Tuesday, December 21, 2021

Cow theft - Periyavaa

*ஸ்ரீ மஹா பெரியவாள் - கேட்டதைக் குடுக்கும் காமதேனு*

_கட்டுரையாளர்- வி.கிருஷ்ணமூர்த்தி_
_கட்டுரை வெளியான ஆண்டு - 2006_
_தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா_

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பூஜ்யஸ்ரீ மஹாபெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது அங்கு பெரிய கட்டடங்களோ, மற்ற வசதிகளோ செய்யப்படவில்லை. ஸ்ரீ மஹாபெரியவாள் அங்குள்ள சின்னக்கோயிலின், முன்புறம் திண்ணையில், கயிற்றுக்கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் இரு நண்பர்களும் தரிசனத்திற்காகச் சென்றோம். என் திருச்சி நண்பர், திருவானைக்காவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, ஒரு அஷ்டோத்ர தங்கக்காசு மாலை செய்திருந்தார். அந்த மாலையைப் பெரியவாளிடம் காண்பித்து அனுக்ரஹம் பெறச் சென்றிருந்தோம். பெரியவாள் அந்தத் தங்கக்காசுமாலையை வாங்கிப் பார்த்து,தன் சிரசில் வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டு ஆசீர்வதித்தார்.

மஹாபெரியவர்கள், யாரேனும் மாலை கொண்டு வந்து சமர்ப்பித்தால், அதை தன்னுடைய சிரசில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். இதன் தாத்பர்யம், தனக்கு என்று ஒன்றையும் ஏற்றுக்
கொள்ளாமல், அம்பாளுக்கு அர்ப்பணித்ததாகப் பாவித்து, அம்பாளின் பிரசாதமாகக் கருதி, அதை சிரசில் வைத்துக்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒரு சமயம் தரிசனத்தின் பொழுது, கணவனை இழந்த வயது முதிர்ந்த அம்மையார், மஹாபெரியவாளிடம், "நான் கிராமத்தில் ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு, பராமரித்து,பால் கறந்து விற்று ஜீவனம் நடத்தி வந்தேன். அந்த மாட்டைத் திருடன் கொண்டு போய்விட்டான்" என்று வருத்தத்துடன் தெரிவித்தாள்.

பெரியவாள் ஹாஸ்யமாக, " அப்ப நீ என்னைத் திருடனைப் பிடித்துவரச் சொல்கிறாயா?" என்று சொல்லி சிரித்தார். அடுத்த க்ஷணம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமடத்து சிப்பந்தியிடம், "சிவாஸ்தானத்திலிருந்து, கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசு மாட்டை, இந்தப் பாட்டி வீட்டில் கட்டு" என்று ஆக்ஞையிட்டார்.

நம்முடைய மஹாபெரியவர்கள், தன் பக்தர்கள் கேட்டதைக் குடுக்கும் காமதேனு என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள் உதாரணமாக உண்டு - அதில் நான் நேரில் கண்டு மகிழந்த இதுவும் ஒன்று!

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

No comments:

Post a Comment