Friday, March 11, 2022

Mahabharatam part 23 in Tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-23
..
ஆதிபர்வம்
..
வாரணாவதத்து மாளிகைக்கு தீயிட்டான் பீமன்
வைசம்பாயனர் சொன்னார்,
"பாண்டவர்கள் வருகையைக் கேள்விப்பட்ட வாரணாவதத்தின் குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, வேகமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் வாரணாவதத்தைவிட்டு வெளியே வந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்களுக்குக் பாண்டவர்களுக்குக் கொடுப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பல வகைப் பரிசுப் பொருட்களுடன் அவர்கள் வந்தனர்.
வாரணாவதத்தின் மக்கள், குந்தி மைந்தர்களை அணுகி, "ஜெயம்" என்ற வார்த்தையைச் சொல்லி, அவர்களைச் சூழ்ந்து நின்றனர்.
இப்படி மக்களால் சூழப்பட்ட மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரன் போலப் பிரகாசமாக இருந்தான்.
அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாவமற்றவர்கள், குடிமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு, மக்கள்தொகை நிறைந்ததும், அலங்காரமானதுமான அந்த வாரணாவதத்துக்குள் நுழைந்தனர்.
அந்த நகருக்குள் நுழைந்த அவ்வீரர்கள், முறையாகத் தங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் வசிப்பிடத்துக்குச் சென்றனர்.பிறகு, நகர அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கும், அதன்பின்பு சூதர்கள், மற்றும் வைசியர்கள் வசிப்பிடங்களுக்கும், ஏன் சூத்திரர்களின் வசிப்பிடங்களுக்கும் கூடச் சென்றனர்.
 குடிமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாண்டவர்கள், புரோசனனைத் தங்களுக்கு முன்னால் செல்லவிட்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
 பின்பு அவர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்ட அரண்மனைக்குச் சென்றனர். புரோசனன் அவர்களுக்கு முன்பு உணவையும், நீரையும், படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், எல்லாவகைப் பொருட்களையும் வைத்தான்.விலையுயர்ந்த ஆடைகளைப் பூண்டு கொண்ட பாண்டவர்கள், புரோசனனாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு, வாரணாவதத்திலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
அப்படியே பாண்டவர்கள் அங்கே பத்து இரவுகள் தங்கினார்கள். அவ்வீடு சபிக்கப்பட்ட வீடாயிருப்பினும், புரோசனன் அவர்களிடம் "இஃது 'அருளப்பட்ட வீடு' என அழைக்கப்படுகிறது" என்று சொன்னான்.
 அதன்பிறகு விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அந்த மாளிகைக்குள் கைலாசத்திற்குள் புகும் குஹ்யகர்கள் (யக்ஷர்கள்} போல புரோசனனுடன் நுழைந்தனர்.அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அந்த வீட்டை ஆய்வு செய்து, பீமனிடம் அஃது எரியத்தக்கப் பொருட்களால்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தான்.
அரக்கைத் {அரக்கு} தயார் செய்யும்போது அதனுடன் கலக்கப்பட்ட நெய் மற்றும் கொழுப்பின் வாசத்தை நுகர்ந்து கண்ட யுதிஷ்டிரன் பீமனிடம், "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இவ்வீடு உண்மையிலேயே எரியத்தக்க பொருட்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது தெளிவாகத் தெரிகிறது.
நமது எதிரி, நம்பத்தகுந்த கட்டுமானக் கலைஞர்களைக் கொண்டு, சணல், குங்கிலியம், காய்ந்த புல், வைக்கோல், மூங்கில் ஆகியவற்றைத் தெளிந்த நெய்யில் ஊறவைத்து, அவற்றைக் கொண்டு இவ்வீட்டை அழகாகக் கட்டியிருக்கிறான். தீயவனும், பாவியும், துரியோதனனின் உத்தரவின்படி செயல்படுபவனுமான இந்தப் புரோசனன், என்னை நம்பிக்கைக்குரியவனாகக் காணும்போது எரித்தவிடலாம் என்ற நோக்கோடு இங்கே தங்கியிருக்கிறான்.
ஆனால், ஓ! பிருதையின் மகனே {பீமனே}, பெரும் புத்திக்கூர்மை கொண்ட விதுரர், இந்த ஆபத்தை உணர்ந்தே என்னை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார்.
 நம் மீது கொண்ட பாசத்தால், எப்போதும் நமது நன்மையையே விரும்பும் நமது சிறிய தகப்பனார், அனைத்தையும் அறிந்து கொண்டு, துரியோதனனின் கட்டளையால் இந்தப்பாவிகளால் கமுக்கமாகக் கட்டப்பட்ட இந்த ஆபத்தான வீட்டைப் பற்றி நமக்குச் சொல்லியிருக்கிறார்" என்றான்.
இதைக் கேட்ட பீமன், "ஐயா, இஃது எரியத்தக்க பொருட்களால் கட்டப்பட்ட வீடு என்பதை நீர் அறிந்தால், உடனே நாம் இந்த இடத்தைவிட்டு அகன்று நாம் முதலில் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்புவது நமக்கு நன்மையைத் தரும்" என்றான்.
யுதிஷ்டிரன், "நாம் இங்கேயே வாழ வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐயத்திற்கிடமில்லாமல் எச்சரிக்கையுடனும், உணர்வுகள் விழிப்பான நிலையிலும் நாம் வாழும்போதே, ஏதாவது செய்து இங்கிருந்து தப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
புரோசனன் நமது முகச் சுருக்கங்களைக் கண்டு கொண்டால் {நாம் ஐயுறுகிறோம் என்பதை அறிய வந்தால்}, அவன் விரைவாகச் செயல்பட்டுத் திடீரென நம்மை எரித்துக் கொன்றுவிடக் கூடும்.
 உண்மையில் புரோசனன் அவதூறையும், பழிபாவத்தையும் சிறிதும் மதிக்காதவனாவான். துரியோதனனின் உத்தரவுக்கிணங்கியே அந்தப் பாவி இங்குத் தங்கியிருக்கிறான்.
நாம் எரிக்கப்பட்டால் பீஷ்மர் கோபம் கொள்வாரா? அப்படிக் கோபப்பட்டுக் கௌரவர்களின் கோபத்திற்கு அவர் ஏன் ஆளாகப் போகிறார்?
 அல்லது நமது பாட்டனான பீஷ்மரும், மற்ற குரு குலத்தின் காளைகளும், தீய காரியங்களுக்கு எதிராகச் சீறும் அறச்சீற்றம் கொண்டு கோபமடையவும் வாய்ப்பிருக்கிறது.
 எவ்வாறிருப்பினும், எரிக்கப்படுவதற்கு அஞ்சி, நாம் இங்கிருந்து தப்பித்தோமென்றால், ஆட்சியை விரும்பும் துரியோதனன், நாம் இருக்கும் இடத்தைத் தேடித் தனது ஒற்றர்களைக் கொண்டு நமக்கு மரணத்தை ஏற்படுத்துவான்.
நமக்கு அதிகாரமும் இல்லை; பலமும் இல்லை. ஆனால், துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நமக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ இல்லை. ஆனால் துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நாம் செல்வமற்றிருக்கிறோம். துரியோதனனுக்கோ கருவூலம் முழுமையும் அவனது கட்டுக்குள் இருக்கிறது.
 எந்த வழிமுறையைக் கையாண்டாவது நம்மை அவனால் கொல்ல முடியும் என்பது நமக்குத் தெளிவாகவில்லையா? எனவே, நாம் இந்தப் பாவியை (புரோசனனை) ஏமாற்றி, நாட்களைக் கடத்திச் சிறிது காலத்திற்கு நம்மை மறைத்துக் கொள்வோம்
 வேட்டையாடும் வாழ்வை நோற்று இப்பூமியில் திரிந்து வருவோம். அப்போது, தப்புவதற்குள்ள வழிகள் அனைத்தையும் நாம் அறிந்திருப்போம்.
மேலும், இன்றே, மிகக் கமுக்கமாக {இரகசியமாக} நமது அறைக்குள் ஒரு சுரங்கப் பாதையை உண்டாக்குவோம். இவ்வழியில் செயல்பட்டு, நாம் செய்வதனைத்தையும் மறைத்தே செய்து வந்தால், நெருப்பால் நம்மை உட்கொள்ள முடியாது.
நாம் இங்கேயே தங்கி, புரோசனனோ, வாரணாவத குடிமக்களோ அறியாத வண்ணம், நமது பாதுகாப்புக்கான அனைத்தையும் செய்ய வேண்டும், நாம் தப்புவதையும் அவர்களில் ஒருவரும் அறியக்கூடாது" என்றான்"
"சுரங்கம் தோண்டுவதில் நிபுணரான விதுரனின் நண்பர் கனகன் என்ற ஒருவர் பாண்டவர்களைக் கமுக்கமாகச் சந்தித்து,
"நான் விதுரரால் அனுப்பப்பட்டவன். சுரங்கம் தோண்டுவதில் நான் நிபுணன். பாண்டவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.
 என்னிடம் இருக்கும் நம்பிக்கையால் விதுரர் என்னிடம், "நீ பாண்டவர்களிடம் சென்று அவர்களுக்கு நன்மை செய்வாயாக" என்றார். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
 தேய்பிறையின் பதினான்காவது நாள் இரவில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி} புரோசனன் இந்த வீட்டின் கதவுகளுக்குத் தீ வைப்பான்.
பாண்டவர்களை அவர்களது தாயுடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்பது தீய மனம் படைத்த திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனன்} விருப்பமாகும்.
 ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, விதுரர் மிலேச்ச மொழியில் உம்மிடம் ஏதோ சொல்ல, நீரும் அதே மொழியில் மறுமொழி கூறியிருக்கிறீர். இக்குறிப்புகளை நீர் என்னை நம்புவதற்காகவே தெரிவிக்கிறேன்" என்றார்.
உண்மையைப் பேசுபவனான குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, கனகரிடம், "ஓ! இனிமையானவரே, நான் உம்மை விதுரரின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும், அவரின் அன்புக்குரியவருமாக அறிந்திருக்கிறேன். நீர் அவரிடம் உண்மையுடனும் ,அர்ப்பணிப்புணர்வுடனும் இருப்பவர். கல்விமானான விதுரர் அறியாத யாதொன்றும் இல்லை.
 அவருக்கு நீர் எப்படி வேண்டியவரோ, அதே போலத்தான் எங்களுக்கும் வேண்டியவரே. அவரிடமும், எங்களிடமும் வேறுபாடு காணாதீர். நாங்கள் அவருக்கு எப்படியோ அப்படியே உங்களுக்கும். கல்விமானான விதுரர் எங்களைக் காப்பது போல, நீரும் எங்களைக் காப்பாற்றும்.
எரியத்தக்க இந்த வீட்டைத் திருதராஷ்டிரன் மகனின் உத்தரவாலேயே புரோசனன் நிறுவினான்.
 தீய வழியில் நடக்கும் அந்த இழிந்தவன், செல்வம் மற்றும் கூட்டாளிகளின் துணைக் கொண்டு, எங்களை எப்போதும் கண்காணிக்கிறான்.
உமது உழைப்பைக் கொடுத்து வரவிருக்கும் பெருந்தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றுவீராக. நாங்கள் இங்கே எரித்துக் கொல்லப்பட்டால், துரியோதனனின் விருப்பம் ஈடேரும்.
இங்கேதான் அந்தப் பாவியின் ஆயுதங்கள் நிறைந்த ஆயுத சாலை இருக்கிறது. இந்தப் பெரிய மாளிகையானது, அருகில் உயர்ந்த மதில்கள் எழுப்பித் தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் துரியோதனனின் இந்தப் புனிதமற்ற சதித்திட்டத்தை விதுரர் தொடக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். அவரே இதுகுறித்து எங்களை முன்கூட்டியே விழிப்படையச் செய்தார்.
 க்ஷத்திரி {விதுரர்} முன்கூட்டியே அறிந்திருந்த அந்த ஆபத்து, இப்போது நமது வாயிலருகே இருக்கிறது. இவை குறித்துப் புரோசனன் அறியாவண்ணம் எங்களைக் காப்பாற்றுவீராக" என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சுரங்க நிபுணன் கனகன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சுரங்கம் தோண்டும் பணியைக் கவனத்துடன் தொடங்கிப் பெரிய சுரங்க வழியை உண்டாக்கினான்.
 அச்சுரங்கத்தின் வாய் {வாயில்} நடு வீட்டில் இருந்தது. அது தரைக்குச் சமமாக மரப்பலகைகளால் மூடப்பட்டு இருந்தது.
அவ்வீட்டின் கதவைத் தொடர்ந்து கண்காணித்து வந்தவனும், தீயவனும், பொல்லாதவனுமான புரோசனனிடம் கொண்ட அச்சத்தால், அதன் வாயில் மூடப்பட்டிருந்தது.
பாண்டவர்கள் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு {ஆயுதம் தரித்துக் கொண்டே} தங்கள் அறையில் உறங்கினர். பகலெல்லாம் காடு காடாகச் சென்று வேட்டையாடினர்.
 இப்படிப் புரோசனனை அவர்கள் நம்பவில்லை என்றாலும், நம்புவது போலப் பாசாங்கு செய்து அங்குப் பாதுகாப்புடன் வாழ்ந்தனர்.
பாண்டவர்களின் திட்டம் குறித்து வாரணாவதக் குடிமக்களும் அறிந்திருக்கவில்லை. உண்மையில், சுரங்க நிபுணரான விதுரரின் நண்பரைத் தவிர வேறு யாரும் இத்திட்டத்தை அறியவில்லை"
"பாண்டவர்கள் மகிழ்ச்சியுடனும் ஐயத்திற்கிடமில்லாமலும், முழுமையாக ஒரு வருடம் வாழ்ந்ததைக் கண்ட புரோசனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.
 புரோசனன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்ட குந்தியின் அறம்சார்ந்த மைந்தன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், மற்றும் இரட்டையர்களிடம் (நகுலன் மற்றும் சகாதேவனிடம்),
 "கொடும் இதயம் கொண்ட அந்தப் பாவி நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறான். நாம் தப்பிச் செல்வதற்குத் தகுந்த காலம் வந்ததென நான் நினைக்கிறேன்.
ஆயுதச் சாலைக்கு நெருப்பு மூட்டிப் புரோசனனை எரித்துக் கொன்று, அவனது உடலை அங்கே விட்டு, நாம் அறுவரும் யாரும் அறியாமல் தப்பிச் சென்றுவிடலாம்" என்று சொன்னான்".
 கொடை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்த போது, குந்தி, ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவு கொடுத்தாள். அங்கே பல பெண்களும் வந்து உண்டும், குடித்தும், அவர்கள் விருப்பப்பட்டவாறு மகிழ்ந்திருந்தனர். பிறகு அவர்கள் குந்தியிடம் அனுமதி பெற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
ஐந்து மகன்களுக்குத் தாயான ஒரு நிஷாதப் பெண்பமணி {வேடுவப் பெண்மணி}, தன் பயணத்தின்போது, உணவு பெற விரும்பியும், விதியால் உந்தப்பட்டும், தனது மகன்கள் அனைவரையும் அந்த விருந்துக்கு அழைத்து வந்தாள்.
 அவளும் அவளது மகன்களும் அவர்கள் உண்டிருந்த மதுவினால் போதை கொண்டு நிலை தடுமாறி இருந்தனர். அந்த மாளிகையில் அந்தப் பெண் தனது மகன்களுடன் உணர்விழந்து பிணம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த மாளிகையில் வசித்தவர்கள் அனைவரும் படுத்தவுடன், அங்கே அந்த இரவில் பயங்கரமான பெருங்காற்று வீசியது.
அப்போது பீமன், அந்த வீட்டில் புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் தீயை மூட்டினான். அதன்பிறகு அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டினான்.
 அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான். அந்த வீட்டின் பல இடங்களில் தீப்பற்றியதைக் கண்டு மனநிறைவு கொண்ட பிறகு,
அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பாண்டுவின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} தங்கள் நேரத்தை வீணாக்காமல் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த நெருப்பின் வெப்பமும், உறுமலும் உக்கிரமடைந்து அந்நகர மக்களை எழுப்பியது. வீடு எரிவதைக் கண்ட அந்த நகரத்துக் குடிமக்கள் கவலை நிறைந்த முகங்களுடன்,
"அந்தத் தீய ஆன்மா கொண்ட பாவி (புரோசனன்), துரியோதனனின் கட்டளையின் பேரில், தனது முதலாளியின் உறவினர்கள் அழிவுக்காகவே இவ்வீட்டைக் கட்டியிருக்கிறான். நிச்சயமாக அவனே இதற்குத் தீ மூட்டியிருக்கிறான். ச்சீ... ச்சீ.. எவ்வளவு வஞ்சனை கொண்ட இதயத்தைப் பெற்றவனாக இருந்திருக்கிறான் இந்தத் திருதராஷ்டிரன்.
பாவங்களற்ற பாண்டுவின் வாரிசுகளை எதிரிகளாகக் கருதி, அவன்தான் அவர்களை எரித்துவிட்டான்!
ஐயமடையாதவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த அப்பாவி இளவரசர்களை, எரித்த தீய ஆன்மா கொண்ட அந்தப் பாவியையும் (புரோசனனையும்), விதி எரித்துக் கொன்றுவிட்டது" என்றனர்.
"வாரணாவதத்தின் குடிமக்கள் இப்படி பாண்டவர்களின் விதியை நினைத்து ஒப்பாரி வைத்தழுது, அன்று இரவு முழுவதும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.
இருப்பினும், பாண்டவர்கள் தங்கள் தாயை அழைத்துக் கொண்டு அந்தச் சுரங்க வழியிலிருந்து வெளிவந்து, யாரும் அறியாத வண்ணம் விரைவாக ஓடினர்.
ஆனால், தூக்கக் கலக்கத்தாலும், பயத்தாலும் தங்கள் தாயுடனிருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.
 பயங்கரமான ஆற்றலும், துரிதமான இயக்கமும் கொண்ட பீமசேனன், அந்த இருளில் தனது சகோதரர்கள் அனைவரையும், தனது தாயையும் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.அவன், தனது தாயைத் தோளிலும், இரட்டையர்களைத் தனது பக்கங்களிலும் {இடுப்பிலும்}, யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான். பெரும் சக்தியும், பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட விருகோதரன், எதிர்பட்ட மரங்களைத் தனது மார்பால் ஒடித்துக் கொண்டும், பூமியைத் தனது பாதச்சுவடுகளால் ஆழமாகத் துளைத்துக் கொண்டும் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109

No comments:

Post a Comment