.
"காமாட்சிக்கு செலுத்தவேண்டிய காணிக்கையை நினைவூட்டிய காஞ்சிமகான்!"
அன்றைய தினம் மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது. காஞ்சியில் காமாட்சி கோயிலில் ஏதோ விசேஷம் என்பதால், கோயிலுக்கு வந்த கூட்டமும் ஸ்ரீமடத்துக்கு மகானை தரிசிக்க வந்ததில் எக்கச்சக்கமான பக்தர் கூட்டம் மகானை தரிசிக்கக் காத்திருந்தது.
நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையோடு நின்றிருந்தார் ஒரு பெண்மணி. வரிசை மெதுவாக நகர்ந்தது. குழந்தைக்கு ஒரே இடத்தில் நிற்பது பிடிக்கவில்லையோ என்னவோ திடீரென அழத்தொடங்கியது.
சமாதானப்படுத்திய அதன் அம்மா, அது முடியாததால், உடன் வந்திருந்த குடும்பத்தினரை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டு, குழந்தையுடன் ஸ்ரீமடத்தின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தார். கீழே உட்கார்ந்து கொண்ட குழந்தை அங்கும் இங்கும் தவழ்ந்தும், தளிர்நடையிட்டும் சிரித்து விளையாடத் தொடங்கியது.
நேரம் நகர்ந்து கொண்டே இருக்க, வரிசையும் நகர்ந்து அந்தப் பெண்மணியின் குடும்பம் மகாபெரியவா இருந்த இடத்தை நெருங்க, தானும் சென்று வரிசையில் சென்று நிற்கத் தீர்மானித்து குழந்தையைத் தூக்கினாள். மறுவிநாடி, திடீரென்று வீறிட்டு அழத்தொடங்கியது குழந்தை. அதன் அழுகையை நிறுத்த பலவகையிலும் முயன்று தோற்றார்கள் அந்தக் குடும்பத்தினர்.
மகான் சன்னதியில் நிலவிய அமைதியைக் கிழித்தெறிந்த குழந்தையின் அழுகுரல் சிலருக்கு அனுதாபத்தையும் சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்த, எல்லோரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.
அந்த சமயத்தில் திடீரென்று ஒரு தொண்டர், அந்தப் பெண்மணி அருகே வந்தார். "மகாபெரியவர் குழந்தையைத் தூக்கிண்டு வரச் சொல்றார்!" என்றார்.
குழந்தை அழுவதற்காக ஏதாவது சொல்வாரோ? அல்லது குழந்தை அழுவது சங்கடமாக இருப்பதால் சட்டென்று பிரசாதம் தந்து வெளியே அனுப்ப நினைக்கிறாரோ! புரியாத கற்பனைகளுடன் மகான் முன் சென்றார்கள், அந்தக் குடும்பத்தினர்.
சங்கோஜத்துடன் தன் முன் வந்து நின்ற அவர்களை அன்போடு பார்த்தார், மகான்.
"என்ன குழந்தை அழறதா? அதை இங்கே படுக்க விடுங்கோ!" சொன்னார்.
அப்படியே அவர் முன்பாக குழந்தையைப் படுக்க வைத்தார்கள் அதன் பெற்றோர். இப்போது முன்பைவிட அதிகமாக புரண்டு புரண்டு அழ ஆரம்பித்தது குழந்தை.
அதன் தவிப்பைவிட, அதைப் பார்த்து அதன் பெற்றோர் தவித்த தவிப்பே அதிகமாக இருந்தது. மகான் சொல்லிவிட்டதால், குழந்தையைத் தூக்கவும் முடியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தன் அருகில் இருந்த அணுக்கத் தொண்டரை அழைத்த மகான், அருகே இருந்த மயில்பீலி ஒன்றைக் காட்டி, "அதோ அந்தப் பீலியை எடுத்து, அதால இந்தக் குழந்தை முகத்துல மெதுவா வருடிக் கொடு" என்றார்.
மகான் சொன்னபடியே அந்தத் தொண்டர் செய்ய, அடுத்து நடந்ததுதான் அதிசயம். அழுது கொண்டிருந்த குழந்தை மயில்பீலியின் குறுகுறுப்பு தாங்காமல் சட்டென்று ஒரு தும்மல் போட்டது. அந்தத் தும்மல் வேகத்தில் அதுவரை அதன் மூக்கில் அடைத்துக் கொண்டிருந்த வெள்ளி முத்து ஒன்று வந்து விழுந்தது.
அவசர அவசரமாகக் குழந்தையின் காலில் இருந்த கொலுசைப் பார்த்தவர்கள், அதில் இருந்து விழுந்த முத்துதான் அது என்பதைப் புரிந்துகொண்டு, தாங்களே கவனிக்காத இதை மகான் எப்படித் தெரிந்து கொண்டார் என்று திகைப்புடன் பார்க்க, புன்னகைத்த மகான், பேசத் தொடங்கினார்.
"என்ன, காமாட்சிக்கு மூக்குத்தி காணிக்கை தர்றதா சொன்னதை மறந்துட்டியா? அதான், உன் குழந்தை தன் கால் கொலுசுலேர்ந்து உதிர்ந்த முத்தை எடுத்து மூக்குத்தி மாதிரி வைச்சு அழகு பார்த்திருக்கு. நீ தூக்கினப்போ எதிர்பாராத விதமா அது மூக்குக்கு உள்ளே போயிருக்கு. அம்பாள் கிட்டே வேண்டிண்டதைக் கோயிலுக்குப் போய் மறக்காம செலுத்திட்டுப் போ! நல்லதே நடக்கும்!"
மகாபெரியவர் சொல்ல, அப்படியே சிலிர்த்துப் போய் நின்றார்கள் அவர்கள்.
"சுவாமி...நீங்க சொல்றது சத்தியம்! குழந்தை பிறக்கறது தாமதம் ஆனதால, என் வயத்துல முத்தா ஒரு குழந்தை உதிச்சா, உனக்கு முத்து மூக்குத்தி வாங்கித் தர்றேன்னு காமாட்சிக்கிட்டே வேண்டினேன். அதைத்தான் மறந்துட்டேன். இப்பவே போய் அந்தக் காணிக்கையைச் செலுத்திடறேன்...!".
தழுதழுப்பாகச் சொன்ன அந்தப் பெண்மணி, கண்களில் நீர் தளும்ப மகானை நமஸ்கரித்தாள்.
மென்மையான சிரிப்போடு கை உயர்த்தி ஆசிர்வதித்த மகான், சாட்சாத் காமாட்சியாகவே காட்சித் தந்தார், அப்போது அங்கிருந்தோர் கண்களுக்கு.
"ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
No comments:
Post a Comment