Wednesday, September 15, 2021

Reciting a Mantra without knowing meaning -Periyavaa

"PINCODE" நம்பரை வைத்தே பக்தர்களின் சந்தேகத்தைப் போக்கிய பெரியவா"

(மந்திரங்கள் பண்ணி வைக்கிற வாத்யாருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்,செய்துக்க்கிற உங்களுக்கும் அர்த்தம் புரியாவிட்டாலும்,

 எந்த கர்மாவிற்கு எந்த மந்திரம் சொல்லணுமோஅதை சரியாகச் சொன்னா அதற்குண்டான பலனை அது கொடுக்கும். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.-



இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் 
நடந்தது.

அங்கே முகாமிட்டு இருந்தபோது தரிசனத்துக்கு வந்த சில பெரிய ரயில்வே அதிகாரிகள் ஒரு குறையை, அவரது கவனத்திற்கு கொண்டு வந்து,அதை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். 

அவர்களது குறைதான் என்ன?

"நாங்களெல்லாம் பெரியவா அனுக்கிரகத்தினாலே கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரை விடாம பண்ணிண்டு வர்றோம். இந்த ஊர்லே பூஜை, சிராத்தம், தர்ப்பணாதிகள் செய்து வைக்க சரியான, வேதம் படித்த சாஸ்திரி இல்லை. ஒரே ஒருத்தர் தான் இருந்தார். 

ஆனால் அவருக்கு சொல்லி வைக்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லத் தெரியல்லே... அர்த்தம் தெரியாமே கர்மாக்களைப் பண்றதை எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா.. அதனாலே மகான்தான் ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு நல்ல படிச்ச சாஸ்திரியை இந்த ஊருக்கு அனுப்பித் தரணும்."

இது அவர்களது குறை.

சில நிமிடங்கள் மகான் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"உங்கள் பிள்ளைகள் சொல்றதிலேயும் நியாயம் இருக்கு" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ மடத்துக்கு அன்று வந்திருந்த தபால்களைக் கொடுக்க போஸ்ட்மேன் அங்கு வந்தார். 

தபால்கள் மகானின்முன்வைக்கப்பட்டன.ஒவ்வொரு கடிதத்தையும் நிதானமாய் பார்த்துக்கொண்டு இருந்த மகான், ஒரு கடிதத்தை மட்டும் எடுத்து அதில் குறிப்பிட்டு இருந்த "பின் (PIN) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா?" என்று கேட்டார்.

அங்கே குழுமியிருந்த அதிகாரிகள் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் "உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

மகான் கேட்ட இந்த சாதாரண கேள்விக்குப் பொருள் தெரியாமல் விழித்தனர் அதிகாரிகள்.

அதைத் தொடர்ந்து தபால் கொண்டு வந்திருந்த தபால்காரரிடமும் மகான் அர்த்தத்தைக் கேட்டார். தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நபருக்கே அதன் அர்த்தம் தெரியவில்லை.

மடத்து சிப்பந்தி ஒருவரை அழைத்து ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி அதை எடுத்து வரும்படி பணித்தார். புத்தகம் வந்ததும் அதிலிருந்து ஒரு பக்கத்தில் வெளியான விளக்கத்தை சுட்டிக் காட்டினார்.

"PIN" என்பதற்கு "POSTAL INDEX NUMBER" என்று விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது.

முகத்தில் புன்னகை தவழ அந்த சர்வேஸ்வரன் எதிரில் இருந்த அதிகாரிகளைப் பார்த்து சொன்னார்.

"நீங்களெல்லாம் நிறையப் படிச்சு பெரிய உத்தியோகம் பார்க்கிறவா.உங்களுக்கு சாதாரண தபால்லே பயன்படுத்துகிற PIN-க்கு அர்த்தம் தெரியல்லே. கடுதாசிகளை கொண்டு வந்து கொடுத்த போஸ்ட்மேனுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியல்லே. ஒருவேளை "பின்கோடு"ன்னு எழுதின ஆசாமிக்குக் கூட இது தெரியாம இருக்கலாம்.

ஆனா பின்கோடுபோட்டிருந்த கட்டத்திலே எழுத வேண்டிய நம்பரை சரியா எழுதினா போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு சரியா போற தபால் மாதிரிதான் மந்திரமும்.

மந்திரங்கள் பண்ணி வைக்கிற வாத்யாருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்,செய்துக்க்கிற உங்களுக்கும் அர்த்தம் புரியாவிட்டாலும்,எந்த கர்மாவிற்கு எந்த மந்திரம் சொல்லணுமோஅதை சரியாகச் சொன்னா அதற்குண்டான பலனைஅது கொடுக்கும். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

அதனாலே இருக்கிற புரோகிதரை நிறுத்தாம ,நீங்கள் செய்யவேண்டிய கர்மாக்களை சிரத்தையுடன் செய்துவாருங்கள்.எந்தக் குறையும் வராது"என்றார் விளக்கமாக.

அதிகாரிகள் விக்கித்து நின்றுவிட்டனர். ஒரு சாதாரண வார்த்தை மூலம், தங்களுக்கு ஏற்பட்ட பெரிய சந்தேகத்தைப் போக்கிவிட்ட அந்த ஜகத்குருவின் மேன்மையை உணர்ந்து மெய்சிலிர்த்தனர்

No comments:

Post a Comment