பட்டினத்தார் - நங்கநல்லூர் J K SIVAN
மனித உடம்பு...
அப்பப்பா, இந்த உடல் மேல் தான் எவ்வளவு பாசம், ஆசை நம் அனைவருக்கும்.
பன்னீரில் குளித்து, ஜவ்வாது சென்ட் உடலில் பூசிக் கொண்டு பட்டு சட்டை , வேஷ்டி ...ஹல்வா, பாதாம் கீர்,...
தங்கத்தட்டில் சாப்பிட்டு உடம்பை வளர்த்தாயே, இப்போது நன்றியோடு அது உனக்கு என்ன செய்கிறது பார்த்தாயா?
அதற்கு சென்ட், பௌடர், புனுகு, சந்தனம், சவ்வாது, அருமையான விலையுயர்ந்த வஸ்திரங்கள். பொன் வைரங்கள் பூட்டிய ஆபரணங்கள் சேகரித்து அலங்கரித்தாயே. கொஞ்சமாவது நன்றி இருக்கிறதா அதற்கு?
இந்த உடம்பு எத்தகையது. உனக்கு உதவக் கூடியதா ? ஹுஹும். இது நிச்சயம் இல்லை. உடன் பிறந்தே கொல்லும் வியாதி உருவாகும் இடம் அது. நோய்கள் எல்லாமே ஹல்வா ஜாங்கிரிமசால் தோசை ஐஸ்க்ரீம் போட்டு வளர்த்த இந்த உடலிலிருந்து தான் உருவாகிறது. புற்று நோய் நமக்குள்ளேயே தான் பிறக்கிறது.
இந்த மனித உடலால் உயிர் போனபிறகு எந்த பிரயோஜனமும் இல்லை, உடனே கொளுத்தி விடவேண்டும், அல்லது புதைக்க வேண்டும் . ஒரு நாள் தாண்டினால், அவ்வளவு தான், எட்டு ஊர் நாற்றம் சகிக்க முடியாது. இதன் தோல், எதற்கும் பயனில்லை. பல் நகம் யாருக்கும் உதவாது. புலிப்பல், கரடி நகம், நரி நகம் எல்லாம் ரக்ஷையாக வாங்குகிறார்கள். எங்கள் வீட்டில் வெகுகாலம் இருந்தது. என் தாத்தா காட்டிலாகா அதிகாரி அல்லவா? அவருக்கு இதெல்லாம் தான் கிடைக்கும். நாய்த்தோல், மாட்டின் தோல், மான் தோல் கரடித்தோல், முதலைத் தோல், புலித்தோல் என்னன்னவோ உபயோகம் டிமாண்ட் இருக்கிறது அதற்கெல்லாம்..
மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும். தடுக்க வழியில்லை. பாதிக்கு மேல் உடம்பு தான் காரணம்.அழியும் மனித உடம்பைப் பற்றி பட்டினத்தார் எழுதுவதைப் படித்தாலே குமட்டிக்கொண்டு வரும்.
சீழ், சளி, பீளை,... அடாடா நீ அழகாக வளர்த்த உடலில் வியாதி வந்துவிட்டதே. சேர்த்து வைத்த பணம் பாதிக்கு மேல் டாக்டர் ஆஸ்பத்திரி மருந்து மாயம் என்று உன்னை விட்டு கரைந்து போய் விட்டதே. சீழும் ரத்தமும், பீளை, மலம், சளி, இருமல், வியாதிப் பிண்டமாக படுக்கையில் இருக்கிறாய். உன்னோடு சுகம் அனுபவித்தவர்கள் எவரையும் காணோம்.
அருகே வரமுடியாமல் நாற்றமெடுத்து அசைய முடியாமல் கிடக்கிறாய். நீ வளர்த்த உடம்பு சுடுவதற்கு தயாராகி விட்டது. எலும்பு மட்டுமே கொஞ்சம், மற்றது சாம்பல். இப்போது புரிந்து கொள்கிறாயா? உடம்பா, ஆத்மாவா, எதற்கு முக்யத்வம் கொடுக்கவேண்டும் என்று இப்போதாவது புரிந்ததா?
இவ்வளவு மோசமான வஸ்துக்கள் உள்ளே நிறைய இருந்தாலும் அங்கே ஒண்டிக்கொண்டு ஒரு அற்புதமான வஸ்துவும் இருக்கிறதே. அமைதியாக எதிலும் போட்டுக்கொள்ளாமல் தனித்து உன்னை நற்கதிக்கு கொண்டு செல்ல காத்திருக்கிறதே. சிக்கென அதை பிடித்துக் கொள்ளவேண்டாமா. அதன் பெயர் தான் ஆத்மா. பரமேஸ்வரனின் அம்சம் உன் உள்ளேயே ''கட''க்கும் கடவுள் அது தானே. இதைத் தான் அடிக்கடி தாயுமானவர், பட்டினத்தார், திருமூலர் சிவவாக்கியர், சித்தர்கள் எல்லாம் அடிக்கடி அழகாக நினைவு படுத்துகிறார்கள்.
எனக்கு பட்டினத்தாரை ரொம்ப பிடிக்கிறது. இப்படி சுலபமாக தமிழில் எழுத நமக்கு வருமா?
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.
No comments:
Post a Comment