மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-175
விராட பர்வம்
..
யுதிஷ்டிரனின் கவலை
...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "துரியோதனன் மீது பயம் கொண்ட எனது முப்பாட்டன்கள் {பாண்டவர்கள்}, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய தங்களது காலத்தை எப்படி விராட நகரத்தில் கழித்தார்கள்? மேலும், ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, துயரத்தால் பாதிக்கப்பட்டு, தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் தெய்வத்தை வணங்கி [1] வந்த, மேலான அருள்பெற்ற திரௌபதி, கண்டறியப்படாமல் கழிக்க வேண்டிய தனது காலத்தை எப்படி கழித்தாள்?" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உனது முப்பாட்டன்கள், தங்கள் கண்டறியக்கூடாத காலத்தை விராடத்தில் எப்படிக் கழித்தார்கள் என்பதைக் கேள். நீதியின் தேவனிடம் {தர்மதேவனிடம்} இப்படி வரங்களைப் பெற்ற யுதிஷ்டிரன், ஆசிரமத்திற்குத் திரும்பி, என்ன நடந்தது என்ற அனைத்தையும் அந்தணர்களுக்கு உரைத்தான். அவர்களுக்கு அப்படி அனைத்தையும் உரைத்த யுதிஷ்டிரன், பிறகு, கடைக்கோலையும், அரணிகளையும் கேட்டு வந்த அந்தணரிடம் சென்றான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, நீதி தேவனின் {தர்மதேவனான யமனின்} அரசமகனான உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம், "நாட்டை இழந்து, கானக வாசம் புரிந்து, பனிரெண்டு {12) வருடங்களைக் கழித்துவிட்டோம். கழிப்பதற்கு கடினமான பதிமூன்றாவது {13வது} வருடம் வந்துவிட்டது. எனவே, குந்தியின் மகனே, ஓ! அர்ஜுனா, நாம் எதிரிகளால் கண்டறியப்படாமல் நமது நாட்களைக் கழிக்க உகந்த இடத்தைத் தேர்ந்தெடு" என்று கேட்டான்.
அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "தர்மர் {யமன்} அளித்த வரத்தின் அறத்தால், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களால் கண்டறியப்படாமலேயே நாம் உலவலாம். இருப்பினும், நாம் வசிப்பதற்கேற்ற சில காண்பதற்கினிய ஒதுக்குப்புறமான இடங்களை நான் குறிப்பிடுகிறேன். அவற்றில் ஒன்றை நீர் தேர்ந்தெடுக்கலாம். குருக்களின் நாட்டைச் {குருஜாங்கலத்தைச்} சூழ்ந்து, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்யம், சூரசேனம், பட்டாச்சரம், தசார்ணம், நவராஷ்டிரம், மல்லம். சால்வம், யுகாந்தரம், சௌராஷ்டிரம், அவந்தி, பரந்திருக்கும் குந்திராஷ்டிரம் ஆகிய சோளம் நிறைந்த நாடுகள் இருக்கின்றன. {பாஞ்சாலம், மத்ஸ்யம், ஸால்வம், வைதேஹம், பாஹ்லீகம், தசார்ணம், சூரசேனம், கலிங்கம், மகதம் என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன}. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவற்றில் நீர் எதைத் தேர்ந்தெடுத்து, இந்த வருடத்தைக் கழிக்கப் போகிறீர்?" என்று கேட்டான்.
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! வலிமைமிக்க கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சொன்னவாறே அவை இருக்கின்றன. அனைத்து உயிரினங்களும் வணங்கத்தக்கத் தலைவன் {தர்மதேவனான யமன்} சொன்னது உண்மையாக வேண்டும். ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பிறகு, காண்பதற்கினிய மங்களகரமான, எற்புடைய, அச்சமற்று நாம் வாழக்கூடிய ஒரு பகுதியை நமது வசிப்பிடமாக நாம் நிச்சயம் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னனான முதிர்ந்த விராடன் அறம்சார்ந்தவனாகவும், சக்தியுள்ளவனாகவும், தொண்டுள்ளம் கொண்டவனாகவும், அனைவராலும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். மேலும், அவன் பாண்டவர்களிடம் அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஓ! குழந்தாய், ஓ! பாரதா {அர்ஜுனா}, அவனைச் சேவித்து நாம் விராட நகரத்தில் இவ்வருடத்தைக் கழிக்கலாம். ஓ! குரு குலத்தின் மகன்களே {பாண்டவர்களே}, மத்ஸ்யர்களின் மன்னன் முன்பு நீங்கள் உங்களை எப்படிப்பட்ட திறமைகள் கொண்டவர்களாக முன்வைக்கப் போகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டான்.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களில் தேவனே {யுதிஷ்டிரரே}, விராட நாட்டில் நீர் என்ன சேவை செய்வீர்? ஓ! நீதிமானே {யுதிஷ்டிரரே}, எந்தத் திறனைக் கொண்டு நீர் விராட நகரத்தில் வசிப்பீர்? நீர் மென்மையானவராகவும், தொண்டுள்ளம் கொண்டவராகவும், பணிவானவராகவும், அறம்சார்ந்தவராகவும், உண்மையில் நிலை கொண்டவராகவும் இருக்கிறீர். இப்படித் துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நீர், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என்ன செய்வீர்? ஒரு இயல்பான மனிதனைப் போல இடர்களைத் தாங்கும் தகுதி ஒரு மன்னனுக்கு உண்டா? உம்மைப் பீடித்திருக்கும் பேரிடரை நீர் எப்படி கடக்கப் போகிறீர்?" என்று கேட்டான்.
யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, "குருகுலத்தின் மகன்களே, மனிதர்களில் காளைகளே {பாண்டவர்களே}, மன்னன் விராடன் முன்பு தோன்றும்போது நான் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள். பகடையில் நிபுணத்துவமும், விளையாட்டில் {சூதாடுவதில்} ஆர்வமும் கொண்ட கங்கன் என்ற பெயர் கொண்ட ஓர் அந்தணனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} மன்னனின் அரசவை உறுப்பினராவேன் {I shall become a courtier}. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட பாச்சிகைகளை உருட்டி, நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தந்தங்களால் செய்யப்பட்ட சிப்பாய்களை சதுரங்கப் பலகைகளில் {சாரிகைகளில்} நகர்த்தி, அரசவை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிய மன்னனை மகிழ்விக்கப் போகிறேன். அப்படி மன்னனை நான் மகிழ்வித்துக் கொண்டிருக்கும்போது யாரும் என்னைக் கண்டுபிடிப்பதில் வெல்ல மாட்டார்கள். அந்த ஏகாதிபதி {விராடன்} என்னிடம் கேட்டால், "முன்பு, நான் யுதிஷ்டிரருக்கு இதயத் தோழனாக இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே நான் எனது நாட்களை (விராட நகரத்தில்) கடத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, விராட நகரத்தில் நீ என்ன அலுவலை நிறைவேற்றுவாய்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
பீமன், "நான் வல்லபன் [Vallabha; ballavo] {வல்லன் [அ] வல்லபன்}என்ற பெயரைத் தாங்கி, விராடத்தின் தலைவன் முன்பு என்னை ஒரு சமையற்காரனாக முன்வைக்க நோக்கம் கொண்டுள்ளேன். சமையற்கலையில் திறனுள்ள நான், மன்னனுக்காகக் கறிவகைகள் {குழம்பு வகைகள் Curries [அ] பருப்பு வகைகளும், ரச வகைகளும், பண்ட வகைகளையும்} தயாரித்து, இதுவரை அவனுக்கு உணவைத் தயாரித்த அனைத்து சமையல் நிபுணர்களையும் விஞ்சி, அந்த ஏகாதிபதியை மனநிறைவு கொள்ளச் செய்வேன். நான் பெரும் பாரமிக்கச் சுமைகளைக் கொண்ட மரங்களைச் {விறகுகளைச்} சுமப்பேன். அந்த வலிமைமிக்கச் சாதனையைச் சாட்சியாகக் காணும் ஏகாதிபதி {நிச்சயம்} மகிழ்வான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட என்னுடைய சாதனைகளைக் கண்டு, அந்த அரச குடும்பத்தின் பணியாட்கள் அனைவரும் என்னை மன்னனாகவே மதிப்பார்கள். அனைத்து வகையான பலகாரங்கள் மற்றும் பானங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் நான் அடைவேன். சக்திவாய்ந்த யானைகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளை அடக்கும் கட்டளையோடு நான் ஏவப்பட்டால், அதைச் செய்வேன். பட்டியல்களில் உள்ள எந்தப் போராளிகளாவது {மல்லர்களாவது} என்னுடன் போரிட்டால் {மல்யுத்தத்தில் மோதினால்}, நான் அவர்களை வெற்றிக் கொண்டு, அதன் மூலம் மன்னனை {விராடனை} மகிழ்விப்பேன். ஆனால் நான் அவர்களில் யார் உயிரையும் எடுக்க மாட்டேன். அவர்களைக் கொல்வதில்லை என்ற வகையில் மட்டுமே நான் அவர்களை வீழ்த்துவேன். என் முந்தைய வாழ்வு குறித்துக் கேட்கப்பட்டால், "நான் முன்பு யுதிஷ்டிரரிடம் மல்யுத்த வீரனாகவும், சமையற்காரனாகவும் இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் என்னைப் பராமரித்துக் கொள்வேன்" என்றான் {பீமன்}.
யுதிஷ்டிரன், "காண்டவ வனத்தை எரிக்க விரும்பிய தெய்வீகமான அக்னி, அந்தண வேடத்தில், கிருஷ்ணனோடு இருந்த யார் முன்னிலையில் வந்தானோ, அந்த நீண்ட கரங்கள் கொண்ட மனிதர்களில் முதன்மையானவனும், போரில் ஒப்பற்றவனும், குருக்களின் பலமிக்க வழித்தோன்றலும் குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தனித் தேரில் சென்று பெரும் நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று, அவர்களை {அந்த ராட்சசர்களை} வென்று, அக்னியை மனம் நிறையச் செய்வதற்காகக் கானகம் புகுந்தவனும், நாகர்கள் மன்னனான வாசுகியின் தங்கையைத் {உலூபியைத்}* திருமணம் செய்தவனும், வீரர்களில் சிறந்தவனுமான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்யப் போகிறான்?
வெப்பத்தைக் கொடுக்கும் கோள்களில் முதன்மையான சூரியனைப் போல, இரண்டு கால் உயிரினங்களில் {bipeds} {மனிதர்களில்} சிறந்த பிராமணனைப் போல, பாம்புகளில் சிறந்த நாகப்பாம்பைப் போல, சக்திமிக்கவைகளில் முதன்மையான நெருப்பைப் போல, ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையான வஜ்ரத்தைப் போல, மாட்டினங்கள் அனைத்திலும் முதன்மையான திமில்கொண்ட காளையைப் போல, நீர் நிலைகளில் முதன்மையான கடலைப் போல, மேகங்கள் அனைத்திலும் முதன்மையான மழை சுமக்கும் மேகங்களைப் போல, நாகர்கள் அனைவரில் முதன்மையான ஆனந்தனைப் போல, யானைகள் அனைத்திலும் முதன்மையான ஐராவதனைப் போல, அன்பிற்கினிய பொருட்கள் அனைத்திலும் முதன்மையான மகனைப் போல, கடைசியாக, நண்பர்கள் அனைவரிலும் சிறந்த மனைவியைப் போல, ஓ! விருகோதரா {பீமா}, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனே இளைஞனான குடகேசன் {அர்ஜுனன்} ஆவான்.
ஓ! பாரதா {பீமா}, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் ரதம் கொண்டவனும், இந்திரனுக்கும் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} குறையாதவனும் {நிகரானவனும்}, காண்டீவத்தைத் தாங்குபவனுமான பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தெய்வீக காந்தி கொண்டு ஒளிரும் ஆயிரம் கண் தெய்வத்தின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் தங்கி, தன் சக்தியால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆயுதங்களைப் பெற்றவனும், பத்தாவது ருத்திரனாகவும், பதிமூன்றாவது ஆதித்தியனாகவும், ஒன்பதாவது வசுவாகவும், பத்தாவது கிரகமாகவும் என்னால் கருதப்படுபவனும், நாண் நரம்பைச் சுண்டுவதால் கடினமானதும் சமச்சீரானதுமான நீண்ட கரங்கள் கொண்டவனும், காளைகளின் மேடுகளை ஒத்திருக்கும் வடுக்கள் கொண்டவனும், மலைகளில் இமயம் போன்றவனும், நீர்நிலைகளில் கடலைப் போன்றவனும், தேவர்களில் சக்ரன் {இந்திரன்} போன்றவனும், வசுக்களில் ஹவ்யவாகனைப் (நெருப்பு {அ} அக்னி) போன்றவனும், விலங்குகளில் புலியைப் போன்றவனும், பறவைகளில் கருடனைப் போன்றவனுமான வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்வான்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, அஃறிணைப் பாலினத்தில் {neuter = அஃறிணை [அ] செயலிழந்த sex = பாலினம்; அலிகளில்; நபும்சகர்களில்} ஒருவனாக என்னை நான் அறிவிப்பேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உண்மையில் எனது கரங்களில் உள்ள நாண்கயிற்றால் உண்டான தழும்புகளை மறைப்பது கடினமே. எனினும், நான் தழும்பேறிய எனது இரு கரங்களையும் வளையல்கள் கொண்டு மறைத்துக் கொள்வேன். பிரகாசமிக்க வளையங்களை எனது காதுகளில் அணிந்தும், சங்கு வளையல்களை எனது மணிகட்டுகளில் அணிந்தும், எனது தலையில் இருந்து பின்னலைத் தொங்கச் செய்தும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பிருஹந்நளை [Brihannala; bṛhannaḍā] {ப்ருஹன்னளை [அ] ப்ருஹந்நளை} என்ற பெயர் கொண்டு, மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் போல நான் என்னைத் தோன்றச் செய்வேன். அப்படி ஒரு பெண்ணாக வாழும் நான், கதைகளை உரைத்து, மன்னனையும், அந்தப்புரத்தில் உடன் வாழ்பவர்களையும் (எப்போதும்) மகிழச் செய்வேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, விராடனின் அரண்மனையில் இருக்கும் பெண்டிருக்கு பாடலும், காண்பதற்கினிய முறைகளிலான ஆடலும், பல்வேறு வகையான இசைக்கருவிகளும் பயிற்றுவிப்பேன். மனிதர்களின் பல்வேறு சிறந்த செயல்களை உரைத்து, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, மாறுவேடத்தில் பாசாங்கு செய்து, என்னை நான் மறைத்து கொள்வேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னன் விசாரித்தால், "யுதிஷ்டிரரின் மாளிகையில் திரௌபதியின் பணிப்பெண்ணாக {பரிசாரிகையாக} நான் வாழ்ந்தேன்" என்று சொல்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவ்வழிகளில், சாம்பலால் நெருப்பு மறைக்கப்படுவதைப் போல, {அவ்வேடத்தால்} என்னை மறைத்துக் கொண்டு, விராடனின் அரண்மனையில் ஏற்புடைய வகையில், எனது நாட்களை நான் கடத்துவேன்" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன மனிதர்களில் சிறந்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அமைதியானான். பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} தனது மற்றொரு தம்பியிடம் பேசினான். [2]
யுதிஷ்டிரன் {நகுலனிடம்}, "மென்மையும், அழகான உருவமும் கொண்டு, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுதியுடைய நீ, ஓ! வீர நகுலா, அந்த மன்னனின் {விராடனின்} நாட்டில் வாழும்போது என்ன அலுவலைச் செய்வாய்? அது பற்றி அனைத்தையும் எனக்குச் சொல்!" என்று கேட்டான்.
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "கிரந்திகன் [Granthika; granthiko] {தாமக்ரந்தி} என்ற பெயரின் கீழ், மன்னன் விராடனின் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாவேன் {keeper of horses -குதிரை காப்பாளன்}. (இப்பணியில்) {குதிரைகளைக் காப்பதில்} முழு ஞானமும், குதிரைகளின் நேர்த்திகளை {தன்மைகளை} அறிவதில் திறனும் உடையவனாக இருக்கிறேன். அதுதவிர, அப்பணி எனக்கு ஏற்புடையதாகும் {பிடித்தமானதாகும்}. குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றுக்குச் சிகிச்சையளிப்பதிலும் நான் பெரும் திறன் கொண்டிருக்கிறேன். ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மைப் போலவே, குதிரைகள் எனக்கும் பிடித்தமானவையே. என் கைகளில் குதிரைக்குட்டிகளும் {colts}, பெண்குதிரைகளும் {mares} கூட அமைதியடையும்; இவை ஓர் ஓட்டுனரைத் தாங்கும் போதோ, தேரை இழுக்கும்போதோ தீமையை {குற்றத்தை} அடையாது []. விராட நகரத்தில் என்னைக் குறித்துக் கேட்பவர்களிடம் நான், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, "முன்பு நான் யுதிஷ்டிரரால் குதிரைகளுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தேன்" என்று சொல்வேன். இப்படி மாறுவேடம் கொண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த விராட நகரத்தில் எனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துவேன். இப்படி நான் அந்த ஏகாதிபதியை {விராட மன்னனை} மகிழ்விக்கும்போது யாராலும் என்னைக் கண்டுபிடிக்க இயலாது! []" என்றான் {நகுலன்}.
..
யுதிஷ்டிரன் {சகாதேவனிடம்}, "ஓ! சகாதேவா, மன்னனின் {விராட மன்னனின்} முன்பு நீ எப்படி உன்னைத் தாங்கிக் கொள்வாய்? ஓ! குழந்தாய் {சகாதேவா}, மாறுவேடத்தில் வாழும் பொருட்டு நீ என்ன செய்வாய்?" என்று கேட்டான்.
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "நான் விராட மன்னனின் மாடுகளைக் காப்பவனாவேன். பசுக்களில் பால் கறப்பதும், அவற்றின் உக்கிரத்தைத் தணித்து, அவற்றைப் பழக்குவதிலும் நான் திறன் பெற்றிருக்கிறேன். தந்திரீபாலன் [Tantripal; tantipāla] {தந்த்ரீபாலன்} என்ற பெயரின் கீழ், நான் எனது கடமைகளை நயமாகச் செய்வேன். உமது இதயத்தின் நோய் அகலட்டும். முன்பு நான் அடிக்கடி உம்முடைய பசுக்களைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, எனக்கு அந்த வேலையில் குறிப்பிட்ட ஞானம் உண்டு. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பசுக்களின் இயல்புகளையும், அவை கொண்டிருக்கும் மங்களக் குறிகளையும், அவை குறித்த பிற காரியங்களையும் நான் நன்கு அறிவேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப்பசுவையும்} கன்றீன வைக்குமோ, அத்தகையவற்றை {அப்படிப்பட்ட காளைகளை}, அதன் மங்களக்குறிகளைக் கொண்டு, என்னால் இனம் பிரிக்க முடியும். இப்படியே நான் வாழ்வேன், இவ்வகை வேலையில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன். உண்மையில், என்னை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நான் அந்த ஏகாதிபதியை மனம் நிறையச் செய்வேன்" என்றான் {சகாதேவன்}.
யுதிஷ்டிரன், "நம் உயிரினும் மேலான நமது அன்புக்குரிய மனைவி இவள். நம்மால் ஒரு தாயைப் போலப் பேணிக் காக்கப்படவோ அல்லது மூத்த சகோதரியைப் போலப் போற்றப்படவோ நிச்சயமாக இவள் தகுதியுடையவள். பெண்களுக்குரிய எவ்வகை வேலையையும் அறிந்திராதவளும், துருபதன் மகளுமான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} என்ன அலுவலைச் செய்வாள்? மென்மையும், இளமையும் கொண்ட இவள், பெரும் புகழ் கொண்ட இளவரசியாயிற்றே. தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, மேம்பட்ட அறம் கொண்ட இவள் எப்படி வாழப்போகிறாள்? *இவள் {திரௌபதி} பிறந்ததில் இருந்து, மலர்மாலைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த உடுப்புகளையும் மட்டுமே அனுபவித்திருக்கிறாள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குத் திரௌபதி, "பிறருக்குப் பணிவிடை செய்யப்புகுபவர்களான, சைரந்திரிகள் [3] என்று அழைக்கப்படும் ஒரு மனித {பெண்} வர்க்கம் இருக்கிறது. எனினும், (மரியாதைக்குரிய) மற்ற பெண்கள் அப்படிச் செய்வதில்லை. இந்த வர்க்கத்தில் சிலர் உள்ளனர். சிகை அலங்காரம் செய்வதில் திறமையான ஒரு சைரந்திரியாக [Sairindhri ; sairandhrī] {ஸைரந்த்ரி} என்னை நான் வெளிக்காட்டுவேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னனால் {விராட மன்னனால்} கேட்கப்படும்போது, "யுதிஷ்டிரரின் இல்லத்தில் திரௌபதியின் பணிப்பெண்ணாக நான் பணிபுரிந்தேன்" என்று சொல்வேன். இப்படியே மாறுவேடத்தில் நான் எனது நாட்களைக் கழிப்பேன். மன்னனின் {விராட மன்னனின்} மனைவியான புகழ்பெற்ற சுதேஷ்ணைக்கு நான் பணிவிடை செய்வேன். என்னை அடைவதால், நிச்சயம் அவள் {சுதேஷ்னை} (முறையாக) என்னைக் காப்பாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இது போல வருந்தாதீர்!" என்று மறுமொழி கூறினாள் {திரௌபதி}.
யுதிஷ்டிரன் {திரௌபதியிடம்}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நன்றாகப் பேசுகிறாய். ஆனால், ஓ! அழகான பெண்ணே, நீ ஒரு மதிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எப்போதும் அறநோன்புகள் நோற்று கற்புடன் உள்ள நீ பாவம் என்பது என்ன என்பதை அறிய மாட்டாய். எனவே, உன்னை வெறித்துப் பார்க்கும் பாவிகளின் தீய இதயம் மகிழ்வுறாத வழியில் நீ நடந்து கொள்ள வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment