பகிர்வன்பளிப்பு : Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம் - அத்தியாயம் 2
அத்தியாயம் 2.
கிருஷ்ணன் அவதரிக்கப்போகும் இரவின் வர்ணனை பின் வருமாறு.
மாலைப் பொழுதென்ற சந்த்யாகாலம் வந்தது. சூரியனுடைய பிம்பமானது நாகத்தின் படத்திலுள்ள மணி போல் விளங்கி மறையும் தருணத்தில் இருந்தது. அது பகலென்ற பாம்பானது சந்த்யா என்ற கருடனைக் கண்டு அஞ்சி பாதாளத்தில் புகுவது போல் இருந்தது. சந்திரன் உதயமாகாமல் இருக்கையில் சூரியனும் மறைய இருள் பரவிற்று. அப்போது வானத்தில் புஷ்ப வரிசை போல் நக்ஷத்திரங்கள் தோன்றின. அது புவியில் தோன்றப்போகும் பகவானுக்கு முத்துக்களைக் கோர்த்து விதானம் அமைத்தது போல் இருந்தது.
பிறகு தோன்றிய யது வம்ச மூதாதையான சந்திரன் பிறக்கும் குழந்தைக்கு சம்ஸ்காரம் செய்யக் கடலில் ஸ்நானம் செய்து வரும் புரோஹிதரை ஒத்து இருந்தான். இவ்வாறு பகவான் அவதாரம் செய்யப்போகும் நேரம் நெருங்கியது.
கம்சனைப் போன்ற துஷ்டர்கள் உறங்க, வசுதேவரைப் போன்ற நல்லவர்கள் விழித்திருக்க கடலின் அலைகளில் சந்திரபிம்பம் விழுந்து ஆனந்தமாக ஆடுவதைப் போல் இருந்தது. வாத்தியங்கள் வாசிக்கப் படாமலேயே ஒலி எழுப்பின. கம்சனின் இல்லங்களில் இருந்த தீபங்கள் சாதுக்களின் தாபங்கள் போல அணைந்தன.
பாபங்களைப போக்கும் நாட்களில் சிறந்ததான ஸ்ரீஜெயந்தி என்ற அஷ்டமி நன்னாளில் பகவான் அவதரிக்கத் திருவுள்ளம் கொண்டான். ஐந்து கிரகங்கள் உச்சமாய் ( சந்திரன் , அங்காரகன் , புதன், குரு , சனி) சாத்விக வருஷப லக்ன வேளையில் தேவகி என்ற உதயசந்திப் பொழுதானது உலகங்களாகிய தாமரைப் பூக்களின் கஷ்டங்களாகிய உறக்கத்தை போக்குவதற்காக அச்சுதனாகிய அழிவற்ற சூரியனை ஆவிர்பவித்தது.
அடுத்து கண்ணன் பிறப்பின் வர்ணனை.
No comments:
Post a Comment