மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-184
விராட பர்வம்
..
போருக்குப் புறப்படுதல்
.......
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட சுசர்மன் அவமானத்தில் மூழ்கித் தனது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். (அடிமைத்தனத்தில் இருந்து) விடுபட்ட அவன் {சுசர்மன்}, மன்னன் விராடனிடம் சென்று அந்த ஏகாதிபதியை வணங்கிய பிறகு {அங்கிருந்து} புறப்பட்டான். நோன்புகள் நோற்றுப் பணிவுடன் இருந்த பாண்டவர்கள் தங்கள் சொந்த கரங்களின் பலத்தால் பதிலளிக்கும் வகையில் தங்கள் எதிரிகளைக் கொன்று, சுசர்மனை விடுவித்த பிறகு, அந்த இரவை மகிழ்ச்சியாகப் போர்க்களத்திலேயே கழித்தார்கள். அந்த வலிமைமிக்க வீரர்களும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பராக்கிரமம் கொண்டவர்களுமான குந்தியின் மகன்களுக்குச் செல்வமும் மரியாதையும் அளித்து விராடன் மனநிறைவு கொண்டான்.
பிறகு விராடன், "எனது இந்த ரத்தினங்கள் அனைத்தும் எப்படி என்னுடையவையோ, அது போலவே அவை உங்களுடையவையும் ஆகும். உங்கள் இன்பத்துக்குத் தக்க நடந்து கொண்டு, நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழுங்கள். போர்க்களத்தில் எதிரிகளை அடிப்பவர்களே, நான் உங்களுக்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட காரிகைகளையும், அபரிமிதமான செல்வத்தையும், நீங்கள் விரும்பும் பிறவற்றையும் அளிப்பேன். உங்கள் வலிமையினால் இன்றைய துயரில் இருந்து விடுவிக்கப்பட்ட நான், இப்போது வெற்றி மகுடம் சூட்டப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் மத்ஸ்யர்களுக்குத் தலைவர்களாவீர்கள்" என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மத்ஸ்யர்களின் மன்னனால் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இப்படிச் சொல்லப்பட்டதும், யுதிஷ்டிரன் தலைமையிலான அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் தங்கள் கரங்களைக்கூப்பித் தனித்தனியாக அவனுக்கு {விராடனுக்கு} மறுமொழி கூறும் வகையில், "ஓ! ஏகாதிபதி {விராடரே}, நீர் சொல்வது அனைத்தாலும் நாங்கள் பெரும் மன நிறைவு கொண்டாலும், எதிரிகளிடம் இருந்து இன்று நீர் விடுபட்டத்தே எங்களுக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது" என்றனர்.
இப்படிப் பதிலளிக்கப்பட்ட மன்னர்களில் முதன்மையானவனும், மத்ஸ்யர்களின் தலைவனுமான விராடன் மீண்டும் யுதிஷ்டிரனிடம், "வாரும், நாம் உம்மை மத்ஸ்யர்களின் ஆட்சிக்கட்டிலில் நிறுவுகிறோம். மேலும் பூமியில் கிடைத்தற்கரிய பொருட்களையும், ஆசைக்குகந்த பொருட்களையும், நாங்கள் உமக்கு அளிப்போம். எங்கள் கைகளில் அனைத்தையும் பெற நீர் தகுதியுடையவர். ஓ! வியாக்ர வகை அந்தணர்களில் முதன்மையானவரே {கனகரே}, ரத்தினங்கள், பசுக்கள், மாணிக்கங்கள், முத்துகள் ஆகியவற்றை நான் உமக்கு அளிப்பேன். நான் உம்மை வணங்குகிறேன். உம்மாலேயே நான் இன்று எனது மகன்களையும் நாட்டையும் மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன். பேரழிவு மற்றும் ஆபத்தால், பாதிப்பும் அச்சமும் அடைந்த நான், உமது வலிமையினாலேயே எதிரியிடம் விழாமலிருந்தேன்" என்றான் {விராடன்}.
பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் மத்ஸ்யனிடம் {விராடனிடம்}, "நீர் பேசும் இனிமையான சொற்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீராக. நமது நண்பர்களுக்கு இந்த நல்ல செய்தியைச் சொல்லும் பொருட்டும், உமது வெற்றியைப் பிரகடனப்படுத்தும் பொருட்டும், உமது உத்தரவின் பேரில் தூதர்கள் இப்போதே நகரத்திற்கு விரைந்து செல்லட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}. அவனது இந்தச் சொற்களைக் கேட்ட மன்னன் மத்ஸ்யன் {விராடன்} தூதுவர்களைக் அழைத்து, "நீங்கள் நகரத்திற்குத் திரும்பி, போர்கள வெற்றியைப் பிரகடனப்படுத்துங்கள். நன்கு அலங்கரிக்கப்பட்ட காரிகைகளும், தாதிகளும் அனைத்துவகை இசைக்கருவிகளை வாசித்தபடி நகரத்தை விட்டு வெளியே {எங்களை எதிர் கொண்டழைக்க} வரட்டும்" என்றான் {விராடன்}. மத்ஸ்யர்கள் மன்னனால் {விராடனால்} இப்படி உத்தரவிடப்பட்ட அந்த மனிதர்கள், அந்த ஆணையைத் தலைமேல் கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் {அங்கிருந்து} புறப்பட்டுச் சென்றனர். அந்த இரவிலேயே நகரம் {நோக்கி} திரும்பிய அவர்கள், மன்னன் அடைந்த வெற்றியை சூரிய உதயத்தின் போது நகரவாயிலில் பிரகடனப்படுத்தினார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பசுக்களை மீட்க ஆவல் கொண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களைத் தொடர்ந்து சென்ற போது, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய துரியோதனன், விராடனின் ஆளுகைக்குட்பட்ட {வேறொரு} பகுதி மீது படையெடுத்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், சிறந்த ஆயுதங்களை அறிந்த கிருபர், அசுவத்தாமன், சுபலனின் மகன் {சகுனி}, துச்சாசனன், விவிம்சதி, விகர்ணன், பெரும் சக்தி கொண்ட சித்திரசேனன், துர்முகன், துஸ்ஸகன் ஆகியோரும், ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இன்னும் பிற பெரும் வீரர்களும் மத்ஸ்ய ஆட்சிப் பகுதியை அடைந்து, மன்னன் விராடனின் மந்தையாளர்களை {இடையர்களை – கோ-பாலர்களை} விரைவாக விரட்டிவிட்டு, பசுக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தனர்.
தேர்க்கூட்டங்களால் அனைத்துப்புறங்களிலும் சூழப்பட்ட கௌரவர்கள், அறுபதினாயிரம் {60,000} பசுக்களைப் பிடித்தனர். அந்தப் பயங்கர மோதலில் அடிபட்ட மந்தையாளர்கள் {கோ-பாலர்கள்}, துயரத்தால் உரக்கக் கதறினார்கள். {அப்போது} மந்தையாளர்களின் தலைவன் {மந்தையர்த்தலைவன்} ஒருவன், பெருவேகத்துடன் தேரில் ஏறி, துக்கத்தில் அழுது கொண்டே நகரத்திற்குப் புறப்பட்டான். மன்னனின் {விராடனின்} நகரத்திற்குள் நுழைந்த அவன், அந்த இடத்திற்கு முன்னேறி, தேரில் இருந்து விரைந்து இறங்கி, (என்ன நடந்தது) என்பதை உரைக்கலானான். பூமிஞ்சயன் {உத்தரன்} என்ற பெயர் கொண்ட மத்ஸ்யனின் பெருமிக்க மகனைக் கண்டு, அரச பசுக்கள் பிடிப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் {உத்தரனிடம்} தெரிவித்தான்.
மேலும் அவன் அறுபதினாயிரம் {60,000} பசுக்களைக் கௌரவர்கள் பிடித்ததாகவும் சொன்னான். {பிறகு, அவன்-மந்தையர்த்தலைவன்}, "எனவே, ஓ! நாட்டின் புகழை மேம்படுத்துபவனே {உத்தரா}, உனது கால்நடைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்காக எழு! ஓ! இளவரசே {உத்தரா}, (நாட்டின்) நன்மையை அடைய நீ விரும்பினால், நேரத்தைக் கடத்தாமல் உடனே புறப்படு. உண்மையில், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} உன்னை வெறுமையான நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். (உனது தந்தையான) மன்னர் {விராடர்}, "எனது மகன் எனக்கு நிகரான வீரனாவான். எனது குலத்தைத் (குலத்தின் பெருமையைத்) தாங்குபவன் அவனே. கணைகளிலும் ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த போர்வீரனான எனது மகன் {உத்தரன்} பெரும் துணிவு கொண்டவனாவான்" என்று சபையில் உன்னைக் குறித்துப் {எப்போதும்} பெருமையாகப் பேசுவார்.
ஓ!, அந்த மனிதர்களின் தலைவனுடைய {விராடனுடைய} சொல் உண்மையாகட்டும்! ஓ! மந்தை உரிமையாளர்களின் தலைவா {உத்தரா}, உனது கணைகளின் பயங்கர சக்தியால் குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகளை எரித்து, அவர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்டு வா. {யானைகளில்} தலைமை யானை, {வேறு யானை} மந்தையை விரட்டுவது போல, உனது வில்லில் இருந்து புறப்படும், தங்க இறகுகள் கொண்ட நேரான கணைகளைக் கொண்டு எதிரி தலைவர்களைத் துளைத்திடு. உனது வில் வீணையைப் போல இருக்கிறது. அதன் இரண்டு முனைகளும் தந்தத்தாலான தலையணையை ஒத்திருக்கிறது. அதன் முக்கியக் கம்பியான அதன் நாண், அதன் தண்டு, விரல்களைத் தாங்கும் இடம், அதில் இருந்து அடிக்கப்படும் அம்புகள் ஆகியன இசைக்குறிப்புகளைப் போல இருக்கின்றன. எதிரிகளுக்கு மத்தியில் இந்த வீணையின் {வில்லின்} இசையொலியால் {கணைமழையால்} {அவர்களை} அடித்திடு!
ஓ! தலைவா {உத்தரா}, வெள்ளி நிறம் கொண்ட உனது குதிரைகள் தேரில் பூட்டப்படட்டும். தங்க சிங்க இலச்சனை கொண்ட உனது கொடி ஏற்றப்படட்டும். தங்க இறகுகளும், கூரிய முனைகளும் கொண்ட கணைகள், உனது வலிய கரங்களால் அடிக்கப்பட்டு, சூரியனைத் தடுக்கும் கிரகணம் போல, அந்த மன்னர்களின் வழிகளைத் தடுக்கட்டும். அசுரர்களை வீழ்த்தும் வஜ்ரம் தாங்குபவனைப் {இந்திரனைப்} போல, அனைத்துக் குருக்களையும் {கௌரவர்களையும்} போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புகழை அடைந்து நகரம் திரும்புவாயாக. மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனாக நீ இருப்பதால், அறம்சார்ந்த வீரர்களில் முதன்மையான பாண்டு மகன்களில் அர்ஜுனன் போல நீயே இந்த நாட்டின் ஒரே புகலிடம். அவனது சகோதரர்களுக்கு அர்ஜுனன் எப்படியோ, அதே போல, இந்த நாட்டிற்குள் வசிப்போருக்கும் நீயே புகலிடம் என்பதில் ஐயமில்லை. உண்மையில், இந்த ஆட்சியின் குடிமக்களாகிய நாங்கள் உன்னில் எங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறோம்" என்றான் {மந்தையர்த்தலைவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு, பெண்களுக்கு மத்தியில் மூச்சுக்கு மூச்சு வீரச் சொற்களைப் பேசிய அந்த மந்தையாளனால் {கோபாலனால்} இப்படிச் சொல்லப்பட்ட இளவரசன் {உத்தரன்}, தற்புகழ்ச்சியின் வெளிப்பாடாக {பின்வரும்} இச்சொற்களைச் சொன்னான்"
உத்தரன் சொன்னான், "குதிரைகளின் மேலாண்மையில் திறனுடைய ஒரு தேரோட்டி வந்தால், வில்லைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் நான், பசுக்களின் பாதையைத் தொடர்ந்து இன்றே புறப்படுவேன். எனினும், எனக்குத் தேரோட்டியாக இருக்கத்தக்க மனிதனை நான் அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல், புறப்படத் தயாராக இருக்கும் எனக்கு ஒரு தேரோட்டியைத் தேடுங்கள். ஒரு மாதம் முழுமையோ அல்லது இருபத்தெட்டு இரவுகளோ {நாட்களோ} நாளுக்கு நாள் {தினமும்} தொடர்ச்சியாக நடந்த பெரும்போரில், எனது தேரோட்டி கொல்லப்பட்டான். குதிரைகளின் மேலாண்மையை அறிந்த மற்றொரு மனிதன் கிடைத்தவுடன், எனது கொடியை உயர ஏற்றி, உடனே புறப்படுவேன். பிறகு, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த எதிரிப்படைக்கு மத்தியில் ஊடுருவி, ஆயுத வலிமையில் அற்பர்களும், பலவீனர்களுமான குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை நான் மீட்டு வருவேன்.
தானவர்களை அச்சுறுத்தும் இரண்டாவது வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} போல, துரியோதனன், பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}ஆகியோரையும், அங்கே கூடியிருக்கும் வலிய வில்லாளிகளையும் போரில் அச்சுறுத்தி, இக்கணத்திலேயே நான் பசுக்களை மீட்டு வருவேன். (எதிர்க்க) யாருமற்றதாலேயே, குருக்கள் {கௌரவர்கள்} பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். நான் அங்கில்லாத போது, என்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றுகூடி வந்திருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகக் காண்பார்கள். "நம்மை எதிர்ப்பது அர்ஜுனனா?" என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்" என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், இளவரசனால் {உத்தரனால்} பேச்சப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். பிறகு, சிறிது நேரம் கழித்து, துருபதன் மகளும், பாஞ்சால இளவரசியும், களங்கமற்ற அழகு கொண்டவளும், கொடியால் செய்யப்பட்டவளும், நெருப்பில் உதித்தவளும், உண்மை, நேர்மை ஆகிய அறங்களைக் கொண்டு, தனது கணவர்களின் நன்மையில் எப்போதும் கவனமுள்ளவளும், தனது அன்பிற்குரிய மனைவியுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} தனிமையில் பேசினான் {அர்ஜுனன்}. வீரனான அந்த அர்ஜுனன் {திரௌபதியிடம்}, "ஓ! அழகியே {திரௌபதி}, எனது வேண்டுதலின் படி உத்தரனிடம் தாமதமில்லாமல் சென்று, "திறமையும் உறுதியும் கொண்ட இந்தப் பிருஹந்நளன், பாண்டு மகனின் {அர்ஜுனனுடைய} தேரோட்டியாக இருந்தான். பல போர்களில் பங்குபெற்ற அவன் {பிருஹந்நளன்} உனது தேரோட்டியாகட்டும்" என்று சொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மகளிருக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் இளவரசன் {உத்தரன்} சொல்லிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்ட பாஞ்சாலியால் {திரௌபதியால்}, {அச்சொற்களில் இருந்த} பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} குறித்த மறைமுகக் குறிப்புகளை அமைதியாகத் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாணத்துடன் பெண்கள் மத்தியில் இருந்து வெளியேறிய அப்பாவியான அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அவனிடம் {உத்தரனிடம்} இச்சொற்களை மெதுவாகப் பேசினாள். "வலிமைமிக்க யானைப் போன்றவரும், பிருஹந்நளன் என்ற பெயரில் அறியப்படுபவருமான அந்த அழகிய இளைஞர், முன்னர் அர்ஜுனருக்குத் தேரோட்டியாக இருந்தார். அந்தச் சிறப்புமிக்க வீரரின் {அர்ஜுனரின்} சீடரும், வில்லைப்பயன்படுத்துபவர்களில் யாருக்கும் சளைக்காதவருமான அவரை, நான் பாண்டவர்களுடன் வாழ்ந்து வந்த போதே அறிவேன். அக்னியால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, அர்ஜுனருடைய அற்புதமான குதிரைகளின் கடிவாளத்தை இவரே பிடித்திருந்தார். இவரைத் தேரோட்டியாகக் கொண்ட பார்த்தர், காண்டவப்பிரஸ்தத்தின் அனைத்து உயிரினங்களையும் வீழ்த்தினார். உண்மையில், அவருக்கு {பிருஹந்நளனுக்கு} நிகரான தேரோட்டி வேறு ஒருவருமில்லை" என்றாள் {திரௌபதி}.
உத்தரன் {திரௌபதியிடம்}, "ஓ! சைரந்திரி, இந்த இளைஞனை நீ அறிவாயா? இந்த அலியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை நீ அறிந்திருக்கிறாய். எனினும், ஓ! அருளப்பட்டவளே {மாலினி}, என் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடிக்குமாறு நானே பிருஹந்நளையிடம் கோர முடியாது" என்றான்.
அதற்குத் திரௌபதி {உத்தரனிடம்}, "ஓ! வீரரே, அழகிய இடைகள் கொண்ட காரிகையான உனது தங்கையின் {உத்தரையின்} சொற்களுக்குப் பிருஹந்நளன் கீழ்ப்படிவார் என்பதில் ஐயமில்லை. அவர் {பிருஹந்நளன்} உனக்குத் தேரோட்டியாக இருக்கச் சம்மதித்தால், நீ குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை மீட்டுத் திரும்புவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது" என்றாள் {திரௌபதி}.
சைரந்திரியால் இப்படிச் சொல்லப்பட்ட உத்தரன், தனது தங்கையிடம் {உத்தரையிடம்}, "ஓ! களங்கமற்ற அழகுடையவளே {உத்தரை}, நீயே சென்று பிருஹந்நளையை இங்கே அழைத்து வருவாயா?" என்று கேட்டான். தனது அண்ணனால் அனுப்பப்பட்ட அவள் {உத்தரை}, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மாறுவேடத்தில் தங்கியிருந்த ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்." {என்றார் வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படித் தனது தமையனால் {உத்தரனால்} அனுப்பப்பட்டவளும், தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் தமையனுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளும், குளவி போன்ற மெல்லிய இடுப்பு கொண்டவளும், லட்சுமியைப் போன்ற பிரகாசமிக்கவளும், மயிலின் மென்மையான இறகைப் போன்ற அழகிய அங்கங்கள் கொண்டவளும், முத்து வலயங்கள் {zone of pearls) படர்ந்த இடுப்பு கொண்டவளும், சற்றே சரிந்த கண்ணிமைகள் கொண்டவளும், அனைத்து மங்கலங்களையும் தனது உருவில் கொண்டவளுமான தொலைபுகழ் கொண்ட மத்ஸ்யமன்னன் மகள் {உத்தரை}, கருமேகங்களை நோக்கி மின்னல் கீற்று விரைவதைப் போல ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.
களங்கமற்றவளும் மங்களகரமானவளும், அழகிய பற்கள் கொண்டவளும், மெல்லிய இடுப்புடையவளும், யானையின் துதிக்கையைப் போன்ற தொடைகளும், அவை ஒன்றுக்கொன்று நெருக்கமானதாக அமையப்பட்டவளும், மேனியில் அற்புதமான மாலையைத் தரித்தவளுமான விராடன் மகள் {உத்தரை}, தன் துணையை நாடும் பெண் யானையைப் போலப் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அடைந்தாள். விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவளும், இந்திரனுடைய செழிப்பின் உருவம் போன்றவளும், மிகுந்த அழகுடையவளும், அகன்ற கண்களுடையவளும், வழிபடப்பட்டுக் கொண்டாடப்படுபவளுமான அந்த அழகிய காரிகை அர்ஜுனனை வணங்கினாள். அவளால் {உத்தரையால்} வணங்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நெருக்கமான தொடைகளும், தங்க நிறமும் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {உத்தரையிடம்}, "அட்டிகை பூட்டி வந்த காரிகையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது? ஓ! மருண்ட பார்வை கொண்ட கன்னிகையே, உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? ஓ! அழகிய பெண்ணே {உத்தரை}, உனது முகம் ஏன் உற்சாகமற்றிருக்கிறது? இவை யாவையும் தாமதமில்லாமல் எனக்குச் சொல்!" என்று கேட்டான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, (துயரத்தில் இருக்கும்) தோழியான அகன்ற கண்களுடைய இளவரசியைக் {உத்தரையைக்} கண்ட அவளது {உத்தரையின்} தோழன் (அர்ஜுனன்), உற்சாகத்துடன் (இச்சொற்களைச்) சொல்லி, அங்கே வந்த அவளது வருகைக்கான காரணத்தை விசாரித்தான். அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை} அணுகிய அந்த இளவரசி {உத்தரை}, தனது பெண் பணியாட்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது பணிவைச் சரியாகக் காட்சிப்படுத்தி, அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பிருஹந்நளா, இந்த ஆட்சிக்குட்பட்ட பசுக்கள், குருக்களால் {கௌரவர்களால்} ஓட்டிச் செல்லப்படுகின்றன. அவற்றை வெற்றிக் கொள்ள எனது தமையன் {உத்தரன்} கையில் வில்லுடன் புறப்பட இருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தேரோட்டி போர்க்களத்தில் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட எனது தமையனின் தேரோட்டிக்கு நிகராகச் செயல்படக்கூடியவர் வேறு ஒருவரும் இல்லை. ஒரு தேரோட்டியை அடைய முயன்று வரும் அவரிடம் {உத்தரரிடம்}, ஓ! பிருஹந்நளா, குதிரைகளின் மேலாண்மையில் உனக்கிருக்கும் நிபுணத்துவத்தைக் குறித்துச் சைரந்திரி {மாலினி} பேசினாள். முன்பொரு சமயத்தில் நீயே அர்ஜுனரின் தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்துதான் அந்தப் பாண்டு மகன்களின் காளை {அர்ஜுனர்} தனியாக முழு உலகையும் அடக்கியிருக்கிறார். எனவே, ஓ! பிருஹந்நளா, நீ எனது தமையனின் {உத்தரனின்} தேரோட்டியாகச் செயல்படுவாயாக. (இந்நேரத்தில்) நமது பசுக்களைப் பெருந்தூரத்திற்குக் குருக்கள் {கௌரவர்கள்} ஓட்டிச் சென்றிருப்பார்கள். என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், என் சொற்களுக்கு நீ செயலாற்றவில்லையென்றால், பாசத்துடன் இந்தச் சேவையை உன்னிடம் கேட்கும் நான் எனது உயிரை விடுவேன்" என்றாள் {உத்தரை}.
இப்படி, அழகிய இடுப்புக் கொண்ட தனது தோழியால் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவனான அளவிலா பராக்கிரமம் கொண்டவன் {அர்ஜுனன்}, அந்த இளவரசனின் {உத்தரனின்} முன்பு சென்றான். கன்றுக்குப் பின் ஓடும் பெண்யானையைப் போல, அகன்ற கண்களைக் கொண்ட அந்த இளவரசியும் {உத்தரையும்}, மதநீர் பெருகிய யானை போல விரைந்த நடையுடன் சென்ற அந்த வீரனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றாள். தூரத்திலேயே அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட அந்த இளவரசன் {உத்தரன்}, "உன்னைத் தனது தேரோட்டியாகக் கொண்டே, காண்டவ வனத்தில், குந்தியின் மகனான தனஞ்சயர் {அர்ஜுனர்}, அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்து, முழு உலகையும் அடக்கியிருக்கிறார். சைரந்திரி உன்னைக் குறித்து என்னிடம் சொன்னாள். அவள் பாண்டவர்களை அறிவாள். எனவே, ஓ! பிருஹந்நளா, எனது குதிரைகளின் கடிவாளங்களை நீ பிடிப்பாயாக, எனது செல்வங்களான பசுக்களை மீட்கும்பொருட்டு, நான் குருக்களுடன் {கௌரவர்களுடன்} மோத விரும்புகிறேன். முன்னர், நீ அர்ஜுனரின் அன்புக்குரிய தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்தே அந்தப் பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனர்} இந்த முழு உலகையும் தனி ஆளாக அடக்கியிருக்கிறார்!" என்றான் {உத்தரன்}. இப்படிச் சொல்லப்பட்ட பிருஹந்நளை, அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, "போர்க்களத்தில் தேரோட்டியாகச் செயல்பட எனக்குத் திறன் ஏது? பாடலோ, இசைக்கருவிகளுடன் கூடிய ஆடலோ அல்லது அவை போன்ற பிறவோ என்றால், நான் உன்னை மகிழ்விப்பேன். ஆனால் ஒரு தேரோட்டி ஆவதற்கான திறன் என்னிடம் எங்கே இருக்கிறது?" என்று கேட்டாள்.
அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, "ஓ பிருஹந்நளா, நீ பாடகராகவோ, ஆடற்கலைஞராகவோ இரு {இருந்து கொள்}. (இப்போது) காலந்தாழ்த்தாமல், எனது அற்புதக் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு எனது தேரில் ஏறுவாயாக!" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த எதிரிகளை ஒடுக்குபவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், உத்தரனின் முன்னிலையில், பல தவறுகளை வேடிக்கையின் பொருட்டுச் {கேலிக்காகச்} செய்யத் தொடங்கினான். அவன் {அர்ஜுனன்} கவசத்தை எடுத்து தலைகீழாக அணிந்து கொள்ள முயன்றபோது, அதைக் கண்ணுற்ற அகன்ற விழிகள் கொண்ட மாதரனைவரும் உரத்த சிரிப்பை வெடித்துச் சிரித்தனர். அவன் கவசம் அணிவதைக் கூட அறியாதிருப்பதைக் கண்ட உத்தரன், தானே பிருஹந்நளைக்கு விலையுயர்ந்த கவசத்தை அணிவித்தான். சூரியப்பிரகாசம் கொண்ட கவசத்தைத் தன் மேனியில் தரித்துக் கொண்டு, சிங்க உருவம் பொறித்த கொடியைத் தனது கம்பத்தில் உயர்த்திய இளவரசன் {உத்தரன்}, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாக்கிக் கொண்டான். கடிவாளத்தைப் பிருஹந்நளை பற்றும்படி செய்த அந்த வீரன் தன்னுடன் பல விலையுயர்ந்த விற்களையும், அதிக எண்ணிக்கையிலான அழகிய கணைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பிறகு, {அர்ஜனனின்} தோழியான உத்தரை தனது பணிப்பெண்களுடன் சேர்ந்து பிருஹந்நளையிடம், "ஓ! பிருஹந்நளா, கூடியிருக்கும் குருக்களில், போர்க்களத்தில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணரை வீழ்த்திய பிறகு, (நீ திரும்பி வரும்போது) நமது பாவையருக்கு பலவிதமான நல்ல அழகிய துணிகளைக் கொண்டுவா" என்றாள் {உத்தரை}. இப்படிச் சொல்லப்பட்ட பாண்டு மகனான பார்த்தான் {அர்ஜுனன்}, மேகங்களின் உறுமலைப் போன்ற ஆழ்ந்த குரலில், அந்த மங்கையர்க்கூட்டத்திடம் சிரித்துக் கொண்டே, "அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களை உத்தரன் வீழ்த்தினால், நான் நிச்சயம் அற்புதமான அழகிய துணிகளைக் கொண்டு வருவேன்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இச்சொற்களைச் சொன்ன வீரனான அர்ஜுனன், எண்ணற்ற கொடிகள் பறக்கும் குரு {கௌரவப்} படையை நோக்கி குதிரைகளை விரைந்து செலுத்தினான். எனினும், அவர்கள் புறப்படுவதற்குச் சற்று முன்பு, பிருஹந்நளையைத் தேரோட்டியாகக் கொண்டு, உயர்ந்து பறக்கும் பெரும் கொடியைக் கொண்ட தனது அற்புதத் தேரில் அமர்ந்திருக்கும் உத்தரனைக் கண்ட முதிய பெருமாட்டிகளும் {பேரிளம்பெண்களும்}, கன்னியரும், கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்களும், அந்த வீரனை {உத்தரனை} வாழ்த்தும் வகையில் தேரை வலம் வந்தனர். அப்போது பெண்கள், "ஓ! பிருஹந்நளா, இன்று நீ இளவரசன் உத்தரனுடன் சேர்ந்து குருக்களிடம் மோதும்போது, பழங்காலத்தில் காண்டவ வனத்தை எரித்த போது காளையைப் போல நடக்கும் அர்ஜுனன் பெற்ற அதே வெற்றி {அப்போது} உனதாகட்டும்" என்று வாழ்த்தினர்.
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment