ப்ரஹ்லாதன்மீது ஹிரண்யன் கோபம்
ஹிரண்யகசிபு தன் குல குருவான சுக்ராச்சாரியாரின் புத்திரர்கள் சண்டன், அமர்க்கன் மூலம் வித்யாப்யாஸம் செய்து வைத்தான். ஒரு நாள் ஹிரண்யன் அன்பு மகனிடம் நீ கற்றவற்றுள் எது நலம் என்று நினைக்கிறாய் என்று கேட்டான். ப்ரஹ்லாதன் சொன்னான்: "சரீரம் கொண்ட மனிதர்கள் தேஹம் அழியக்கூடியது என்பதை அறியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்றனர். வீட்டைத் துறந்து, வனம் புகுந்து, ஹரியை ஏகாந்தமாய் த்யானித்து வந்தால் ஸம்ஸார பந்தங்கள் தொலைந்து நித்ய ஸுகமான மோட்சத்தை அடையலாம். இதுவே நான் கற்றவற்றுள் மேலான அறிவு" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஹிரண்யகசிபு திடுக்கிட்டான். உபாத்யாயர்கள் மீது கோபம் வந்தது. "என் சத்ருவான விஷ்ணுவினிடம் பற்றுதல் ஏற்படும்படி இவனுக்குப் போதித்தது யார்?" என்று வினவினான். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும், தாங்கள் ஒரு போதும் அப்படிப் பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை என்றும் சாதித்தனர். ஹிரண்யன் ஆசிரியர்களைக் கடுமையாக எச்சரித்து, மகனுக்கு ஒழுங்காக கல்வி புகட்டுங்கள் என்றும் கூறி அனுப்பினான். ஆசிரியர்களும் ப்ரஹ்லாதனிடம் தனியாக, "நாங்கள் சொல்லிக் கொடுக்காத விஷ்ணு பக்தி உனக்கு எப்படி ஏற்பட்டது?" என்று கேட்டனர்.
மாயையினால் நான் வேறு, நீ வேறு என்ற பேத புத்தியைக் கற்ப்பித்தவன் அந்தப் பகவான். அவனேதான் எனக்குக் குரு" என்றான். ஆசிரியர்கள் அவனை "குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பே" என்று திட்டி, மேலும் அவனை அதட்டியும், மிரட்டியும் அவன் மனத்தைக் கலைக்கப் பாடுபட்டு விபரீத ஜ்ஞானத்தைப் போதித்து வந்தனர்.
சில நாட்கள் சென்ற பிறகு ஹிரண்யன் மகனை அழைத்து, தன் மடி மீது இருத்தி அன்புடன், "இப்பொழுது நீ கற்றவற்றுள் சிறப்பான விஷயம் எது?" என்று வினவினான். ப்ரஹ்லாதன் உற்சாகமாகப் பதில் சொன்னான்: "கல்விகளுள் மிகச் சிறந்தது மஹாவிஷ்ணுவிடம் பக்தி செலுத்துவது. அந்த விஷ்ணு பக்தி ஒன்பது விதமானது. ச்ரவணம் (பகவானின் குணங்கள், புண்ய கதைகள் இவற்றைக் கேட்டல்), கீர்த்தனம் (திவ்ய நாமங்களைச் சொல்லல்), ஸ்மரணம் (மனத்தில் அவனையே நினைத்திருத்தல்), பாத ஸேவனம் (அவன் திருவடிகளை வணங்குதல்), அர்ச்சனம் (பூஜை செய்தல்), வந்தனம் (நமஸ்காரம் செய்தல்), தாஸ்யம் (தொண்டு செய்தல்), ஸக்யம் (நண்பனாக நினைத்தல்), ஆத்மநிவேதனம் (தன்னையே அவனுக்கு அர்ப்பணித்தல்) ஆகிய இவைகளே ஒன்பது விதிமுறைகள்". இந்த வார்த்தைகளைக் கேட்டதும் திடுக்கிட்டு, ஹிரண்யன் கோபத்துடன் ஆசிரியர்களிடம் சீறினான். அவர்கள் நடுநடுங்கிக் கூறினர்: "மன்னரே! இவை எதுவும் நாங்கள் கற்பித்தவை அல்ல. அவனுக்கு ஸ்வபாவமாகவே ஏற்பட்ட புத்தி இது. எங்களை நம்புங்கள்'. பிறகு ஹிரண்யன் சீற்றத்துடன் ப்ரஹ்லாதனைக் கேட்டான். "புத்தி கெட்டவனே! குரு உபதேசமின்றி உனக்கு மாத்திரம் இந்த துர்புத்தி எப்படி ஏற்பட்டது?" ப்ரஹ்லாதன் பதிலுரைத்தான்: உலகியல் சுகங்களில் உழலுவோருக்குப் பகவானிடம் இயல்பாகவோ, பிறர் மூலமாகவோ பக்தி ஏற்படாது. முற்றிலும் துறந்த பகவத் பக்தர்களை நாடுவோருக்கே அந்தப் பாக்கியம் கிட்டும்".
இந்தச் சொல்லைக் கேட்ட ஹிரண்யன் வெகுண்டு தன் மடியிலிருத்தியிருந்த ப்ரஹ்லாதனை உதறிக் கீழே தள்ளினான். 'இந்தப் பாதகனைக் கொல்லுங்கள். இவன் தன் சிற்றப்பனைக் கொன்ற விஷ்ணுவின் அடிமை. அல்லது இவன் விஷ்ணுவேதான். மாற்றான் பிள்ளையானாலும், நன்மை செய்பவனாயிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தீங்கிழைப்பவன் தன் மகனேயானாலும் அவனைத் துறத்தலே நலம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல, இத்தீயவன் பிணிக்குச் சமமானவன். இந்தக் கொடியவனை எந்த விதத்தினாலும் கொன்று விடுங்கள்" என்றான்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலில் பதிவு செய்தவர் திரு விஜயராகவன் நரசிம்ஹன் அவர்கள்.
No comments:
Post a Comment