அத்திகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளன், ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சேர்ந்து அர்ச்சா ரூபமாகவிருப்பதால், அவனும் பரத்வ ஸெளலப்யாதிகளைக் கொண்டு அடியார்களுக்கு அருள்புரிகிறான். கருணையென்னும் கல்யாண குணம் மிகுந்து இருப்பதால் "பேரருளாளன்" என்ற திருநாமமும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தையளிப்பதால் வரதராஜன் என்ற திருநாமமும் இவனுக்குண்டு. ஆழ்வார்களும் நம் பூர்வாச்சார்யர்களும், முத்தி மழை பொழியும் முகில் வண்ணனான பேரருளாளனின் கருணையில் ஈடுபட்டு ஸ்தோத்ரங்கள் இயற்றியும், அவனிடம் சரணாகதி பண்ணியும் இருக்கிறார்கள்.
ஆளவந்தார் ஸ்ரீராமாநுஜர் பெருமைகளைக் கேட்டவுடன் பேரருளாளன் ஸந்நிதிக்குச் சென்று,"யஸ்ய ப்ரஸாத கலயா" என்ற ச்லோகத்தில், எந்த பகவானுடைய அநுக்ரஹத்தினால் செவிடன் நன்றாகக் கேட்பானோ, நொண்டி வேகமாக ஓடுவானோ, ஊமை பேசுவானோ, குருடன் நன்றாகப் பார்ப்பானோ, மலடி மகனைப் பெற்றெடுப்பாளோ, அப்படிப்பட்ட வரதனை சரணமடைகிறேன் என்று பேரருளாளன் திருவடிகளில், ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீவிசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின் ஸ்தாபகர் ஆகவேண்டுமென்று வேண்டி, சரணாகதி பண்ணினார். வேண்டிய வரத்தையளிக்கும் வரதராஜனானதால் ஆளவந்தாரின் வேண்டுதலுக்கு திருச்செவி சாய்த்து அருள்புரிந்தார். ஸ்ரீராமாநுஜரை யாதவபிரகாசரின் சூழ்ச்சியிலிருந்து காத்து, தன் கைங்கர்யத்திஸ் ஈடுபடுத்தி, அவரை யதிராஜராக ஆக்கி நம் ஸித்தாந்தத்தை நிர்தாரணம் பண்ணிய ஸார்வபெளமராக ஆக்கினார்.
கூரத்தாழ்வான், தன்னுடைய அபிமான பெருமாளான பேரருளாளனின் பெருமையைப் பாடி வரதராஜஸ்தவம் என்ற க்ரந்தம் அருளியிருக்கிறார். வேதத்தில் சொல்லப்பட்ட அத்புத ஸக்திகளையுடைய ஒப்பற்ற பரம்பொருள் ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளனே என்று "அத்புதம் மஹதஸீமபூமகம்" என்னும் ச்லோகத்தில் ஸாதிக்கிறார். "பரிஜனபரி பர்ஹா பூஷணாந்யாயுதானி...ஸகலமேதத்ஸம்ச்ரிதார்தம் சகர்த" என்ற ச்லோகத்தில் நித்ய சூரிகளும், போகோபகரணங்களும், பூஷணங்களும், ஆயுதங்களும், கல்யாண குணங்களும் நித்ய விபூதி, லீலா விபூதி, திவ்யமங்கள விக்ரஹம், திவ்யாத்ம ஸ்வரூபம் எல்லாவற்றையும் ஆச்ரிதர்களின் அனுபவத்திற்காகவே ஸங்கல்பித்துள்ளான் என்று ஸாதிக்கிறார்.
ஸ்வாமி தேசிகனும் பேரருளாளன் விஷயமாக மெய்விரத மான்மியம், திருச்சின்னமாலை இத்யாதிகள் தமிழிலும், வரதராஜ பஞ்சாஸத் போன்றவை ஸம்ஸ்க்ருதத்திலும், ஸத்யவ்ரதமஹாத்ம்யம் போன்றவை மணிப்ரவாளத்திலும் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார்.
"பெருமையுடைய அத்திகிரி பெருமாள் வந்தார்...வானேற வழி தந்தார் வந்தார் தாமே" என்ற பாசுரத்தில், அத்திகிரி அருளாளப் பெருமாள் மிகப் பெருமையுடையவர். அடியார்கள் மீது கருணை மழை பொழிபவர். அருமையான வேதத்தின் சிகரமாகப் போற்றப்படுபவர். அங்கங்களுடன் கூடிய வேதஸ்வரூபமாய் நிற்பவர். பிராட்டி சப்தஸ்வரூபமாய் இருக்க தாம் அர்த்தஸ்வரூபமாய் இருப்பவர். தன்னுடைய சிறந்த கிருபையால் உயர்ந்த சாஸ்த்ரங்களை உலகுக்கு அளித்தவர். தன்னிடம் அன்பற்ற நாஸ்திகர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தக்கூடிய சாஸ்த்ரங்களை அளித்தவர். ஸ்ரீவைகுண்டத்திற்கு வழிகாட்டியவர். இவ்வளவு பெருமை வாய்ந்த பேரருளாளப் பெருமாள் இங்கு அத்திகிரியில் எழுந்தருளியிருக்கிறார் என்று ஸாதிக்கிறார்.
நிவ்ருத்தி தர்மத்தை உலகத்தார்க்கு பிரசாரம் பண்ணவும் ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் இந்த தேவப்பெருமாளிடம்தான் ஆளவந்தார் வந்து சரணாகதி பண்ணினார். இவ்வளவு பெருமையும் மஹிமையும் வாய்ந்தது இந்த க்ஷேத்ரம். வேதவேதாந்த மார்கத்தில் ஸ்ரீவைகுண்டம் போவதால் இந்த மார்கத்தை அத்திகிரி வீதியாகவே ஸாதிக்கிறார். இவ்வளவு மஹிமையும் பெருமையும் அத்திகிரி திவ்யதேசத்திற்கு இருக்கிறது. "காசி முதலாகிய நல் நகரி எல்லாம் கார்மேனி அருளாளர் கச்சிக்கொவ்வா" என்றபடி அத்திகிரி என்னும் இந்த திவ்ய ஸ்தலத்தை ஸேவித்தாலே பக்தர்களின் பாபங்கள் விலகி மோக்ஷத்திற்கு வழி ஏற்படும்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி அவர்கள்..
No comments:
Post a Comment