலும் ஓடுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தனது குதிரைகள், யானைகள் மற்றும் தனது வீரர்களில் முதன்மையானோர் கொல்லப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தங்கள் விலங்குகள் அழிந்ததும், தாகத்துடன் பீதியடைந்தும், உரக்க அழுது, இறந்தும், இறந்து கொண்டும் இருக்கும் தனது படைகள், படைப்பாளனின் {பிரம்மனின்} முடிவடையாத வேலைகளைப் [1] போல, மயிர், எலும்புகள், மண்டையோடுகள் ஆகியன சுற்றிலும் குவியலாகக் கிடப்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
[1] பிரஜாபதியைத் தேவதையாகக் கொண்ட வாஜபேய வேள்வியில் பதினேழு பசுக்கள் [அதாவது குதிரை, மான் போன்ற வேள்வி விலங்குகள். இங்கே பசு என்பது விலங்கு என்றே பொருள்படும்] கொல்லப்பட்டுச் சிதறிக் கிடப்பதைப் போல.
காண்டீவம், வாசுதேவன் {கிருஷ்ணன்}, தெய்வீகச் சங்கான பஞ்சஜன்யம், {அர்ஜுனனாகிய} நான், எனது இரு வற்றாத அம்பறாத்தூணிகள், தேவதத்தம் என்றழைக்கப்படும் எனது சங்கு, எனது வெண்குதிரைகள் ஆகியவற்றை என் தேரில் எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
யுகமுடிவில், மற்றொரு யுகத்தின் ஆரம்பத்தில், கூடியிருக்கும் எண்ணிலடங்கா தீய ஆன்மாக்களை எரிக்கும் அக்னி போல, கௌரவர்களை நான் எப்போது எரிப்பேனோ, அப்போது திருதராஷ்டிரர் தனது மகன்கள் அனைவருடனும் வருந்துவார்.
தனது தம்பிகளுடனும், படைகளுடனும், தொண்டர்களுடனும் கூடியவனும், கோபம் நிறைந்த தீய இதயம் கொண்டவனுமான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எப்போது செழிப்பை இழப்பானோ, அப்போது கர்வத்தை இழந்து, இதயம் {உற்சாகம்} இழந்து, மேனி முழுதும் நடுக்கம் கொள்ளும் அந்த மூடன் {துரியோதனன்} வருந்துவான்.
எனது நீர்ச்சடங்குகளையும், துதிகளையும் {பிரார்த்தனைகளையும்} முடித்த ஒரு காலைப்பொழுதில், ஓர் அந்தணர் என்னிடம் இந்த இனிமையான வார்த்தைகளில், "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ மிகக் கடினமான ஒரு பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, நீ உன் எதிரிகளுடன் போராட வேண்டியிருக்கும். போர்க்களத்தில் உனக்கு முன்பாக, வஜ்ரத்தைக் கையில் கொண்டு குதிரையில் வரும் இந்திரனோ, அல்லது சுக்ரீவத்தின் தலைமை கொண்ட குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வரும் வசுதேவரின் மகனான கிருஷ்ணன், உனக்குப் பின்னால் இருந்தோ காப்பார்கள்" என்றான்.
அந்த வார்த்தைகளை நம்பிய {அர்ஜுனனாகிய} நான், இந்தப் போர்க்களத்தில் வஜ்ரதாங்கியான இந்திரனை விட்டுக் கடந்து, வாசுதேவனையே {கிருஷ்ணனையே} எனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தேன். தீயோரை அழிக்கவே நான் கிருஷ்ணனை அடைந்தேன். இவை அனைத்திலும் தேவர்களின் கையை நான் காண்கிறேன். ஒரு மனிதனின் வெற்றிக் கிருஷ்ணனால் விரும்பப்பட்டால், பின்னவன் {அந்த கிருஷ்ணன்} உண்மையில் தன் சார்பாக ஆயுதத்தை எடுக்கவில்லையெனினும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாவே அந்த எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரையும் விட அவன் {அந்த மனிதன்} விஞ்சியே நிற்பான். அப்படியிருக்கையில், மனிதர்கள் காரியத்தில் கவலையே கிடையாது"
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, "பெரும் சக்தியுடையவனும், வீரர்களில் முதன்மையானவனும் வசுதேவரின் மகனுமான கிருஷ்ணனைப் போரில் வெல்ல விரும்புபவன், தன் இரு கரங்களின் உதவியை மட்டுமே கொண்டு, அளவிலா நீரைக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பெரும் சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவன் ஆவான். உயர்ந்திருக்கும் கைலாச மலையைத் தன் உள்ளங்கையால் அடித்துப் பிளந்துவிட விரும்புபவன், தனது கைகளில் இருக்கும் நகங்கள் தேய்ந்து போனாலும், அந்த மலைக்குச் சிறு பாதிப்பையும் அவனால் ஏற்படுத்த இயலாது.
போரில் வாசுதேவனை வெல்ல விரும்புபவன், எரியும் தழலை தன் இரு கைகளால் அணைப்பவனாக, சூரியனையும் சந்திரனையும் தடுப்பவனாக, தேவர்களின் அமிர்தத்தைத் தன் வலிமையால் கவர்பவனாக இருக்க வேண்டும்.
ஒரே தேரில் சென்று, போரில் தன் பலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, போஜ இனத்தின் அரச வீரர்களை {மன்னர்களை} வெட்டி வீழ்த்தி, பெரும் புகழ்பெற்ற ருக்மிணியைக் கடத்தித் தனது மனைவியாக்கி, பிறகு அவள் மூலமாக உயர் ஆன்ம பிரத்யும்னனைப் பெற்றவனே அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}.
காந்தார நாட்டை விரைந்து அழித்து, நக்னஜித்தின் மகன்கள் அனைவரையும் வென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மன்னன் சுதர்சனனை, {தன்} பெரும் சக்தியை வெளிப்படுத்தி, விடுவித்தவனே இந்தத் தேவர்களுக்குப் பிடித்தமானவன் {கிருஷ்ணன்}.
தன் மார்பால் மன்னன் பாண்டியன் [1] மார்பை மோதி அவனை {பாண்டியனைக்} கொன்றவனும், கலிங்கர்களை [2] வீழ்த்தியவனும் இவனே {கிருஷ்ணனே}. பிறரால் வீழ்த்தப்பட முடியாதவனான இவனாலேயே வாராணசி நகரம் {காசி} எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் மன்னனில்லாமல் இருந்தது.
[1] கவாடபுரத்துப் பாண்டியன் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.
[2] கலிங்கர்களையும் தந்தவக்தரனையும் கொன்றான் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.
நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யன் [3], எப்போதும் இவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} போர் அறைகூவல் விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்; ஆனால், மலைமீது மூர்க்கமாக அடித்து வீசப்பட்ட அசுரன் ஜம்பன் {ஜம்பாசுரன்} போல, {அந்த ஏகலவ்யன்} கிருஷ்ணனால் வெட்டுண்டு இறந்து கிடக்கிறான்.
[3] ஆதிபர்வம் பகுதி 134ல் ஏகலவ்யன் முதலில் தோன்றுகிறான், பின்பு, சபாபர்வம் பகுதி 24ல் ஜராசந்தன் கொல்லப்படுவது விரிவாகச் சொல்லப்படுகிறது. ஜராசந்தனின் மரணத்திற்குப் பிறகு யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்வி சபா பர்வம் பகுதி 43ல் வருகிறது. அங்குக் கூடியிருந்த அவையில் ஏகலவ்யன் இருந்ததாகக் குறிப்பு ஒன்று வருகிறது. அதன் பிறகு சபா பர்வம் பகுதி 52ல் ராஜசூய வேள்வி செய்து முடித்த யுதிஷ்டிரனுக்கு ஏகலவ்யன் காலணிகளைப் பரிசளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது. அதற்குப் பிறகு உத்யோக பர்வத்தின் இந்தப் பகுதி 48ல் தான், ஏகலவ்யன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது.
தனக்கு அடுத்தபடியாகப் பலதேவனைக் {பலராமனைக்} கொண்டவனும் {having Baladeva for his second}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் மத்தியில், சபையில் அமர்ந்திருந்த உக்கிரசேனனின் தீய மகனைக் (கம்சனைக்) கொன்று, {அந்த} நாட்டை உக்கிரசேனனிடமே கொடுத்தவனும் இந்தக் கிருஷ்ணனே.
தான் கொண்ட மாய சக்திகளின் விளைவால் அச்சமற்றவனாகி வானத்தில் நிலைத்திருந்த {வானத்தில் இருந்து போர் செய்த} சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனிடம் போரிட்டவன் இந்தக் கிருஷ்ணனே; (சௌபத்தின் தலைவனால் {சால்வனால்}) வீசப்பட்ட கடுமையான சதாக்னியை, சௌபத்தின் வாயிலில் நின்று தனது கரங்களில் பிடித்தவன் இவனே {இந்தக் கிருஷ்ணனே}. இவனுடைய {கிருஷ்ணனுடைய} வலிமையை எந்த மனிதனால் தாங்கிக் கொள்ள முடியும்?
வல்லமைமிக்கதும், அணுக முடியாததும், தாங்க முடியாததுமான பிராக்ஜோதிஷம் என்ற நகரத்தை அசுரர்கள் கொண்டிருந்தனர். அதிதியிடம் தான் அபகரித்து வந்த காதணிகளை {ரத்னகுண்டலங்களை}. பூமியின் {பூமாதேவியின்} வலிமைமிக்க மகனான நரகன் {நரகாசுரன்}, அங்கேதான் {பிராக்ஜோதிஷத்தில்தான்} வைத்திருந்தான்.
சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் கூடியிருந்த மரணத்திற்கு அஞ்சாத தேவர்களே கூட அவனை {நரகாசுரனை} வெல்ல இயலாதவர்களாகவே இருந்தார்கள். கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றல், வலிமை, {இவன் கொண்டிருந்த} தடுக்க முடியாத ஆயுதம் ஆகியவற்றைக் கண்டும், இவனது {கிருஷ்ணனின்} பிறப்பின் நோக்கத்தை அறிந்தும், அசுரர்களை அழிக்கும் பணியில் இவனை {கிருஷ்ணனை} தேவர்கள் அமர்த்தினார்கள்.
வெற்றியை உறுதி செய்யும் தெய்வீகப் பண்புகள் அனைத்தையும் தன்னிடம் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, மிகக் கடினமான இந்தப் பணியைத் தானே மேற்கொள்ள ஏற்றுக் கொண்டான். நிர்மோசனம் என்ற நகரத்தில் இந்த வீரன் {கிருஷ்ணன்}, ஆறாயிரம் {6000} அசுரர்களைக் கொன்று, எண்ணிலா கூர்முனைக் கணைகளைத் துண்டுகளாக அறுத்துப் போட்டு, முரனையும், ராட்சசர்கள் கூட்டத்தையும் கொன்று, அந்த நகரத்திற்குள் {நிர்மோசனத்திற்குள்} நுழைந்தான்.
அங்கேதான் {நிர்மோசனத்தில்தான்} வலிமைமிக்க நரகனுக்கும் {நரகாசுரனுக்கும்}, அளவிலா சக்தி கொண்ட விஷ்ணுவுக்கும் இடையில் அந்த மோதல் நிகழ்ந்தது. காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போல, கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகன் அங்கே உயிரற்றுக் கிடக்கிறான். அழகாலும், சாகாப்புகழாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனும் கற்றவனுமான கிருஷ்ணன், முரனையும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனையும் கொன்று, ரத்தினங்களால் ஆன அந்தக் காதணிகளையும் மீட்டுத் திரும்பி வந்தான்.
அந்தப் போரில், இவன் {கிருஷ்ணன்} செய்த பயங்கரச் சாதனைகளைச் சாட்சியாகக் கண்ட தேவர்கள் {கிருஷ்ணனிடம்}, "போரில் உனக்கு எப்போதும் களைப்பேற்படாது, ஆகாயமோ, நீரோ உனது வழியைத் தடை செய்யாது {ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் சக்தி உனக்குக் கிடைக்கும்}. ஆயுதங்கள் உன் உடலைத் துளைக்காது" என்று இவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருளினர். இவை அனைத்தினாலும், கிருஷ்ணன், தனக்குப் போதுமான வெகுமதி கிடைத்ததாகக் கருதினான்.
அளவிலாத பெரும் வலிமையைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அறங்கள் அனைத்தும் {குண நிறைவுகள் அனைத்தும்} இருக்கின்றன. அளவற்ற சக்தி வாய்ந்தவனும், தாங்கிக் கொள்ள முடியாதவனுமான இந்த விஷ்ணுவை {கிருஷ்ணனை}, இன்னும் கூடத் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} வெல்லவே விரும்புகிறான். அதனாலேயே அந்த இழிந்தவன் {துரியோதனன்}, அடிக்கடி இவனைச் சிறையிலடைக்க [4] எண்ணுகிறான். எனினும், இவை யாவற்றையும் கிருஷ்ணன் எங்களுக்காகப் பொறுத்து வருகிறான் {மன்னித்து வருகிறான்}. அந்த இழிந்தவன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையில் திடீர்ப் பிளவை உண்டாக்கவும் முயன்று வருகிறான். எனினும், பாண்டவர்களிடம் கிருஷ்ணன் கொண்ட பாசத்தை அகற்ற, தான் எவ்வளவு தூரம் திறன்பெற்றவன் என்பதைப் போர்க்களத்தில் அவன் {துரியோதனன்} காண்பான்.
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, "சந்தனுவின் மகனையும் {பீஷ்மரையும்}, துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் ஒப்பற்ற மகனையும் {கிருபரையும்} வணங்கி, எங்கள் நாட்டை மீட்க நான் போரிடுவேன். பாண்டவர்களுடன் போரிடும் பாவிக்கு, நீதித்தேவனே {தர்மதேவனே} அழிவைக் கொண்டு வருவான் என்று நான் நம்புகிறேன்.
அந்த இழிந்தவர்களால் {கௌரவர்களால்} ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்தப்பட்ட அரச பிறப்புடைய {பாண்டவர்களாகிய} நாங்கள், காட்டில் பெருந்துன்பத்துடன் பனிரெண்டு {12} ஆண்டுகளையும், நீண்ட ஒரு வருட மறைந்த நிலை வாழ்வையும் {அஞ்ஞாதவாசம்} கழித்தோம்.
அந்தப் பாண்டவர்கள் உயிரோடு இருக்கையில், திருதராஷ்டிரரின் மகன்கள், தாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தாலும் செல்வச்செழிப்பாலும் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்? இந்திரனின் தலைமையைக் கொண்ட தேவர்களைக் கொண்டு அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களைப் போரில் வீழ்த்திவிட்டால், அறப்பயிற்சிகளைவிட {தர்மத்தைவிட} மறமே {அதர்மமே} சிறந்ததென்று ஆகிவிடும். மேலும் இந்தப் பூமியில் நீதி போன்ற எதுவும் நிச்சயமாக இருக்காது. மனிதன் அவன் செய்யும் செயல்களால் பாதிப்பை அடைகிறான் என்றால், நாங்கள் {பாண்டவர்கள்} துரியோதனனைவிட மேன்மையானவர்கள் என்றால், வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டு {எனது துணைவனாகக் கொண்டு} {with Vasudeva as my second}, துரியோதனனை அவனது இரத்த உறவுகளோடு சேர்த்து நான் கொல்வேன் என்றே நம்புகிறேன்.
ஓ! மனிதர்களின் தலைவா {சஞ்சயா}, எங்கள் நாட்டைத் திருடியது தீமை என்றால், எங்களது இந்த நற்செயல்கள் கனியற்றதாகாது {பலனற்றதாகாது} என்றால், இதுவும் அதுவும் ஆகிய இரண்டையும் நோக்குகையில் {ஆலோசிக்கையில்}, துரியோதனனின் வீழ்ச்சி உறுதி என்றே எனக்குப் படுகிறது.
கௌரவர்களே, அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களுடன் போரிட்டால், திருதராஷ்டிரர் மகன்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை உங்கள் கண்ணால் நீங்களே காண்பீர்கள். போரிடுவதைத் தவிர்த்து வேறுமாதிரியாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வார்கள்; ஆனால் வரப்போகும் போரினால் அவர்களில் எவரும் உயிருடன் எஞ்சமாட்டார்கள். கர்ணனுடன் சேர்த்து திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்று, அவர்களது முழு நாட்டையும் நான் வெல்வேன். அதே வேளையில், நீங்கள் எதையெல்லாம் சிறந்ததாக நினைப்பீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள், உங்கள் மனைவியரையும், வாழ்வின் பிற இனிமையான பொருட்களையும் அனுபவியுங்கள் {அனுபவித்துவிடுங்கள்}.
படத்தை பெரிதாக்க சொடுக்கவும்
பல்வேறு அறிவியல்களை அறிந்தவர்களும், இனிமையான நடத்தை, நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டவர்களும், வருடச் சுழற்சிகளை அறிந்தவர்களும், சோதிடக் கல்வியில் ஈடுபடுபவர்களும், கோள்களின் அசைவுகளையும், நட்சத்திரக் கூடுகைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வல்லவர்களும், விதியின் புதிர்களை விளக்கவல்லவர்களும், எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களும், இராசிச் சக்கரத்தின் {zodiac} இராசிகளை {signs} அறிந்தவர்களும், ஒவ்வொரு மணி நேரத்தின் நிகழ்வுகளை அறிந்தவர்களுமான முதிர்ந்த அந்தணர்கள் பலர் எங்களிடம் இருக்கிறார்கள். ஒருபோதும் யாரையும் எதிரியாக்காத யுதிஷ்டிரர், தனது எதிரிகளைப் படுகொலை செய்வதன் விளைவாகத் தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று கருத வைப்பது போல, குருக்கள் மற்றும் ஸ்ரீன்ஜயர்களின் {சிருஞ்சயர்களின்} பெரும் அழிவையும், பாண்டவர்களின் முழு வெற்றியையும் அவர்கள் {அந்த அந்தணர்கள்} முன்னறிவிக்கின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டிருக்கும் விருஷ்ணிகளில் சிங்கமான ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, இவையனைத்தையும் ஐயமறக் காண்கிறான். தவறாத தொலைநோக்குப் பார்வை கொண்ட நானும், அந்த எதிர்காலத்தையே காண்கிறேன். பழங்காலத்தில் அடையப்பட்ட எனது தொலை நோக்குப் பார்வை தடைசெய்யப்படவில்லை. திருதராஷ்டிரர் மகன்கள் போரிட்டால், அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
கையாளப்படாமல் இருக்கும் எனது வில்லான காண்டீவம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது; நீட்டி இழுக்கப்படாமல் இருக்கும் எனது வில்லின் நாண்கயிறு நடுங்கிக் கொண்டிருக்கிறது; எனது அம்பறாத்தூணியின் வாயில் இருந்து வெளிப்படும் அம்புகளும், மீண்டும் மீண்டும் பறக்க எத்தனிக்கின்றன. தனது சட்டையைவிட்டு அகலும் பாம்பைப் போல, எனது பிரகாசமான கூன்வாள் உறையைவிட்டு வெளியே வருகின்றது; எனது கொடிக்கம்பத்துக்கு மேலே, "ஓ! கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும்?" என்று பயங்கரக் குரல்கள் கேட்கின்றன. இரவில் எண்ணிலடங்கா நரிகள் பயங்கரமாக ஊளையிடுகின்றன, மேலும் அடிக்கடி வானத்தில் இருந்து ராட்சசர்கள் கீழே இறங்குகின்றனர்; எனது வெண்குதிரைகளை எனது தேரில் பூட்டும்போது, மான்கள், நரிகள், மயில்கள், காகங்கள், கழுகுகள், கொக்குகள், ஓநாய்கள் மற்றும் தங்கச் சிறகு கொண்ட பறவைகள் அதைப் {அந்தத் தேரைப்} பின்தொடர்கின்றன.
எனது அம்பு மழையால், தனி மனிதனான என்னால், போர்குணமிக்க அனைத்து மன்னர்களையும் இறந்தவர்களின் உலகத்திற்கு {யமனுலகுக்கு} அனுப்ப முடியும். வெப்ப காலத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, ஒரு காட்டையே எரித்துவிடுவதைப் போல, பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தி, அந்தப் பெரும் ஆயுதங்களான, ஸ்தூர்-கர்ணம் {ஸ்தூணாகர்ணம்}, பாசுபதம் {பாசுபதாஸ்திரம்} மற்றும் பிரம்மம் {பிரம்மாஸ்திரம்} ஆகியவற்றையும், சக்ரன் {இந்திரன்} எனக்குக் கொடுத்தவையான கடும் மூர்க்கம் கொண்ட {ஐந்திரம் உள்ளிட்ட} அந்த அனைத்து ஆயுதங்களையும் நான் வீசுவேன் {பயன்படுத்துவேன்}.
அவற்றின் துணை கொண்டு, அந்த ஏகாதிபதிகளின் அழிவை எனது இதயத்தில் நிறுத்தி, போர்க்களத்திற்கு வருவோர் யாரையும் நான் எஞ்சவிடமாட்டேன். இவை யாவற்றையும் செய்த பிறகே நான் ஓய்வேன். இதுவே நான் முடிவெடுத்திருக்கும் எனது தலைமையான தீர்மானமாகும்.
ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, இவற்றை அவர்களுக்குச் {கௌரவர்களுக்குச்} சொல்லும். துரியோதனனின் மடமையைப் பாரும்! ஓ! சூதரே, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே தங்கள் துணையாகக் கொண்டு, போரில் வல்லவர்களாய் இருப்பவர்களிடம் கூட அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} போரையே விரும்புகிறான். ஆனால், "கௌரவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழட்டும்" என்று சந்தனுவின் மகனான முதிர்ந்த பீஷ்மரும், கிருபரும், மகனுடன் {அசுவத்தாமனுடன்} கூடிய துரோணரும், பேரறிவு கொண்ட விதுரரும் சொல்வது போலவே, அப்படியே ஆகட்டும்" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர், துரியோதனனிடம், "ஒரு காலத்தில், பிருஹஸ்பதியும் சுக்ரனும் {சுக்ராச்சாரியரும்} [1] பிரம்மனிடம் சென்றார்கள். இந்திரனோடு சேர்ந்து மருதர்களும், அக்னியோடு சேர்ந்து வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யஸ்களும் {சாத்தியர்களும்}, ஏழு தெய்வீக முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, கந்தர்வர்களும், விஸ்வவசு மற்றும் அப்சரஸ்சுகளின் அழகிய குலமும் அந்தப் பழமையான பெரும்பாட்டனை {பிரம்மனை} அணுகினார்கள். அந்த அண்டத்தின் தலைவனை {பிரம்மனை} வணங்கிய சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, அவனை {பிரம்மனைச்} சுற்றி அமர்ந்தனர். அதே நேரத்தில், தங்கள் மனங்களால் தங்கள் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, பழமையான இரு தெய்வங்களான முனிவர்கள் நரனும், நாராயணனும், அங்கே இருந்த அனைவரின் சக்திகளையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
[1] இங்கே கங்குலியில் Sakra என்று இருக்கிறது. ஆனால் உடனே அதைத் தொடர்ந்து, The Maruts also with Indra என்ற சொற்களும் தொடர்வதால், அது Sukra என்றிருக்க வேண்டும் என்று கருதியே இங்கே சுக்ராச்சாரியர் என்று இட்டிருக்கிறேன். வேறு பதிப்புகளில் இங்கே சுக்கிராச்சாரியர் என்றே இருக்கிறது.
அதன்பேரில், பிருஹஸ்பதி பிரம்மனிடம், "உம்மை வழிபடாமல் இந்த இடத்தை விட்டுச் செல்லும் இந்த இருவரும் யார்? ஓ பெரும்பாட்டனே {பிரம்மனே}, எங்களுக்குச் சொல்லும். இவர்கள் யார்?" என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மன், "தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களால் அவர்கள் உலகத்தின் மகிழ்ச்சிக்கு எப்போதும் பங்களித்து வருகிறார்கள். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படும் அவர்கள் {நரனும் நாராயணனும்}, அசுரர்களின் அழிவுக்காக மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்" என்றான் {பிரம்மன்}"
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன் {இந்திரன்}, அவ்விருவரும் {நரனும், நாராயணனும்} தவம்பயின்று கொண்டிருந்த இடத்திற்கு, பிருஹஸ்பதி முதலான அனைத்துத் தேவர்களுடன் சென்றான். அந்நேரத்தில், சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, தங்களுக்கும், அசுரர்களும் இடையில் ஏற்பட்டிருந்த போரின் விளைவை எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
ஒப்பற்றிருந்த அந்த இருவரிடமும், இந்திரன் ஒரு வரத்தைத் தருமாறு வேண்டினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்டதும், அந்த இருவரும், "வரத்தைக் கேள்?" என்றனர். அதற்குச் சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் {நரன் மற்றும் நாராயணனிடம்}, "எங்களுக்கு உங்கள் உதவியைக் கொடும்" என்றான். அதற்கு அவர்கள் சக்ரனிடம் {இந்திரனிடம்}, "நீ விரும்பியதை நாங்கள் செய்வோம்" என்றனர். பிறகு, அவர்களது உதவியைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, அதன் தொடர்ச்சியாகத் தைத்தியர்களையும், தானவர்களையும் [2] வீழ்த்தினான். எதிரிகளைத் தண்டிப்பவனான நரன், பௌலோமர்கள் மற்றும் காலகஞ்சர்கள் மத்தியில் இருந்த இந்திரனின் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றான்.
[2] திதியின் மகன் தைத்தியர்கள், தானுவின் மகன்கள் தானவர்கள். திதியும், தானுவும் தக்ஷனின் மகள்களாவர்.
அசுரன் ஜம்பன் தன்னை விழுங்க வந்த போது, சுழன்று வரும் தேரை நடத்தி, அகன்ற தலை கொண்ட கணைகளைக் கொண்டு அவனது {ஜம்பனுடைய} தலையைக் கொய்தவன் இந்த அர்ஜுனனே. அறுபதாயிரம் நிவாதகவசர்களை வீழ்த்தி, கடலுக்கு அக்கரையைத் (ஹிரண்யபுரம் எனும் தைத்தியர் நகரைத்) துன்புறுத்தியவன் {அழித்தவன்} அவனே {இந்த அர்ஜுனனே}. வலிய கரங்களைக் கொண்டவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அவனே {இந்த அர்ஜுனனே}, இந்திரன் தலைமையிலான தேவர்களையே வீழ்த்தி {காண்டவ வனத்தில்} அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்தவன் ஆவான்.
இதே போல, இவ்வுலகில், எண்ணிலடங்கா பிற தைத்தியர்களையும், தானவர்களையும் நாராயணனும் கொன்றான். வலிமைமிக்க சக்தியைக் கொண்ட அந்த இருவரை {நரனையும் நாராயணனையும்} போன்றவர்களே, இப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகக் காணப்படுபவர்கள் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஆவர். ஒருவருக்கொருவர் இப்போது ஒற்றுமையாகக் காணப்படும் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அந்தப் பழங்கால தெய்வங்களான அதே தெய்வீக நரனும், நாராயணனுமே ஆவர்.
இவ்வுலகத்திலுள்ளோர் அனைவரைக் காட்டிலும், அசுரர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அவர்களே {அர்ஜுனனும் கிருஷ்ணனுமே}. கிருஷ்ணனே அந்த நாராயணன். பல்குனனே {அர்ஜுனனே} அந்த நரன். உண்மையில், அவர்கள் ஈருடலில் இருக்கும் ஒரே ஆன்மா. அவர்கள் தங்கள் செயல்களால் {கர்மத்தால்}, அழிவடையாத நித்திய உலகங்களை அனுபவிக்கின்றனர். இவ்வுலகில் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான அவசியம் ஏற்படும்போது, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். இதன் காரணமாகவே, போரே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
வேதங்களை அறிந்தவரான நாரதர், இதையே விருஷ்ணிகளிடம் சொல்லியிருக்கிறார். ஓ! துரியோதனா, கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் கேசவனையும் {கிருஷ்ணனையும்}, பயங்கர வில்லையும் {காண்டீவத்தையும்}, ஆயுதங்களையும் தாங்கியிருக்கும் அர்ஜுனனையும் எப்போது காண்பாயோ, நித்தியமான, ஒப்பற்றவர்களான அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்கள் என்று பொருளும் இங்கே வரும்} ஒரே தேரில் அமர்ந்திருப்பதை எப்போது காண்பாயோ, ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டில் இருந்தும் உனது அறிவு வீழ்ந்து விட்ட பிறகு, இத்தகு ஆபத்து, குருக்களை {கௌரவர்களை} ஏன் அச்சுறுத்தாது? எனது வார்த்தைகளுக்கு நீ செவிசாய்க்கவில்லையெனில், பலரின் படுகொலைகளை நீ கேள்விப்பட வேண்டியிருக்கும். ஏனெனில், குருக்கள் அனைவரும் உனது கருத்தையே ஏற்கின்றனர். {உன்னுடைய கொள்கையையே கௌரவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர்}. ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, ராமரால் {பரசுராமரால்} சபிக்கப்பட்டவனும், இழிபிறப்பு கொண்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், சுபலனின் மகன் சகுனி, அற்பனும், பாவியுமான உனது தம்பி துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தே உண்மை என நீ மட்டுமே ஏற்கிறாய்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர்}.
கர்ணன் {பீஷ்மரிடம்}, "ஓ! அருளப்பட்டவரே! பாட்டா, என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பயன்படுத்துவது உமக்குத் தகாது. ஏனெனில், சொந்த வகையின் {சுயதர்மத்தின்} கடமைகளில் இருந்தும் வீழாமல், க்ஷத்திரிய வகைக்கான {க்ஷத்திரிய தர்மத்தின்} கடமைகளையும் நான் பின்பற்றி வருகிறேன். அதுதவிர, வேறு என்ன பொல்லாப்பு {துர்க்குணம்} என்னிடம் இருக்கிறது? திருதராஷ்டிரரின் மக்கள் யாரும் அறிய வண்ணம் பாவம் எதையும் நான் செய்யவில்லை. திருதராஷ்டிரரின் மகனுக்கு {துரியோதனனுக்கு} எந்தக் காயத்தையும் {தீங்கையும்} நான் செய்தவனில்லை; மறுபுறம், போரில் நான் பாண்டவர்கள் அனைவரையும் கொல்வேன். முன்பே {நம்மால்} காயம் பட்டவர்களிடம், அறிவுடையோர், எப்படி அமைதியை {சமாதானத்தை} மீண்டும் ஏற்படுத்த முடியும்? மன்னர் திருதராஷ்டிரருக்கும், பேரரசைக் கொண்டவனாதலால், குறிப்பாகத் துரியோதனனுக்கும் ஏற்புடைய அனைத்தையும் எப்போதும் செய்ய வேண்டியது எனது கடமையாகும்" என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் திருதராஷ்டிரனிடம், ""நான் பாண்டவர்களைக் கொல்வேன்" என்று இவன் {கர்ணன்}, அடிக்கடி தற்பெருமை பேசி வந்தாலும், உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாக்களான} பாண்டவர்களின் பதினாறில் ஒரு பங்குக்கும் இவன் {கர்ணன்} ஈடாக மாட்டான். தீய ஆன்மாக்கள் கொண்ட உன் மகன்களுக்கு நேரப்போகும் பெரும் ஆபத்து, சூதனின் கேடுகட்ட மகனான இவனது {கர்ணனின்} செயல்களாலேயே ஏற்படப்போகிறது என்று அறிந்து கொள்வாயாக.
இவனை {கர்ணனை} நம்பி, தெய்வீக வழித்தோன்றல்களும் {வம்சாவளியினரும்}, எதிரிகள் அனைவரையும் தண்டிப்பவர்களுமான அந்த வீரர்களை {பாண்டவர்களை} உன் முட்டாள் மகனாகிய சுயோதனன் {துரியோதனன்} அவமதித்தான். எனினும், பாண்டவர்கள் ஒவ்வொருவராலும் பழங்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளில் ஏதாவது ஒன்றுக்கு இணையாகவாவது இந்த இழிந்தவனால் முன்னர்ச் செய்யப்பட்ட கடினமான சாதனை என்ன? {பாண்டவர்களில் ஒருவர் சாதித்த ஏதேனும் ஒரு சாதனைக்கு இணையாகவாவது இந்த இழிந்தவன் என்ன செய்திருக்கிறான்?}
விராடனின் நகரத்தில், பெரும் ஆற்றலை வெளிப்படுத்திய தனஞ்சயனால் {அர்ஜுனனால்}, இவனது அன்பிற்குரிய தம்பி கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும் இவன் என்ன செய்தான்?
பசுமந்தையைக் காணச் சென்ற {கோஷ யாத்திரை சென்ற} உனது மகன் {துரியோதனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட போது, காளை போல இப்போது முழங்கும் இந்தச் சூத மகன் {கர்ணன்} எங்கே இருந்தான்?
பீமனும், ஒப்பற்ற பார்த்தனும் {அர்ஜுனனும்}, இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} தான் அங்கேயும் கந்தர்வர்களுடன் மோதி அவர்களை {கந்தர்வர்களை} வீழ்த்தினர்.
ஓ! பாரதகுலத்தின் காளையே, நீ அருளப்பட்டிருப்பாயாக. எப்போதும் அழகாகவும், எப்போதும் அறம் பொருள் ஆகிய இரண்டையும் கொண்டிராத இவை, இவனால் {கர்ணனால்} சொல்லப்படும் பல தவறான {பொய்} வார்த்தைகளே" என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் உயர் ஆன்ம மகன் {துரோணர்}, திருதராஷ்டிரனுக்கும், அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாரதர்களில் சிறந்தவரான பீஷ்மர் சொல்வதைச் செய். செல்வத்தில் பேராசை கொண்டோரின் வார்த்தைகளின்படி செயல்படுவது உனக்குத் தகாது. போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்ததாகத் தெரிகிறது. அர்ஜுனனால் சொல்லப்பட்டு, சஞ்சயனால் மீண்டும் உரைக்கப்பட்ட அனைத்தையும், பாண்டுவின் அந்த மகனால் {அர்ஜுனனால்} சாதிக்க இயலும் என்பதை நான் அறிவேன். ஏனெனில், மூவுலகிலும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான வில்லாளி யாரும் கிடையாது" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.
எனினும், துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் பாண்டவர்கள் குறித்துச் சஞ்சயனிடம் கேட்டான். பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருக்கு உரிய பதிலை மன்னன் {திருதராஷ்டிரன்} தெரிவிக்காத அந்தக் கணமே, வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் கௌரவர்கள் கைவிட்டனர் {உயிரில் ஆசையற்றவர்களானார்கள்}" என்றார் {வைசம்பாயனர்}.
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment