Wednesday, March 9, 2022

Mahabharatam part 22 in Tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-22
..
ஆதிபர்வம்
..
துரியோதனனின் சூழ்ச்சி
வைசம்பாயனர் சொன்னார்,
"ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அரக்கு மாளிகை எரிந்ததையும், பாண்டவர்கள் தப்பியதையும் பற்றி நான் இப்போது உரைக்கக் கேட்பாயாக.
 பலத்தால் பீமசேனனும், ஆயுதச் சாதனைகளால் அர்ஜுனனும் விஞ்சியிருப்பதைக் கண்ட தீய துரியோதனன் வருத்தத்துடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
 சூரியனின் மகனான கர்ணனும், சுபலனின் மகனான சகுனியும் பல வழிகளில் பாண்டவர்களின் மரணத்திற்காக முயன்றனர். பாண்டவர்களும், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைத் தடுத்துவிட்டு, விதுரனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைப் பற்றி எப்போதுமே பேசாமலிருந்தனர்.
 பாண்டு மைந்தர்களின் சாதனைகளைக் கண்ட குடிமக்கள், பொது இடங்கள் அனைத்திலும் அவர்களைப் பற்றியே பேசத் தொடங்கினர்.
 மாளிகை முற்றத்திலும், மற்ற இடங்களிலும் கூடிப் பாண்டுவின் மூத்த மகனே (யுதிஷ்டிரன்), நாட்டை ஆளும் தகுதியைப் பெற்றவன் என்று அவர்கள் பேசினர்.
அவர்கள், "திருதராஷ்டிரன், அறிவுக்கண் கொண்டவனாக இருந்தாலும் (பிறவியிலேயே) பார்வையற்றவனாக இருப்பதால், முன்பே அவனால் நாட்டை அடைய முடியவில்லை. எனவே, இப்போது அவனால் எப்படி அடைய முடியும்?கடும் நோன்புகள் நோற்று, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சந்தனுவின் மைந்தனான பீஷ்மர் முன்பே ஆட்சி உரிமையை நிராகரித்துவிட்டார். அவர் இப்போதும் அஃதை ஏற்கமாட்டார். எனவே, நாம் இப்போது, பாண்டவர்களில் மூத்தவனை (அரியணையில்) உரிய சடங்குகளுடன் {மன்னனாக} அமர்த்தலாம். அவன் வேதமறிந்தவனாகவும், உண்மையானவனாகவும், அன்பானவனாகவும் இருக்கிறான். சந்தனுவின் மகனான பீஷ்மரையும், நீதிகள் அறிந்த திருதராஷ்டிரனையும் அவன் வழிபட்டு நிற்கிறான். அவன் முன்னவரையும், பின்னவரையும் அவர்களது பிள்ளைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்" என்றனர்.
யுதிஷ்டிரன் மீது அன்பு கொண்டவர்கள் இப்படிப் பேசிச் செல்வதைக் கேட்ட பாவியான துரியோதனன், மிகுந்த துன்பம் அடைந்தான்.
 பெருந்துயர் கொண்ட அந்தத் தீய இளவரசனால் {துரியோதனனால்} அப்பேச்சுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் கொதிப்படைந்து, திருதராஷ்டிரனிடம் சென்று,
 அவன் தனிமையாக இருப்பதைக் கண்டு, மரியாதையுடன் வணங்கி, யுதிஷ்டிரனை ஆதரிக்கும் குடிமக்களால் வெறுப்புண்டு, அந்த ஏகாதிபதியிடம்,
ஓ! தந்தையே, கலைந்து செல்லும் குடிமக்கள் தீய சகுனத்தைக் காட்டும் வார்த்தைகளை உச்சரிப்பதைக் கேட்டேன். உம்மையும், பீஷ்மரையும் கூடக் கடந்து, அவர்கள் பாண்டுவின் மகனை மன்னனாக்க விரும்புகின்றனர்.
 பீஷ்மர் இந்த நாட்டை ஆளமாட்டார். எனவே அவர் இதை ஏற்றுக் கொள்வார். குடிமக்கள் நமக்குப் பெருந்தீங்கு செய்ய முனைகின்றனர் என்றே தெரிகிறது.
பாண்டு, தமது மூதாதையர் நாட்டைத் தமது அறத்தின் சாதனைகளால் அடைந்தார். ஆனால் நீரோ, நாட்டைப் பெற முழுத் தகுதி இருந்தும், உமது குருட்டுத்தன்மையால், அஃதை அடைய முடியவில்லை.
பாண்டுவின் வாரிசு என்ற முறையில் பாண்டுவின் மகன் இந்நாட்டை அடைந்தால், அவனுக்குப் பிறகு அவனது மகனும், அதற்குப் பிறகு அவனது மகனின் மகனுமே பாண்டுவின் வழியில் அதைப் பெறுவார்கள்.
அவ்வழக்கத்தின் பயனாக, ஓ! உலகத்தின் மன்னா! நாமும், நமது சந்ததியும் அரச குலத்திலிருந்து விலக்கப்பட்டு, மனிதர்கள் அனைவராலும் நிச்சயம் அவமதிக்கப்படுவோம்.
எனவே, நிலைத்த துயரத்திற்கு நாம் ஆளாகாதவாறும், உணவுக்காக மற்றவர்களை நம்பியிருக்கும் நிலை நமக்கு ஏற்படாதவாறும், தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீராக.
ஓ! மன்னா, நீர் ஏற்கனவே அரசுரிமையைப் பெற்றுவிட்டீர், எனவே எவ்வளவுதான் மக்கள் நமக்குச் சாதகமாக இல்லையெனினும் நாமே அரசாட்சியைத் தொடர வேண்டும்" என்றான் துரியோதனன்
"தனது கண்களைப் போன்ற ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், கணிகர் சொன்னதை நினைத்துப் பார்த்தும், துயரடைந்ததால், அவனது மனம் {நன்மைக்கும் தீமைக்குமாக} ஆட்டம் கண்டது. பிறகு துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி,மற்றும் நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இளவரசன் துரியோதனன், திருதராஷ்டிரனிடம்,
 "ஓ! தந்தையே, புத்திசாலித்தனமான சூழ்ச்சியால், பாண்டவர்களை வாரணாவதம் எனும் நகரத்திற்கு அனுப்புவீராக. அதன் பிறகு நாம் அவர்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை" என்றான்.
தனது மகனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், சிறிது நேரம் யோசித்துவிட்டுத் துரியோதனனிடம்,"பாண்டு எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். அவன் எப்போதும் தனது உறவினர்களிடம் கடமையுணர்வுடனேயே இருந்தான். குறிப்பாக என்னிடம் மிகுந்த கடமையுணர்ச்சியுடன் இருந்தான். அவன் உலக இன்பங்களைப் பெரிதாகக் கருதாமல், நாடு உட்பட அனைத்தையும் எனக்குத் தந்துவிட்டான். அவனது மகனும், அவனைப் போலவே அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, எல்லா நற்செயல்களும் புரிகிறான். அவன் உலகப்புகழை அடைந்து, மக்களின் அன்புக்குரியவனாகவும் இருக்கிறான்.
பல கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் அவனை, தந்தைவழியில் அவனுக்கு வந்த நாட்டிலிருந்து எப்படி விரட்ட முடியும்? அமைச்சர்களும், (நாட்டின்) படைவீரர்களும், அவர்களது பேரன்களும் பாண்டுவால் நன்கு பேணிப் பராமரிக்கப்பட்டவர்கள்.
ஓ! மகனே, இப்படிப் பழங்காலத்தில் பாண்டுவால் நன்மையடைந்த குடிமக்கள், யுதிஷ்டிரனுக்காக, நம்மை நமது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்த்துக் கொன்றுவிட மாட்டார்களா?" என்றான்.
அதற்குத் துரியோதனன், "ஓ! தந்தையே, நீர் சொல்வது அனைத்தும் உண்மையே. நமது எதிர்காலத்தின் மீது விழுந்திருக்கும் தீமையைக் கணக்கில் கொண்டு, நாம் மக்களுக்குச் செல்வத்தையும், மரியாதைகளையும் கொடுத்தோமென்றால், அவர்கள் நமது அதிகாரத்தைக் கண்டு நம் பக்கமே நிற்பார்கள். ஓ! மன்னா, பொக்கிஷமும், நாட்டின் அமைச்சர்களும் இந்த நொடியில் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.எனவே, நீர் ஏதாவது நல்ல வழிமுறைகளைக் கையாண்டு, பாண்டவர்களை இங்கிருந்து வாரணாவத நகரத்திற்கு வெளியேற்றிவிடுவீராக. ஓ! மன்னா, ஆட்சி உரிமைகள் அனைத்தும் என்னிடம் வந்தபிறகு, குந்தி அவளது மைந்தர்களுடன் அவ்விடத்தில் இருந்து இங்கே திரும்பி வரட்டும்" என்று பதிலுரைத்தான்.
திருதராஷ்டிரன், "ஓ! துரியோதனா, இதே சிந்தனைதான் என் மனத்திலும் இருக்கிறது. ஆனால், அது பாவம் நிறைந்த செயலெனவே, நான் அதை வெளியிடவில்லை.பாண்டவர்கள் நாடுகடத்தப்படுவதைப் பீஷ்மரோ, துரோணரோ, க்ஷத்திரியோ {விதுரரோ}, கௌதமரோ (கிருபரோ) ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஓ! அன்பு மகனே, அவர்களின் பார்வையில், கௌரவர்களான நாமும், பாண்டவர்களும் இணையானவர்களே. ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதர்கள் இரு தரப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமாட்டார்கள்.
 எனவே, நாம் பாண்டவர்களிடம் இப்படி நடந்து கொண்டால், ஓ! மகனே, நாம் குரு குலத்தவர் கைகளாலும், இந்தச் சிறப்புவாய்ந்தவர்கள் கைகளாலும், இந்த முழு உலகத்தின் கைகளாலும் மரணிக்க மாட்டோமா? {அவர்கள் நம்மைக் கொல்லாமல் விடுவார்களா?}" என்று கேட்டான்
துரியோதனன், "பீஷ்மருக்கு இரு தரப்பிடமும் அளவு கடந்த பாசமெல்லாம் கிடையாது, எனவே அவர் (சச்சரவு வரும்போது) நடுநிலையே வகிப்பார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என் பக்கம் இருக்கிறான். மகன் எங்கிருக்கிறானோ அங்கேதான் தந்தையும் இருப்பார் என்பதில் ஐயம் கிடையாது.
துரோணரும், அஸ்வத்தாமரும் இருக்கும் பக்கத்தில் தான் சரத்வானின் மகனான கிருபரும் இருக்க முடியும். அவரால் துரோணரையும், தனது தங்கையின் மகனையும் (அஸ்வத்தாமனையும்) புறக்கணிக்க முடியாது.
க்ஷத்திரி (விதுரன்), ரகசியமாக நமது எதிரிகள் பக்கத்தில் இருப்பினும், அவரது வாழ்வை நடத்த நம்மையே நம்பியிருக்கிறார். அவர் பாண்டவர்கள் பக்கம் நின்றாலும், அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.
 எனவே, எந்த அச்சமும் கொள்ளாமல் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு நாடுகடத்துவீராக. அவர்கள் இந்நாளிலேயே அங்கே செல்லத் தக்க நடவடிக்கைகளை எடுப்பீராக. ஓ! தந்தையே, இச்செயலால் சுடர்விட்டெரியும் நெருப்பு உட்கொள்வதுபோல என்னை உட்கொள்ளும் துயரை அணைப்பீராக. அத்துயரம், எனது உறக்கத்தைக் களவாடுகிறது. பயங்கரமான கணை போல எனது இதயத்தைத் துளைக்கிறது" என்றான் துரியோதனன்.
"இளவரசன் துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து, மக்களுக்குச் செல்வங்களும், மரியாதைகளும் கொடுத்து அவன் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில், திருதராஷ்டிரனால் உத்தரவுகள் கொடுக்கப்பட்ட சில புத்திசாலி சபை அங்கத்தினர்கள் {அமைச்சர்கள்}, ஒரு நாள், வாரணாவதம் என்ற நகரத்தின் அழகைப்பற்றி வர்ணிக்கத் தொடங்கினர்.
 அவர்கள், "வாரணாவதத்தில் வரவிருக்கும் பசுபதி (சிவன்) திருவிழாவைப் பற்றிக் கூறினர். அத்திருவிழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் பெரியதும்,
அதன் நிகழ்வு உலகத்திலேயே மிக உற்சாகமானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நகரம், பார்வையாளர்களின் இதயங்களையும் வசீகரிக்கிறது" என்றனர். இவ்வாறே திருதராஷ்டிரனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த அமைச்சர்கள் அந்நகரத்தைக் {வாரணாவதத்தைக்} குறித்துப் பேசினர்.
 அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, , அந்த இனிமையான நகரத்திற்குச் செல்ல பாண்டவர்களும் விரும்பினர்.
பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகையின் மைந்தன் {திருதராஷ்டிரன்} அவர்களிடம்,
"இந்த மனிதர்கள் வாரணாவதம் தான் உலகத்திலேயே மிக மகிழ்ச்சிகரமான நகரம் என்று என்னிடம் எப்போதும் சொல்கிறார்கள்.
 எனவே, குழந்தைகளே, வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவைக் காணும் ஆவல் உங்களுக்கு இருந்தால், உங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும் அங்கே சென்று தேவர்களைப் போல மகிழ்ச்சியாக இருப்பீராக.
 அங்கே பிராமணர்களுக்கும், (அங்கே கூடியிருக்கும்) இசைக் கலைஞர்களுக்கும் முத்துக்களையும், ரத்தினங்களையும் அளிப்பீராக.நீங்கள் விரும்பும்வரை அங்கே தேவர்களைப் போல சில காலம் மகிழ்ச்சியாக விளையாடிய பிறகு ஹஸ்தினாபுரம் திரும்புங்கள்" என்றான்".
 "திருதராஷ்டிரனின் நோக்கங்களை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டாலும், தான் பலவீனமாக இருப்பதைக் கருதிய அவன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான்.
அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், அறிவுள்ள விதுரன், துரோணர், பாஹ்லீகர், கௌரவரான சோமதத்தர், கிருபர், அஸ்வத்தாமன், பூரிஸ்ரவஸ், மற்ற சபை உறுப்பினர்கள், பிராமணர்கள் மற்றும் துறவிகள், புரோகிதர்கள் மற்றும் குடிமக்கள், சிறப்புமிகுந்த காந்தாரி ஆகியோரிடம் யுதிஷ்டிரன், மெதுவாகவும், எளிமையாகவும், "திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூடிய நாங்கள், மக்கள் கூட்டம் நிறைந்ததும், மகிழ்ச்சி நிறைந்ததுமான வாரணாவதத்திற்குச் செல்கிறோம்.
நாங்கள் வளமை அடையவும், பாவங்கள் எங்களை அணுகாதிருக்கவும் எங்களை வாழ்த்துவீராக" என்றான்.
பாண்டுவின் மூத்த மகன் இப்படிக் கேட்டுக் கொண்டதும், கௌரவத் தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக அவர்களை வாழ்த்தி, "பாண்டுவின் மைந்தர்களே, உங்கள் வழியெங்கும் ஐம்பூதங்களும் உங்களுக்கு நற்பேற்றை அளிக்கட்டும். சிறு தீமையும் உங்களை அணுகாதிருக்கட்டும்" என்றனர்.
பாண்டவர்கள், தங்கள் பங்கு நாட்டை அடைய நல்லெண்ணங்களை உண்டாக்கும் சிலச் சடங்குகளைச் செய்துவிட்டு, தங்கள் தயாரிப்புகளை முடித்துக் கொண்டு வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச்சென்றர்.
மன்னன் திருதராஷ்டிரன், பாண்டவர்களிடம் இப்படிக்கேட்டுக் கொண்டதைக் கேட்ட தீய துரியோதனன், பெரும் மனநிறைவு கொண்டான்.
அதன் பிறகு, , துரியோதனன் தனது அமைச்சனான புரோசனனைத் தனிமையில் அழைத்து, அவனது வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, "ஓ! புரோசனா, செல்வம் நிரம்பிய இந்த முழு உலகும் எனதே. ஆனால் எனக்கு இணையாகவே அஃது உனக்கும் சொந்தமாகும். எனவே, அதைக் காப்பது உனது கடமையாகும்.உன்னை விட நம்பிக்கைக்குரிய அமைச்சர் எனக்கு வேறு யாரும் இல்லை. எனவே, , எனது ஆலோசனைகளைக் காத்து {ரகசியமாக வைத்துக் கொண்டு}, எனது எதிரிகளை உனது புத்திசாலித்தனமான வழிமுறைகளால் நீ அழிக்க வேண்டும். நான் சொல்வதைப் போலச் செய்வாயாக.
திருதராஷ்டிரர், பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் அங்கே திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பர்.எனவே, வேகமாகச் செல்லக்கூடியதும், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதுமான ஒரு தேரில் ஏறி, இன்றே நீ அங்கே செல்ல வேண்டும். அங்கே சென்று, {நகரின் வெளியே} ஆயுதக் கிடங்கின் அருகில் ஒரு நாற்கோண அரண்மனையைக் கட்டி விலை உயர்ந்த பொருட்களாலும், ஆசனங்களாலும் நிரப்பி, அந்த மாளிகையைக் (துருவியறியும் கண்களுடன்) காத்து வருவாயாக.
கிடைக்கும் சணல், பிசின் மற்றும் எளிதாக எரியும் வேறு பொருட்களையும் அதில் (அவ்வீட்டைக் கட்டுவதில்) பயன்படுத்தவும்.
சிறிது மண்ணும், நெய்யும், எண்ணெயும், கொழுப்பும் சேர்த்து, அதிக அளவில் அரக்கையும் சேர்த்து அதன் சுவர்களில் பூசச் செய்வாயாக.
 வீடு முழுவதும் சணலையும், எண்ணெயையும், தூய்மையாக்கப்பட்ட நெய்யையும், அரக்கையும், மரங்களையும் பரப்பி வைத்து பாண்டவர்களோ மற்றவர்களோ அந்த வீடு எளிதாக எரிந்து விடும் என்று முடிவு செய்யாதவாறு அமைப்பாயாக.
அப்படிப்பட்ட ஒரு மாளிகையை அமைத்துப் பாண்டவர்களைப் பெரும் மரியாதையுடன் அங்கே அழைத்துச் சென்று, அவர்களைக் குந்தியுடனும், அவர்களது நண்பர்களுடனும் அதில் வசிக்கச் செய்வாயாக.
திருதராஷ்டிரர் குறை சொல்லாதவாறு, தொழில் திறமைவாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டு மேலான ஆசனங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும் அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பாயாக.
 காரியம் முடியும் வரை வாரணாவதத்தில் உள்ள எவரும் எதையும் அறியாத வண்ணம் அதைச் செய்ய வேண்டும்.பிறகு, பாண்டவர்கள் நன்றாக உறங்குவதை உறுதி செய்து கொண்டு, அந்த மாளிகையில் வெளிப்புற வாயிலில் அச்சமில்லாமல் நீ தீ வைக்க வேண்டும்.
அதன்காரணமாகப் பாண்டவர்கள் எரிந்து சாக வேண்டும். மாளிகை எரிந்ததால் பாண்டவர்கள் இறந்தார்கள் (அஃது ஒரு விபத்து) என்று மட்டுமே மக்கள் சொல்ல வேண்டும்" என்றான் {துரியோதனன்}.
குரு இளவரசனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன புரோசனன், வேகமான கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் வாரணாவதம் சென்றான்.
 அங்கே சென்று நேரங்கடத்தாமல், துரியோதனனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தான்"
"அதேவேளையில் பாண்டவர்கள் காற்றின் வேகத்தில் செல்லக்கூடிய நல்ல குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் ஏறினர். தேர்களில் ஏறுவதற்கு முன்னர், பெரும் துயரத்துடன் பீஷ்மர், மன்னன் திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த துரோணர், கிருபர், விதுரன் மற்றும் குரு குல மூத்தவர்களின் பாதங்களை அவர்கள் தொட்டனர்.
 மூத்தவர்களை மரியாதையுடன் வணங்கிச் சிறுவர்களையும் தங்களுக்குச் சமமாக வாரியணைத்து, அரசகுல மகளிர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, அவர்களை மரியாதையுடன் வலம் வந்து, நாட்டின் குடிமக்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் நோன்புகளின் மீது முழு மனம் வைத்து வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
 பெரும் ஞானமுள்ள விதுரனும், குரு குலத்தின் காளைகளான மற்றவர்களும் மற்றும் குடிமக்கள் அனைவரும் பெரும் துயர் கொண்டு, குரு குலத்தின் புலிகளான அவர்களைச் சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர்.
பாண்டவர்களைத் தொடர்ந்த குடிமக்களில் சிலர் துன்பத்துடன் செல்லும் பாண்டுவின் மகன்களைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் சத்தமாக,
 "தீய ஆன்மா கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் ஒரே கண்ணுடன் எந்தப் பொருளையும் பார்ப்பதில்லை. அந்தக் குரு குல ஏகாதிபதி அறத்தின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த மறுக்கிறான்.
பாவங்களற்ற யுதிஷ்டிரனோ, பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான பீமனோ, அல்லது குந்தியின் (இளைய) மகனான தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இனி எப்போதும் புரட்சிப் போர் தொடுக்கும் பாவத்தினால் உண்டாகும் குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.இவர்களே அமைதியுடன் இருக்கும்போது, மாத்ரியின் சிறப்புமிகுந்த மகன்களால் என்ன செய்ய முடியும்?
இவர்கள் தங்கள் தந்தையின் மூலம் நாட்டையடைந்ததைத் திருதராஷ்டிரனால் பொறுக்க முடியவில்லை. பாண்டவர்கள் அந்தப் பாவகரப் பூமிக்கு நாடு கடத்தப்படுவதில் துயருற வேண்டிய பீஷ்மர், இந்தப் பெரும் அநீதியை எப்படி அனுமதித்தார்?
 குரு குலத்தைச் சார்ந்த சந்தனுவின் மைந்தனான விசித்திரவீரியனும், அரசு முனியான பாண்டுவும் ஒரு தந்தையைப் போல நம்மைக் கவனித்துக் கொண்டனர்.ஆனால் இப்போதோ, அந்த மனிதர்களில் புலியான பாண்டு தேவலோகம் உயர்ந்துவிட்டான். பாண்டுவின் மைந்தர்களான இந்த இளையவர்களைத் திருதராஷ்டிரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.இந்த நாடு கடத்தலை {இவ்வாறு இவர்கள் நாடுகடத்தப்படுவதை} ஏற்காத நாமும், இந்த அற்புதமான நகரத்தையும், நமது இல்லங்களையும் துறந்து, யுதிஷ்டிரன் செல்லுமிடத்திற்கே செல்வோமாக" என்றனர்.
யுதிஷ்டிரனோ, தானே துக்கத்துடன் வந்து கொண்டிருந்தாலும், வழியில் துயருற்ற குடிமக்களின் சொற்களைக் கேட்டுச் சிறிது நேரம் சிந்தித்து, அவர்களிடம்,"மன்னன் {திருதராஷ்டிரர்} நமக்குத் தந்தையைப் போன்றவர்; மதிப்புக்குரியவர்; அவர் நமது ஆன்ம குருவும் நமக்கு முதன்மையானவரும் ஆவார். எப்போதுமே அவர் சொல்வதைச் ஐயம் இல்லாத இதயத்துடன் ஏற்று, செயல்படுத்துவதே நமது கடமையாகும்.
 நீங்கள் எங்களது நண்பர்கள். எங்களை வலம் வந்து, உங்கள் அருளாசிகளால் எங்களை மகிழ்வித்து, உங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புவீராக.உங்களால் எங்களுக்குக் காரியமாக வேண்டிய காலம் வரும்போது, எங்களுக்கு நன்மை செய்யக்கூடியவையும், ஏற்புடையவையுமான செயல்களை நிச்சயமாக நீங்கள் சாதிப்பீர்கள்" என்றான்
இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், அக்குடிமக்கள் பாண்டவர்களை வலம் வந்து, தங்கள் ஆசிகளைக் கூறி, தத்தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
 பாண்டவர்களைக் குடிமக்கள் பின்தொடர்வது நின்றதும், நீதிகளனைத்தும் அறிந்த விதுரன், பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} விழிப்படையச் செய்ய இவ்வாறு பேசினான்.
 பிதற்றல் மொழியை (மிலேச்சர்களின் மொழி) நன்கறிந்தவனும், கல்விமானுமான விதுரன், மற்றவர் அறியாவண்ணம், அதே மொழியை நன்கறிந்த யுதிஷ்டிரனுக்கு மட்டுமே புரியும்போடி,
"அரசியலின் அறிவியலுக்கு ஏற்ப எதிரியின் திட்டங்களைக் கண்டறிந்த ஒருவன், அவற்றைப் புரிந்து கொண்டதும், ஆபத்துகள் அனைத்தையும் விலக்கும் முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
 உடலை வெட்டுவதற்கு, இரும்பால் செய்யப்படாத கூரிய ஆயுதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த ஒருவன், அதைத் தடுக்கும் முறைகளையும் அறிந்திருந்தால், அவனுக்குப் பகைவரால் காயமேற்படுத்த முடியாது.
வைக்கோலையும், மரத்தையும் உண்பவனோ {நெருப்போ}, பனியை உலர்த்துபவனோ {சூரியனோ}, ஆழ்ந்த கானகத்தின் துளையில் வசிப்பவர்களை {எலி, முயல் போன்றவைகளை} எரிக்க முடியாது என்பதை அறிந்த அறிவுள்ளவன் பாதுகாப்பாக வாழ்ந்திருப்பான்.
குருடன் வழியைப் பார்ப்பதில்லை. குருடனுக்குத் திசைகளின் அறிவும் கிடையாது. உறுதியற்ற ஒருவன் வளத்தை {செழிப்பை} அடைவதில்லை. இதை நினைவில் வைத்துக் கொண்டு, எப்போதும் விழிப்புடனிருப்பாயாக.
எதிரிகளால் கொடுக்கப்படும் இரும்பாலாகாத ஆயுதத்தை (எரியக்கூடிய வீடு) எடுக்கும் மனிதன், தனது வசிப்பிடத்தை நரியின் வசிப்பிடம் போல ஆக்கினால் ({பொந்துகளுடன்} வெளியே செல்லும் வழி பல வைத்தால்) நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.
ஒரு மனிதன் பயணிப்பதனால் வழிகள் பற்றிய ஞானத்தை அடையலாம். நட்சத்திரங்களின் துணை கொண்டு திசையை அறியலாம். தன்னிடம் உள்ள ஐந்தைக் (ஐம்புலன்களைக்) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவனை, அவனது எதிரிகளால் ஒடுக்க முடியாது" என்றான் {விதுரன்}.
இப்படிச் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், கல்விமான்களில் முதன்மையான விதுரனிடம், "உம்மை நான் புரிந்து கொண்டேன்" என்றான். அப்போது விதுரன், பாண்டவர்களுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிச் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பிறகு, அவர்களை வலம் வந்து, அவர்களிடம் விடைபெற்று தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.
குடிமக்களும், பீஷ்மரும், விதுரனும் சென்ற பிறகு, குந்தி யுதிஷ்டிரனிடம் வந்து, "மக்கள் முன்னிலையில் க்ஷத்ரி {விதுரன்} சொன்னது எதுவுமே விளங்கவில்லையே. அவர் எதுவுமே சொல்லாதது போலவே இருந்தது. ஆனால் நீயும் அதே போன்ற வார்த்தைகளால், அதே குரலில், பதிலுரைத்தாய். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.நாங்கள் அறிந்து கொள்வதில் தவறில்லை என்றால், நீயும், அவரும் பேசிக் கொண்ட அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டாள்.
யுதிஷ்டிரன், "அறம் சார்ந்த விதுரர், நமக்காகக் கட்டப்பட்டிருக்கும் மாளிகை எளிதில் எரியத்தக்க பொருட்களால் ஆனது என்று என்னிடம் சொன்னார். மேலும், தப்பிக்கும் வழியை நீ அறியாமல் இருக்கக்கூடாது என்றும்,
தனது புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தின் அரசாட்சியையும் அடைவான் என்றும் சொன்னார். அதற்கு நான், விதுரரிடம் "நான் உம்மைப் புரிந்து கொண்டேன்" என்று சொன்னேன்" என்றான் {யுதிஷ்டிரன்}
 "பாண்டவர்கள் பங்குனி மாதத்தின் எட்டாவது நாளில், ரோஹிணி நட்சத்திரத்தில் வாரணாவதம் வந்து சேர்ந்து, அந்த நகரத்தையும், நகர மக்களையும் கண்டனர்".
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109

No comments:

Post a Comment