Saturday, March 12, 2022

Mahabharatam part 24 in Tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-24
..
ஆதிபர்வம்
..
அடர்ந்த கானகத்திற்குள் ஐவரையும் சுமந்துகொண்டு சென்ற பீமன்
..
வைசம்பாயனர் சொன்னார்,
"அதே நேரத்தில் விதுரன் தனது நம்பிக்கைக்குரியவனும், நல்ல குணம் படைத்தவனுமான ஒரு மனிதனை அந்தக் கானகத்திற்குள் அனுப்பி வைத்தான்.
அந்த மனிதன், கானகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், கங்கையின் ஆழத்தை அளந்து கொண்டிருந்த பாண்டவர்களை அவர்களது தாயாருடன் கண்டான்.
 துன்மார்க்கனான துரியோதனனின் தீய திட்டங்களைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த புத்திக்கூர்மையுள்ள விதுரன், அதன் காரணமாகவே அந்த விவேகமுள்ள மனிதனைப் பாண்டவர்களிடம் அனுப்பினான்.
விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், புனிதமான கங்கையின் கரையில் இயந்திரங்களுடனும் கொடிகளுடனும் கூடிய படகொன்றைப் பாண்டவர்களுக்குக் காட்டினான். அப்படகு, கடும் காற்றையும் அலைகளின் வேகத்தையும் புயல்காலத்திலும் சமாளிக்கும் வண்ணம் நம்பிக்கைக்குரிய கைவினைஞர்களால் கட்டப்பட்டிருந்தது.
அம்மனிதன், தான் விதுரனால்தான் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்கப் பாண்டவர்களிடம், "ஒ யுதிஷ்டிரா, கற்றறிந்த விதுரர், நான் அவரிடம் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லியனுப்பினார்.
 'வைக்கோலை உண்பவனோ {அக்னி}, பனியைக் காய வைப்பவனோ {சூரியன்} கானகத்தின் பொந்தினுள் வசிப்பவனை எரிக்க முடியாது. இதை அறிந்தவன் தன்னை மரணத்தில் இருந்து காத்துக் கொள்வான்.' என்ற வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்
இதன் மூலம் நான் விதுரரால் அனுப்பப்பட்டவன்தான் என்பதையும், நான் நம்பிக்கைக்குரியவன் என்பதையும் அறிந்து கொள்வீராக. அனைத்தையும் அறிந்த விதுரர், 'ஓ! குந்தியின் மகனே யுதிஷ்டிரா, நீ நிச்சயமாகக் கர்ணன், துரியோதனன், அவனது சகோதரர்கள், மற்றும் சகுனியைப் போரில் தோற்கடிப்பாய்' என்று நான் சொன்னதாகச் சொல்.' என்றார்.
 இப்போது நீரில் இருக்கும் இந்தப் படகு, புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இது நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதிகளிலிருந்து சுமந்து செல்லும்" என்றான்
அந்த மனிதர்களில் சிறந்தவர்கள், தங்கள் தாயுடன் சோகமாக இருப்பதைக் கண்ட அம்மனிதன், அவர்களைக் கங்கையின் மீதிருந்த படகில் ஏற்றி, அவர்களுடன் தானும் ஏறிக் கொண்டான். தனது படகில் கங்கையின் அக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அப்படி நீரின் மேல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் பாதுகாப்பாக அக்கரையில் இறங்கியதைக் கண்ட அம்மனிதன் "ஜெயம் என்ற சொல்லைச் சொன்னான். அதன்பிறகு அவர்களை விட்டகன்று, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்பிச் சென்றான்.
அச்சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், அவனிடம் விதுரனுக்கான செய்தியைச் சொல்லிவிட்டு, கங்கையைக் கடந்து, கமுக்கமாகவும் வேகமாகவும் முன்னேறிச் சென்றனர்"
"இரவு கழிந்ததும், நகரத்து மக்கள் பெருமளவில் கூடி பாண்டுவின் மைந்தர்களைக் காண வந்தனர். எரிந்து போன அவ்வீடு அரக்கைக் கொண்டு கட்டப்பட்டது என்பதையும், அதைக் கட்டிய (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து இறந்தான் என்பதையும் நெருப்பை அணைத்த பிறகு அம்மக்கள் அறிந்தனர்.
அவர்கள், "பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. சரி இனி, "உனது பெரும் விருப்பம் ஈடேறியது! நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்" என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
அப்போது, பாண்டவர்களை அடையாளம் காணச் சிலரை அனுப்பினர். அவர்கள் அந்த அப்பாவி நிஷாதப் பெண்மணியும், அவளது ஐந்து மகன்களும் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.
 விதுரனால் அனுப்பப்பட்ட சுரங்க நிபுணன் கனகன், எவரும் அறியாவண்ணம், சாம்பலை அகற்றி, அவன் தோண்டியிருந்த சுரங்கக் குழியில் அவற்றைப் போட்டு அதை மறைத்தான்.
 அந்நகரக் குடிமக்கள், பாண்டவர்களும், துரியோதனனின் அமைச்சன் புரோசனனும் எரிந்து போய் இறந்ததாகத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லியனுப்பினர்.
 பாண்டவர்கள் இறந்த தீய செய்தியைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயர் கொண்டு அழுதான்.
அவன் {திருதராஷ்டிரன்}, "இந்த வீர மைந்தர்கள் தங்கள் தாயுடன் எரிந்து போனதால், பெரும் புகழ் கொண்டவனும் எனது தம்பியுமான மன்னன் பாண்டு, இன்றுதான் இறந்து போனான். இது நிச்சயம்
 மக்களே, வேகமாக வாரணாவதம் சென்று பாண்டவர்களுக்கும், குந்திபோஜனின் மகளுக்கும் {குந்திக்கும்} ஈமச்சடங்குகளைச் செய்யுங்கள்.
அவர்களது எலும்புகளைக் கொணர்ந்து அதற்குத் தகுந்த சடங்குகளைச் செய்யுங்கள். அவர்களது நன்மைக்கான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள். எரிந்து போனவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அங்கே செல்லட்டும். பாண்டவர்களுக்காகவும், குந்திக்காகவும் இச்சூழலில் செய்ய வேண்டிய நற்கருமங்கள் அனைத்தும் தொடங்கட்டும்" என்றான்.
உறவினர்களால் சூழப்பட்ட அம்பிகையின் மைந்தன் திருதராஷ்டிரன், இதைச் சொல்லிவிட்டுப் பாண்டுவின் மகன்களுக்கு நீர்க்கடன் செலுத்தினான்.
அனைவரும் சோகத்தால் தாக்குண்டு சத்தமாக, "ஓ! யுதிஷ்டிரா, ஓ! குரு குலத்தின் இளவரசா!" என்று கதறி அழுதனர். அதே வேளையில் மற்றவர்கள், "ஓ! பீமா!,
ஓ! பல்குனா!" என்றும், வேறு சிலர், "ஓ! இரட்டையர்களே!, ஓ! குந்தி!" என்றும் கதறி அழுது தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
பாண்டவர்களுக்காக அந்நாட்டுக் குடிமக்கள் அழுதனர், ஆனால், உண்மையை அறிந்திருந்ததால், விதுரன் அதிகமாக அழவில்லை
அதேவேளையில், பெரும் பலம் வாய்ந்த பாண்டவர்கள், தங்கள் தாயுடன் சேர்ந்து ஆறு பேராக வாரணாவத நகரத்தை விட்டு அகன்று கங்கைக் கரைக்கு வந்தனர்.
 படகோட்டியின் கரபலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றினாலும், விரைவாகக் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.
அவர்கள் அப்படகை விடுத்து, இருட்டில் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தங்கள் வழியைக் கண்டுபிடித்துத் தென்திசையில் முன்னேறிச் சென்றனர்.
பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர். உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.
 பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் "இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும்? நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.
பாவி புரோசனன் இறந்துவிட்டானா? இல்லையா? என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த ஆபத்துகளிலிருந்து தப்பப் போகிறோம்?
ஓ! பீமா, முன்பு போலவே எங்களைச் சுமந்து கொண்டு முன்னேறுவாயாக. நம்மில் நீயே பலவானும், காற்றைப் போல் வேகமாக நகர்பவனும் ஆவாய்" என்றான்.
யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமசேனன், குந்தியையும், அவனது சகோதரர்களையும் தூக்கிக் கொண்டு, வேகமாக நடந்து முன்னேறிச் சென்றான்
"இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் முன்னேறிச் செல்கையில், அவனது மார்பின் மோதலால் அந்த முழுக் கானகமே அதன் மரங்களுடனும், கிளைகளுடனும் நடுங்குவது போலத் தெரிந்தது.
அவனது தொடைகளின் அசைவு உண்டாக்கிய காற்றானது, ஆனி மற்றும் ஆடி மாதக் காற்றைப் போல வீசியது. அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் மரங்களையும், செடிகொடிகளையும் சாய்த்துத் தனக்கான வழியை உண்டாக்கியபடியே முன்னேறிச் சென்றான்.
  உண்மையில் அவன், தன் வழியில் நின்ற பெரும் மரங்களையும், செடிகளையும், அதன் பூக்கள் மற்றும் கனிகளுடன் ஒடித்துப் போட்டு முன்னேறிச் சென்றான்.
யானை மந்தையின் அறுபது வயதான தலைமை யானை குறிப்பிட்ட காலத்தில் தனது உடலின் மூன்று பகுதிகளில் நீர் வழிய, பெரும் மரங்களை ஒடித்துப் போட்டுக் கடந்து செல்வதைப் போல அந்தக் கானகத்தைப் பீமன் கடந்து சென்றான்.
பீமனின் சக்தி, கருடன் மற்றும் மருதனின் (வாயுத்தேவன்) வேகத்திற்கு இணையாக இருந்தது. அதனால் பாண்டவர்கள் {அப்படிச் செல்லும் பீமன் மீது அமர்ந்து இருந்ததால்} மயக்கமடையும் சூழல் ஏற்பட்டது.
பாண்டவர்கள், கடக்கக் கடினமான நீரோட்டங்களை நீந்தி, திருதராஷ்டிரனின் மகன்களுக்குப் பயந்து, வழியில் மாறுவேடம் பூண்டு கொண்டு சென்றனர்.
 சமமற்ற நதிகளின் கரைகளில், பீமன், நுட்பமான உணர்வுகள் கொண்டவளான தனது தாயைத் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றான்.
மாலை நெருங்கும் போது பீமன் தனது சகோதரர்களையும் தாயையும் முதுகில் சுமந்து கொண்டே, பழங்களும், கிழங்குகளும் நீரும் அரிதாகவே கிடைக்கும் ஒரு பயங்கரமான கானகத்தை அடைந்தான். அந்தக் கானகத்தைச் சுற்றிலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பயங்கரமான அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.அந்தி சாய்ந்ததும், அவற்றின் அலறல்கள் கடுமையாகின. இருட்டு, அனைத்தையும் பார்வையில் இருந்து மறைத்தது. அகாலமான நேரத்தில் கடும் காற்று வீசிப் பெரிதும் சிறிதுமான பல மரங்களையும், கொடிகளையும், இலைகளையும், பழங்களையும் தரையில் சாய்த்தது.
களைப்பாலும், தாகத்தாலும் அவதிப்பட்ட அந்தக் கௌரவ இளவரசர்கள் {பாண்டவர்கள்} கனத்த உறக்கத்தால் மேலும் முன்னேற முடியாமல் தவித்தனர். அவர்கள் அனைவரும் உணவும், நீரும் இன்றி அந்தக் கானகத்தில் அமர்ந்தனர். தாகத்தால் அவதிப்பட்ட குந்தி, தனது மகன்களிடம், "நான் ஐந்து பாண்டவர்களின் தாய். இப்போது அவர்கள் மத்தியிலேயே இருக்கிறேன். இருப்பினும் நான் தாகத்தால் அவதிப்படுகிறேன்" என்றாள். இதையே திரும்பத் திரும்பத் தனது மகன்களிடம் குந்தி சொன்னாள்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமனின் இதயம், தாய் மீது கொண்ட பாசத்தால் இரக்கப்பட்டு வெந்தது. உடனே அவன் (முன்பு போலவே) {அனைவரையும் தூக்கிக் கொண்டு} புறப்படத் தீர்மானித்தான்.
ஒரு உயிரினமும் இல்லாத அந்தப் பயங்கரமான பெரிய கானகத்தில், பீமன் முன்னேறி நடந்து, அகலமாகக் கிளைகள் பரவிய ஓர் அழகான ஆல மரத்தைக் கண்டான்.
அங்கே தனது சகோதரர்களையும், தாயையும் இறக்கிவிட்டு, அவர்களிடம், "இங்கே ஓய்வெடுங்கள், அதே வேளையின் நான் நீர் தேடிச் செல்லப் போகிறேன்.
நீர் வாழ் பறவைகளின் இனிய ஒலிகளைக் கேட்கிறேன். இங்கே ஒரு பெரிய குளம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றான்.
, "செல்வாயாக" என்று தனது மூத்த சகோதரனால் {யுதிஷ்டிரனால்} கட்டளையிடப்பட்ட பீமன், அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திக்கில் முன்னேறிச் சென்றான்.
அவன் விரைவில் ஓர் தடாகத்தை வந்தடைந்தான். அங்கே குளித்து முடித்துத் தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால் தனது மேலாடையை நீரில் முக்கி, அதை அவர்களுக்குக் கொண்டு வந்தான். தான் சென்ற நான்கு மைல் வழியைத் தொடர்ந்து தனது தாய் இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து, அவளைக் கண்டு பெரும் துன்பமடைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டான்.
விருகோதரன் {பீமன்}, தனது தாயும், சகோதரர்களும் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் கண்டு, துக்கத்தால் மன உளைச்சலடைந்து அழுது புலம்பத் தொடங்கினான். "ஓ!, சகோதரர்கள் வெறுந்தரையில் தூங்குவதைக் காணும் பாவியானேனே, இதைவிடப் பெரிய வலியைத் தர வேறு என்ன நிகழ வேண்டும்?
 ஐயோ, வாரணவதத்தின் விலையுர்ந்த மென்மையான படுக்கையில் தூங்க முடியாதவர்கள், இப்போது வெறுந்தரையில் தூங்குகிறார்களே!ஓ!, தாமரை இதழ்களைப் போன்ற மென்மை கொண்டவளான இந்தக் குந்தி, எதிரிப் படைகளைத் துவம்சம் செய்யும் வாசுதேவனின் தங்கையான இந்தக் குந்தி, குந்திராஜனின் மகளான இந்தக் குந்தி, அதிர்ஷ்டக் குறிகள் நிறைந்தவளான இந்தக் குந்தி,விசித்திரவீரியனின் மருமகளும், சிறப்புமிக்கப் பாண்டுவின் மனைவியுமான இந்தக் குந்தி, எங்களின் (ஐந்து சகோதரர்கள்) தாயான இந்தக் குந்தி,(25) விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுதி வாய்ந்த இந்தக் குந்தி, வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட, வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்!
ஓ!, தர்மன், இந்திரன், மருதன் {வாயு} ஆகியோரின் பிள்ளைகளை ஈன்றெடுத்து, அரண்மனையில் மட்டுமே உறங்கியவள், களைப்படைந்து வெறும் தரையில் உறங்குகிறாளே!
எனது சகோதரர்கள் வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்?
ஓ!, மூவுலகத்தையும் ஆளும் தகுதி கொண்ட அறவோனான இந்த யுதிஷ்டிரர், சாதாரண மனிதனைப் போலக் களைப்படைந்து தரையில் தூங்குகிறாரே!
மனிதர்களில் ஒப்பில்லாதவனும், நீல மேகங்களைப் போலக் கருநிறம் கொண்டவனுமான அர்ஜுனன், வெறுந்தரையில் சாதாரண மனிதனைப் போலத் தூங்குகிறானே! ஓ!, இதைவிட வலிநிறைந்தது எது இருக்க முடியும்?
ஓ! அஸ்வினி இரட்டையர்களைப் போன்ற அழகுடன் தேவர்களைப் போல இருக்கும் இந்த இரட்டையர்கள் சாதாரணமானவர்கள் போல வெறும் தரையில் தூங்குகிறார்களே!
 பொறாமை மற்றும் தீய எண்ணங்கொண்ட உறவினர்கள் யாரும் இல்லாதவன், கிராமத்தில் இருக்கும் ஒற்றை மரம் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வான்.
 அதே வகை மரங்கள் வேறு இல்லாமல், தனியாக இலைகளுடனும் கனிகளுடனும் கிராமத்தில் நிற்கும் மரம் புனிதமடைந்து, அனைவராலும் வழிபடப்பட்டுக் கொண்டாடப்பட்டு இருக்கும்.
நிறைய உறவினர்களுடனும், வீரத்துடனும், அறத்துடனும் இருப்பவர்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.
பலத்துடனும், வளமையில் வளர்ந்தும், எப்போதும் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்வூட்டுபவர்கள், ஒரே கானகத்தில் வளரும் நெடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்கின்றனர்.
நாம் தீய திருதராஷ்டிரனாலும் அவனது மகன்களாலும் நாடுகடத்தப்பட்டு, மரணத்திலிருந்து பெரும் சிரமத்திற்கிடையில் தப்பித்து வந்திருக்கிறோம்
 அந்த நெருப்பிலிருந்து தப்பித்து, இந்த மரத்தின் நிழலின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவ்வளவு துன்பப்பட்ட பிறகு, இனி நாம் எங்கே செல்வது?
தொலைநோக்குப் பார்வை சிறிதும் அற்ற திருதராஷ்டிரன் மைந்தர்களே, நீங்கள் தீயவர்கள், உங்கள் தற்காலிக வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவர்கள் உங்களுக்கு நற்பேற்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தீய பாவிகளே, நீங்கள் இன்னும் உயிரோடிருப்பது, யுதிஷ்டிரர் உங்களைக் கொல்ல எனக்குக் கட்டளையிடாமல் இருப்பதால்தான். இல்லையேல் கோபத்தால் நிறைந்திருக்கும் நான், இந்நாளிலேயே (ஓ! துரியோதனா) உன்னை, உனது பிள்ளைகள்( துரியோதனனின் திருமணம் நடந்து பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள்), நண்பர்கள், சகோதரர்கள், கர்ணன் மற்றும் (சகுனியுடன்) சுபலனின் மகனோடு சேர்த்து யமனின் உலகத்திற்கு அனுப்பியிருப்பேன். ஆனால், இழிந்த பாவிகளே, நான் என்ன செய்ய? பாண்டவர்களில் மூத்த அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், இன்னும் உங்களிடம் கோபம் கொள்ளவில்லையே?" என்று சொல்லி அழுதான்
இப்படிச் சொன்னவனும், பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான பீமன், கோபத்தால் எரிந்து, தனது உள்ளங்கைகளைப் பிசைந்து கொண்டு, துக்கத்தால் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.
தனது சகோதரர்கள் வெறும் தரையில் நம்பிக்கையுடன் சாதாரண மனிதர்களைப் போலத் துயில்வதைக் கண்டே விருகோதரன் {பீமன்}, திடீரென்று கோபமடைந்தான். பீமன் தனக்குள்,
"இந்தக் கானகத்திற்கு அருகில் ஏதோ நகரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழிப்புடன் அமர்ந்து கொள்வேன்.
அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும், இது {நான் கொண்டு வந்த இந்த நனைந்த ஆடை} இவர்களது தாகத்தைத் தணிக்கும்" என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொல்லிக் கொண்ட, பீமன் விழிப்புடன் அமர்ந்து, தனது தாயையும், சகோதரர்களையும் பார்த்துக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109

No comments:

Post a Comment