எது சமூக நீதி..?
(முரளீபட்டர் - ஸ்ரீரங்கம்)
சமீப காலமாக, இந்த புதிய அரசு அமைந்தது முதல், பல அமைச்சர்களும் பிரமுகர்களும், "சமூக நீதி.. சமூக நீதி.." என்று, ஏதோ இப்போது இந்த அரசு அமைந்த பிறகுதான் சமூக நீதி காக்கப்பட்டதுப் போன்றும், இதற்கு முன்னர் தாக்கப்பட்டதுப் போன்றும், பெரியாரின் நெஞ்சில் குத்தப்பட்ட முள் இப்போதுதான் நீக்கப்பட்டதுப் போன்றும், தினந்தோறும் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவையனைத்தும் வெறும் அக்கப்போருக்கான அடித்தளமாகும்.
உண்மையான சமூக நீதி நம் திருக்கோயில்களில்தான் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கம் திருக்கோயில், 106 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, இந்த சமூக நீதி காக்கப்படுவதிலும் முதன்மையானது. இதனைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
ஸ்ரீரங்கத்தில் பிராமணரல்லாத பிரிவினரில், உயரிய அந்தஸத்தை பெறுபவர், இத்திருக்கோயில் தேவதாசிகள் ஆவர் (சென்ற நுாற்றாண்டிலேயே இந்த தேவதாசிகள் முறைமை ஒழிக்கப்பட்டு விட்டது). கலாப காலத்தில் இந்த தேவதாசி பெண்டிர் செய்த தியாகம் மகத்தானது. இந்த தேவதாசி பெண்டிர், பரமபதித்தால், பெரிய கோயில் மடப்பள்ளியிலிருந்துதான், (சமையற் கூடத்திலிருந்துதான்) அக்னி எடுத்துச் செல்லப்பட்டு, அவர்களது சம்ஸ்காரமானது நடைபெறும். இத்திருக்கோயிலில் பணிபுரியும் எந்த பிரிவினருக்கும், இத்தகைய ஏற்றம் கிடையாது. எத்தகையப் பெருமையிது?
இதேப் போன்று இத்திருக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக பணி செய்த ஈரங்கொள்ளி (வன்னார்) பிரிவினரிலும் எவர் பரமபதித்தாலும், பெரிய பெருமாள் மடப்பள்ளியிலிருந்துதான், அவர்கள் இறுதி சடங்குக்கு அக்னி செல்லும்.!
பல நுாற்றாண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள். நம்பெருமாள் புறப்பாட்டின் போது, அவருக்குச் சாற்றப்பெறும் திருமாலைகளை எடுத்துத்தர இவர்களுக்கு மட்டிலுமே அதிகாரம் உண்டு. இந்த ரங்கராஜா புறப்பாட்டின் போது, கட்டியங்கள் முழக்கி, வெள்ளித்தடி, பந்தங்கள் சுமந்து முன்செல்பவர்கள் இவர்களே!. இவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கோயில் பட்டத்து யானையின் மேல், யானையேற்றமும் உண்டு! இந்த யானையேற்றம் அரங்கனை அர்ச்சிக்கும் அர்ச்சகருக்குக் கிடையாது. இந்த பிரிவினர் பிராமணர்களல்லாதவர்கள்தாம்..! நம் அரசியலமைப்பில் இவர்கள் MBC பிரிவினைச் சார்ந்தவர்கள் ஆனால் அரங்கனது தர்பாரில் குறிப்பிடத் தக்கவர்கள் !
இங்கு ஒரு தெருவில் வசிக்கும் "முத்தரையர்" சமூகத்தினர்தாம் ஸ்ரீரங்கம் கோயிலையே ஒரு காலத்தில் காத்துவந்தனர். இவர்கள்தாம் காப்பாளர்கள். "காவல்கார மிராஸ்" இவர்களுடையது. நம்பெருமாள் திருபள்ளியோடத்தில் ஏறிய பின்பு, ஓடத்தினை இயக்குபவர்களும் இவர்கள்தாம். இவர்கள் "வேடுபறி" உற்சவத்தினைச் சிறப்பாகக் கொண்டாடுவர். வேடுபறியன்று இவர்களுக்கு சிறந்த முறையில் நம்பெருமாள் முன்னிலையில் மரியாதைகள் ஆகும்.
இங்கு அரங்கனது திருவோலக்கத்தில் பிரும்மோற்சவம் முதல் திருநாளன்று, "பேரீ தாடனம்" என்று பேரீ எனப்படும் இசைக்கருவியினை வாசிப்பர். அப்போது கோயில் ஸ்தானீகர்கள், அந்தணர்களல்லாத இந்த பேரீ வாசிப்பவர்க்கு, அரங்கன் முன்னிலையில் பூணுால் சாற்றி, சந்தனம் கொடுத்து, மரியாதை செய்வர். எவருக்கு அமையும் இந்த ஏற்றம்?
பங்குனி உத்திர திருவிழாவின் போது, பெருமாள் ஜீயர்புரம் செல்வதற்கு முன், முகச்சவரம் செய்து கொண்டு புறப்படுவதாக ஐதீகம். வெகுவருடங்களுக்கு முன் நம்பெருமாள் முன்பு ஒரு வெள்ளி மூலாம் பூசப்பெற்ற தட்டு (கண்ணாடிக்கு பதிலாக) வைக்கப்படும். அப்போது மிராஸ் நாவிதர் ஒருவர் கண்ணாடியில் தெரியும் நம்பெருமாளுக்கு புது கத்திக் கொண்டு க்ஷவரம் செய்வது போல் பாவனைச் செய்வர். அதற்கு பின் பெருமாள் புறப்பட்ட பின், ராஜகோபுரத்திற்கு அருகில் (இப்போதிருக்கும் பிருந்தாவன் ஓட்டல்) முதற் மண்டகப்படியே அவர்களுடையதுதான். பெருமாள் ஜீயர்புரம் சென்று அங்கு காவிரியாற்றி்ல் மணலில் அமைக்கப்பட்ட பந்தலில் இறங்கியவுடன், முதல் உபயமும் இந்த நாவிதர்கள் உபயம்தான். (பல ஆண்டுகளாக யாரும் வராததால் இந்த உபயம் நின்று போனது). இந்த நாவிதர்களும் பரம்பரை மிராசுதாரர்கள்தாம். இன்றும் இவர்களுக்கென்று, கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இவர்களது தொழிற்கூட மண்டபமுள்ளது.
பெருமாள் ஜீயர்புரம் மண்டபம் வந்தவுடன், இக்கோயிலுக்கு மண்பானை செய்யும் குயவர் பெருமக்கள் மரியாதை ஆகின்றது. தற்சமயம் இரு பரம்பரை மிராஸ் குடும்பத்தினர் அரங்கனது பிரஸாதங்கள், இதர மரியாதைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தேரில் இருந்து நம்பெருமாள் இறங்கியவுடனே, முதல் மரியாதை கோயில் மரத்தச்சு ஆசாரிகள்தாம் பெறுகின்றனர்.
இந்த ஊர் இடுகாட்டில் தொண்டு செய்யும், பறையர் இன பெருமக்களில் எவர் இறந்தாலும், அவர்கட்கு நம்பெருமாள் பரிவட்டம், நம்பெருமாள் சாற்றிக்களைந்த திருமாலை, சந்தனம், திருக்கொட்டாரத்திலிருந்தே அரிசி முதலான மரியாதைகள் உண்டு..!
முன்பெல்லாம் சித்திரைத் தேர் அன்று, திருக்கொட்டாரத்தில் பெரிய பெருமாள் அளவிற்கேற்ப இரு தோலினால் ஆன பெரிய பாதக்குறடுகள் வெவ்வேறு கிராமத்தினைச் சார்ந்த இரு அருந்ததியினர் சமூக குடும்பத்தினால் தைக்கப்பெற்று சமர்ப்பிக்கப்படும். இரு கிராமத்தினைச் சார்ந்த அருந்ததியினர் சமூகத்தினர் இதனை கடும் விரதமிருந்து செய்வர். தற்சமயம் ஒரு கிராம குடும்பத்தினர் மற்றும் சமர்ப்பிக்கின்றனர். இன்னொரு கிராமத்தினைச் சாரந்தவர் ஏனோ வருவதில்லை. காரணம் அறிய முடியவில்லை.
" அண்டக்குலத்துக்கு அதிபதியாகி
அசுரர் இராக்கதரை*
இண்டக்குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகேசன் தனக்கு*
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே."
அண்ட குலத்திற்கு அதிபதியான ரங்கராஜன்தான், தோட்டி முதல் தொண்டமான் வரை அவரவர்க்கு உரிய சன்மானத்தினையும், மாலை மரியாதைகளையும் தந்தருளுவதில் முதன்மையானவர்.
அந்தந்த சாதி பிரிவினரும் தங்கள் வரம்பு மீறாமல், அவரவர் கைங்கர்யத்தினைச் செய்து வருகின்றனர்.
"நான்தானே அனுதினமும் கைங்கர்யம் செய்து வருகிறேன் - எனக்குத்தான் யானையேற்றம்.." என்று பட்டாச்சாரியர்கள் கேட்க மாட்டார்கள்.
"..நீதான் எனக்கு நம்பெருமாள் முன்பே பூணுால் சாற்றி விட்டாயே - நான் பெருமாளைத் தொட்டால் என்ன?.." என்று இசை வேளாளர்களும் போராட்டம் செய்ய மாட்டார்கள்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின் கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்து இயங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே
சேர மண்டலத்திற்கே மஹாராஜா குலசேகராழ்வார்.! பகவானிடத்தில் பக்தியிலும் அபாரபக்தியுடையவர்.! அவரே கருவறைக்குள் நுழைய விரும்பவில்லையே.! நாராயணா! கோவிந்தா! உன் சந்நிதியில் "ஒரு படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.." என்றுதானே வேண்டுகின்றார்.!?
இதுதானே உண்மையான சமூக நீதி ! இன்னும் சொல்லப் போனால் *திருவரங்கம்தான் உண்மையான சமத்துவப்புரம்.!*
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கிறேன் பேர்வழி என்று, *இந்து மதத்தின் ஆனி வேரையே பிடுங்கப் பார்க்காதீர்கள்.!*
No comments:
Post a Comment