Saturday, August 21, 2021

Krishna Avatar part35

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 35

 சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
 ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,

 அன்றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.

 விளக்கம்

சிறியன்
-
(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்

அணியன்
-
ஸுலபனாயும்

மிக பெரியன்
-
(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு

சேயன்
-
எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)

ஆயன் ஆய் நின்ற
-
இடைப்பிள்ளையாய்ப் பிறந்தவனாயும்

துவரை கோன் ஆய்நின்ற
-
துவாரகாபுரிக்கு தலைவனாய் நின்ற  மேன்மை பொருந்திய

மாயன்
-
ஸ்ரீகிருஷ்ணர்

அன்று
-
(பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில்

ஓதிய
-
(திருத்தேர்த்தட்டில் அர்ஜுனன்னுக்குச் உரைத்த)

வாக்கு அதனை
-
(சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை

கல்லார்
-
கற்காதவர்கள்

மெய் ஞானம் இல்
-
உண்மையான ஞானமற்ற

ஏதிலர் ஆம்
-
பகவத் விரோதிகளாவர்.      

 ருக்மணி மந்திர் (கோயில்), துவாரகை.

துவாரகையை ஆட்சி செய்த கிருஷ்ணருக்கு, தவத்தில் பல சிறப்புகளைப் பெற்ற துர்வாச முனிவரை, தனது அரண்மனைக்கு விருந்து அழைக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தை, தனது மனைவியான ருக்மணியிடம் கூறி கருத்து கேட்டார்.
ருக்மணியோ, 'சுவாமி! முனிவர்களுக்கு விருந்தளித்துச் சிறப்பு செய்வதென்பது அரச குலத்தின் மரபுதானே! இதில் என்னுடைய கருத்தைக் கேட்க என்ன இருக் கிறது?' என்றார்.
'அப்படி இல்லை ருக்மணி! ஒருவரை விருந்தினராக அழைத்தால், அவர் நம் இல்லத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் வரை அவரது மனதில் சிறு குறையும் தோன்றாமல் சிறப்பாக உபசரித்து மகிழ வேண்டும். அப்படி செய்ய இயலா விட்டால் நமக்கு துன்பம் வந்து சேரும். அதனால்தான் விருந்தினரை அழைக்கும் முன்பாக உன்னுடைய கருத்தைக் கேட்கிறேன். நாமிருவரும் விருந்தினரைச் சிறப்பாக உப சரித்து மகிழ வேண்டும். அப்படிச் செய்ய இயலாவிட்டால், நமக்குத் துன்பம் வந்து சேரும். அதனால்தான், நம் இல்லத்துக்கு விருந்தினரை அழைப்பதற்கு முன்பாக, உன் கருத்தைக் கேட்கிறேன்' என்றார் கிருஷ்ணர்.

'சுவாமி! நம் இல்லத்துக்குத் தாங்கள் அழைத்து வரும் விருந்தினர் யாராக இருந்தாலும், அவர் நம் இருவருக்கும் பொதுவான விருந்தினர்தானே! அவருக்குத் தேவையான அனைத்து உபசரிப்புகளையும் தங்களுடன் சேர்ந்து செய்ய வேண்டியது என்னுடைய கடமைதானே! நீங்கள் நம் இல்லத்துக்கு எப்போதும், எவரையும் அழைத்து வாருங்கள்! தங்களின் மனைவியாக, அவர்களை உபசரிக்கக் காத்திருக்கிறேன்' என்றார் ருக்மணி.
கிருஷ்ணரோ, 'நீ சொல்வதெல்லாம் சரிதான். இருந்தாலும், நான் அழைத்து வர விரும்பும் விருந்தினர் துர்வாச முனிவர். மிகவும் கோபக்காரர் என்று பெயர் பெற்றவர். நம்முடைய உபசரிப்பில் சிறிய குறை என்றாலும், அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் உன்னிடம் கருத்து கேட்க வேண்டியிருக் கிறது' என்றார்.

அதைக் கேட்டதும் கோபம் கொண்ட ருக்மணி, 'சுவாமி! நீங்கள் என்னைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம் இல்லத்துக்கு வரும் விருந்தினர் யாராக இருந்தாலும், என்னுடைய விருந்தோம்பல் அவர்களை மகிழ்ச்சியோடுதான் திரும்பச் செய்யும். நீங்கள் நம் இல்லத்துக்கு விருந்துக்கு அழைக்க விரும்பும் முனிவரை அழைப்பதற்கு, நானும் தங்களுடன் வருகிறேன்' என்றார்.
இதையடுத்து கிருஷ்ணரும், ருக்மணியும் இணைந்து துர்வாசரின் ஆசிரமத்துக்குச் சென்று, அவரை தங்கள் அரண்மனைக்கு விருந்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். துர்வாச முனிவர் சம்மதம் தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரு நிபந்தனையையும் முன் வைத்தார். 'தன்னை அழைத்துச் செல்லும் தேரினை கிருஷ்ணரும், ருக்மணியும் சேர்ந்து இழுத்துச் செல்ல வேண்டும்' என்பதுதான் அந்த நிபந்தனை. முனிவரின் நிபந்தனையை இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

துர்வாச முனிவரைத் தங்கள் தேரில் அமரச் செய்து, அந்தத் தேரை தங்கள் கைகளால் இழுத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றனர். ருக்மணிக்குக் கடினமான வேலைகள் எதுவும் செய்து பழக்கமில்லாததால், அந்தப்பணியைச் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்தத் தேரை இழுத்துச் சென்ற நேரமும் நண்பகல் வேளை என்பதால், ருக்மணிக்குக் களைப்பு உண்டாகி தாகத்தில் நாக்கு வறண்டது.
விருந்தினருக்கு உணவளித்து உபசரித்த பின்னர்தான், விருந்தளிப்பவர் உணவு உண்ண வேண்டும் என்பது விருந்தோம்பலின் நடைமுறையாக இருந்தது. எனவே ருக்மணி கிருஷ்ணரிடமும், துர்வாச முனிவரிடம் தனக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டதைச் சொல்ல முடியாமல் தவித்தார். ஆனால், ருக்மணியின் நிலையைத் தெரிந்து கொண்ட கிருஷ்ணர், துர்வாசருக்குத் தெரியாமல் தனது கால் பெருவிரல் நகத்தால், நிலத்தைக் கீறி அதிலிருந்து தண்ணீர் வரச் செய்தார். ருக்மணியும் அந்தத் தண்ணீரை முனிவருக்குத் தெரியாமல் அருந்தினார். ஆனால், துர்வாச முனிவர் ருக்மணி தண்ணீர் அருந்துவதைப் பார்த்து விட்டார். அவருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.

'ருக்மணி! விருந்தினரான எனக்கு உணவளித்து உபசரிக்கும் முன்பாக, நீ எப்படி தண்ணீர் அருந்தலாம்? விருந்தோம்பல் நடைமுறையைப் பின்பற்றாமல் தவறு செய்த நீ, அதிகமான விருப்பம் கொண்ட உன் கணவர் கிருஷ்ணரைப் பிரிந்து துன்பப்படுவாய். உனக்குத் தண்ணீரை வரவழைத்துக் கொடுத்த கிருஷ்ணரும் உன்னைப் பிரிந்து துன்பப்படட்டும்' என்று சாபம் கொடுத்தார். இந்த தலத்தில் நல்ல நீரே கிடைக்காது என சாபமிட்டதாக கூறுகின்றனர். இன்றும் சுமார் 20 கிலோமீட்டர்கள் வரை நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. இந்தக் கோயிலில் தண்ணீர் தானம் விஷேசமாக செய்யப் படுகிறது.

உடனே ருக்மணி, 'முனிவரே! தவறு செய்த எங்கள் இருவரையும் மன்னித்து, சாபத்திலிருந்து விடுவித்து அருளுங்கள்' என்று வேண்டினார்.
ருக்மணியின் வேண்டுதலில் மனமிரங்கிய முனிவர், 'ருக்மணி! நான் அளித்த சாபத்திலிருந்து உங்களிருவரையும் முழுமையாக என்னால் விடுவிக்க முடியாது. உங்களின் சாபத்திற்கான கால அளவைக் குறைக்கிறேன். நீங்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒருவரையொருவர் பார்க்காமல் பிரிந்திருப்பீர்கள். அதன் பிறகு நீங்கள் இருவரும் சந்திக்கும் வேளையில் உங்கள் சாபம் நீங்கும்' என்று அருளினார். ருக்மணி, துர்வாச முனிவருக்கு நன்றி தெரிவித்தார். துர்வாசரின் சாபத்தால், ருக்மணி கிருஷ்ணருடன் தொடர்ந்து அரண் மனைக்குச் செல்ல முடியாமல் போனது. கிருஷ்ணர் மட்டும் தனியொருவராக, துர்வாச முனிவர் அமர்ந்திருந்த தேரைத் இழுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார்.

 விமோசனம் :

துவாரகைக்கு வெளியே கிருஷ்ணரைப் பிரிந்த இடத்திலேயே, தனியாக வசிப்பதென்று ருக்மணி முடிவு செய்து அங்கேயே தங்கினார். கிருஷ்ணர் தன் கால் பெருவிரல் நகத்தால் கீறிய இடத்திலிருந்து வெளியேறிய தண்ணீர், அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் பெருகி, அவருக்குப் பாதுகாப்பாக நின்றது.
இந்த நிலையில் ருக்மணி இல்லாமல் கிருஷ்ணர் மட்டும் முனிவருடன் அரண்மனைக்குத் திரும்பியது கண்டு, அரண்மனையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள், துர்வாச முனிவரின் சாபத்தால் ருக்மணி கிருஷ்ணரைப் பிரிந்திருக்க வேண்டிய சாபத்தை அறிந்து வருந்தினர். அரண்மனையில் கிருஷ்ணர், ருக்மணி தவிர்த்த மற்ற மனைவியர்களின் துணையுடன் துர்வாச முனிவருக்கு விருந்தளித்து, உபசரித்து மகிழ்ந்தார்.
இந்நிலையில், ருக்மணியின் தோழியாக இருந்தவர்கள் சிலர், ருக்மணிக்குத் துணையாக அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று ஆறுதலாக இருந்தனர். அது அப்போதைக்குத்தான். தோழிகள் சென்றதும் தனிமையில் இருக்கும் ருக்மணிக்கு, கிருஷ்ணரைப் பிரிந்த வருத்தம் இருக்கத்தான் செய்தது.

இப்படியே.. முனிவர் கொடுத்த சாபத்தின்படி 12 ஆண்டுகள் ருக்மணி, கிருஷ்ணரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந் நிலையில் ஒருநாள், அவருக்குக் கிருஷ்ணரைப் பற்றிய எண்ணங்கள் அதிகமாகத் தோன்றிக் கொண்டேயிருந்தன. அதனால், அவருக்குக் கிருஷ்ணரை உடனேப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் அதிகரித்தது. அவர் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக அரண்மனை நோக்கிச் சென்றார். அதே வேளையில், கிருஷ்ணருக்கும் ருக்மணியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, கிருஷ்ணரும் ருக்மணியைப் பார்க்கும் ஆவலுடன் அரண்மனையில் இருந்து கிளம்பி, ருக்மணி இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.

அவர்களிருவரும் இடையில் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் இருவருக்கும் 12 ஆண்டு காலம் ஏற்பட்ட பிரிவின் துயரம் மறைந்து போனது. ருக்மணி தான் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்ற மகிழ்ச்சியோடு அவருடன் சேர்ந்து அரண்மனைக்குச் சென்றார். என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சில வேளைகளில் தங்களின் இயலாமையால் எவரும் சிறிய தவறுகளைச் செய்ய வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தவறு சிறியதாக இருந்தாலும், அதற்கான தண்டனை உறுதி என்பதை உணர்த்துவதாக ருக்மணி பெற்ற சாபமும், விமோசனமும் இருக்கின்றன.

துர்வாச முனிவரிடம் சாபம் பெற்று, கிருஷ்ணரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த ருக்மணிக்கு அந்த இடத்தில் கோவில் உள்ளது. இந்தக் கோவில் துவாரகாதீசுவரர் கோவிலில் இருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில்  அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் 'ருக்மணி கோவில்' என்று அழைக்கப்பட்டாலும், கோவில் கருவறையில் ருக்மணி கிருஷ்ணருடன் சேர்ந்துதான் இருக்கிறார்.
கோவில் சிறியதாக இருந்தாலும், கோவில் பல்வேறு கலையமைப்புகளுடன் மிகச் சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வெளிப்புறச் சுவர் களில் மனித, தெய்வ உருவங்கள் (நரதரர்கள்) இடம் பெற்றிருக்கின்றன. அடித்தளத்தில் யானையின் உருவங்கள் (கஜதரங்கள்) செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, கோவிலுக்குள் கிருஷ்ணர், ருக்மணியுடன் சேர்ந்திருக்கும் பல்வேறு ஓவியங்களும் வரையப்பட்டிருக்கின்றன.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:

Post a Comment