*காவேரீ தீரே*...*கருணா விலோலே*....*(பாகம்-35)*
(*ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் *)
மார்கண்டேய மஹரிஷியினை வந்தனாதிகள் செய்து வரவேற்ற ஸோமகன், " தாங்கள் எங்கேயிருக்கின்றீர்கள் ? எங்கிருந்து வருகின்றீர்கள் ? தீர்த்த யாத்திரையாக வந்தீரா ? என்று வினவுகின்றான்.
மார்கண்டேய மஹரிஷி, " .... எனது ஆஸ்ரமம் ஹிமாலயத்திலுள்ளது. தீர்த்த யாத்திரையாக இங்கே வந்தேன். நீ ஸன்மார்க்கத்தினைக் கடைப்பிடிப்பிதனை எல்லோரும் மெச்சுகின்றனர்.!. புத்திர ஸந்தானத்திற்காக நீ இங்கே யாகம் செய்வது கேட்டு இங்கே வந்தேன். இப்படி கடுமையான விரதங்களையும், யாகங்களையும் செய்யும் உனக்கு புத்திரபாக்கியம் இன்னமும் உண்டாகாததற்கு, உன்னுடைய விதியே அல்லாமல் வேறு காரணம் யாதுமில்லை.!. ஒரு பாபமே அனேக புண்ணியங்களின் பலனைத் தடுக்கும்.! புண்ய பாபங்களில் ஒருவனுக்கு எது அதிகமாகயிருக்கின்றதோ, அது மற்றொன்றினுடைய பலனைத் தடுக்கவல்லது.! சாஸ்திரங்கள் சத்தியமே ஆகும்.!. கர்த்தா கர்மத்தினை அவசியம் அனுபவி்த்தே ஆகவேண்டும். எல்லாம் சாஸ்திரத்திற்குள் அடக்கம் என்பதே பெரியோர்களின் நிச்சயம். இல்லையெனில் எல்லாம் மாறிவிடும். சகலவித தர்மங்களும் நசித்துப் போகும்.! பாபத்தினைப் போக்கும் நீ புண்யமான கர்மாக்களைச் செய்வதோடு புண்ய தீர்த்தங்களையும், புண்ய க்ஷேத்ரங்களையும் ஸேவிக்க வேண்டும். உன் மனோரதம் அப்பொழுது நிறைவேறும்..." என்று ஆசீர்வதித்தார்.
ஸோமகன், "...நான் பல யாகங்களை செய்தேன். பிரஜைகளை ப்ரியமாக ரக்ஷித்தேன். ஆனால் புண்ய க்ஷேத்திரம், புண்ய தீர்த்தம், பகவதாலயங்கள் இவைகளை ஸேவிக்கவில்லை. இவைகளில் எது சிறந்ததோ அதைச் சொல்வீராக..!" என்றார்.
ஹிமாச்சலத்திலிருந்து பல புண்ய தீர்த்தங்களில் நீராடியும், பற்பல புண்ய க்ஷேத்திரங்களைத் தரிசித்தும் வந்த மார்க்கண்டேயர், ஸோமகனுக்கு இவற்றில் மிகச் சிறந்ததொரு தீர்த்தத்தின் மஹிமையினைச் சொல்கின்றார், " ஸோமக! உனக்கு ஹிதமாய் ஸ்ரேஷ்டமாயுள்ள க்ஷேத்திரத்தினைப் பற்றியும், தீர்த்தத்தையும் சொல்கிறேன் கேள்.!. எனக்கு நேர்ந்த மரண பயத்தினை (ம்ருத்யுவை) வெல்வதற்காக உத்தமமான தீர்த்தங்களையும், பல புண்ய க்ஷேத்திரங்களையும் ஸேவித்தேன். கடைசியில் ஸ்ரீரங்கமென்னும் இந்த புண்ய க்ஷேத்திரத்தில்தான் என்னுடைய ம்ருத்யு பயம் நீங்கிற்று. இங்கே ஸகல பாபங்களையும் போக்கும் ஸந்திர புஷ்கரிணி எனும் மஹா புண்ய தீர்த்தம் உள்ளது. இதில் ஸ்நானம் செய்பவன் ஸகல ஸித்திகளையும் பெறுவான்.
புஷ்கரிணி்க்கு வடமேற்கில் உத்தமமான
(1) கேஸர தீர்த்தம் (வகுள தீர்த்தம்) - (புஷ்கரிணி்க்கு வடமேற்கில்)
(2) கதம்ப தீர்த்தம், - (கேஸர தீர்த்தத்திற்கு வடக்கில்)
(3) ஆம்ர தீர்த்தம் - (கதம்ப தீர்த்தத்திற்கு வடகிழக்காக)
(4) பில்வ தீர்த்தம் - (ஆம்ர தீர்த்தத்திற்கு கிழக்கில்)
(5) ஜம்பு தீர்த்தம் - (பில்வ தீர்த்தத்திற்கு தென்கிழக்கில்)
(6) பலாச தீர்த்தம் ( ஜம்பு தீர்த்தத்திற்கு கிழக்கில்)
(7) அஸ்வத்த தீர்த்தம் (பலாச தீர்த்தத்திற்கு தெற்கில்)
(8) புன்னாக தீர்த்தம் ( அஸ்வத்த தீர்த்ததிற்கு மேற்கில்)
ஆகிய மிக மிக உன்னதமான எட்டு தீர்த்தங்கள் உள்ளது. இந்த புஷ்கரிணிகளும், இவற்றிலுள்ள தலவிருக்ஷ வழிபாடும், நாம் செய்த பாபம், ஜன்ம ஜன்மாவில் செய்த பாபங்கள், நம் முன்னோர்கள் செய்த பாபங்கள் முதலானவற்றை நீக்கவல்லது.
இந்த புன்னாக தீ்ர்த்தப்பரபாவத்தினால் முன்பு ஸூவர்ச்சலர் மோக்ஷம் பெற்றார். பிருகு வம்சத்தவரான தாரகர் கேஸர தீர்த்தத்தினால் மோக்ஷம் பெற்றார். விதேஹ ராஜ்ய ராஜனான ஸூகீர்த்தியும் கேஸர தீர்த்தத்தினால் நற்கதியடைந்தான். கர்க கோத்ரியான ருக்மதிருஷ்டி என்பவர் கதமப தீர்த்தத்தினால் சாஸ்வதமான பிரம்மத்தினையடைந்தார். காஸ்யபர் ஆம்ர தீர்த்த மஹிமையினால் அழிவில்லாதிருந்தார். தம்முடைய தோஷம் போவதற்காக ருத்ரன் ஆம்ர தீர்த்தத்தில்தான் தபஸ் செய்தான். ஸூப்ரம்மணியனும் இவ்விடத்தில் தபஸ் செய்தே தேவஸேநாதிபதியானான். வகுள தீர்த்தத்திலிருந்தே பிராம்மணர்களும், ராஜாக்களும் மேன்மை பெற்றனர்..
பின்பு மார்க்கண்டேயர், ஸோமகனிடத்து "ஜயதரன்" என்றொரு ராஜாவிற்கு நேர்ந்த துன்பத்தினையும், அத்துன்பம் தொலைந்த விதத்தினையும், சொல்கின்றார்.
"ராஜனே..! சந்திர வம்சத்தினைச் சேர்ந்த "ஜயதரன்" என்றொரு ராஜாவானவன், வேதம் வல்லார்களான பிராம்மணர்களை ரக்ஷியாமலும், மதிக்கமாலும், மிகவே கொடுமைகளைச் செய்த வண்ணமிருந்தான்.!. பூஜிக்கத் தக்க பிராம்மணர்கள் இவனது ஹிம்ஸைத் தாங்காமல் அவனது ராஜ்யத்தினை விட்டு அகன்றனர். பிராம்மணர்களின் கோபத்தினால் ராஜனது ஐஸ்வர்யம் அனைத்தும் அழிந்தது. ராஜ்யமெங்கிலும் வேதம் இல்லாது போயிற்று. மங்களகரமான வேத ஒலிகளை இழந்து, ராஜ்யம் முழுவதும் வியாதியும், பஞ்சமும் பீடித்தது. சொல்லவெண்ணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்தனர். ராஜ்யம் முழுக்க வீபரிதங்கள் நேர்ந்தன.! கொலையும் கொள்ளையும் மிகுந்தன.! ஜயதரன் ராஜாவின் நுாறு புத்திரர்களும் இறந்தனர். ராஜன் செய்வதறியாது குழம்பி மனமுடைந்து கதியற்று போனான்.! பரத்வாஜ மாமுனியின் சிஷ்யரிடம் அவன் அடைக்கலமானான்.! வால்மீகி மஹரிஷியினைத் தரிசிப்பதற்காக ஒரு சமயம் பரத்வாஜர் ஜயதரனுடைய ராஜ்யத்தின் வழியே போகும்போது, இராஜன், பரத்வாஜருடைய சி்ஷ்யரை அழைத்துக் கொண்டு, பரத்வாஜரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, நடந்த தவற்றிக்கு மிகவே வருந்தினான்.! பரத்வாஜர் வால்மீகியிடத்து ஜயதரனை அழைத்துச் செல்கின்றார்.. வால்மீகியும் நடந்ததையறிந்து, ஜயதரனுடைய ராஜ்யத்திலிருந்து வெளியேறிய பிராம்மணர்கள் அனைவரையும் வரவழைத்தார். அப்பிராம்மணர்களிடத்து, " உங்களுடைய கோபத்தின் காரணத்தினால் இராஜன் பீடிக்கபட்டு சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாகி நிற்கின்றான்.! நீங்கள் இல்லாமல் இந்த ராஜ்யமே அழிந்தது..! அனைத்திற்கும் இந்த ராஜனுடைய துர்நடத்தையே காரணம் என்பதனையும் அறிவேன்.!. ஆயினும் தர்மம், அர்த்தம், காம் இம்மூன்று புருஷார்த்தங்களுக்கும் ராஜன் அவசியமாகின்றான்.! இந்த ஜகத்தே ராஜனைக் காரணமாகக் கொண்டுள்ளது.! வர்ணாஸ்ரமங்கள் ராஜனையேப் பற்றியுள்ளன.!. பசுக்களுக்கும், பிராம்மணர்களுக்கும் ராஜனே சாஸ்வத ஆதாரம்.! ஆகையால், நீங்கள் கோபத்தினைத் தணித்துக் கொண்டு, இந்த ராஜ்ய நலனைக் கருத்தில் கொண்டு, அவசியம் ரக்ஷியுங்கள்..!" என்றார். சொல்வது வால்மீகி மஹரிஷியாயிற்றே..! அந்த பிராம்மணர்கள் கோபம் தணிந்தனர்.!
வால்மீகி, பிராம்மணர்களையும், ஜயதரனையும் அழைத்துக் கொண்டு, பில்வ தீர்த்தத்திற்குச் சென்றார்.
No comments:
Post a Comment