Saturday, August 7, 2021

Tamil shorthand-Periyavaa

*"தமிழ் சுருக்கெழுத்து நூல்"*

தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா. 

சொன்னவர்; அனந்தன்- சென்னை-29

1957-58-ம் ஆண்டு சென்னைக்கு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள். வியாஸ பூஜை. சென்னை, மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில் நடை பெற்றது.

இரவு பூஜை ஆனவுடன் அவர்கள் உபந்நியாசம் செய்வார்கள். அவரது அமுத மொழியினை, நான் அப்படியே ஒரு வார்த்தைக்கூட விடாமல் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு, பின்னர் நேர் நடையில் செய்து வந்தேன். அவைதான் பின்னர், 'ஆசாரிய ஸ்வாமிகள் உபந்நியாசங்கள்' என்ற தலைப்பில் கலைமகள் வெளியீடாக வந்தன.

ஒருநாள், ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ராஜா அண்ணாமலை புரத்துக்கு விஜயம் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. போகும் வழியில் நாங்கள் நல்லப்பன் தெருவும், ஆடம் தெருவும் இணையும் இடத்திற்கே சென்று, பெரியவாள் வருகைக்குக் காத்திருந்தோம். 'மேனா' வந்தது. பூர்ணகும்பம் கொடுத்து பெரியவாளை வணங்கிக் கொண்டோம்.

சட்டென்று பெரியவாள் என்னை அழைத்து, 'நீ எங்கே இருக்கே?' என்றார்கள்.

 "இந்தத் தெருவில் தான் குடியிருந்து வருகிறேன்" என்றபடி நல்லப்பன் தெருவைக் காட்டினேன். 

மேனாவை எங்கள் தெருவழியாகப் போகச் சொல்லி விட்டார்கள். காரணம் புரியவில்லை. நாங்கள் ஓடோடி வந்து, வீட்டுக் கதவுகளைத் திறந்து விளக்கேற்றுவதற்குள் மேனா வந்துவிட்டது.

என்னைத் தன்னருகில் அழைத்து, "தமிழ் சுருக்கெழுத்து நூல் ஒன்றை நீ எழுதியிருப்பதாகச் சொன்னாயே?
அதை எடுத்துவா பார்ப்போம்" என்றார்கள். 

வீட்டினுள் சென்று, நூலின் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவரிடம் சமர்ப்பித்தேன். 

ஒவ்வொரு பக்கமாக - அவசரமே காட்டாது - குறுஞ்சிரிப்பு முகத்தில் தவழ அந்நூலை அவர்கள் கடைசிப் பக்கம் வரை பார்வையிட்டார்கள். அவர் முகம் தாமரை போல் சிவக்க - ஆங்கில பிட்மனில் P என்றுள்ளதை 'ப' என்றும், M என்றுள்ளதை 'ம' என்றும் அப்படியே தமிழுக்கு ஏற்றாற்போல நூலைத் தமிழில் எழுதியிருக்கிறாய்" என்று சொன்னபோது, எதையும் பார்த்தவுடன் கிரகித்துக் கொள்ளும் அவரது நுண்ணிய அறிவுத்திறன் எங்களை சிலிர்ப்படையச் செய்தது. 

"இந்நூல் அச்சாகிவிட்டதா?" என்று கேட்டார்கள். 

"இல்லை" என்றேன். தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள்.

தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது. 1998-ல் 4ம் பதிப்பு வெளிவந்து தமிழுக்கும், தமிழ் உலகுக்கும் பயன்படும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

என்னே! அந்த தெய்வத்தின் அருளாற்றல்!!

No comments:

Post a Comment