மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-21
..
ஆதிபர்வம்
..
பாண்டு புத்திரர்கள்மீது திருதராஷ்டிரரின் பொறாமை
கணிகரின் போதனைகள்
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"ஓ! மன்னா {ஜனமேஜயா},
ஒரு வருடம் சென்றதும், திருதராஷ்டிரன், மக்கள் மீது அன்பு கொண்டு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை, அவனது உறுதிக்காகவும், மேலும், மனோபலம், பொறுமை, கருணை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நேர்மையான இதயம் ஆகியவற்றுக்காகவும் தன் அரசின் இளவரசனாக நிறுவினான்.
குறுகிய காலத்திற்குள், அந்தக் குந்தி மைந்தன் யுதிஷ்டிரன் தனது நன்னடத்தையாலும், நல்ல குணங்களாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததாலும், பாண்டுவின் செயற்கரிய செயல்களை மறையச் செய்தான்.
இரண்டாவது பாண்டவனான விருகோதரன் {பீமன்}, சங்கர்ஷனரிடம் (பலராமனிடம்) வாட்போரிலும், கதாயுத்தத்திலும், தேர்ப்போரிலும் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தான்
பீமனின் பயிற்சிக் காலம் முடிந்ததும், தியுமத்சேனனைப் போன்ற பலம் பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து, தனது வீரத்தைப் பெருக்கத் தொடங்கினான்.
அர்ஜுனன், தனது (ஆயுதங்களின் மீதான) உறுதியான பிடியாலும், நகர்வதில் உள்ள நளினத்தாலும், குறியில் கச்சிதத்தாலும், க்ஷுரம், நாராசம், பல்லம், விபாதை போன்ற நேரான, வளைந்த மற்றும் கனமான ஆயுதங்களில் திறமை பெற்றிருந்ததாலும், பெரிதும் கொண்டாடப்பட்டான்.
துரோணர், "அர்ஜுனனுக்கு நிகராகக் கரங்களின் நளினமும், நிபுணத்துவமும் கொண்ட ஒருவனும் உலகத்தில் இல்லை" என்று உறுதிகூறினார்.
ஒரு நாள், துரோணர் கூடியிருந்த கௌரவ இளவரசர்களின் முன்னிலையில் அர்ஜுனனிடம், "அகஸ்தியருக்கு, அக்னிவேசர் என்ற பெயரில் ஆயுத அறிவியல் பயிலும் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எனக்குக் குருவாகவும், நான் அவருக்குச் சீடனாகவும் இருந்தோம். எனது ஆன்மத் தகுதியால், நான் அவரிடமிருந்து, இடியைப் போன்ற, முழு உலகத்தையும் உட்கொள்ளும் சக்தி கொண்ட, பொய்க்காத ஆயுதமான பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தை அடைந்தேன்.
அந்த ஆயுதமானது, ஓ! பாரதா {அர்ஜுனா}, நான் இப்போது செய்யப்போகும் இந்தச் செயலால், இப்போதிருந்து, சீடனுக்குச் சீடன் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
அதை எனக்குக் கொடுக்கும்போது எனது குரு என்னிடம், "ஓ! பரத்வாஜரின் மகனே {துரோணா}, இந்த ஆயுதத்தை எப்போதுமே நீ மனிதர்கள் மீது ஏவக்கூடாது. குறிப்பாக சக்தி குறைந்தவர்கள் மீது ஏவவே கூடாது" என்று சொன்னார். ஓ! வீரனே {அர்ஜுனா}, நீ யாரும் பெறமுடியாத இந்தத் தெய்வீக ஆயுதத்தை இப்போது அடைந்திருக்கிறாய். ஆனால் முனிவரின் (அக்னிவேசரின்) கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக.
இங்கே பார் அர்ஜுனா, இப்போது உனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீ உனது ஆசாரியனுக்குரிய கூலியைக் (தட்சணையைக்) கொடுப்பாயாக" என்றார். இதைக்கேட்ட அர்ஜுனன், தனது குரு என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்
அதற்குக் குரு, "ஓ! பாவங்களற்றவனே {அர்ஜுனா}, நான் உன்னுடன் போரிடும் போது, நீயும் என்னுடன் போரிட வேண்டும்" என்று கேட்டார். அந்தக் குரு இளவரசர்களில் காளை தனது வார்த்தைகளால் அதற்கு உறுதி கூறி,
துரோணரின் பாதத்தைத் தொட்டு, வடக்கு நோக்கிச் சென்றான். "ஆழி சூழ் உலகத்தில் அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி இல்லை" என்ற சொல் உலகமெங்கும் பரவியது.
நிச்சயமாகத் தனஞ்சயன் கதாயுத்தமாகட்டும், வாட்போராகட்டும், தேரிலிருந்து வில்லைப் பயன்படுத்துவதாகட்டும், எல்லாவற்றிலும் அற்புதமான திறமைபெற்றிருந்தான். சகாதேவன், கடமைகள் மற்றும் நீதிகளின் அறிவியலைத் தேவர்களின் ஆன்மிகத் தலைவனிடமிருந்து (பிருஹஸ்பதி) பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தான். தனது சகோதரர்களுக்கு அன்பான நகுலன், துரோணரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, சிறந்த வீரனாகவும், பெரும் தேர்வீரனாகவும் (அதிரதனாகவும்) இருந்தான். கந்தர்வர்களால் படையெடுக்கப்பட்டும், தொடர்ந்து மூன்று வருடங்கள் வேள்வி செய்த பெரும் சௌவீரனைக் கொல்லும் அளவுக்கு, அர்ஜுனனும் மற்றவர்களும் பெரும் பலசாலிகளாகினர். பாண்டுவாலேயே அடக்கமுடியாத அந்த யவனர்களின் {சௌவீர} அரசனை, அர்ஜுனன் அடக்கினான்
மறுபடியும், எப்போதும் குரு குலத்தவரை அவமதித்தே வந்த சௌவீரர்களின்
மன்னனான பெரும் வீரம் கொண்ட விபுலனைப் புத்திசாலியான அர்ஜுனன் கொன்றான். அர்ஜுனன், திடமாகப் போரிட்ட தத்தாமித்ரன் என்று அழைக்கப்பட்ட சௌவீர மன்னன் சுமித்திரனைத் (அவனது தற்பெருமையைத்) தனது கணைகளால் நொறுக்கினான். பீமனுடைய துணையைக் கொண்டு, தனித் தேரில் சென்ற அந்த மூன்றாவது பாண்டவன் {அர்ஜுனன்}, பத்தாயிரம் தேர்களுடன் இருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்களை அடக்கினான்.
தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே போலவே தனித் தேரில் சென்று தெற்கு நாடுகளையும் குரு குலத்தவரின் அரசுக்கு பெரும் கப்பம் கட்ட வைத்தான்.
இப்படியே அந்த மனிதர்களில் முதன்மையானவர்களான சிறப்புமிக்கப் பாண்டவர்கள், மற்ற மன்னர்களின் பகுதிகளை வெற்றிக் கொண்டு, தங்கள் நாட்டின் {ஹஸ்தினாபுரத்தின்} எல்லைகளை விரிவுபடுத்தினர். அந்தப் பெரும்பலம்வாய்ந்த வில்லாளிகளின் பெரும் ஆற்றலையும், பலத்தையும் கண்ட மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணம் விஷமாகி, அன்றிலிருந்து அவர்களைக் குறித்துக் கவலை கொண்டு, தூக்கமின்றி இருந்தான்" (என்றார் வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார்,
"பாண்டுவின் வீர மைந்தர்கள், பெரும் சக்தி கொண்டு பலத்தைப் பெருக்கி வருவதைக் கேள்விப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன் கவலையில் மூழ்கி மிகவும் பரிதாபமாக இருந்தான்.
திருதராஷ்டிரன், அரசியலின் அறிவியலை நன்கு அறிந்தவரும், மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணரும், அமைச்சர்களில் முதன்மையானவருமான கணிகரை அழைத்து,
"ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கணிகரே}, பாண்டவர்கள் தினமும் பூமியைத் தங்களது நிழலால் அதிகமாக மறைத்து வருகின்றனர். நான் அவர்களிடம் மிகுந்த பொறாமை கொண்டுள்ளேன். நான் அவர்களுடன் அமைதி காக்கவா? அல்லது போர் தொடுக்கவா? ஓ! கணிகரே, இது தொடர்பாக உமது அறிவுரை நிச்சயமாக எனக்குத் தேவை. நான் நீர் சொல்வது போல நடந்து கொள்வேன்" என்றான்"
"அந்த பிராமணர்களில் சிறந்தவர் {கணிகர்}, மன்னனால் இப்படிக் கேட்கப்பட்டதும், அரசியலின் அறிவியல் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூர்மையான வார்த்தைகளால் பேசினார்.
கணிகர், "ஓ! பாவமற்ற மன்னா! உனக்கு விடையாக நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.
ஓ! குரு மன்னர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, நான் சொல்வதையெல்லாம் கேட்ட பிறகு என்னிடம் கோபம் கொள்ளாதே.
மன்னர்கள், தேவைப்படும்போது தாக்குவதற்கு ஏதுவாக உயர்த்திப்பிடிக்கப்பட்ட தண்டங்களுடனேயே எப்போதும் {தண்டனை கொடுப்பதற்குத்} தயாராக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கவனமாகத் தங்கள் குற்றங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டே, பிறரின் குற்றங்கள் இடையறாமல் அவர்கள் கவனிக்க வேண்டும்.
எப்போதும் தாக்கத் தயாராக இருக்கும் மன்னனைக் கண்டு அனைவரும் அஞ்சுவர். எனவே, ஒரு மன்னன் எப்போதும், அவன் செய்யும் அனைத்தையும் விடத் தண்டனை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
தனது எந்தப் பலவீனத்தையும் எதிரி அறிந்து கொள்ளாத வகையில் அவன் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தான் தனது எதிரியிடம் கண்டுபிடிக்கும் பலவீனத்தைக் கொண்டு (அவனது அழிவிற்காக) அவனைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அவன் {மன்னன்} எப்போதும், ஓர் ஆமை தனது உடலை மறைத்துக் கொள்வது போல, தனது செயல்களையும், அதன் முடிவுகளையும், தனது சொந்த பலவீனத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடங்கி விட்டால், அதை அவன் முழுமையாக முடிக்க வேண்டும். ஒரு முள்ளைப் பார், அதை முழுமையாக எடுக்காவிட்டால், அது வளரும் புண்ணை {புண்} உற்பத்தி செய்யும்.
உனக்குத் தீங்கு செய்யும் எதிரியைக் கொல்வது எப்போதும் பாராட்டுக்குரியதே. எதிரி பெரும் பலவானாக இருந்தால், அவனது ஆபத்துக் காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பிறகு, எந்த மன உறுத்தலும் இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டும். அவன் {எதிரி} பெரும் போர்வீரனாக இருந்தால், அவனது ஆபத்துக் காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருந்து, அவனை வானுலகிற்குப் பறக்க வைக்க வேண்டும்.
மன்னா, எவ்வளவு வெறுப்பூட்டும் வகையில் எதிரி இருந்தாலும் அவனை வசைபாடக் கூடாது. அருகருகே இருக்கும் பொருட்கள் ஒன்றின்மேல் ஒன்றுவிழுவதால் எளிதாகத் தீயைப் பரவ வைத்து ஒரு கானகத்தையே எரித்துவிடும் சக்தி ஒரு தீப்பொறிக்கு உண்டு.
மன்னர்கள் சில நேரங்களில் குருடர்களாகவும், செவிடர்களாகவும் நடிக்க வேண்டும். தங்களால் தண்டிக்க இயலாவிட்டால் {தண்டிக்க முடியாத காரணம் இருக்கும்போது}, தண்டனைக்குரிய குற்றம் எதையும் தான் காணாதது போல நடிக்க வேண்டும். இது போன்ற நேரங்களில், அவர்கள் தங்கள் விற்களை {வில்} புல்லால் ஆனதாக மதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் எப்போதும் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மான்கூட்டம் போல விழிப்புடன் இருக்க வேண்டும்.
உன் பகைவன் உனது ஆட்சிக்குள்ளிருக்கையில், அவனை வெளிப்படையாகவோ, கமுக்கமாகவோ {ரகசியமாகவோ} எந்தவகையிலாவது கொன்றுவிடுவாயாக. அவன் உன்னிடம் பாதுகாப்பைக் கோரினாலும், அவனிடம் நீ கருணையே காட்டாதே.
உனது எதிரியையோ அல்லது உன்னை ஒருமுறை காயப்படுத்தியவனையோ, {தேவைப்பட்டால்} ஏராளமாகப் பணத்தை இறைத்தாவது கொன்றுவிடு. அப்படி அவனைக் கொல்வதால் நீ நிம்மதியாக இருக்கலாம். இறந்தவர்களிடம் இருந்து எந்த அச்சமும் ஏற்படாது.
நீ உன் பகைவர்களின் மூன்று, ஐந்து மற்றும் ஏழு ஆகியவற்றை (ஆதாரங்களை)அழிக்க வேண்டும்.
(மூன்று: அதிகாரம், மந்திரம், உற்சாகம்.
ஐந்து: மந்திரி, நாடு, அகழ், கருவூலம், படை.
ஏழு: மன்னன், அமைச்சன், நண்பன், நிதி, நாடு, அகழ், நாடு)
நீ உனது எதிரியை வேரோடும் கிளைகளோடும் {வேரோடும், வேரடி மண்ணோடும் என்பது போல} அழிக்க வேண்டும்.
அதன்பிறகு, நீ அவர்களின் கூட்டாளிகளையும், நம்பிக்கைக்குரியவர்களையும் அழிக்க வேண்டும். கருப்பொருள் அழிந்துவிட்டால், கூட்டாளிகளாலும், நம்பிக்கைக்குரியவர்களாலும் நிலைத்திருக்க முடியாது.
ஒரு மரத்தின் வேர் அறுக்கப்பட்டால், அதன் கிளைகளாலும், குச்சிகளாலும் முன்பு போல நிலைத்திருக்க முடியாது.
உனது தனிப்பட்ட செயல்களையும், அதன் முடிவுகளையும் கவனமாக மறைத்து, உனது எதிரிகளின் குறைகளையும், பலவீனங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓ! மன்னா, உனது எதிரிகளை ஆவலுடன் கவனித்துக் கொண்டே
உனது நாட்டை நீ ஆள வேண்டும். வேள்வி நெருப்பைத் தொடர்ந்து எரியவிட்டும், பழுப்பு நிற ஆடை அணிந்தும், ஜடா முடி தரித்தும், விலங்குகளின் தோலை உனது படுக்கையாகக் கொண்டும், {நல்லவன் போல் வேடமிட்டு}
உனது எதிரியின் நம்பிக்கையை முதலில் நீ பெற வேண்டும். அவன் நம்பிக்கையை நீ பெற்றதும், உடனே ஓநாயாக எழுந்து அவன் மீது பாய வேண்டும். மரங்களின் கிளைகளை வளைத்துக் கனிந்த பழங்களைப் பறிப்பதற்காக, கொக்கி மாட்டப்பட்ட தடியைப் பயன்படுத்துவது போல, செல்வத்தை அடைய தெய்வீக {காவி} உடையும் அணியலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் தேர்வுக் கொள்கையையே {பறிக்கப் போகும் கனிகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கொள்கை} நீ பின்பற்ற வேண்டும். எனவே கனியை அடைய பின்பற்றப்படும் நடைமுறையே, உனது எதிரிகளை அழிப்பதிலும் பின்பற்ற வேண்டும்.
காலம் வரும் வரை உனது எதிரியைத் தோளில் தாங்கிக் கொள்வாயாக, அப்போதுதான், நேரம் வந்ததும், மண்பானையைக் கட்டாந்தரையில் வேகமாகத் தூக்கி வீசுவது போல, அவனைக் கீழே தூக்கி வீசித் துண்டுகளாகச் சிதறும்படி உடைக்க முடியும்.
ஓர் எதிரி உன்னிடம் பரிதாபகரமாகப் பேசினால், நீ அவனை விட்டுவிடக் கூடாது. அவனிடம் எந்தக் கருணையும் காட்டாமல் அவனைக் கொன்றுவிட வேண்டும்.
அமைதியின் கலைகளாலோ {சாமத்தினாலோ}, பணம் செலவழித்தோ {தானத்தினாலோ} ஓர் எதிரி அழிக்கப்பட வேண்டும். எதிரியின் கூட்டாளிகளிடம் ஒற்றுமையின்மையை வளர்த்தோ {பேதத்தாலோ}, படைபலத்தாலோ {தண்டத்தாலோ}, உனது பலத்துக்கு உகந்த எந்தச் செயலைச் செய்தாவது நிச்சயமாக உனது எதிரியை நீ அழிக்க வேண்டும்" என்றார் கணிகர்
திருதராஷ்டிரன், "அமைதியின் கலைகளாலோ {சாமத்தாலோ}, பணம் செலவழித்தோ {தானத்தாலோ}, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ} அல்லது படைபலத்தைப் {தண்டம்} பயன்படுத்தியோ ஓர் எதிரியை எவ்வாறு அழிக்கலாம் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வீராக" என்று கேட்டான்.
கணிகர் சொன்னார்,
"ஓ! ஏகாதிபதியே கேட்பாயாக, கானகத்தில் வசித்து வந்ததும், அரசியலின் அறிவியலை அறிந்ததுமான ஒரு நரியின் வரலாற்றைக் கேட்பாயாக.
தன்னத்தில் மட்டுமே அக்கறைகொண்ட புத்திசாலி நரி ஒன்று, புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளை ஆகிய நான்கு தோழர்களுடன் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள், கானகத்தில் ஒரு மான்கூட்டத்திற்குத் தலைமையான வலுவான மான் ஒன்றை அந்த நண்பர்கள் கண்டனர். அந்த மானின் வேகத்தாலும், பலத்தாலும் அதை அவர்களால் அடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் கலந்தாலோசித்தனர்.
நரி பேச்சைத் தொடங்கும் வகையில்,
"ஓ! புலியாரே, நீரும் இந்த மானை அடிப்பதற்குப் பெரும் முயற்சி செய்தீர். ஆனால் இளமையான இந்த மானின் வேகத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் உமது முயற்சிகள் வீணாகின.
இப்போது இந்த எலியார் அங்கு சென்று, தூங்கிக் கொண்டிருக்கும் அந்த மானின் காலைக் கடிக்கட்டும். அந்த வேலை முடிந்ததும், நீர் அதை அணுகி அடிப்பீராக.
அதன்பிறகு, நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடு அந்த விருந்தை உண்போம்" என்றது அந்த நரி.
நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், அந்த நரி சொன்னது போலவே விழிப்புடன் செயல்பட்டனர்.
எலி சென்று அந்த மானின் காலைக் கடித்தது. எதிர்பார்த்தது போலவே புலி அந்த மானைக் கொன்றது. மானின் உடல் அசைவற்றுத் தரையில் கிடப்பதைக் கண்ட நரி தனது தோழர்களிடம், "அருளப்பட்டவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வாருங்கள். அதே வேளையில், நான் இந்த மானைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றது.
நரி சொன்னதைக் கேட்டு அனைவரும் ஆற்றுக்குச் சென்றனர். நரி அங்கேயே காத்திருந்து தான் {அடுத்து} என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழ்ந்து தியானித்தது.
பெரும் சக்தி கொண்ட புலி, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு முதலில் திரும்பியது.
அங்கே நரி தியானத்தில் மூழ்கி இருப்பதைக் கண்ட புலி, நரியிடம்,
"நீ ஏன் வருத்தத்தில் இருக்கிறாய்? ஓ! ஞானமுள்ளவனே, புத்திசாலி உயிரினங்களில் நீயே முதன்மையானவன். நாம் அனைவரும் இந்த விலங்கின் உடலை உண்டு மகிழ்வோம்" என்றது.
அதற்கு அந்த நரி, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, எலியான் என்ன சொன்னான் தெரியுமா? "விலங்குகளின் மன்னன் {புலியின்} பலம் கேவலமானது. இந்த மான் என்னால் கொல்லப்பட்டது.
எனது கரத்தின் பலத்தால், அவன் {புலி} இன்று தன் பசியைப் போக்கிக் கொள்ளப்போகிறான்" என்று அந்த எலியான் சொன்னான். அவன் {எலி} இப்படித் தற்பெருமையாகப் பேசியதால், நான் இந்த உணவைத் தொட விரும்பவில்லை" என்றது.
அதற்கு அந்தப் புலி, "எலியான் அப்படிச் சொன்னது உண்மையானால், எனது உணர்வுகள் விழித்துக் கொள்ளட்டும். நான் இன்று முதல், இந்தக் கானகத்தில் உலவும் உயிரினங்களை எனது கரத்தின் பலத்தால் கொன்று, அதன் இறைச்சியை மட்டுமே உண்பேன்" என்று சொல்லிச் சென்றுவிட்டது.
புலி சென்றதும் அந்த இடத்தில் எலி வந்தது. எலி வருவதைக் கண்ட நரி,
"ஓ! எலியானே, நீ அருளப்பட்டிருப்பாயாக. கீரிப்பிள்ளை என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக. "இந்த மானின் உடல் (புலியின் நகங்கள் பட்டதால்) நச்சுத்தன்மையுள்ளது. இதை நான் உண்ண மாட்டேன்.
ஆனால் மறுபுறம், ஓ! நரியாரே, நீர் அனுமதித்தால், அந்த எலியானைக் கொன்று, அவனை என் உணவாக்கிக் கொள்கிறேன்" என்றான்" என்றது {நரி}.
இதைக் கேட்டதும் அச்சமடைந்த எலி, விரைவாகத் தனது பொந்துக்குள் நுழைந்து கொண்டது.
எலி சென்றதும், ஓநாயானது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தது.
ஓநாய் வந்ததைக் கண்ட நரி அதனிடம்,
"விலங்குகளின் மன்னன் {புலி} உன்னிடம் கோபமாக இருக்கிறான். உனக்கு நிச்சயமாகத் தீங்கு நேரப்போகிறது. அவன் தனது மனைவியுடன் இங்கு வருவான் என்று எதிர்பார்க்கிறேன். உனக்கு விருப்பப்பட்ட படி நீ செய்து கொள்வாயாக" என்றது.
விலங்கின் இறைச்சியை விரும்பும் ஓநாயும், {பந்தியிலிருந்து} நரியால் இப்படி விலக்கப்பட்டது. அந்த ஓநாய் தனது உடலை மிகவும் சுருக்கிக் கொண்டு வேகமாக ஓடிப் போனது.
அதன்பிறகுதான் கீரிப்பிள்ளை வந்தது.
ஓ! மன்னா , அது வருவதைக் கண்ட நரி,
"எனது கரத்தின் பலத்தால், நான் மற்றவர்களை வீழ்த்திவிட்டேன். அவர்கள் ஏற்கனவே ஓடிவிட்டார்கள். எனவே, முதலில் நீ என்னிடம் மோதுவாயாக. அதன்பிறகு நீ விருப்பப்பட்டபடி இந்த {மானின்} இறைச்சியை உண்பாயாக" என்றது.
அதற்குக் கீரிப்பிள்ளை, "வீரர்களான புலியும், ஓநாயும், மற்றும் புத்திசாலியான எலியும் உன்னால் தோற்கடிக்கப்பட்டனர் என்றால், நிச்சயமாக நீ அவர்களைவிடபெரிய வீரனாகத்தான் இருப்பாய். நான் உன்னுடன் சண்டையிட விரும்பவில்லை" என்று சொல்லி கீரிப்பிள்ளையும் சென்றுவிட்டது".
கணிகர் தொடர்ந்தார்,
"அவை அனைத்தும் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நரி தனது கொள்கை முடிவுகளின் வெற்றியால் மிகவும் மகிழ்ந்து, தனியாக அந்த மானின் இறைச்சியை உண்டது.
மன்னர்கள் எப்போதும் இதே போல {இந்த நரியைப் போல} நடந்து கொண்டால், அவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பர்.
அச்சங்கொண்டோரின் அச்சத்தைத் தூண்டியும் {பேதத்தாலும்}, வீரம்மிக்கவர்களை அமைதியின் கலைகளைக் கொண்டும் {சாமத்தாலும்}, பேராசைக்காரர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்தும் {தானத்தாலும்}, தாழ்ந்தவர்களிடம் ஆற்றலை வெளிப்படுத்தியும் {தண்டத்தாலும்}, அவர்களை நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். நான் சொன்ன இதையெல்லாம் ஒருபுறம் வைத்துக் கொண்டு, ஓ! மன்னா, நான் சொல்லப்போகும் வேறு ஒன்றையும் கேட்பாயாக".
கணிகர் தொடர்ந்தார்,
" உனது மகனோ, நண்பனோ, சகோதரனோ, தந்தையோ, ஆன்மிகக் குருவாகவோ உனது எதிரியானால், செழிப்பை நீ விரும்பினால், எந்த மனவுறுத்தலும் இல்லாமல், அவர்களை நீ கொன்றுவிட வேண்டும். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, நஞ்சூட்டியோ, வஞ்சனையாலோ ஓர் எதிரி கொல்லப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் அவனைப் புறக்கணித்துவிடக்கூடாது.
இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியாத சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவனே வளமையில் பெருகுவான். எது செய்யப்பட வேண்டும் எது செய்யாமல் விடப்பட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஓர் ஆன்மிகக் குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீ கோபத்துடன் இருந்தாலும், உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, கோபமில்லாமல் இருப்பதைப் போல நீ காண்பிக்க வேண்டும்.
வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டிவிடக்கூடாது. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்!
தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்தி, கண்ணீரையேகூட விட்டுக் கொள்வாயாக. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரியை அமைதியாக இருக்கவைத்து,அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும்.
பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு {நடிப்பதைக் கண்டு} நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ எரித்துவிட வேண்டும்.
பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது.
கேலிப் பேச்சாலோ, நஞ்சாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, உனது பலத்துக்குகந்த எந்த வழியிலோ நீ உனது எதிரியை அழிக்க வேண்டும். இக்காரியத்தில் நீ பெரும் கொடூரனாகச் செயல்படலாம். மரணக் கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும். ஒருவன் மீது அச்சமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும்.
அச்சமில்லாதவனிடமே அஞ்ச வேண்டும் என்றால், ஒருவன் மீது அச்சம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. முதலாமவன் பலசாலியாக இருப்பின், அவன், (நீ தயார் நிலையில் இல்லாததால்) உன்னை வேர் வரை அழித்துவிடுவான். நன்றியற்றவர்களை நீ நம்பவே கூடாது. நன்றியுள்ளவர்களையும் அதிகமாக நீ நம்பிவிடாதே.
உனது நம்பிக்கைக்குரியவர்கள் உனக்கு எதிரியாக மாறினால், நீ நிச்சயமாக அழிந்துவிடுவாய். {ஒற்றர்களாக அமர்த்தப்படப் போகிறவர்களின்} நன்றி மற்றும் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்த்த பிறகே, அவர்களை உனது நாட்டிலும் மற்றவர்கள் நாட்டிலும் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.
அயல் {அந்நிய} நாடுகளில் இருக்கும் ஒற்றர்கள் சரியான கயவர்களாகவும் {ஏமாற்றுக்காரர்களாகவும்}, துறவி வேடம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நந்தவனங்கள், கேளிக்கை நடக்கும் இடங்கள், கோவில்கள் மற்றும் பிற புனிதமான இடங்கள்,
தலைமை நீதிபதி இருக்கும் இடம், வாரிசாகும் தகுதி உள்ளவர்கள் இருக்கும் இடம், தலைமைத் தளபதி இருக்கும் இடம், {மது} குடிக்கும் அரங்கு, தெருக்கள் ஆகியவற்றிலும், பதினெட்டு தீர்த்தங்கள்
( அமைச்சர், தலைமை குரு, வாரிசாகும் தகுதி உள்ளவன், தலைமைத் தளபதி, அரசவை வாயில் காப்போர், உள் அறைகளில் இருக்கும் மனிதர்கள், சிறைக் காவலர், தலைமை நிலமளப்பவர், பொக்கிஷ அதிகாரி, கட்டளைகளை ஏற்று நடத்துபவர், நகரக் காவல்துறை அதிகாரி, தலைமைக் கட்டட வல்லுனர், நீதிபதி, சபைத் தலைவர், முதன்மை ஆபத்துதவிகள், கானகங்களைக் காப்பவர் ஆகிய பதினெட்டு தீர்த்தர்கள்.)
வேள்வி நடக்கும் இடங்கள், கிணறுகளின் அருகில், மலைகள், நதிகளில், கானகங்கள்,
மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒற்றர்கள் இருக்க வேண்டும். அவர்கள் பேச்சில் பணிவுடனும், ஆனால் இதயம் கத்தியைப் போல் கூர்மையுடனும் இருக்க வேண்டும்.
கொடுமையான, பயங்கரமான செயலைச் செய்து கொண்டிருக்கும்போதும், உதட்டில் புன்னகையோடு இனிமையாகவே பேச வேண்டும்.
வளமையில் விருப்பம் இருந்தால், நீ பணிவு, உறுதி, அமைதி ஆகியவற்றின் எல்லாக் கலைகளையும் ஏற்று அனுசரிக்க வேண்டும். உனது தலையைத் தாழ்த்தி மற்றவர்களின் கால்களை நீ வணங்கினாலும், நம்பிக்கையுடனும், விருப்பத்துடனும் இருக்க வேண்டும். கொள்கை விதிகளை நன்கு அறிந்த மனிதன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கனியில்லா மரமாகவே இருப்பான். அப்படியே கனி கொடுத்தாலும் அது தரையில் இருந்து பறிக்க முடியாத உயரத்தில் இருக்க வேண்டும். அந்தப் பழம் பழுத்திருந்தால் அது பதமில்லாததாகக் காட்சியளிக்க முயல வேண்டும். இவ்வழியில் தன்னைத் தகவமைத்துக் கொள்பவன் எக்காலத்திலும் மங்காமல் இருப்பான் {புகழுடன் இருப்பான்}. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன நன்மையும், தீமையும் கலந்து ஒருங்கே பின்னப்பட்டவையாகும்.
அதில் நன்மைகள் மட்டுமே ஏற்கப்பட்டுத் தீமைகள் தவிர்க்கப்பட வேண்டும். (ஓயாமல்) அறத்தைப் பயில்பவர்கள், கவலையடைந்து பொருளின்மையால் இன்பத்தைப் புறக்கணிப்பார்கள். பொருளைத் தேடுவோர் மகிழ்ச்சியற்று மற்ற இரண்டையும் புறக்கணிப்பார்கள். இன்பத்தில் நாட்டம் கொண்டோர், அறத்திலும், பொருளிலும் கவனமின்மையால் துன்பத்தை அடைவார்கள். எனவே, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை எவ்வகையிலும் துன்பமேற்படாவண்ணம் நீ பயில வேண்டும்.
பணிவுடனும், கவனத்துடனும், பொறாமையில்லாமல், அக்கறையுடன் உனது காரியத்தை நிறைவேற்ற, முனைப்புடன் கூடிய பிராமணர்களை நீ கலந்தாலோசிக்க வேண்டும்.
வீழ்ந்துவிட்டால், மென்மையாகவோ, வலுவாகவோ எவ்வகையிலாவது எழுந்துவிட வேண்டும்.
அப்படி எழுந்த பின்னர் அறமே பயில வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படாதவர்கள் செழிப்பை அடையவே முடியாது.
பேரிடர்களிலிருந்து மீளும் மனிதனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம். கவலையால் பாதிக்கப்பட்டவனுக்கு, பழங்கால மனிதர்களின் (நளன் மற்றும் ராமனின்) வரலாறுகளைச் சொல்லி தேற்றப்பட வேண்டும்.
துன்பத்தால் பாதிக்கப்பட்ட இதயம் கொண்டவன் {அறியாமை கொண்டவன்}, எதிர்கால செழிப்பில் நம்பிக்கையளிக்கப்பட்டுத் தேற்றப்பட வேண்டும். கல்விகற்ற அறிவுள்ளவன் தற்கால உதவிகளால் தேற்றப்பட வேண்டும். ஓர் எதிரியிடம் ஒப்பந்தமிட்டபின், இனி செய்ய எதுவும் இல்லை என்று நினைத்து வசதியாக இளைப்பாறுபவன், எழுப்பப்படும்போது, மரத்தில் உச்சியில் படுத்துறங்கியவன் விழுவதைப் போல வீழ்வான். அவதூறுகளுக்கு அஞ்சாமல் ஆலோசனைகள் மறைக்கப்பட வேண்டும்.
ஒரு மன்னன், அனைத்தையும் தனது ஒற்றர்களின் கண்களால் கண்டு, வசைச் சொல்லுக்கு அஞ்சாமல் தனது ஆலோசகர்களை அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவன், தனது எதிரியின் ஒற்றர்கள் முன்பு, தனது உணர்வுகளை மறைக்க வேண்டும். ஒரு மீனவன் மீன்களைப் பிடித்துக் கொன்று செழிப்படைவதைப் போல, ஒரு மன்னன் தனது எதிரியின் உயிர் போன்ற முக்கியமானவற்றைப் பிளக்காமலும், கொடூரச் செயல்களைச் செய்யாமலும் இருந்தால் செழிப்பையடைய முடியாது. உனது எதிரியின் பலம், அவனது படைபலத்தில் உள்ளது. அது முற்றிலும் நிர்மூலமாக்கப்பட வேண்டும். உழுது மேலேயெடுத்தோ {இளைக்கச் செய்தோ}, கத்தரித்துத் தள்ளியோ {வெட்டித் தள்ளியோ}, நோயால் பீடிக்கச் செய்தோ, பசியால் துன்பப்படச் செய்தோ, நீர்த்தேவையை அடையச் செய்தோ அஃது முற்றாக அழிக்கப்படலாம்
தேவையிருக்கும் ஒருவன் (அன்பால்) ஒருபோதும் செழிப்பானவனை நாடமாட்டான். ஒருவனது காரியம் நிறைவேறும்போது, இதுவரை அதன் நிறைவேற்றத்திற்கு எவன் தேவைப்பட்டானா அவனை இனி அவன் அணுகத் தேவையில்லை.
எனவே, நீ எதையாவது செய்தால், அஃதை ஒருபோதும் முழுமையாகச் செய்யாதே. (யாருடைய தேவை உனக்கு இருக்கிறதோ) அவர்கள் விரும்பும் சிலவற்றை அதில் விட்டுவிடுவாயாக
செழிப்பில் விருப்பமுள்ள ஒருவன், எப்போதும் அக்கறையுடன் கூட்டாளிகளையும், ஆதாரங்களையும் தேடிக் கொண்டு, கவனமாகத் தனது போரைத் தொடுக்க வேண்டும். இக்காரியங்களில் அவனது உழைப்பானது, மதிநுட்பத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மதிநுட்பம் வாய்ந்த மன்னன், தான் செய்யப்போகும் காரியங்களின் நோக்கத்தை, நண்பர்களும், எதிரிகளும் எப்போதும் அறியா வண்ணமே வைத்திருக்க வேண்டும்.
பிறகு, அந்தச் செயல் செய்யப்படும்போதோ, முடியும்போதோ, அஃதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். ஆபத்து நேராத வரை மட்டுமே நீ அஞ்சுவது போல நடிக்க வேண்டும்.
ஆனால் ஆபத்து நெருங்கிவிட்டால், நீ துணிவுடன் அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும் {எதிர்கொள்ள வேண்டும்}. பலத்தால் தனது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட எதிரியை நம்புபவன், கருவறும் நண்டைப் போலத் தன் மரணத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறான்[5]. எதிர்காலத்தில் நீ செய்ய வேண்டிய காரியத்திற்கு {ஆபத்து கருதி} இப்போதே அவசியம் வந்துவிட்டதாக நீ உணர வேண்டும் (அதைச் சந்திக்க ஓர் ஒத்திகை பார்க்க வேண்டும்).
இல்லாவிட்டால், ஆபத்து வரும்போது, அவசரத்தால் ஏற்படும் அமைதியின்மையால், முக்கியமான நிகழ்வுகளை நீ கவனிக்கத் தவறிவிடுவாய்.
செழிப்பை விரும்பும் ஒருவன், இடம் மற்றும் நேரமறிந்து எப்போதும் மதிநுட்பத்துடன் செயல்புரிய வேண்டும்.
அவன் விதியைக் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் மீதும், வேள்விகள் மீதும், அறம், பொருள் மற்றும் இன்பத்தின் மீதும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இடமும், நேரமும் (கருத்தில் கொள்ளப்பட்டால்) பெரும் நன்மையை விளைவிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்
எதிரியானவன் முக்கியமற்றவனாக இருப்பினும், அவன் வெறுக்கப்படவே வேண்டும். விரைவில் அவன் தனது வேர்களை அகலமாக விரிக்கும் பனை மரமாகவோ, அல்லது ஆழ்ந்த கானகத்தில் எழும்பும் தீப்பொறியாகி பெரும் நெருப்பை மூட்டுபவனாகவோ மாறலாம்.
சிறு நெருப்பானது தொடர்ந்து விறகிடப்படுவதால் பெரும் பகுதிகளை எரிக்கும் சக்தி பெறுகிறது, அதே போல ஒரு மனிதன் கூட்டாளிகளையும், நண்பர்களையும் ஏற்படுத்திக் கொண்டால், விரைவில் வல்லமைமிக்க எதிரியைக் கூட அடக்கும் வலிமையைப் பெற்றுவிடுவான்.
உன் எதிரிக்கு நீ கொடுக்கும் நம்பிக்கையானது, அது நிறைவேறுவதற்கு வெகு முன்னரே மாறிவிட வேண்டும். காரியத்தை முடிக்கும் நேரம் வரும்போது, அவனிடம் பிணக்கு வர ஏதாவது சாக்கை {சாக்கு, காரணம்} நீ உற்பத்தி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சாக்கு கூற வேண்டும். அந்தக் காரணம், மற்றொரு காரணத்தில் இருந்து வந்ததாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்.
எதிரிகளை அழிக்கும் காரியத்தில், மன்னர்கள் அனைத்துத் தகுதிகளிலும் கூர்மையான ஒரு கத்தியைப் போல இருக்க வேண்டும். கருணையற்றுக் கூர்மையாக, தோலுறைக்குள் மறைத்து வைக்கப்பட்டு, தேவைப்படும்போது சிரத்தைச் சீவவோ, தாடையில் ஒரு மயிரில்லாமல் {தாடை மழித்தல்} மழிக்கவோ கூடிய வெகு கூர்மையான ஒரு கத்தியைப் போல் அவன் இருக்க வேண்டும்.
ஓ! குரு குலத்தவரின் பெருமைகளைத் தாங்குபவனே {திருதராஷ்டிரா}, பாண்டவர்களையும், மற்றவர்களையும் கவனித்து, ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்வாயாக. பின்னர் நீ துன்பத்துக்குள்ளாகாதவாறு இப்போதே செயல்படுவாயாக.
நீ அனைத்தும் அருளப்பட்டவன் என்பதையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் பெற்றவன் என்பதையும் நான் அறிவேன். எனவே, ஓ! மன்னா, பாண்டுவின் மைந்தர்களிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்வாயாக!
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டுவின் மைந்தர்கள், அவர்களது சகோதரர்களை விட (உன் மகன்களை விட) பலசாலிகள்; எனவே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன்.
ஓ! மன்னா, அஃதை உனது மைந்தர்களுடன் கேட்பாயாக. அப்படிக் கேட்டுவிட்டு, செயல்படுவாயாக (தேவையானதைச் செய்து கொள்வாயாக). ஓ! மன்னா, பாண்டவர்களால் எந்த அச்சமும் ஏற்படாதவாறு நடந்து கொள்வாயாக. பின்னர் நீ துன்பத்திற்கு ஆளாகாதவாறு, நிச்சயமாக, கொள்கைகளின் அறிவியல் {நீதிசாத்திரங்கள்} ஏற்றுக் கொள்ளும் வகையில் உன் செயல்களைச் செய்வாயாக" என்றார் {கணிகர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி, குரு குல மன்னனான திருதராஷ்டிரன் சிந்தனையிலாழ்ந்து துக்கத்திலிருக்கும்போது, தன்னாலான அனைத்தையும் சொல்லிவிட்டு கணிகர் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்".
…
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 9789374109
No comments:
Post a Comment