மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-25
..
ஆதிபர்வம்
..
ஹிடும்பனுடன் யுத்தம்
…
வைசம்பாயனர் சொன்னார்,
"பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு சால மரத்தில் ஹிடிம்பன்என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான்.
பெரும் ஆற்றலையும் வலிமையையும் கொண்ட அவன், மனித இறைச்சியை உண்ணும் கொடியவனாவான். அவனது முகம் கடுமையுடனும், அவனது பற்கள் நீண்டு கூர்மையாகவும் இருந்தன. அப்போது அவன் பசியோடும் மனித இறைச்சியை உண்பதற்கு ஏங்கிக் கொண்டும் இருந்தான். நீண்ட கால்களும், பெருத்த வயிறும் கொண்ட அவனது கேசமும், தாடியும் சிவப்பு நிறத்திலிருந்தன. அவனது தோள்கள் அகலமாக, மரத்தின் கழுத்துப் போல இருந்தன; அவனது காதுகள் அம்பு முனை போன்று இருந்தன. அவனது தோற்றம் அச்சமேற்படுத்தும் வகையில் இருந்தது. கடும் முகமும், சிவந்த கண்களும் உடைய அந்த மிருகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த போது, தற்செயலாகப் பாண்டுவின் மகன்கள் அக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அப்படிப்பட்ட அவன், மனித வாடையை முகர்ந்து கொண்டே, தனது தங்கையிடம், "ஓ தங்காய், வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஏற்ற உணவு என்னை அணுகியிருக்கிறது!
இப்படிப்பட்ட உணவின் சுவையை நினைத்தாலே, எனது வாயில் நீரூறுகிறது. எந்தப் பொருளும் தாங்கிக் கொள்ள முடியாத எனது கூர்மையான எட்டுப் பற்களுக்கு, வெகு நாளைக்குப் பிறகு, சுவையான இறைச்சியைக் கொடுக்கப் போகிறேன்.
அவற்றைக் கொண்டு மனிதத் தொண்டையைத் தாக்கி, நரம்புகளை அறுத்துப் புத்தம்புதிய சூடான மனித இரத்தத்தை இன்று நான் அதிகமாகக் குடிக்கப் போகிறேன். இக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் யார் என்பதை அறிந்து வா.
பிடித்தமான கடும் மனித வாடை எனது மூக்கைத் துளைக்கிறது. அந்த மனிதர்களைக் கொன்று, அவர்களை என்னிடம் கொண்டு வா.
அவர்கள் என் எல்லைக்குள் தூங்குகிறார்கள். நீ அவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் இருவரும் சேர்ந்து அவர்களுடைய உடல்களை மகிழ்ச்சியாகக் கிழித்து, அவர்களது இறைச்சியை உண்பதற்காக நான் சொன்னதைச் செய்வாயாக.
மனித இறைச்சியை நிறைவுடன் உண்ட பிறகு, நாம் இருவரும் பல வகைகளில் நடனமாடலாம்" என்றான்.
அந்த வனத்தில் ஹிடிம்பனால் இப்படிக் சொல்லப்பட்ட ஹிடிம்பை என்ற நர மாமிசம் உண்பவள், தனது தமையனின் கட்டளைக்கிணங்கி, பாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள்.அங்கே சென்றதும், அவள் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், விழிப்புடன் அமர்ந்திருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீமசேனனையும் கண்டாள்.
பலம் வாய்ந்த சால மரத்தைப் போன்ற அந்தப் பீமசேனனிடம் பூமியில் ஒப்பிடமுடியாத அழகைக் கண்ட அந்த ராட்சசி, உடனே அவனிடம் காதலில் விழுந்து, தனக்குத் தானே,
"புடம்போட்ட தங்கம் போன்ற நிறத்துடன், பெரும் கரங்களுடன், சிங்கம் போன்ற அகலமான தோள்களுடன், சங்கு போலக் கழுத்தில் மூன்று கோடுகளுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் இருக்கும் இந்த மனிதர் எனக்குக் கணவனாக இருக்கத் தகுந்தவர்.
எனது தமையனின் கொடூர ஆணைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். ஒரு பெண் தனது சகோதரனிடம் கொண்டிருக்கும் பாசத்தைவிட, அவளது கணவனின் மீது கொண்டிருக்கும் காதல் வலுவானது.
இவரைக் கொல்வதால், எனது தமையனுக்கும் எனக்கும் கிடைக்கும் மனநிறைவு சில நொடிகளுக்கானதே. நான் இவரைக் கொல்லாதிருந்தால், இவருடன் எப்போதும் இன்பமாக இருக்க முடியும்" என்று சொல்லிக் கொண்டாள்
நினைத்த வடிவை அடையும் சக்தி கொண்ட அந்த ராட்சசி அழகான பெண்ணின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு மெதுவாகப் பெரும் கரம் கொண்ட பீமனை நோக்கி முன்னேறினாள்.
தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, இதழ்களில் புன்னகையுடன் எளிமையாக நடந்து சென்று, பீமனிடம்,
"ஓ மனிதர்களில் காளையே, எங்கிருந்து நீர் இங்கு வந்தீர்? நீர் யார்? தெய்வீக அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யாவர்? தனது அறையில் கிடப்பதைப் போல நம்பிக்கையாக இந்தக் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மேம்பட்ட அழகுடைய பெண்மணி யார்?
இக்கானகம் ஒரு ராட்சசனின் உறைவிடம் என்பதை நீர் அறியீரா? நான் உண்மையாகவே சொல்கிறேன். இங்கு ஹிடிம்பன் என்ற தீய ராட்சசன் வாழ்ந்து வருகிறான்.
தெய்வீக அழகுடையவர்களே, நான் எனது தமையனான அந்த ராட்சசனால், உங்களைக் கொன்று உங்களை அவனது உணவாக்க அனுப்பப்பட்டேன்.
ஆனால் உண்மையைச் சொல்கிறேன். தெய்வீகப் பிரகாசத்துடன் இருக்கும் உம்மைக் கண்டதும், உம்மைத் தவிர வேறு எவரையும் கணவராக ஏற்க முடியாது என்று கருதி உம்மைக் காக்க நினைத்தேன்.
கடமைகளையும், நீதிகளையும் அறிந்த நீர், இவற்றையும் அறிந்து, எனக்கு எது சரியோ அதைச் செய்வீராக. எனது இதயமும், எனது உடலும் காமனால் அவனது கணையால் துளைக்கப்படுகின்றன. ஓ, நான் உம்மை அடைய விருப்பத்தோடிருப்பதால், என்னை உமதாக்கிக் கொள்வீராக.
ஓ பெரும் கரங்கள் கொண்டவரே! மனித ஊனுண்ணும் ராட்சசனிடம் இருந்து நான் உம்மைக் காக்கிறேன். சாதாரண மனிதர்கள் நுழைய முடியாத மலைகளின் சாரலில் நாம் வாழலாம்.
என்னால் காற்றில் பறக்க முடியும். நான் அதை என் மகிழ்வுக்காகச் செய்வேன். நீர் என்னுடன் அப்பகுதிகளில் மிகுந்த இன்பத்துடன் இருக்கலாம்" என்றாள் ஹிடிம்பை
அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, ஒரு முனிவனைப் போலத் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனால், தனது தாயையும் மூத்த மற்றும் இளைய சகோதரர்களையும் எப்படிக் கைவிட்டுவிட்டு வர முடியும்?
தூங்கும் தாயையும், சகோதரர்களையும் ராட்சசனுக்கு உணவாகப் போகும்படி விட்டு, என்னைப் போன்ற எந்த மனிதன், தனது காமத்தைத் தணித்துக் கொள்ளச் செல்வான்?" என்றான்.
அதற்கு அந்த ராட்சசப் பெண், "ஓ, இவர்களை விழிப்படையச் செய்வீராக. நான் உமக்கு ஏற்புடைய அனைத்தையும் செய்வேன்! நர மாமிசம் உண்பவனான என் தமையனிடம் இருந்து, நான் உங்கள் அனைவரையும் நிச்சயம் காப்பேன்!" என்றாள்.
பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, "உனது தீய தமையனிடம் இருக்கும் அச்சத்தால், இக்கானகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் எனது சகோதரர்களையும், எனது தாயையும் எழுப்ப மாட்டேன்.
ராட்சசர்களால் எனது கரத்தின் பலத்தைத் தாங்க முடியாது. மனிதர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ எனது பலத்தைத் தாங்க முடியாது., நீ இங்கே இருப்பதும் செல்வதும் உனது விருப்பமாகும். அல்லது நீ சென்று உனது தமையனையே கூட இங்கு அனுப்புவாயாக. நான் அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை" என்றான்".
"ராட்சசத் தலைவன் ஹிடிம்பன், தனது தங்கை வெகு நேரமாகியும் திரும்பாதது கண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி, பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு விரைவாக முன்னேறி வந்தான்.
சிவந்த கண்களுடன், பலம்வாய்ந்த கரங்களுடன், கரங்களும் தலைமயிரும் நட்டுக் கொண்டு நிற்க, திறந்த பெரிய வாயுடனும், கருமேகக் கூட்டங்கள் போன்ற உடலுடனும், கூரிய மற்றும் நீண்ட பற்களுடனும் காண்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தான்.
கடும் முகம் கொண்ட தனது தமையன் மரத்திலிருந்து இறங்கியதைக் கண்ட ஹிடிம்பை மிகுந்த அச்சம் கொண்டு, பீமனிடம்,
"அந்த நரமாமிசம் உண்ணும் தீயவன், இங்கே கோபத்தோடு வருகிறான். நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீரும் உமது சகோதரர்களும் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
ஓ பெரும் வீரம் கொண்டவரே! ராட்சச சக்திகளைக் கொண்ட நான், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி படைத்தவள். நீர் எனது இடுப்பில் ஏறிக்கொள்வீராக. நான் உம்மை வானத்தினூடே தூக்கிச் செல்கிறேன்.
ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, சுகமாகத் தூங்கும் உமது சகோதரர்களையும் உமது தாயையும் விழிப்படையச் செய்வீராக. நான் இவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்து செல்வேன்" என்றாள்.
பீமன், "ஓ அழகானவளே, எதற்கும் அஞ்சாதே. நான் இங்கிருக்கும் வரை, எந்த ராட்சசனாலும் இவர்களைக் காயப்படுத்திவிடமுடியாது என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். , நான் இவனை உன் கண்ணெதிரிலேயே கொல்வேன்.
ராட்சசர்களில் இழிந்த இவன், எனக்கு எதிரியாக இருக்கத் தகுதியற்றவன். ஏன் அனைத்து ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து வந்தாலும், அவர்களாலும் எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாது.
எனது பலம் நிறைந்த கரங்களைப் பார், ஒவ்வொன்றும் யானையின் துதிக்கையைப் போன்று இருக்கின்றன. இரும்பு கதாயுதத்தைப் போன்ற இந்த எனது தொடைகளையும், அகலமான வைரம் பாய்ந்த மார்பையும் பார்.
ஓ அழகானவளே, நீ இன்று இந்திரனுக்கு ஒப்பான எனது ஆற்றலைக் காண்பாய். என்னை மனிதன் என்று நினைத்து பலவீனனாகக் கருதாதே
ஹிடிம்பை, "ஓ மனிதர்களில் புலியே, ஓ தெய்வீக அழகு வாய்ந்தவரே, நிச்சயமாக நான் உம்மை அவமதிக்கவில்லை. ஆனால் மனிதர்களிடம் அந்த ராட்சசன் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் கண்டிருக்கிறேன்" என்று பதிலுரைத்தாள்".
அப்போது, மனித மாமிசம் உண்பவனான அந்தக் கோபம் மிகுந்த ராட்சசன், தான் வரும் வழியிலேயே பீமனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்தான்.
முகம் முழு மதியைப் போன்றும், தலையில் பூச்சூடியும், புருவங்களும், நாசியும், கண்களும், மயிர்சுருளும் உள்ள அழகான பெண் போலத் தனது தங்கை மானுட வடிவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது நகங்களும், மேனியும் நுண்மையான நிறத்துடன் இருந்தது. அனைத்து வகை ஆபரணங்களும் பூண்டு நன்றாக ஒளி ஊடுருவும் ஆடை அணிந்திருந்தாள்.அவள் அழகான பெண்ணுருக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி, அவள் உடலுறவு கொள்ள விரும்புகிறாள் என ஐயுற்று மிகுந்த கோபத்துக்குள்ளானான்.
தனது தங்கையிடம் கோபம் கொண்டு, கண்களை அகல விரித்து அவளிடம்,"நான் பசியோடிருக்கும்போது, எனது பாதையில் தடையை ஏற்படுத்திய உணர்வற்ற ஜென்மம் எது? ச்சீ... ச்சீ... ஓ ஹிடிம்பையே என் கோபத்தில் உனக்கு அச்சமில்லையா?
கற்பற்ற பெண்ணே! நீ இப்போது உடலுறவில் விருப்பம் கொண்டு எனக்குத் தீங்கிழைக்க நினைக்கிறாய். நமது முன்னோர்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களின் நற்பெயரையும் மரியாதையையும் நீ துறக்கத் தயாராயிருக்கிறாய். யாருடன் சேர்ந்து எனக்கு நீ தீங்கிழைக்க நினைக்கிறாயோ, அவனுடன் சேர்த்து உன்னையும் இப்போதே கொல்கிறேன் பார்"என்று தனது தங்கையிடம் இப்படிச் சொன்ன ஹிடிம்பன், கோபத்தால் கண்கள் சிவக்கப் பற்களுடன் பற்கள் அழுத்தி, அவளை அங்கேயே கொல்ல அவளிடம் ஓடினான்.
இப்படி அவனது தங்கையிடம் விரைபவனைக் கண்டவனும், தாக்குபவர்களின் முதன்மையானவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமன், "நில். நிற்பாயாக" என்று சொல்லிக் கண்டித்தான்"
"தனது தங்கையிடம் கோபமாக உள்ள ராட்சசனைக் கண்ட பீமன், ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, அவனிடம், "ஓ ஹிடிம்பா, சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை எழுப்ப உனக்கு என்ன தேவையிருக்கிறது? ஓ மனித மாமிசம் உண்ணும் தீயவனே, நேரந்தாழ்த்தாமல் முதலில் நீ என்னை அணுகுவாயாக.
என்னை முதலில் தாக்கு, பெண்ணைக் கொல்வது உனக்குத் தகாது. குறிப்பாக அவள் பாவம் செய்யாமல், பாவத்திற்கு ஆளாகியிருக்கும்போது அது தகவே தகாது.
என்னுடன் உறவு கொள்ள விரும்பிய அவளது செயலுக்கு அவள் பொறுப்பில்லை. எல்லா உயிரினுள்ளும் உறைந்திருக்கும் காமதேவனால் அவள் உந்தப்பட்டாள்.
நீ தீய பாவி, ராட்சசர்களில் மிகவும் மோசமானவன். உன் தங்கை உனது உத்தரவின் பேரிலேயே இங்கு வந்தாள். அப்படி வந்த அவள் என்னைக் கண்டு, என்னை விரும்பினாள். அதனால் இந்த மருட்சியுடையவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள். இங்குக் காமதேவனே குற்றம் புரிந்திருக்கிறான். இக்குற்றத்திற்கு நீ அவளைத் தாக்குவது உனக்குத் தகாது.
ஓ தீய பாவியே, நான் இங்கிருக்கும் போது, ஒரு பெண்ணை உன்னால் கொல்ல முடியாது. ஓ நரமாமிசம் உண்பவனே, என்னிடம் வந்து நேருக்கு நேர் ஒற்றைக்கு ஒற்றையாக மோதுவாயாக.
தனி ஆளாக நான் உன்னை யமனுலகு அனுப்புகிறேன். ஓ ராட்சசா, இன்று உனது தலை, யானையினால் மிதிக்கப்பட்டு நசுங்குவது போல எனது பலத்தால் நசுங்கிச் சுக்குநூறாகப் போகிறது.
இப்போரில் இன்று என்னால் நீ கொல்லப்பட்ட பிறகு, தரையில் கிடக்கும் உனது உறுப்புகளை மீனுண்ணும் நாரைகளும், பருந்துகளும், நரிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிய்த்துண்ணட்டும். ஒரு நொடியில் இன்று நான் இந்தக் கானகத்தை ராட்சசர்கள் அற்ற கானகமாக மாற்றுகிறேன் பார். மனிதர்களை உண்டு நீ வெகுகாலமாக இக்கானகத்தை ஆண்டுவருகிறாய்!
நீ பெரும் மலையைப் போல இருந்தாலும், பெரும் யானையைத் தொடர்ந்து இழுக்கும் சிம்மம் அதைக் கொல்வதைப் போல, ஓ ராட்சசர்களில் இழிந்தவனே, உன்னை நான் கொல்வதை இன்று உனது தங்கை காணப் போகிறாள்.
உன்னைக் கொன்று, மனிதர்கள் அச்சமற்று உலவ ஏற்றதாக இக்கானகத்தை மாற்றப்போகிறேன்" என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹிடிம்பன், "ஓ மனிதா, இந்த உனது வீண் இரைச்சலுக்கும், தற்பெருமைக்கும் என்ன அவசியம் இருக்கிறது? முதலில் நீ சொன்னதைச் செய், அதன்பிறகு தற்பெருமை பேசுவாயாக. எனவே, தாமதிக்காதே.நீ ஆற்றல் நிரம்பிய பலவான் என்று உன்னை நினைக்கிறாய். எனவே, என்னுடன் மோதிய பிறகு, உனது உண்மையான பலத்தைப் பற்றி நீ அறிந்து கொள்வாயாக.
அதுவரை, நான் உனது சகோதரர்களைக் கொல்ல மாட்டேன். அவர்கள் சுகமாக உறங்கட்டும். ஆனால் முதலில், தீய பேச்சு பேசும் முட்டாளான உன்னை நான் கொல்வேன்.
உனது ரத்தத்தைக் குடித்த பிறகு, இவர்கள் அனைவரையும் கொல்வேன். இறுதியாக எனக்குத் தீங்கிழைத்த எனது தங்கையைக் கொல்வேன்" என்றான்".
"இப்படிச் சொன்ன அந்த மனித ஊனுண்ணி, எதிரிகளைத் தண்டிக்கும் பீமனை நோக்கித் தனது கரங்களைக் கோபமாக நீட்டினான்.
பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், தன்னை நோக்கி ஓடி வந்த ராட்சசனின் கரங்களைப் பெரும்பலத்துடன் விளையாட்டாகப் பற்றினான்.
பிறகு, பெரும் வன்முறையுடன் அந்த ராட்சசனையும் பற்றி, ஒரு சிங்கமானது, சிறிய மிருகத்தை இழுத்துச் செல்வதைப் போல அவனை முப்பத்திரண்டு முழம் தொலைவிற்கு இழுத்துச் சென்றான்.
பீமனுடைய பலத்தின் நிறையை உணர்ந்த அந்த ராட்சசன், பெரும் கோபம் கொண்டு, அந்தப் பாண்டவனை அணைத்துக் கட்டிக் கொண்டு, பெரும் கூச்சல் போட்டான்
இக்கூச்சலால், சுகமாக உறங்கும் தனது சகோதரர்கள் எழுந்துவிடாமல் இருக்க, பீமன் அந்த ராட்சசனை இன்னும் அதிகத் தூரத்திற்கு இழுத்துச் சென்றான்.
கட்டியணைத்துக் கொண்டும், ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டும் பெரும் பலத்துடன் ஹிடிம்பனும், பீமசேனனும் தங்கள் பேராற்றலை வெளிப்படுத்தினர்.
முழுவதும் வளர்ந்த இரு மதம்பிடித்த பெரும் யானைகள் கோபத்துடன் மோதிக் கொள்வதைப் போல, அவர்கள் மரங்களை ஒடித்தும், தரையில் முளைத்திருந்த செடிகொடிகளைப் பிடுங்கியும் சண்டையிட்டனர்.
இவ்வொலியால் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் எழுந்திருந்து, ஹிடும்பை தங்களெதிரில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்"
"தங்கள் தாயுடன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களான அந்த மனிதர்களில் புலிகள், ஹிடிம்பையின் இயல்புக்குமிக்க அழகைக் கண்டு வியந்தனர்.
குந்தி, அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவளிடம் இனிமையாகவும், உறுதியேற்படுத்தும் வகையிலும்
"ஓ தேவர்களின் மகளைப் போல இருப்பவளே, நீ யாருடையவள்? யார் நீ? ஓ அழகான நிறம் கொண்டவளே, என்ன காரியமாக நீ இங்கே வந்திருக்கிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?
நீ கானக தேவதையாகவோ, அப்சரஸாகவோ இருப்பின், உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வாயாக. நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதையும் சொல்வாயாக" என்று கேட்டாள்.
அதற்கு ஹிடிம்பை, "நீ பார்த்துக் கொண்டிருப்பதும், நீல மேகத்தின் நிறத்தைக் கொண்டதும் {இருண்டதும்}, விரிந்ததுமான இந்தக் கானகம், ஹிடிம்பன் என்ற ராட்சசனின் வசிப்பிடமாகும்
ஓ அழகான பெண்மணியே, என்னை அந்த ராட்சசத் தலைவனுடைய தங்கையாக அறிந்து கொள்வாயாக. மதிப்புக்குரிய பெண்மணியே, நான் எனது சகோதரனால் ஏவப்பட்டு, உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்ல வந்தேன்.
எனது சகோதரனின் அந்தக் கொடூரமான கட்டளையைக் கேட்டு இங்கு வந்த நான், பலம்வாய்ந்த உனது மகனைக் கண்டேன்.
எல்லா உயிரினுள்ளும் படர்ந்தூடுருவியிருப்பவனான மன்மதன், என்னை, உனது மகனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
உனது பலம் வாய்ந்த மகனை எனது கணவராக நான் மனத்தால் தேர்ந்தெடுத்தேன். உங்களையெல்லாம் வெளியேற்ற என்னால் முடிந்த வரை முயன்றேன். ஆனால் உனது மகனின் எதிர்ப்பால் முடியவில்லை.
எனது தாமதத்தைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி {ஹிடிம்பன்}, உனது மகன்களைக் கொல்ல இங்கே வந்தான்.
ஆனால் அவன், உனது பெரும் பலம் வாய்ந்த மகனான, எனது கணவரால் {பீமனால்} வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளான்.
நரனும் ராட்சசனும் ஆன அந்த இரும் பெரும் பலசாலிகளும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திப் போரிட்டுக் கொண்டே, ஒருவரை ஒருவர் நசுக்கி, இந்த முழுப் பகுதியையும் தங்கள் முழக்கங்களால் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பார்" என்றாள்.
"அவளது வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன் மற்றும் பெரும் சக்தி படைத்த சகாதேவன் ஆகியோர் வேகமாக எழுந்து, பீமனும், ராட்சசனும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும், ஒருவரையொருவர் பெரும் பலத்துடன் இழுத்துக் கொண்டும் இரு சிங்கங்கள் மோதிக் கொள்வதைப் போல அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருந்தனர்.
அவர்களது சண்டையால் எழுந்த புழுதியால், அந்தக் காடே பற்றி எரிவதைப் போலத் தெரிந்தது.
புழுதியால் மறைக்கப்பட்ட உடல்களைக் கொண்ட அவர்கள், பார்ப்பதற்கு பனியால் மூடப்பட்ட இரண்டு பெரும் மலைகளைப் போல இருந்தனர்.
அப்போது, ராட்சசனால் ஒடுக்கப்படும் பீமனைக் கண்ட அர்ஜுனன், உதடுகளில் புன்னகையுடன், மெதுவாக
"ஓ பெரும் கரம் கொண்ட பீமரே, அஞ்சாதீர்! நீர் இந்தப் பயங்கரமான ராட்சசனோடு சண்டையிட்டுக் களைத்துப் போவதை (உறங்கிக் கொண்டிருந்ததால்) நாங்கள் அறியாதிருந்தோம்.
உமக்கு உதவி செய்ய நான் இப்போது இங்கே நிற்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்ல, நீர் எனக்கு வழிவிடுவீராக. நகுலனும் சகாதேவனும் நமது தாயைக் காக்கட்டும்" என்றான்.
இதைக் கேட்ட பீமன், "ஓ தம்பி, அந்நியனைப் போல் நின்று சண்டையை மட்டும் பார்ப்பாயாக! முடிவை எண்ணி அஞ்சாதே. எனது கரங்கள் எட்டும் தொலைவிற்குள் வந்த பிறகு, இவன் உயிருடன் தப்பமாட்டான்" என்றான்
அர்ஜுனன், "ஓ பீமரே, இந்த ராட்சசனை இவ்வளவு நேரம் உயிருடன் வைத்திருப்பதன் அவசியம் என்ன? ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் செல்ல வேண்டும். இன்னும் இங்கேயே தங்க முடியாது.
கிழக்குச் சிவக்கிறது, காலைச் சந்தி வரப்போகிறது. அக்காலத்தில் ராட்சசர்களின் பலம் கூடும். எனவே, ஓ பீமரே, விளையாடாமல் துரிதமாகச் செயல்பட்டு இந்தப் பயங்கரமான ராட்சசனை உடனே கொல்வீராக. நாளின் இரு சந்தி காலங்களில் ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுவார்கள். உமது கரங்களின் பலம் அத்தனையையும் பயன்படுத்துவீராக" என்றான்".
"அர்ஜுனனின் இந்தப் பேச்சால் கோபம் மூண்ட பீமன், அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது பயன்படும் வாயுவின் (தனது தந்தையின்) பலத்துடன், பெரும் கோபம் கொண்டு அந்த நீல மேகம் போன்ற ராட்சசனின் உடலைத் தூக்கி, நூறு முறை சுழற்றினான்.
அப்போது பீமன், அந்த மனித ஊனுண்ணியிடம் {ஹிடிம்பனிடம்}, "ஓ ராட்சசா, உனது புத்திக்கூர்மை வீணே. வீணாக இந்தப் புனிதமற்ற பெருத்த சதைகளை நீ வளர்த்திருக்கிறாய். எனவே புனிதமற்ற இறப்புக்கு நீ தகுதியுள்ளவனே. நான் இன்று உன்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறேன்.
இன்று இந்தக் கானகத்தை நான் முட்செடிகள் இல்லாத அருளப்பட்ட கானகமாக்குகிறேன். ஓ ராட்சசா, நீ மனிதர்களை உனது உணவாக இனி கொள்ள முடியாது" என்றான்
பீமன், நெருப்பெனக் கோபம் கொண்டு, அந்த ராட்சசனைத் தரையில் தேய்த்து, விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் கொன்றான்.
அந்த ராட்சசன் கொல்லப்படும்போது, அவன் பயங்கரமான பேரொலியை எழுப்பினான். அவ்வொலி அக்கானகம் முழுதும் நிறைந்து, நனைந்த மேளம் போல ஆழ்ந்த ஒலியாக இருந்தது.
பிறகு அந்தப் பலம்வாய்ந்த பீமன், அவ்வுடலைத் தனது கைகளில் பிடித்து, இரண்டாக மடித்து, நடுவில் உடைத்து அவனது சகோதரர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.
ஹிடிம்பன் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, தாமதிக்காமல் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பீமனை வாழ்த்தினர்.
பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சிறப்பு மிக்கப் பீமனைப் பெரிதும் கொண்டாடிய அர்ஜுனன், அவனிடம், "மரியாதைக்குரிய மூத்தவரே {அண்ணா}, இக்கானகத்தின் அருகிலேயே ஒரு நகரமிருப்பதாக நான் நினைக்கிறேன். நீர் அருளப்பட்டிருப்பீராக. உடனே நாம் அங்குச் சென்றால், துரியோதனனால் நமது சுவடுகளை அறிய முடியாது" என்றான்.
பிறகு, பலம்வாய்ந்தவர்களும், தேர் வீரர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தங்கள் தாயுடன் தொடர்ந்தனர். ராட்சசப் பெண் ஹிடும்பையும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்" {என்றார் வைசம்பயானர்}.
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109
No comments:
Post a Comment