மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-173
வனபர்வம்
..
பாண்டவர்கள் நால்வர் இறந்தனர்
...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தங்கள் மனைவி {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, பாண்டவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணை {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்த மங்காப் புகழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் காம்யக வனத்தைவிட்டு, காண்பதற்கு இனிய காட்சிகள் கொண்டதும், மரங்களும், இனிய பழங்களும் கிழங்குகளும் நிறைந்த துவைத வனத்திற்குத் திரும்பினான். தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள் பழங்களை மிகச் சொற்பமாக உண்டு, கடும் நோன்புகள் பயின்று அங்கே வசிக்கலாயினர். எதிரிகளை அடக்குபவர்களான, குந்தியின் மகனான அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ஜுனன், மற்றும் மாத்ரியிடம் பாண்டுவுக்குப் பிறந்த மற்ற மகன்கள் {நகுலனும் சகாதேவனும்}, கடும் நோன்புகள் பயின்று துவைத வனத்தில் வசித்து வந்தபோது, ஓர் அந்தணரின் காரணமாகப் பெரும் சிக்கலுக்கு ஆளானார்கள். எனினும் அக்காரியம் அவர்களது எதிர்கால மகிழ்ச்சிக்காகவே வந்ததாக அமைந்தது. அந்தக் குருக்களில் முதன்மையானோர் {பாண்டவர்கள்}, அந்த வனத்தில் வசித்து வந்தபோது ஏற்பட்ட சிக்கலைக் குறித்தும், இறுதியில் அது அவர்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சியைக் குறித்தும் உனக்கு முழுமையாகச் சொல்கிறேன். அதை நீ கேள்!
ஒரு முறை, ஒரு மான் திரிந்து கொண்டிருந்த போது, தவத்துறவுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஓர் அந்தணருக்குச் சொந்தமான இரு அரணிகளும் {#}, ஒரு கடைக்கோலும் {#} அதன் கொம்புகளில் மாட்டிக் கொண்டன. அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேகம் கொண்ட, நீண்ட எட்டுகள் வைக்கும் திறன் கொண்ட அந்தச் சக்தி மிக்க மான், அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆசிரமத்தை விட்டு வெகு வேகமாக ஓடியது. ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பொருட்கள் இப்படித் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட அந்த அந்தணர், தனது அக்னிஹோத்ரம் குறித்துக் கவலை கொண்டு, விரைவாகப் பாண்டவர்கள் முன் வந்தார். நேரத்தைக் கடத்தாமல், காட்டில் தனது தம்பிகளுடன் அமர்ந்திருந்த அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த துயர் மிகுந்த அந்த அந்தணர், இந்த வார்த்தைகளைச் சொன்னார் "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு மான் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரும் மரத்தில் மாட்டப்பட்டிருந்த எனது அரணிகளும், கடைக்கோலும், அதன் {மானின்} கொம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட அந்தச் சக்திமிக்க மான், நீண்ட எட்டுகள் வைத்து ஆசிரமத்தை விட்டு வேகமாக, அந்தப் பொருட்களுடன் ஓடிவிட்டது. ஓ! மன்னா, அதன் கால் தடங்களைக் கொண்டு அந்தச் சக்தி மிக்க மானை கண்டடைந்து, ஓ! பாண்டுவின் மகன்களே எனது அக்னிஹோத்ரம் நின்றுவிடாதவாறு, எனது அந்தப் பொருட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்" {என்றார் அந்த அந்தணர்}.
அந்த அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் மிகவும் கவலை கொண்டான். அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது தம்பிகளுடன் வெளியே கிளம்பினான். கவசம் பூண்டு, தங்கள் விற்களை எடுத்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், அந்த அந்தணருக்குச் சேவை செய்யும் நோக்கோடு, மானைத் தேடி விரைவாக வெளியே சென்றனர். நீண்ட தூரத்திற்கு முன்னரே அந்த மானைக் கண்டுபிடித்த அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள், அதன்மீது முள் அம்புகளையும், எறிவேல்களையும், கணைகளையும் அடித்தனர். ஆனால், பாண்டுவின் மகன்களால் அதனை எவ்வகையிலும் துளைக்க முடியவில்லை. அவர்கள் அதைக் கொல்ல நினைத்து, அதைத் தொடர்ந்து செல்லத் திணறிய போது, அந்தச் சக்திமிக்க மான் திடீரென மறைந்து போனது. மானின் மீதிருந்த தங்கள் பார்வையைத் தொலைத்த உன்னத மனம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்கள், களைத்துப் போய், ஏமாற்றம் அடைந்து, பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்பட்டு அந்தக் காட்டின் ஆழத்தில் {நடுவில்} இருந்த ஓர் ஆல மரத்தை அடைந்து, அதன் குளிர்ந்த நிழலில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் அமர்ந்த பிறகு, சோகத்தால் வாட்டப்பட்ட நகுலன், பொறுமையின்மையால் உந்தப்பட்டு, குரு குலத்தின் மூத்த அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது குலத்தில் {முயற்சியின்மையால்} அறம் எப்போதும் தியாகம் செய்யப்பட்டது கிடையாது; செருக்கால் செல்வத்தையும் இழந்தது கிடையாது. கேட்கப்பட்ட போது எந்த உயிரினத்துக்கும் "இல்லை!" என்று எப்போதும் சொன்னதில்லை. பின்னர் ஏன் தற்போதைய இந்நிகழ்வில், நாம் {அந்தணர் கேட்டு இல்லை என்று சொல்லும்} இந்தப் பெருந்துன்பத்தை அடைந்திருக்கிறோம்?" என்று கேட்டான்.
யுதிஷ்டிரன், "இடர்களுக்கு ஓர் எல்லையே இல்லை. அதே போல அதன் இறுதிக்காரணம் அல்லது செயல்திறன்மிக்கக் காரணத்தை உறுதியாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறம் {நன்மை} மற்றும் மறங்களின் {தீமையின்} கனிகளை நீதியின் தேவன் {தர்மதேவன் = யமன்} மட்டுமே பிரித்தளிக்கிறான்" என்றான். அதற்குப் பீமன், "அடிமையைப் போலக் கிருஷ்ணையை {திரௌபதியைச்} சபைக்குள் இழுத்துவந்த பிராதிகாமினை அங்கேயே நான் கொல்லாததால்தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்" என்றான். அர்ஜுனன், "சூதனின் மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட, எலும்பையே துளைக்கும் கடும் வார்த்தைகளுக்கு நான் சீற்றம் கொள்ளாததாலேயே இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான். சகாதேவன், "ஓ! பாரதா {யுதிரஷ்டிரரே}, உம்மைப் பகடையில் சகுனி வீழ்த்திய போது, நான் அவனைக் கொல்லவில்லை. எனவே தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான்."
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னன் யுதிஷ்டிரன், நகுலனிடம், "ஓ! மாத்ரியின் மகனே, இந்த மரத்தில் ஏறி, தொடுவானத்தின் பத்து புள்ளிகளையும் சுற்றிப் பார். நீரோ, நீர்நிறைந்த நிலத்தில் {மட்டுமே} வளரும் அத்தகு மரங்களோ எங்காவது வளர்ந்திருக்கிறதா என்று பார்! ஓ! குழந்தாய், உனது இந்தச் சகோதரர்கள் களைத்துப் போய்த் தாகமாய் இருக்கிறார்கள்" என்றான். அதற்கு, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நகுலன் விரைவாக மரத்தில் ஏறி சுற்றிலும் பார்த்து, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அருகே இருக்கும் பல மரங்களை நான் பார்க்கிறேன். மேலும் நான் கொக்குகளின் ஒலிகளையும் கேட்கிறேன். எனவே, அங்கே நீர் இருக்கிறது என்பதில் ஐயமில்லை" என்றான்.
உண்மையில் நிலைத்து நிற்கும் குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, "ஓ! மனதுக்கினியவனே {நகுலா}, நீ சென்று இந்த அம்பறாத்தூணிகளில் நீர் நிறைத்து வா" என்றான். "அப்படியே ஆகட்டும்" என்று தனது அண்ணனின் கட்டளையின் பேரில் உடனே புறப்பட்ட நகுலன், நீர் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறி, விரைவில் அங்கே வந்து சேர்ந்தான். கொக்குகள் நிறைந்த தெளிந்த தடாகத்தைக் கண்ட அவன் {நகுலன்}, அதைக் {நீரைக்} குடிக்க எண்ணினான். அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல், "ஓ! குழந்தாய் {நகுலா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! மாத்ரியின் மகனே {நகுலா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு (உனக்கு வேண்டிய அளவுக்கு) எடுத்துச் செல்." என்றது. இருப்பினும், மிகுந்த தாகத்தில் இருந்த நகுலன் அந்த வார்த்தைகளை மதிக்காமல், அந்தக் குளிர்ந்த நீரைக் குடித்தான். அதைக் குடித்ததும் இறந்து கீழே விழுந்தான்.
ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, நகுலனின் தாமதத்தைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நகுலனின் வீரச் சகோதரனான சகாதேவனிடம், "ஓ! சகாதேவா, நமது சகோதரனான, உனக்கு முன் பிறந்தவன் {நகுலன்} இங்கிருந்து சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. எனவே, நீ சென்று உன்னுடன் பிறந்த தமையனையும் நீரையும் கொண்டு வா" என்றான். இதற்குச் சகாதேவன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அதே திசையில் சென்று, அந்த இடத்திற்கு வந்த, தனது அண்ணன் {நகுலன்} தரையில் இறந்து கிடப்பதைக் கண்டான். தனது அண்ணனின் இறப்பால் துயருற்ற அவன், கடும் தாகமடைந்து நீரை நோக்கி முன்னேறிய போது இந்த வார்த்தைகள் அவனுக்குக் கேட்டது, "ஓ குழந்தாய் {சகாதேவா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்."
எனினும் மிகுந்த தாகத்தில் இருந்த சகாதேவன், அந்த வார்த்தைகளை மதியாமல் அந்நீரைக் குடித்தான். அதைக் குடித்துவிட்டு இறந்து கீழே விழுந்தான். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், விஜயனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனா}, உனது இரு சகோதரர்களும் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஓ! எதிரிகளை அடக்குபவனே! நீ அருளப்பட்டிருப்பாய்! நீ அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு நீருடன் வா. ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துயரத்தில் மூழ்கியிருக்கும் எங்கள் அனைவருக்கும் நீயே புகலிடமாவாய்!" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட புத்திக்கூர்மை கொண்ட குடகேசன் {அர்ஜுனன்}, தனது வில்லையும், கணைகளையும், தனது உருவிய வாளையும் எடுத்துக்கொண்டு நீர்த்தடாகத்தைத் தேடி சென்றான். பிறகு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேருடைய அவன் {அர்ஜுனன்}, நீர் எடுக்க வந்த மனிதர்களில் புலிகளான தனது இரண்டு தம்பிகளும் இறந்து கிடப்பதைக் கண்டான்.
உறங்குவதைப் போல் கிடந்த அவர்களைக் கண்ட மனிதர்களில் சிங்கம் {அர்ஜுனன்}, மிகவும் துயருற்று, தனது வில்லை உயர்த்தி, காட்டையே சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெரும் காட்டில் அவன் யாரையும் காணவில்லை. பிறகு அவன் (நீரை) நோக்கி ஓடிய போது, வானத்தில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டான். "நீ ஏன் இந்த நீரை அணுகுகிறாய்? வலிமையைப் பயன்படுத்தி நீ இதைக் குடிக்க முடியாது. ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நான் உன்னிடம் கேட்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க முடியும் என்றால், ஓ! பாரதா {அர்ஜுனா} நீ நீரைக் குடித்து, உனக்குத் தேவையான அளவுக்கு அதை எடுத்துச் செல்லலாம்!" {என்றது அந்தக் குரல்}.
இப்படித் தடுக்கப்பட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, "என் முன் தோன்றி என்னைத் தடை செய்வாயாக! எனது கணைகளால் நீ கடுமையாகத் துளைக்கப்படும்போது, நீ இது போன்று மீண்டும் பேச மாட்டாய்!" என்றான். இதைச் சொன்ன பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் மந்திரங்களால் தூண்டப்பட்ட கணைகளைக் கொண்டு நிறைத்தான். ஒலியை மட்டுமே கேட்டு, காட்சிக்குத் தெரியாத குறியை அடிக்கும் தனது திறமையையும் அவன் {அர்ஜுனன்} வெளிப்படுத்தினான். ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, தாகத்தால் மிகவும் பாதிக்கப்பட அவன் {அர்ஜுனன்} முள் கணைகளையும், எறிவேல்களையும், இரும்புக் கணைகளையும், கலங்கடிக்கப்பட முடியாத கணைகளையும் எண்ணற்ற வகையில் வானத்தில் பொழிந்தான்.
பிறகு காட்சிக்குப்புலப்படாத யக்ஷன் {அர்ஜுனனிடம்}, "இந்த இடருக்கு என்ன தேவையிருக்கிறது, ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, எனது கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு குடி! எனினும், எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நீ குடித்தால், அதன் பிறகு உடனே நீ சாவாய்" என்றான். இடது கையாலும் வில்லை இழுக்கும் ஆற்றல் பெற்ற பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த வார்த்தைகளை மதியாமல், நீரைக் குடித்து, உடனே இறந்து விழுந்தான். (தனஞ்சயனின் தாமதத்தைக் கண்ட) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பீமசேனனிடம், "ஓ! எதிரிகளை அடக்குபவனே {பீமா}, நகுலன், சகாதேவன், பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} ஆகியோர் நீர் இரைக்கச் சென்று வெகு நேரமாகிவிட்டது. இருப்பினும் அவர்கள் இன்னும் வரவில்லை. ஓ! பாரதா {பீமா}, உனக்கு நன்மையே விளையட்டும்! அவர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு, நீருடன் வா!" என்றான்.
அதன்பிறகு, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பீமசேனன், மனிதர்களில் புலிகளான தனது தம்பிகள் எங்கே இறந்து கிடக்கின்றனரோ அங்கே சென்றான். அவன் {பீமன்} தாகத்தில் இருந்தாலும் அவர்களைக் கண்டு மிகவும் துயரப்பட்டான். பிறகு வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {பீமன்}, இது யாரோ ஒரு யக்ஷன் அல்லது ராட்சசனின் செயலாக இருக்கும் என நினைத்தான். பிறகு பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, "இன்று நான் நிச்சயம் சண்டையிட வேண்டும். எனவே, முதலில் நான் தாகந்தணிவேன்" என்று நினைத்தான். பிறகு அந்தப் பாரதக் குலத்தின் காளை {பீமன்} {நீரைக்} குடிக்கும் நோக்குடன் விரைந்து முன்னேறினான். அப்போது, அந்த யக்ஷன் {பீமனிடம்}, "ஓ குழந்தாய் {பீமா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்." என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி யக்ஷனால் சொல்லப்பட்ட அளவிடமுடியாத சக்தி கொண்ட பீமன், அவனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமலேயே நீரைக் குடித்தான். அப்படி அவன் குடித்த உடனேயே அந்த இடத்திலேயே அவன் இறந்து விழுந்தான். தனது தம்பிகள் தன்னைவிட்டு சென்று நீண்ட நேரம் ஆனதை நினைத்த யுதிஷ்டிரன் சில காலம் பொறுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, "மாத்ரியின் இரு மகன்களும் ஏன் தாமதிக்கின்றனர்? காண்டீவத்தைத் தாங்குபவன் ஏன் தாமதிக்கிறான்? பெரும் பலம் கொண்ட பீமனும் ஏன் தாமதிக்கிறான்? நான் அவர்களைத் தேடிச் செல்வேன்" என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைத்தான். இப்படித் தீர்மானித்த வலிய கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தனது இதயம் துயரத்தால் எரிய எழுந்தான்.
மனிதர்களில் காளையான குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, "இந்தக் காட்டில் ஏதாவது தீய ஆதிக்கம் இருக்கிறதா? அல்லது இதில் {இந்தக்காட்டில்} தீய மிருகங்களின் தொந்தரவு இருக்கிறதா? அல்லது அவர்கள் அனைவரும் வலிமைமிக்க ஏதாவதோர் உயிரினத்தை அவமதித்தன் விளைவாக விழுந்தார்களா? அல்லது நீர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியாமல், இந்தக் காடு முழுவதும் சுற்றித் தேடித் திரிகிறார்களா? அந்த மனிதர்களில் காளையர் திரும்பி வராததன் காரணம்தான் என்ன?" என்று தனக்குள் நினைத்தான். பிறகு இதே வகையில் தனக்குள் பேசிக்கொண்ட ஏகாதிபதிகளில் முதன்மையான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், மான்களும், கரடிகளும், பறவைகளும் நிறைந்து, பிரகாசமான பச்சை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருவண்டுகளின் ரீங்காரத்தாலும், சிறகு படைத்த பாடகர்களின் இனிய கீதங்களாலும் எதிரொலிக்கப்பட்டு, மனித ஒலியே அற்றிருந்த அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் சென்ற போது அவன் தேவ தச்சனாலேயே வடிவமைக்கப்பட்டது போன்ற ஓர் அழகிய தடாகத்தைக் கண்டான். அது {அத்தடாகம்} மஞ்சள் நிறம் கொண்ட மலர்களாலும், தாமரைகளாலும், சிந்துவாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {அத்தடாகம்} பிரம்பு {canes}, தாழை {ketakas}, அலரி {karaviras}, அரச {pippalas} மரங்களால் சூழப்பட்டிருந்தது. களைப்பால் பாதிக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரன் அந்தக் குளத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்."
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்திரனின் புகழைக் கொண்ட தனது தம்பியர், யுகத்தின் முடிவில் தங்கள் கோளங்களில் {Spheres} {துறைகளில்} இருந்து விழுந்து கிடக்கும் லோகபாலர்களைப் போல இறந்து கிடப்பதைக் கண்டான் யுதிஷ்டிரன் {Yudhishthira}. தன் வில் மற்றும் கணைகளுடன் தரையில் விழுந்து இறந்து கிடக்கும் அர்ஜுனனையும், உயிர் இழந்து அசைவற்றுக் கிடக்கும் பீமசேனனையும், இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} சூடான நீண்ட பெருமூச்சுவிட்டு, துயரத்தில் ஏற்பட்ட கண்ணீரால் குளித்தான்.
தனது தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்ட வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, துயரத்தால் பதட்டம் கொண்ட இதயத்துடன், நிற்காது அழுது புலம்பத் தொடங்கி, "ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட விருகோதரா {Vrikodara-பீமா}, "போர்க்களத்தில் துரியோதனனின் தொடைகளை எனது கதைகளால் நொறுக்குவேன்" என்று சொன்னாயே! ஓ! குருக்களின் புகழை அதிகரிப்பவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட உயர் ஆன்மா கொண்டவனே {மகாத்மாவே} {பீமனே}, உனது மரணத்தால், அவை அனைத்தும் கனியற்றதாகிவிட்டனவே! மனிதர்களின் வாக்குறுதிகள் பலனற்றதாயிருக்கலாம்; ஆனால் உன்னைக் குறித்துத் தேவர்கள் சொன்ன வார்த்தைகள் ஏன் கனியற்றதாகின?
ஓ! தனஞ்சயா {Dhananjaya- அர்ஜுனா}, நீ உனது தாயின் பிரசவ அறையில் இருந்தபோது, தேவர்கள், "ஓ! குந்தி, இந்த உனது மகன், ஆயிரம் கண் கொண்டவனுக்குச் {இந்திரனுக்குச்} சற்றும் குறைந்தவனல்ல!" என்று சொன்னார்கள். வடக்கேயுள்ள பாரிபாத்திர மலைகளில் "எதிரிகளால் திருடப்பட்ட (இந்தக் குலத்தின்) செழிப்பனைத்தும் தாமதமில்லாமல் இவனால் மீட்கப்படும். போர்க்களத்தில் இவனை எவரும் வீழ்த்த முடியாது. அதே வேளையில், இவனால் வீழ்த்த முடியாத யாரும் இருக்க மாட்டார்கள்" என்று அனைத்துயிர்களும் பாடின. பிறகேன், பெரும் பலம் கொண்ட அந்த ஜிஷ்ணு {Jishnu- அர்ஜுனன்} மரணத்துக்கு ஆட்பட்டான்? ஓ! எவனை நம்பி இந்தப் பேரிடர் அனைத்தையும் நாங்கள் பொறுத்தோமோ அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் எனது நம்பிக்கைகளையெல்லாம் கொன்று [1] இப்படித் தரையில் கிடக்கிறான்?
எதிரிகளை எப்போதும் கொல்பவர்களும், எந்த ஆயுதத்தாலும் தடுக்கப்படாதவர்களுமான குந்தியின் பலமிக்க மகன்களான பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய அந்த வீரர்கள் ஏன் எதிரியின் சக்திக்கு அடங்கினர்! இன்று இந்த இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} தரையில் கிடப்பதைக் கண்டும் இரண்டாகப் பிளக்காத இந்த எனது தீய இதயம் நிச்சயம் வஜ்ரத்தால் ஆனதாக {adamant =பிடிவாதம் நிறைந்ததாக=வஜ்ரம் அல்லது வரைக்கல் போன்ற கடினம் நிறைந்ததாக என்று பொருள் கொள்ளலாம்} இருக்க வேண்டும்! புனித ரித்துகளை அறிந்து, காலம் இடம் ஆகியவற்றை அறிந்து தவத்தகுதி கொண்டு, அனைத்து புனித சடங்குகளையும் செய்த இந்த மனிதர்களில் காளையரே, உங்களுக்குத் தகுந்த செயல்களைப் புரியாமல் ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்? ஐயோ, எதிரிகளால் வெல்லப்படாதவர்களே, உங்கள் மேனில் புண் கொள்ளாமல், உங்கள் நோன்புகள் {சபதங்கள்} நிறைவேறாமல் ஏன் இப்படிப் பூமியில் உணர்வற்று கிடக்கிறீர்கள்?" என்றான்{என்று சொல்லி அழுதான் யுதிஷ்டிரன்}. மலைச்சரிவுகளில் (அவர்கள் எப்போதும் உறங்குவது போல) இனிமையாகத் துயிலும் தங்கள் தம்பியரைக் கண்ட அந்த உயர் ஆன்ம மன்னன் {யுதிஷ்டிரன்}, துன்பம் மேலிட, வியர்வையில் குளித்து, துயர நிலையை அடைந்தான். பிறகு, "இது இப்படிஆனதே" என்று சொல்லி, துயரக்கடலின் நடுவில் நின்று, மனங்குழம்பிய அந்த மனிதர்களில் அறம் சார்ந்த தலைவன் {யுதிஷ்டிரன்}, அதற்கான (அந்தப் பேரழிவின்) காரணத்தை ஆலோசித்தான். பிறகு, இடம் நேரம் ஆகியவற்றின் பிரிவுகளை அறிந்த அந்த வலிமையான கரங்கள் மற்றும் உயர் ஆன்மா கொண்டவனால் {மகாத்மாவான யுதிஷ்டிரனால்}, செய்யத்தக்க தனது செயலைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.
இப்படித் துயரத்தால் மிகவும் அழுது புலம்பிய தர்மன் அல்லது தபுவின் {Dharma or Tapu,}மகனான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது ஆன்மாவை {மனதை} அடக்கி, இந்த வீர்ர்களைக் கொன்றவன் யார் எனத் தனது மனதில் நினைக்கத் தொடங்கினான். "இவர்களின் மேல் ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் ஏதுமில்லை. யாருடைய கால்தடங்களும் இங்கில்லை. யாரால் எனது தம்பிகள் கொல்லப்பட்டனரோ அவன் மிகுந்த வலிமை மிக்க உயிரினமாக {பூதமாக} இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மனப்பூர்வமாக நான் இதைச் சிந்திக்க வேண்டும். அல்லது முதலில் நான் இந்த நீரைக் குடித்துப் பிறகு அனைத்தையும் அறிவேன். பழக்கத்தினாலேயே கோணல் புத்தி கொண்ட துரியோதனன், கந்தர்வர்கள் மன்னனைக் கொண்டு ரகசியமாக இந்த நீர்நிலையை இங்கு வைத்திருக்க வேண்டும். எவனிடம் நன்மையும் தீமையும் சமமாக இருக்கிறதோ, தீய ஆசைகள் கொண்ட அந்த இழிந்தவனை எந்தப் புத்தியுள்ள மனிதனால்தான் நம்ப முடியும்? அல்லது, ஒருவேளை, தனது ரகசிய தூதர்கள் மூலம் இந்தச் செயலை அந்தத் தீய ஆன்ம கொண்டவன் செய்திருப்பானா?" என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.
இப்படி அந்தப் பெரும் புத்திக் கூர்மை கொண்டவன் {யுதிஷ்டிரன்} பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டான். "எனது தம்பிகளின் முகத்தின் நிறம் மங்கவில்லை!" என்று நினைத்த யுதிஷ்டிரன், {தன் தம்பியர்} இறந்தனர் எனினும் பிணத்தைப் போன்ற நிறமிழப்பு அவர்களுக்கு ஏற்பட வில்லை என்பதைக் கண்டு, அந்த நீர் நஞ்சு கலக்கப்பட்டது என்பதை நம்பவில்லை. பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} {இப்படித்} தொடர்ந்தான், "இந்த மனிதர்களில் முதன்மையானவர் ஒவ்வொருவரும் மழைவீழாறு {#} போன்றவர்கள். எனவே, அனைத்துப் பொருட்களுக்கும் குறித்த நேரத்தில் முடிவைக் கொண்டு வரும் யமனைத் தவிர வேறு யாரால் இவர்களை இப்படிக் கலங்கடித்திருக்க முடியும்?" {என்றான் யுதிஷ்டிரன்}
இதை உறுதியாகத் தீர்மானித்த அவன் {யுதிஷ்டிரன்}, அந்தத் தடாகத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள {நீராடலைத்} தொடங்கினான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} அதற்கு {தடாகத்துக்குள்} இறங்கிய போது, வானத்தில் இருந்து யக்ஷனால் {Yaksha} உதிர்க்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். {யக்ஷன்}, "நான் சிறு மீனைக் {உண்டு} கொண்டு வாழும் ஒரு கொக்கு. ஆவி பிரிந்தவர்களின் தலைவனுடைய {யமனின்} கட்டுப்பாட்டுக்கு என்னாலேயே உனது தம்பிகள் அனுப்பட்டனர். ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}, நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால், நீயும் ஐந்தாவது சவமாவாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ {நீரைக்} குடித்து, (உனக்குத் தேவைப்படும் அளவுக்கு) எடுத்துச் செல்!" என்றான் {யஷன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {யஷனிடம்}, "நீ ருத்திரர்களில் முதன்மையானவனா? வசுக்களில் முதன்மையானவனா? மருதர்களில் முதன்மையானவனா? நான் கேட்கிறேன், நீ எந்தத் தேவன்? இதை ஒரு பறவையால் செய்திருக்க முடியாது! இமயம், பாரிபாத்திரம், விந்தியம், மலயம் { the Himavat, the Paripatra, the Vindhya, and the Malaya}ஆகிய இந்த மலைகளையும் எவன் வீழ்த்தியவன்? பலமிக்க மனிதர்களில் முதன்மையான உன்னால் செய்யப்பட்ட சாதனை பெரிது! ஒரு பெரும் மோதலில் தேவர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கூடக் கொல்லப்பட இயலாதவர்கள், உன்னால் கொல்லப்பட்டுள்ளனர்! எனவே உன்னால் செய்யப்பட்ட இந்தக் காரியம் மிகவும் அற்புதமானது! உனது காரியம் என்னவென்பதை நான் அறியேன். அதன் காரணத்தையும் நான் அறியேன். எனவே, எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவலும் பயமும் பெரிதாக இருக்கிறது! எனது மனம் பெரிதும் கலங்கியிருக்கிறது. எனது தலை வலிக்கிறது. எனவே, ஓ! வழிபடத்தகுந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். இங்கே வசிக்கும் நீ யார்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷன், "உனக்கு நன்மை விளையட்டும். நான் ஒரு யக்ஷன்; இருநிலையில் {நிலத்திலும் நீரிலும்} வாழும் பறவையல்லேன். என்னாலேயே, பெரும்பலமிக்க உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்!" என்றான் {யக்ஷன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், "கடும் மொழியில் அறிக்கையிடப்பட்ட, இந்தச் சபிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {Yudhishthira}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கு நின்று கொண்டிருந்த யக்ஷனை {Yaksha }அணுகினான். பிறகு அந்தப் பாரதர்களில் காளை {யுதிஷ்டிரன்}, வழக்கத்திற்கு மாறான கண்களும், பனை மரம் போன்ற உயர்ந்த பெரிய உடலும், நெருப்பைப் போலவோ சூரியனைப் போலவோ இருப்பவனும், தாங்க முடியாத பெரும் உருவம் கொண்ட மலை போன்றவனுமான யக்ஷன், ஒரு மரத்தில் இருந்து கொண்டு, மேகங்களுக்கு ஒப்பான ஆழ்ந்த கர்ஜனையை உரக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா} என்னால் திரும்பத் திரும்பத் தடுக்கப்பட்டும் உனது தம்பிகள் வலுக்கட்டாயமாக நீரை எடுக்க முயன்றனர். அதற்காகவே அவர்கள் என்னால் கொல்லப்பட்டனர்! வாழ விரும்பும் ஒருவன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த நீரைக் குடிக்கலாகாது! ஓ! பிருதையின் மகனே {{Son of Pritha - குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நீ விரும்புமளவுக்கு {நீரை} எடுத்துச் செல்!" என்றான் {யக்ஷன்}.
யுதிஷ்டிரன் {யஷனிடம்}, "ஓ! யக்ஷா, ஏற்கனவே உனது உடைமையாக இருக்கும் ஒன்றின் மேல் நான் ஆசை கொள்ளவில்லை! ஓ! ஆடவரில் காளையே, தன்னையே பாராட்டிக் கொள்ளும் ஒருவனை அறம் சார்ந்த மனிதர்கள் அங்கீகரிப்பதில்லை. (எனவே, தற்பெருமை பேசாமல் உனது கேள்விகளுக்கு எனது புத்திக்கூர்மையினால் பதிலளிக்கிறேன்). நீ என்னிடம் கேள்!" என்றான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எது சூரியனை உதிக்கச் செய்கிறது? யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்? எது அவனை மறையச் செய்கிறது? எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது; தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்; தர்மமே அவனை மறையச் செய்கிறது; அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்" [1] என்று பதிலளித்தான்.
முதல் கேள்விக்கு "சுத்திகரிக்கப்படாத ஆன்மாவை யார் மேன்மையடையச் செய்வது?" என்ற பொருள் பொருந்தி வரும். உலகம் சார்ந்த தொடர்புகளில் இருந்து ஆன்மா எழுவதே மேன்மையான செயல் எனப்படும். இதற்கான பதில், "பிரம்மம், அதாவது வேதம் அல்லது சுய அறிவு" எனக் கொள்ளலாம். தொடர்ந்து வரும்
இரண்டாவது கேள்வியை "சுத்திகரிப்புப் பணியின் போது அந்த ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவை எவை?" என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கான பதிலை, "தேவர்களைப் போலத் தெய்வீக இயல்பு கொண்ட தன்னடக்கம் மற்றும் பிற குணங்கள்" எனக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது கேள்வியை, "ஆன்மாவை யார் ஓய்வு (நிலைக்கு) அழைத்துச் செல்கிறார்?" என்று புரிந்து கொண்டால், அதற்கான பதிலை, "அறம் {தர்மம்}, அதாவது நன்னெறி, நடத்தை {ஒழுக்கப்பண்பு}, அறநோன்புகள்" எனக் கொள்ள வேண்டும். ஓய்வுநிலை, உண்மை {சத்தியம்}, பரிசுத்தமான ஞானம் ஆகியவற்றை அடைவதற்கு முன்னர் ஒருவன் (கர்மாவை) செயல்கள் மூலம் கடக்க வேண்டும் என்று பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.
கடைசிக் கேள்வியை "எதில் ஆன்மா நிறுவப்பட்டுள்ளது?" என்று புரிந்து கொண்டு, அதற்கான பதிலாக, ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, "உண்மை {சத்தியம்}, அல்லது பரிசுத்த ஞானம்" என்று பதிலாகக் கொள்ள வேண்டும். விடுதலையின் வடிவம் ஆன்மா என்பதாலும், அனைத்து உடல் தொடர்புகளிலிருந்தும் {ஆன்மா} உயர எழ வேண்டும் என்பதாலும், அது {ஆன்மா} நோன்புகளையும் செயல்களையும் இனியும் நம்பியிருக்கவில்லை என்றும் ஆனால் அது {ஆன்மா} {ஜனனம் என்ற} உண்மை ஞானத்தில் அசைவற்று நிலைத்திருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தணர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது? அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது. அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது; இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை. அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன? அவர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும். பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும். அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும். {துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது? வேள்விக்கான யஜுஸ் என்பது எது? ஒரு வேள்விக்கான புகலிடம் எது? எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்; மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும். வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது. அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது" என்று பதிலளித்தான் [ஒருவன் வேள்வியைக் கொண்டாடும் நோக்கத்திற்குச் சாமம், யஜுர் மற்றும் ரிக்கு மந்திரங்கள் அனைத்தும் அவசியம். புறநிலை வேள்விக்குச் சாம யஜுர் வேத மந்திரங்கள் தேவை என்பது போல, அகநிலை வேள்வியில் உண்மை ஞானத்தை அடைய, வாழ்வு {உயிர்} மற்றும் மனம் ஆகியவை அவசியம். எந்தப் புறநிலை வேள்வியையும் ரிக்கு இல்லாமல், அதை முக்கியமாகக் கருதாமல் செய்ய முடியாதது போல, உண்மை ஞானத்தை அடையக் கருதும் அகநிலை வேள்விளையும் துதிகள் இல்லாமல் செய்ய முடியாது என்றும், ரிக்குகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன என்றும் நான் {கங்குலி} கருதுகிறேன். இந்தப் பத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள அக்னிஷ்டோமா அல்லது பிற வகை வேள்விச் சடங்குகளின் நெருக்கமான அறிமுகம் தேவை]
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பயிரிடுவோருக்கு {உழவருக்கு {அ} வைசியருக்கு} முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது? விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது? இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது? [4a] பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை; விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை; பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} [4b] " என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானது எது? சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது? காற்றைவிட வேகமானது எது? புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானவள் தாய்; சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை; காற்றைவிட வேகமானது மனம்; புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உறங்கும்போது கண்களை மூடாதது எது? பிறந்த பிறகும் நகராதது எது? இதயம் இல்லாதது எது? தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை; பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை; இதயமற்றிருப்பது கல்; தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்? இல்லறத்தானுக்கு யார் நண்பன்? நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்? சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "நாடுகடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே [5] நண்பன்; இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே; நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்; சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்? நித்திய கடமை என்பது யாது?! ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அமிர்தம் என்பது என்ன? இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்; பசுவின் பாலே அமிர்தம்; ஹோமமே நித்திய கடமை; இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது" என்று பதிலளித்தான்
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எவன் தனியாக உலவுகிறான்? பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்? குளிர்ச்சிக்கான தீர்வு என்ன? பெரிய களம் எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "சூரியன் தனியாக உலவுகிறான்; சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான். குளிருக்கான தீர்வு நெருப்பு; பூமியே பெரிய களம்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தின் உயர்ந்த புகலிடம் எது? புகழுக்கு எது? சொர்க்கத்திற்கு எது? மகிழ்ச்சிக்கு எது?" என்று கேட்டான். யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஈகையே {தானமளிப்பது; Liberality = தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்: புகழுக்குக் கொடை; சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்}; மகிழ்ச்சிக்கு நன்னடத்தை {ஆகியன உயர்ந்த புகலிடங்களாக இருக்கின்றன}" என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன்.
{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்