மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-186
விராட பர்வம்
..
கர்ணனிடம் வாதிட்ட கிருபர்
..
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், "ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்ட இந்தப் பெரிய தேரில் ஏறும். (எதிரிப்) படையின் எந்தப் பகுதிக்குள் நீர் ஊடுருவ வேண்டும்? உம்மால் கட்டளையிடப்படும் நான், உம்மை அங்கே அழைத்துச் செல்வேன்!" என்றான்.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, "ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அஞ்சுவதற்கான எந்தக் காரணமும் உனக்கில்லை. ஓ! பெரும் வீரா, நான் உனது எதிரிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, நீ வசதியாக {சுகமாக} இரு. நடக்கவிருக்கும் அடிதடிச்சண்டையில் {melee}, பயங்கரமான பெரிய சாதனைகளைச் செய்து, நான் உன் எதிரிகளுடன் போரிடுவேன். எனது தேரில் அந்த அம்பறாத்தூணிகள் அனைத்தையும் விரைந்து கட்டு. (அவற்றுக்கிடையில்) இருக்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முனை பளபளப்பாக்கப்பட்டதுமான ஒரு வாளை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொள்" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனனின் இந்தச் சொற்களைக் கேட்ட உத்தரன் அனைத்துச் சோம்பலையும் கைவிட்டான். மரத்தில் இருந்து விரைந்து இறங்கி, தன்னுடன் அர்ஜுனனின் ஆயுதங்களைக் கொண்டு வந்தான். பிறகு அர்ஜுனன் அவனிடம் {உத்தரனிடம்}, "நான் கௌரவர்களுடன் போரிட்டு, உனது பசுக்களை மீட்பேன். என்னால் பாதுகாக்கப்பட்ட நிலையில், இந்தத் தேரின் மேல் பாகம் உனக்கு ஒரு அரணாக இருக்கும். வழிகளும், குறுகிய சந்துகளும் மற்றும் தெருக்களின் இதர பகுதிகளும் அந்த அரண் {கோட்டை} கொண்ட நகரத்தின் மாளிகைகளாக இருக்கும். இந்த எனது கரங்கள், அதன் {அரணின்} மதில்களாகவும் நுழைவாயில்களாகவும் இருக்கும். இந்தத் திரிதண்டமும் {ஏர்க்கலப்பை போன்ற இந்தத்தண்டும்}, எனது அம்பறாத்தூணியும் எதிரிகள் அணுகாதபடி தற்காப்பு படைகளாக அமையும். ஒற்றையானதும், பிரம்மாண்டமானதுமான எனது இந்தப் பதாகையே {கொடியே}, உனது நகரத்தில் இருக்கும் அனைத்துக் கொடிகளுக்கும் சமமாக இருக்காதா? இந்த எனது வில்லின் நாண், கவண்பொறிகளாகவும் {Catapult – உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி}, தகரிகளாகவும் {பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி} செயல்பட்டு, முற்றுகையிட்டிருப்போரின் ஆவிகளின் மீது ஏவுகணைகளை உமிழும். தூண்டப்பட்ட எனது கோபம் அவ்வரணை வல்லமைமிக்கதாகச் செய்யும். {அப்போது எழும்} எனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி உனது தலைநகரின் பேரிகைகளை ஒத்திருக்காதா? காண்டீவம் தாங்கிய என்னால் ஓட்டப்படும் இந்தத் தேர், எதிரிப்படையால் வீழ்த்த முடியாததாக இருக்கும். ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்" என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, "நான் இவற்றைக் கண்டு இனியும் அஞ்சமாட்டேன். போரில், கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, இந்திரனுக்கும் உள்ள உறுதியைப் போன்ற உமது உறுதியை நான் அறிவேன். ஆனால் இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, நான் தொடர்ந்து மனக்குழப்பத்துக்கு உள்ளாகிறேன். ஒரு நிச்சயமான முடிவுக்கு வர இயலாத மூடனாக இருக்கிறேன். இவ்வளவு அழகிய அங்கங்களும், மங்கலக்குறிகளையும் கொண்ட ஒரு மனிதன், எத்தகு துயர்நிறைந்த சூழல் வந்தால் தனது ஆண்மையை இழப்பான் {அலியாவான்}? உண்மையில் உம்மைக் கண்டால் மகாதேவனோ {சிவனோ}, இந்திரனோ, கந்தர்வர்களின் தலைவனோ {குபேரனோ}, மூன்றாவது பாலினப் போர்வையில் {மாறுவேடத்தில்} வசிப்பது போலத் தெரிகிறது" என்றான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, "நான் எனது அண்ணனின் {யுதிஷ்டிரரின்} ஆணையை ஏற்றுக் கொண்டு, ஓராண்டு முழுவதும் இந்த நோன்பை நோற்று வருகிறேன் என்பதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {உத்தரா}, உண்மையில் நான் அலியில்லை. ஆனால், இன்னொருவரின் {ஊர்வசியின்} விருப்பத்திற்கு {சாபத்துக்கு} அடிபணிந்தும், அறத்தகுதிகளில் விருப்பம் கொண்டுமே, நான் இந்த அலித்தன்மையேற்கும் நோன்பை நோற்று வந்தேன். ஓ! இளவரசே {உத்தரா}, நான் இப்போது அந்த நோன்பை முடித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்" என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, "இப்போது என் சந்தேகம் முற்றிலும் ஆதாரமற்றது என்று என்னைக் காணச் செய்ததால், ஒரு மகத்தான உதவியை இன்று நீர் எனக்குச் செய்திருக்கிறீர். உண்மையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, உம்மைப் போன்ற ஒரு மனிதன் அலியாக இருக்க முடியாது. போர்க்களத்தில் எனக்கு இப்போது ஒரு கூட்டாளியைப் பெற்றுவிட்டேன். என்னால் இப்போது தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது அச்சங்கள் விலகின. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கட்டளையிடும். கற்ற ஆசானால் தேரோட்டப் பயிற்றுவிக்கப்பட்ட நான், ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, எதிரிப் படைத்தலைவர்களின் தேர்களை உடைக்கவல்ல உமது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பேன். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, வாசுதேவனின் தாருகனைப் போன்றோ, சக்ரனின் {இந்திரனின்} மாதலி போன்றோ, நான் திறமைமிக்கத் தேரோட்டி {ரதசாரதி} என்பதை அறிந்து கொள்ளும்.
(உமது தேரின்) வலதுகை துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டிருப்பதும், ஓடும்போது {அதன்} குளம்புகள் {பாதம்போன்ற அடிக்கால்கள்} தரையில் படுவது அரிதாகவே தெரிவதுமான இந்தக் குதிரை, கிருஷ்ணனின் சுக்ரீவத்திற்கு {சுக்ரீவம்} ஒப்பாயிருக்கிறது. தன் இனங்களில் முதன்மையானதும், இடது துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டதுமான இந்த மற்றொரு அழகிய குதிரையை, மேகபுஷ்பத்துக்கு {மேகபுஷ்பம்} இணையான வேகம் கொண்டதாக நான் கருதுகிறேன். தங்கக்கவசம் பூண்டதும், இடதுபுறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டதுமான இந்த (மூன்றாவது) அழகிய குதிரையை, வேகத்தில் சைப்பியத்திற்கு {சைப்பியம்} நிகரானதாகவும், அதைவிடப் பலத்தில் மேன்மையானதாகவும் நான் கருதுகிறேன். வலப்புறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த (நான்காவது) அழகிய குதிரையை, வேகத்திலும் பலத்திலும் வலாஹகத்திற்கு {வலாஹகம்} மேன்மையானதாக நான் கருதுகிறேன். உம்மைப்போன்ற ஒரு வில்லாளியைப் போர்க்களத்தில் சுமப்பதற்கு இந்தத் தேர் தகுதிவாய்ந்ததாக இருக்கிறது. நீரும் இந்தத் தேரில் இருந்து போரிடத் தகுதி வாய்ந்தவராக இருக்கிறீர். இதைதான் நான் நினைக்கிறேன்" என்றான் {உத்தரன்}.
வைம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு பெரும் சக்தி கொண்ட அர்ஜுனன், தனது கரங்களில் இருந்த கடகங்களைக் {சங்கு வளையங்களைக்} களைந்து, தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகிய கையுறைகளை அணிந்து கொண்டான். பிறகு, சுருண்ட தனது கரிய கூந்தலை, ஒரு வெண்துணியால் கட்டினான். பிறகு முகம் கிழக்கு பார்த்தபடி, அந்த அற்புதத் தேரில் அமர்ந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது உடலைச் சுத்திகரித்து, ஆன்மாவைக் குவித்து, தன் மனதில் தனது அனைத்து ஆயுதங்களையும் நினைவுகூர்ந்தான் {தியானித்தான்}. அனைத்து ஆயுதங்களும் வந்து, அரசமகனான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, நாங்கள் இங்கே இருக்கிறோம். ஓ! இந்திரனின் மகனே, நாங்கள் உனது பணியாட்கள்" என்று சொல்லின. அவற்றை வணங்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, அவற்றைத் தனது கரங்களில் பெற்றுக் கொண்டு, அவற்றிடம் {அந்த ஆயுதங்களிடம்}, "எனது நினைவில் வசிப்பீர்களாக" என்றான் {அர்ஜுனன்}.
தன் அனைத்து ஆயுதங்களையும் அடைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} மகிழ்ச்சியாகத் தெரிந்தான். பிறகு, விரைந்து தனது வில்லான காண்டீவத்தில் நாணேற்றி, அதில் நாணொலி எழுப்பினான். அவ்வில்லின் நாணொலி இரு பலமிக்கக் காளைகளின் மோதலைப் போல் அதிக ஒலியுடன் இருந்தது. அப்படிப் பூமியை நிறைத்த அவ்வொலி பயங்கரமானதாக இருந்தது. எல்லாப்புறங்களிலும் வீசிய காற்று உக்கிரமாக வீசியது.
விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.
பிறகு உத்தரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டவர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நீர் தனியாக இருக்கிறீர். இந்தப் பலமிக்கத் தேர்வீரர்களோ பலராக இருக்கின்றனர். அனைத்து வகை ஆயுதங்களிலும் திறம்பெற்ற இந்த அனைவரையும் போர்க்களத்தில் நீர் எப்படி வெல்லப்போகிறீர்? ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனரே}, நீர் ஒரு தொண்டருமற்றிருக்கிறீர்; அதே வேளையில் கௌரவர்களுக்குப் பலர் இருக்கின்றனர். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மருகில் இருக்கும் நான் இதற்காகவே அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன்" என்றான் {உத்தரன்}.
உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவனை {உத்தரனை} நோக்கி, "ஓ! வீரா {உத்தரா}, அஞ்சாதே. கோஷயாத்திரை நிகழ்வில், வலிமைமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்ட போது, நட்புடன் என்னைப் பின்பற்றி வந்த {தொண்டர்} யாரை பெற்றிருந்தேன்? காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தேவர்கள் மற்றும் தானவர்கள் பலருடன் பயங்கர மோதலில் ஈடுபட்ட எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? வலிமைமிக்க நிவாடகவசர்கள் மற்றும் பௌலோமர்களுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} சார்பாக நான் போரிட்ட போது, எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? ஓ! குழந்தாய் {உத்தரா}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} சுயம்வரத்தில் எண்ணற்ற மன்னர்களுடன் நான் மோதிய போது, அந்தப்போர்க்களத்தில் எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்?
ஆசான் துரோணராலும், சக்ரனாலும் {இந்திரனாலும்}, வைஸ்ரவணனாலும், யமனாலும், வருணனாலும், அக்னியாலும், கிருபராலும், மதுகுலத்தின் கிருஷ்ணனாலும், பினகைதாங்கியாலும் (சிவனாலும்) ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்போது, நான் ஏன் இவர்களுடன் போரிட முடியாது? எனது தேரை விரைந்து நடத்து. உனது இதய நோய் அகலட்டும்" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உத்தரனைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, அந்த வன்னிமரத்தை வலம் வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது ஆயுதங்கள் அத்தனையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சிங்க உருவம் பொறிக்கப்பட்ட பதாகையை இறக்கி, வன்னிமரத்தின் அடியில் வைத்த அந்தப் பலமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, தனது தேருக்கு உத்தரனைத் தேரோட்டியாக வைத்துக் கொண்டு புறப்பாட்டான். விஸ்வகர்மனால் வகுக்கப்பட்ட தெய்வீக மாயையில் உருவானதும், சிங்க வால் கொண்ட குரங்கின் உருவம் தாங்கியதுமான தனது தங்கப்பதாகையை அந்தத் தேரில் ஏற்றினான். உண்மையில் அவன் {அர்ஜுனன்} அக்னி அளித்த கொடையை எண்ணிப் பார்த்தவுடனேயே, அவனது {அர்ஜுனனின்} விருப்பத்தை அறிந்து கொண்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களை அந்தப் பதாகையில் இடம்பெறச் செய்தான் {விஸ்வகர்மன்}.
அழகிய தயாரிப்பான அந்தக் கொடியையும், அதனுடன் இணைக்கப்பட்ட அம்பறாத்தூணிகளையும் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக அழகுடையதுமான அந்த அற்புத கொடிக்கம்பம் வானத்தில் இருந்து திடீரென அவனது தேரில் விழுந்தது. அந்தப் பதாகை {கொடி}, தனது தேருக்கு வந்ததைக் கண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அதை முறையாக வலம் வந்தான். குரங்கு பதாகை கொண்ட குந்தியின் மகனும், ஸ்வேதவாகனன் என்று அழைக்கப்பட்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, உடும்புத் தோலாலான விரலுறைகளை அணிந்து கொண்டு, தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டான்.
பெரும் பலம் கொண்டவனான அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது பெரிய சங்கை எடுத்துப் பலமாக ஊதி, எதிரிகளை மயிர்ச்சிலிர்க்கச் செய்யும் இடியின் ஓசையை எழுப்பினான். அவ்வொலியைக் கேட்ட, வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தரையில் விழுந்தன. பெரிதும் அஞ்சிய உத்தரனும் கீழே தேர்க்காலில் அமர்ந்தான். பிறகு குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தானே கடிவாளத்தைப் பிடித்து, குதிரைகளை எழுப்பி, அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்தான்.
பிறகு உத்தரனை ஆரத்தழுவி, அவனுக்கு உற்சாகமூட்டும் வகையில், "ஓ! இளவரசர்களில் முதன்மையானவனே {உத்தரா}, அஞ்சாதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பிறப்பால் நீயொரு க்ஷத்திரியன். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, பிறகேன் எதிரிகளுக்கு மத்தியில் நீ உற்சாகமிழக்கிறாய்? பல சங்குகளின் ஒலிகளையும், பல பேரிகைகளையும், போருக்காக அணிவகுக்கப்பட்ட தலைவர்களுக்கு மத்தியில் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் இதற்கு முன்னர் நீ கேட்டிருப்பாயே. எனினும், ஏதோ சாராரண மனிதனைப் போல, இந்தச் சங்கொலியால் உற்சாகமிழந்து, கலக்கமடைந்து, நீ ஏன் பயந்து போயிருக்கிறாய்?" என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, "பல சங்கொலிகளையும், படையணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகு சங்கொலியை நான் எப்போதும் கேட்டதில்லை. மேலும் இது போன்ற ஒரு பதாகையை நான் எப்போதும் கண்டதில்லை. இது போன்ற நாணொலியை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. அய்யா, உண்மையில், இந்தச் சங்கொலியாலும், வில்லின் நாணொலியாலும், இந்தப் பதாகையில் இருக்கும் உயிரினங்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட கதறல்களாலும், இந்தத் தேரிச் சக்கரங்களின் சடசடப்பொலியாலும், எனது மனம் மிகவும் குழப்பமடைந்துள்ளது. திசை குறித்த எனது பார்வையும் குழம்பிப் போயிருக்கிறது. எனது இதயம் வலியால் பீடிக்கப்பட்டிருக்கிறது. முழு வானமே இந்தப் பதாகையால் மூடப்பட்டது போல எனக்குத் தெரிகிறது. அனைத்தும் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதைப் போல எனக்குத் தோன்றுகிறது. காண்டீவத்தின் நாணொலியால் எனது காதும் செவிட்டு நிலையை அடைந்துவிட்டது" என்றான் {உத்தரன்}.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, "நான் மீண்டும் எனது சங்கை ஊதப் போகிறேன். ஆகையால், பாதங்களைத் தேரில் அழுத்தி உறுதியாக நில். கடிவாளத்தை இறுக்கமாக பற்றிக் கொள்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அர்ஜுனன் மீண்டும் தனது சங்கை ஊதினான். அந்தச் சங்கு, எதிரிகளைத் துன்பத்தால் நிறைத்து, நண்பர்களின் இன்பத்தை அதிகரித்தது. மலைகளைப் பிளப்பது போலவும், மலைக்குகைகளையும், திசைப்புள்ளிகளையும் துளைப்பது போலவும் அவ்வொலி பெருத்த ஒலியாக இருந்தது. அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் பூமி நடுங்குவதாகத் தெரிந்தது. உத்தரனின் அச்சத்தைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளித்தான்.
அதே வேளையில் துரோணர், "தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், மேகங்கள் வானத்தை மூடியிருக்கும் விதத்தாலும், இந்தப் பூமியே நடுங்குகிறது. இந்தப் போர்வீரன் சவ்யசச்சினை {அர்ஜுனனைத்} தவிர வேறு யாருமில்லை. நமது ஆயுதங்கள் ஒளிரவில்லை; நமது குதிரைகள் உற்சாகமிழந்திருக்கின்றன; நமது நெருப்புகளுக்கு எரிபொருள் கொடுக்கப்பட்டாலும் அவை சுடர்விடவில்லை. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நமது விலங்குகள் அனைத்தும் சூரியனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி, பயங்கரமாக அலறுகின்றன. நமது பதாகைகளில் காக்கைகள் அமர்கின்றன. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதோ, அது {நரி} அடிபடாமல் தப்பி விட்டது.
நரி ஊளையிடுதல்
நமது படைகளுக்கு மத்தியில் பரிதாபமாக ஊளையிட்டபடியே நரி ஓடுகிறது.
இவையாவும் கடுமையான பேரிடரை முன்னறிவிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மயிர்ச்சிலிர்த்திருக்கிறது. நிச்சயமாக, இது போரில் க்ஷத்திரியர்களுக்கு ஏற்படும் பெரும் அழிவை முன்குறிக்கிறது. ஒளிகொண்ட அனைத்துப் பொருட்களும் மங்கியிருக்கின்றன; விலங்குகளும் பறவைகளும் பார்ப்பதற்குக் கடுமையாக இருக்கின்றன; க்ஷத்திரிய அழிவுக்கு அறிகுறியாகப் பல பயங்கர அத்தாட்சிகள் சாட்சியாகக் காணப்படுகின்றன. இந்தச் சகுனங்கள், நமக்கு மத்தியில் நிகழப்போகும் பெரும் அழிவை முன்னறிவிக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, எரியும் விண்கற்களால் உனது அணிகள் குழப்பத்துக்கு ஆழ்வதாகத் தெரிகிறது.
கழுகு
உனது விலங்குகள் உற்சாகமிழந்ததாகத் தெரிகிறது. அவை அழுகின்றன. கழுகுகளும் பறவைகளும் உனது துருப்புகளைச் சுற்றிப் பறக்கின்றன. பார்த்தனின் கணைகளால் உனது படை துன்புறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். உண்மையில், நமது அணிகள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே தெரிகிறது. அவர்களில் யாரும் போரிட ஆவலாக இல்லை. நமது வீரர்களின் முகங்கள் அனைத்தும் மங்கிப்போய் உணர்விழந்து இருக்கின்றன. பசுக்களை முன்னே விட்டு, நமது வீரர்களைப் போருக்காக அணிவகுக்கச் செய்து, தாக்குவதற்குத் தயாராக நாம் இங்கேயே நிற்கலாம்" என்றார் {துரோணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், "நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.
அந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். குறித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா? அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா? அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா?என்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.
நம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும்? {இதில் நமது தவறு என்ன?}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்", என்றான் {துரியோதனன்}.
"திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்", என்றான் {துரியோதனன்}.
"தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்? தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும்? (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்?" என்றான் {துரியோதனன்}.
துரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , "ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.
நமது ஆசானுக்குப் {துரோணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும்? நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும்? எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்", என்றான் {கர்ணன்}.
விவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து" என்றான் {கர்ணன்}.
கர்ணன் {துரியோதனனிடம்} சொன்னான், "இந்த அருளப்பட்டவர்கள், அச்சத்தில் இருப்பவர்களாக, துயரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவர்களாக, போர் செய்ய விருப்பமில்லாதவர்களாக இருப்பதைக் காண்கிறேன். வருவது மத்ஸ்யர்களின் மன்னனாக {விராடனாக} இருந்தாலும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருந்தாலும், பெருகிவரும் கடலைத் தடுக்கும் கரைகளைப் போல நான் அவனைத் தடுப்பேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் இந்த நேரான பறக்கும் கணைகள், சீறிச் செல்லும் பாம்புகளைப் போல இலக்குத் தப்பாதவையாகும். எனது இலகுவான கரங்களால் அடிக்கப்படும் இந்தக் கூரிய முனைகளும், தங்க இறகுகளும் கொண்ட கணைகள், வெட்டுக்கிளிகளால் மூடப்படும் மரம் போலப் பார்த்தனை {அர்ஜுனனை} எல்லாப்புறங்களிலும் மூடும். இந்த இறகு படைத்த கணைகளால் அழுத்தப்படும் இந்த வில்லின் நாண், தோலாலான எனது கையுறைகளால் ஒலி எழுப்பும். அதனால் கேட்கப்படும் ஒலி இரு முரசுகளின் ஒலியை ஒத்திருக்கும்.
(கடந்த) பதிமூன்று {13} ஆண்டுகளாகத் தவ நோன்புகளில் ஈடுபட்ட பீபத்சுவால் {அர்ஜுனனால்}, இந்த மோதலில் என்னை மென்மையாகவே தாக்க முடியும். நற்குணங்கள் கொண்ட அந்தணனாக மாறியிருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, என்னால் அடிக்கப்படும் ஆயிரம் கணைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த மனிதனாக மாறியிருக்கிறான். உண்மையில், இந்த வலிமைமிக்க வில்லாளி மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான். மனிதர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனுக்கு, நானும், எந்த வகையிலும் சளைத்தவனல்ல. என்னால் அடிக்கப்படும் கழுகின் இறகுகளைக் கொண்ட எனது தங்கக் கணைகள் மின்மினி பூச்சிகள் மொய்ப்பதைப் போல இன்று வானத்தில் தெரியட்டும்.
போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொன்று, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} நான் வாக்குறுதி அளித்திருந்ததும், திரும்பச் செலுத்துவதற்குக் கடினமானதுமான எனது கடனை இன்று செலுத்துவேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் நேரான கணைகளின் பற்களுக்கிடையில் நிற்பதற்குத் தேவர்களிலோ அசுரர்களிலோ யாரும் இல்லையெனும்போது, வேறு எந்த மனிதன் இருக்க முடியும்? இறகு படைத்து, அழுந்திய கணுக்களுடன் பறக்கும் எனது கணைகள் மின்மினிப் பூச்சிகளாக வானத்தில் தெரியட்டும். இந்திரனின் வஜ்ரத்தைப் போல அவன் கடினமாக இருந்தாலும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியை அவன் {அர்ஜுனன்} பெற்றிருந்தாலும், எரிகொள்ளிகளைக் கொண்டு ஒரு யானையைத் துன்புறுத்துவதைப் போல, நான் இன்று நிச்சயம் பார்த்தனை {அர்ஜுனனை} அடிப்பேன்.
ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பது போல, பலமிக்கத் தேர்வீரனும், துணிவுமிக்கவனும், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவனும், {என்னைத்} தடுத்து நிறுத்த இயலாதவனுமான அந்தப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் பிடிப்பேன். கட்டுக்கடங்காத நெருப்பு போல, வாட்கள், பராசங்கள் மற்றும் கணைகள் என்ற எரிபொருளால் சுடர்விட்டெரிந்து எதிரிகளை எரிக்கும் அந்தப் பாண்டவ நெருப்பு {அர்ஜுனன்}, (நான் வழிநடத்தும்) எண்ணிலடங்கா தேர்களை இடியாகவும், எனது குதிரைகளின் வேகத்தைக் காற்றாகவும் கொண்டிருக்கும் வலிமைமிக்க மேகம் போன்ற நான் அடிக்கும் தொடர்ச்சியான கணை மழையால் அணைக்கப்படும். பாம்புகள் எறும்புப் புற்றைத் துளைப்பதைப் போல, எனது வில்லில் இருந்து புறப்படும் நஞ்சுமிக்கப் பாம்புகளான எனது கணைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} உடலைத் துளைக்கும். கோங்கு மலர்களால் { Karnikara flowers} மூடப்படும் மலையைப் போல, நன்கு கடினமாக்கப்பட்டதும், நேரானதும், தங்க இறகுகள் கொண்டதும், பெரும் சக்தி கொண்டதுமான எனது கணைகளால் குந்தியின் மகன் {அர்ஜுனன்} துளைக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்.
துறவியரில் சிறந்தவரான ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த நான், அவற்றின் சக்தியை நம்பி, தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது எறிவேலால் அடிக்கப்பட்டு, அவனது {அர்ஜுனனது} தேரின் கொடியின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, இன்று பயங்கரமாகக் கதறிக் கொண்டு தரையில் விழும். எதிரியின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தில் அமர்ந்திருக்கும் (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) உயிரினங்களின் கதறல்கள் இன்று விண்ணை நிறைக்கும். அவை {அந்த உயிரினங்கள்} அனைத்து திக்குகளுக்கும் பறந்து போகும். அர்ஜுனனை அவனது தேரில் இருந்து கீழே வீசி, துரியோதனனின் இதயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கணையின் வேரை நான் இன்று பிடுங்குவேன். தேர் உடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, வீரம் குன்றி, பாம்பு போலப் பெருமூச்சு விடும் பார்த்தனை {அர்ஜுனனை}, இன்று கௌரவர்கள் காண்பார்கள். தங்கள் விருப்பப்படி செல்வங்களான பசுக்களைக் கௌரவர்கள் எடுத்துச் செல்லட்டும். ஆனால் அவர்கள் விரும்பினால், தங்கள் தேர்களில் இருந்து கொண்டு, நான் செய்யும் போரைச் சாட்சியாகக் காணட்டும்" என்றான் {கர்ணன்}
கிருபர் {கர்ணனிடம்} சொன்னார், "ஓ! ராதேயா {கர்ணா}, உனது கொடிய இதயம் எப்போதும் போரை விரும்புகிறது. பொருட்களின் உண்மை இயல்பை நீ அறிவதில்லை; அதனால் {போரினால்} ஏற்படும் பின்விளைவுகளையும் நீ கணிப்பதில்லை. ஊகித்தறியும்படி சாத்திரங்களில் பல்வேறு விதமான தகுமுறைகள் {expedients வழிமுறைகள்} உண்டு. கடந்த காலத்தை அறிந்தவர்கள் போர் மிகப்பாவகரமானது என்று கருதி, அதை அவற்றில் {சாத்திரங்களில்} சொல்லியிருக்கிறார்கள். காலமும் இடமும் சாதகமாக இருக்கும்போதுதான் படையெடுப்புகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
எனினும், தற்போதைய நிகழ்வில், காலம் சாதகமற்று இருப்பதால், நல்ல முடிவுகள் இல்லாது போகும். சரியான காலத்திலும், இடத்திலும் காட்டப்படும் பராக்கிரமம் நன்மையைத் தரும். அதன் {காலம் மற்றும் இடம் ஆகியவற்றின்} சாதகம் மற்றும் பாதகமே ஒரு செயலுடைய வாய்ப்புகளின் தன்மையைத் தீர்மானிக்கிறது. தேர் செய்பவனின் கருத்துப்படி கற்றமனிதர்களால் செயல்பட முடியாது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} மோதல் நமக்கு நல்லதல்ல!
குருக்களை {கௌரவர்களை} (கந்தர்வர்களிடம் இருந்து) தனியாகவே அவன் {அர்ஜுனன்} காத்தான். தனியாகவே அவன் அக்னியை நிறைவு கொள்ளச் செய்தான். ஐந்து வருடங்கள் தனியாகவே அவன் (இமயத்தின் மார்பில்} பிரம்மச்சர்ய வாழ்வை நோற்றான். தனது தேரில் சுபத்திரையைக் கடத்திச் சென்ற அவன் {அர்ஜுனன்}, தனியாகவே கிருஷ்ணனை தனிப்போருக்கு அறைகூவி அழைத்தான். தன் முன் காட்டுவாசியாக நின்ற ருத்திரனுடன் {சிவனுடன்} தனியாகவே அவன் போரிட்டான்.
(ஜெயத்ரதனால்) கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை} இதே காட்டில்தான் பார்த்தன் மீட்டான். இந்திரனுக்குக் கீழிருந்து ஐந்து வருடங்கள் ஆயுதங்களின் அறிவியலைக் கற்றவன் அவன் {அர்ஜுனன்} ஒருவனே. தனியாகவே அனைத்து எதிரிகளையும் வீழ்த்திய அவன் {அர்ஜுனன்} குருக்களின் {கௌரவர்களின்} புகழைப் பரப்பினான். அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {அர்ஜுனன்}, {ஒருகணத்தில்} கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனனையும், மறுகணத்தில் அவனது {சித்திரசேனனின்} ஒப்பற்ற துருப்புகளையும், தனியாகவே போர்க்களத்தில் வீழ்த்தினான். தேவர்களாலும் கொல்லமுடியாதவர்களான நிவாடகவசர்களையும், காலகஞ்சர்களையும் தனியாகவே அவன் தூக்கியெறிந்தான்.
எனினும், ஓ! கர்ணா, தனியாளாகவே இந்தப் பூமியின் பல தலைவர்களை அடக்கிய, அந்தப் பாண்டு மகன்களில் யாராவது ஒருவரைப் போலாவது, நீ என்ன செய்திருக்கிறாய்? போர்க்களத்தில் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதுவதற்கு இந்திரனே கூடத் தகுதியற்றவனே. எனவே, அர்ஜுனனுடன் போரிட விரும்பும் ஒருவன், மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைப் பொறுத்தவரை, நீ உன் வலக்கரத்தை விரித்து, உனது சுட்டுவிரலை நீட்டி, கொடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்பின் நச்சுப்பற்களைப் பிடுங்க விரும்புகிறாய். அல்லது தெளிந்த நெய்யை பூசிக் கொண்டு, {பட்டு போன்ற} மென்மையான ஆடை உடுத்திக் கொண்டு, கொழுப்பு, ஊனீர் {இறைச்சியில் கிடைக்கும் கொழுப்பு}, தெளிந்த நெய் ஆகியவற்றை உண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் {ஊடுருவி, அதைக்} கடந்து செல்ல விரும்புகிறாய்.
தனது கைகளையும், கால்களையும் கட்டிக் கொண்டும், கழுத்தைச் சுற்றி ஒரு பெருங்கல்லைக் கட்டிக் கொண்டும், வெறுங்கையால் கடலைக் கடக்க நினைப்பவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்? இத்தகு செயலில் இருக்கும் ஆண்மைதான் என்ன? ஓ! கர்ணா, ஆயுதங்களில் திறமையற்றுப் பலவீனமாக இருப்பவன், ஆயுதங்களில் பலமிக்கவனும் திறமைசாலியுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரிட விரும்பினால் அவன் மூடனே. நேர்மையற்ற முறையில் நம்மால் ஏமாற்றப்பட்டு, பதிமூன்று {13} வருட வனவாசத்தில் இருந்து விடுபட்ட அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்} நம்மை நிர்மூலமாக்கமாட்டானா? கிணற்றுக்குள் மறைந்திருந்த நெருப்பு போலப் பார்த்தன் {மறைந்து} இருந்த இடத்திற்கு அறியாமையின் காரணமாக வந்ததால், உண்மையில், நாம் பெருத்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டோம்.
அவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிர்க்கப்பட இயலாதவனாக இருப்பினும், நாம் அவனை எதிர்த்துப் போரிட்டே ஆக வேண்டும். எனவே, கவசமணிந்து அணிவகுக்கப்படும் நமது துருப்புகள், தாக்குவதற்குத் தயாராக இருக்கட்டும். துரோணர், துரியோதனன், பீஷ்மர், {கர்ணனாகிய} நீ, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நாம் ஆகிய அனைவரும் சேர்ந்து பிருதையின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். ஓ! கர்ணா, தனியாகப் போரிட்டு, இப்படித் துடுக்காகச் செயல்பட்டுவிடாதே! நாம் ஆறு தேர்வீரர்களும் ஒன்றுபட்டு, அவனுக்கு இணையானவர்களாகி, வஜ்ரதாங்கியைப் போலக் கடுமையாக இருப்பவனும், போரிடத் தீர்மானத்துடன் இருப்பவனுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். பெரும் வில்லாளிகளான நாம், அணிவகுக்கப்பட்ட நமது துருப்புகளின் உதவியைப் பெற்று, கவனமாக நின்று, தானவர்கள் வாசவனுடன் {இந்திரனுடன்} போரிடுவது போல {அர்ஜுனனிடம்} போரிடுவோம்" என்றார் {கிருபர்}.
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment