யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா!
யோகிராம்சுரத்குமாரஸ்வாமின:
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
योगिरां सुरत्कुमार स्वामिनः
सहस्र नाम स्तोत्रम्
==============
இயற்றியவர்:
சாக்தஸ்ரீ டாக்டர் கே. வைத்தியநாத சாஸ்திரிகள்.
தமிழ் விளக்க உரை:
அன்னை ஓம் பவதாரிணி.
###############
110
अमेयात्मा रमा राम मारुति प्रियकारकः ।
वर्णनीय स्वभावाढ्यः पुण्यदिव्यगुणाकरः ।। ११० ।।
அமேயாத்மா ரமாராம மாருதி ப்ரியகாரக: வர்ணனீய ஸ்வபாவாட்ய: புண்ய திவ்யகுணாகர:
அமேயாத்மா: அளவற்ற அருளாளர்.
பகவானின் அருள் கடல் போல பரந்து விரிந்து ஆழ்ந்து அளவிட முடியாததாகும். அவரது அருள் புரியும் பாங்கும் அளவற்றதாகும். "பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காகவே நானாகவே சென்று அவர்களுடைய உள்ளத்தில் நிலவும் அஞ்ஞான இருளைப் போக்குகின்றேன்" என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறியுள்ளது போல் பகவானும் தனது அருளால் பக்தனை அறியாமையில் இருந்து விடுவிப்பவர்.
ரமாராம மாருதி ப்ரியகாரக: சீதை ராமன் மாருதி இவர்களுக்கு ப்ரியமான காரியம் செய்பவர்.
பரம்பொருளான ஸ்ரீராமனிடம் ஜீவனை சேர்த்து வைக்கும் ஆசார்ய பரம்பரைக்கு மேலெல்லையாய், பரமாசார்ய பூதையாக சீதாதேவி விளங்குகின்றார். பகவானும் ஜீவர்களை நல்வழிப்படுத்தி பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கும் சத்குருவாக விளங்கி சீதாதேவிக்கு ப்ரியமானவராகிறார். நட்புக்கு இலக்கணமாய்த் திகழும் ஸ்ரீராமபிரான் குரங்கு குலத்தில் உதித்த சுக்ரீவனையும், ஒரு ஓட்டை ஓடக்காரனான குகனையும், 'என் உயிரையொத்த நண்பன்' என்றும், 'உகந்த தோழன் நீ' என்றும் நட்பு பாராட்டியதும், கொடிய அரக்கனான ராவணன் மரணப்பிடியில் இருக்கும் போது கூட அவன் உயிர் வாழ ஒரு வாய்ப்பளித்து, 'போய் வா அனுமதிக்கிறேன்' என்று அவனை போக விட்டவனாகிய ஸ்ரீராமனின் நட்பும்,
சௌசீல்ய குணமும் பகவானிடமும் காணப்படும். பகவானிடம் சரணாகதி அடைந்தவர்களை கைவிடாத நட்பு பாராட்டி அவர்களை ரக்ஷிப்பவர். அதனால் ஸ்ரீராமனுக்கு ப்ரியமானவர்.
வாயு புத்ரனான ஹனுமான் அசோக வனத்தில் உயிர் போகும் தருவாயில் இருந்த சீதாபிராட்டியை ஆஸ்வாசம் செய்வித்து உயிர் கொடுத்ததால் வால்மீக மஹரிஷி, 'உயிர் கொடுக்கும் தென்றல் காற்றாகிற காமதேனுவின் கன்று' என்று ஹனுமானைக் கூறியதுபோல, பகவானும் பக்தர்களை துன்பத்தால் துவண்டு போகாமல் ஸம்ஸார துன்பத்தில் இருந்து விடுவிப்பதால் ஹனுமானுக்கு ப்ரியமானவர்.
இவ்வாறு சீதாதேவி ஸ்ரீராமன் ஹனுமான் இவர்களின் காரியங்களையே தானும் செய்து அதனால் அவர்களுக்கு ப்ரியமானவராக ஆனவர்.
வர்ணனீய ஸ்வபாவாட்ய: எல்லோராலும் வர்ணிக்கும்படியான குணங்கள் உள்ளவர்.
எல்லோராலும் துதிக்கப்படும் குணங்களான தவம், தூய்மை, சத்யம் போன்ற மங்கள குணங்களை எப்போதும் ஆஸ்ரயித்து தனது பக்தர்களை அந்த வழியிலேயே செலுத்துபவர் பகவான். அவரது பெருமைகளை துதியாகப்பாடும் பக்தர்களின் பாபங்கள் விலகுகின்றன.
புண்ய திவ்ய குணாகர: புண்ணியமான தெய்வீக குணக்கடலாக உள்ளவர்.
ராம நாமத்தையே ஜீவனமாகக் கொண்டு ராமராகவே சாருப்யம் பெற்ற பகவானுடைய புண்ணிய குணங்கள் அளவற்றதாக விளங்குகிறது. ஸத்யம், தயை, சாந்தி, தியாகம், சமம், தமம், திதிக்ஷை, ஞானம், ஐஸ்வர்யம், காந்தி, தைர்யம், மார்த்வம் போன்ற புண்ணிய குணங்களின் கடலாகத் திகழ்கின்றவர். நற்குணங்கள் நித்யமாகவும், பிரிக்க முடியாததாகவும் பகவானிடம் எப்போதும் வெளிப்பட்டு தனது பக்தர்களைக் காக்கின்றது.
##############
பகவானின் திவ்ய நாம உயரிய பலன் தொடரும்..
02/07/21
ஜெய் யோகி ராம்சுரத்குமார்.
No comments:
Post a Comment