Sunday, August 29, 2021

Koorma avataram

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகூர்மாவதாரம்* 

 *பகுதி 01* 

       நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் கூடி யாகம் செய்ய ஆரம்பித்தனர். அங்கு இருந்த லோமஹர்ஷனரைப் பார்த்து, "வேதவியாசரின் சீடராகிய தாங்கள் எல்லாப் புராணங்களைப் பற்றியும் அறிந்தவர். எங்களுக்குக் கூர்ம புராணம் பற்றி விளக்க வேண்டும்" என்று கேட்க, லோமஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.

கூர்ம புராணம், மஹா புராணங்களில் பதினைந்தாவது புராணமாகும். 

      விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மன்னன் இந்திரத் துய்மனுக்குச் சொல்லியதே இப்புராணமாகும். இப்புராணத்தில் பக்திமார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், பரப்பிரம்மம் பற்றிய ஞானம், ஆன்ம விடுதலை அடைய செய்யப்பட வேண்டிய ஆன்மிகப் பயிற்சிகள் என்பவை பற்றிப் பேசப்பெறுகிறது.

 *இந்திரத்துய்ம்னன்* 

வெகு காலத்திற்கு முன்னர், இந்திரத்துய்ம்னன் என்ற அரசன் ஒருவன் இவ்வுலகை ஆண்டு வந்தான். இவ்வரசன் இறந்து, அடுத்த பிறவியில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். நேர்மையும், நல்லொழுக்கமும் கொண்ட இப்பிராமணன், நீண்ட நாட்கள் தவம் செய்து வந்தான். தவத்தின்      
முடிவில் இலட்சுமி தோன்றினார். இந்திரத்துய்மன் லட்சுமியைப் பார்த்து, "அன்னையே! தங்களைப் பற்றி தயவு செய்து சொல்லுங்கள். உண்மையான ஞானம் எப்படிப் பெறுவது என்பதைக் கூற வேண்டும்" என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

லட்சுமியும், இந்திரத்துய்மனிடம், தேவர்கள், முனிவர்கள் யாராலும் அறியப்படாதவள் நான். நானே விஷ்ணுவின் மாயை ஆவேன். விஷ்ணுவுக்கும், எனக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஞானம் என்பதைப் பற்றிச் சொல்வதற்கு, நீ விஷ்ணுவைத் தியானம் செய். அவர் ஒருவராலேயே அதனைக் கூறமுடியும் என்று கூறி மறைந்தார்.

இந்திரத்துய்மனும் விஷ்ணுவை தியானித்து வந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், விஷ்ணு தோன்றினார். இந்திரத் துய்மனுக்கு உண்மையான ஞானம் பெறும் வழியினைச் சொல்லிக் கொடுத்தார். உடனே முனிவர்களும், தேவர்களும் அதைப்பற்றித் தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று விரும்பிக் கேட்க, விஷ்ணுவும் அவர்களுக்காக மறுமுறை கூற ஆரம்பித்தார். ஞான மார்க்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது விஷ்ணு ஆமையாக உருவம் பெற்றிருந்ததால், அவர் கூறிய தெய்விக வார்த்தைகள் கூர்ம புராணம் என்று பெயர் பெற்றது. மூலப் பரம்பொருளின் இருப்பையும், இயல்பையும் நன்கு அறிந்து கொண்டபின், அதனுடைய வியாபகத்தை அறிய வேண்டும். இம்மூன்றையும் அறிந்த பிறகு நூல்களில் சொல்லப்பட்டபடி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து தர்மத்தைக் கடைப்பிடித்து, அதிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும். ஒடுக்கப்பட்டவற்றை, வாழ்வில் இருந்து ஒதுக்கி, அண்ட முழுவதும் வியாபித்து இருக்கின்ற மூலப் பொருள் களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிய வேண்டும். உலகமும் அதில் காணப்படும் பொருள்களும் மாயை என்றே நன்கறிய வேண்டும். இவ்வாறு செய்தால், அனைத்தையும் ஆட்டிப் படைக்கின்ற பரம்பொருளின் இயல்பை ஒருவாறு உணரமுடியும்.

இந்திரத்துய்ம்னன் வினா

"ஒ ஜனார்தனா! எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சத்தியப் பொருள் யாது? முழு நிறைவுடன் கூடிய பொருள் யாது? பயன் என்று சொல்லுகிறாயே, அது எது? அனைத்திற்கும் மூலகாரணம் யாது? நீ யார்? உன் தொழில் யாது?"

பகவானின் பதில்

"மிக உயர்ந்த சத்தியப் பொருள் என்பது பரப்பிரம்மமே ஆகும். எவ்வித மாறுதலும், திருத்தி அமைக்கப்படும் இயல்பும் இல்லாததே அப்பொருளாகும். நிரதிசய இன்பம் என்பதும் அதுவேயாகும். அஞ்ஞான இருளைக் கடந்து நிற்கும் ஒளிப் பிழம்பு அதுவே ஆகும். அதனுடைய என்றும் அழியாப் புகழும், பிரபஞ்சத்தை ஆளும் இயல்பும், முழு நிறைவுடன் கூடிய அதன் சிறப்பாகும். மூலகாரணம் என்பது வெளிப்படாமலும், அழியாமலும், துய்மை கெடாமலும் உள்ள
பெருஞ்சக்தியே ஆகும். அச்சக்தியின் பயன் அல்லது விளைவு இப்பிரபஞ்சமே ஆகும். எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் நிற்கும் பரமாத்மா நானே ஆகும். இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் ஆகியவையே என்னுடைய செயல்கள் என்று சொல்லப்படும். ஒ பிராமணா! சொல்லப்பட்ட அனைத்தையும் தவறாமலும், முழுவதுமாகவும் அறிந்து கொண்டு என்றுமுள்ள பரம்பொருளை வழிபடுவாயாக. அவ்வழிபாடு என்பதே விதிக்கப்பட்ட செயலைத் தவறாமல் செய்வதே ஆகும். இச் செயல்களைச் செய்யும் பொழுது எவ்விதமான பயனையும், சிறிதும் எதிர்பாராமல் செயல்களில் ஈடுபடுவதே முக்கியமான தாகும்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகூர்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகூர்மாவதாரம்* 

 *பகுதி 02* 

               பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. அது சமயம் மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. தங்கள் தீவிர பக்தியின் காரணமாக அசுரர்களில் மரணமடைந்தவர்கள் எழுந்தனர். மேலும் அசுரகுரு சுக்ராச்சாரியார் அமுதபானம் கொடுத்து இறந்த தம் சீடர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார்.

       தேவர்களுக்கு அந்த சலுகை கிடைக்கவில்லை. இதனால் நிறைய தேவகணம் நஷ்டமாயிற்று. ஆகவே தேவர்களுக்கும் அமிர்தம் கிடைக்க வேண்டுமென ஸ்ரீஹரி விரும்பினார். போரில் தோல்வி பெற்றதோடன்றி இந்திரன் துர்வாச முனிவர் சாபத்திற்கும் ஆளாகி இருந்தான்.

 ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திலிருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தார்.  துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் ஸ்ரீமகாலட்சுமி தாயார் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார்.

       தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது. இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். 

         உடனே விஷ்ணு தேவர்களே! உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது மரணத்தை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள். அமிர்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நேரிடும், என்றார். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார். தேவேந்திரன் சில தேவர்களை அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி நோக்கி நடந்து போனான். எந்தவித ஆடம்பரமுமின்றி அரசருக்குரிய முறையில் டாம்பீகமான ஆடை அணிகலங்களின்றி மிகவும் எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான். நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோர் மந்திரமலையை பூமியில் வைத்து விட்டார்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது. 

        இதை அறிந்த ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு வந்தார். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவர்களைக் குணப்படுத்தினார். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார். வாசுகி என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். தேவர், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிரியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடையத் தொடங்கும் போது நாராயணன் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொண்டார். தேவர்களும் அவருடன் சேர்ந்து தலைப்புறமாக நின்றார்கள். இதைக் கண்ட அசுரத் தலைவர்கள் வாலைப் பிடிப்பது என்பது நம் நிலைக்கு இழுக்கு. அதனால் தாங்கள் தான் தலைப்பக்கம் நிற்போம் என்றனர். 

           ஸ்ரீஹரியும் தேவர்களும் பாம்பின் வால்பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தார். மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார். மறுபடியும் இருசாரர்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டார்கள். தேவர்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிர்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். தேவர்களுடன் தேவேந்திரன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அம்பலத்தரசே! நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை.

         ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிர்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தார். அம்பிகையே! பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே! பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.

           தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகூர்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகூர்மாவதாரம்* 

 *பகுதி 03* 

      ஆபத்து வருங்காலத்தில் ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து..' என்கிறார் வள்ளுவர்.

இந்த அரிய தத்துவத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே 'கூர்மம்' கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

      ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில், பகவான் விஷ்ணு கூர்மரின் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் அழகான குன்றினைப் போல் காட்சியளித்ததால், இவ்விடம் ஸ்வேதாசலம் என்றும் போற்றப்படுகிறது. ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர் முதலிய ஆச்சாரியர்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளதால் கூர்ம க்ஷேத்திரம் வைஷ்ணவர்களின் மத்தியில் மிகச்சிறந்த தீர்த்த ஸ்தலமாக விளங்குகிறது.

 *ஸ்தல வரலாறு* 

    கூர்ம க்ஷேத்திரத்தில் பகவான் கூர்ம தேவர் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டதன் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கின்றது. முன்னொரு காலத்தில் ஸ்வேதாசல பர்வதம் என்னும் மலையின் அருகே ஸ்வேத சக்ரவர்த்தி என்னும் மன்னர் வசித்து வந்தார். அவரின் மனைவியான விஷ்ணுபிரியா பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தாள். ஒருமுறை ஏகாதசி நாளன்று அவள் தனது மனதை ஒருநிலைப்படுத்தி விஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்தாள். அந்நாளில் சக்ரவர்த்தி ஸ்வேதர் தமது புலனின்ப விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்ள விரும்பி மனைவியை அணுகினார். ஆயினும், விஷ்ணுபிரியா தனது புனிதமான ஏகாதசி விரதத்தினைக் காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவை மனமுருகி வேண்டினாள்.

பகவான் விஷ்ணுவினால் அப்போது அங்கே உருவாக்கப்பட்ட நீரோடை அரசரை அரசியிடமிருந்து பிரித்தது. நீரோடை வெள்ளமாக மாற அரசர் ஸ்வேத மலைப் பகுதிக்குச் சென்றார். தவறை உணர்ந்த மன்னர் நாரத முனிவரின் கருணையினால் கூர்ம நாராயண மந்திரத்தைப் பெற்று கடுந்தவம் புரிந்தார், கூர்மதேவரின் தரிசனத்தைப் பெற்றார். ஸ்வேதரின் பக்தியில் பெரிதும் அகமகிழ்ந்த கூர்மதேவர் தமது சுதர்சன சக்கரத்தின் மூலம் ஓர் அற்புத குண்டத்தை ஏற்படுத்தினார். மன்னரின் விருப்பப்படி பகவான் அங்கே கூர்ம உருவில் சுயம்புவாகத் தோன்றினார். பிறகு பிரம்மதேவரின் தலைமையில் எல்லா தேவர்களும் ஒன்றுகூடி ஸ்ரீ கூர்மரை இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்தனர். ஸ்வேத புஷ்கரணி என்றழைக்கப்படும் இந்த அற்புத குண்டமானது இன்றும் கோயிலின் முன் அழகாகக் காட்சியளிக்கிறது.

     கோயிலின் முன்புறத்திலும் பின்புறத்திலும் கொடிமரம் அமைந்துள்ளது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். கிருஷ்ண கர்ணாம்ருதத்தை இயற்றியவரான பில்வமங்கள தாகூர் கோயிலினுள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர் மேற்கு புற மதில்சுவரின் அருகே பணிவுடனும் பக்தியுடனும் பிரார்த்தனை செய்ய, கிழக்கு நோக்கி இருந்த கூர்ம தேவர், பில்வமங்கள தாகூர் நின்றிருந்த மேற்கு திசை நோக்கி தரிசனம் அளித்தார். இக்காரணத்தினால் இரண்டு கொடிமரங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.

கோயிலின் இடதுபுறத்தில் பில்வமங்கள தாகூருக்கு ஒரு சிறிய சந்நிதியும் அமைந்துள்ளது. வைகுண்டவாசியான பில்வமங்கள தாகூர் இங்கே நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். ஐந்து நிலை கொண்ட கோபுரத்துடன் அழகாக காட்சியளிக்கும் கூர்ம தேவரின் கோயிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கியுள்ளது. இருநூற்றுபத்து தூண்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயிலின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 1,800 வருடத்திற்கு மேல் பழமையானதாகும். சுயம்பு மூர்த்தியான கூர்ம தேவரை மிக அருகில் சென்று அனைவரும் தரிசிக்கலாம் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

 *இராமானுஜரின் வருகை* 

      இராமானுஜர் கூர்ம க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்ததுகுறித்து நவத்வீப தாம மஹாத்மியம், பரிக்ரமா காண்டம், அத்தியாயம் பதினைந்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இராமானுஜர் ஜகந்நாத புரிக்கு வருகை புரிந்தபோது, ஒருநாள் ஜகந்நாதரின் விருப்பத்தால் கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தார். கூர்ம விக்ரஹத்தை முதலில் சிவலிங்கம் என்று கருதி இராமானுஜர் உபவாசம் இருந்தார். பின்னர், விக்ரஹத்திற்கு தலை, வால், சிறுகால்கள் இருப்பதைக் கண்டவுடன் அவர் கூர்ம தேவர் என்பதை அறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து வழிபாட்டினைத் தொடக்கி வைத்தார்.

மத்வாசாரியர் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்தபோது கூர்ம தேவருக்கு அருகில் சீதா இராமரின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்.

பகவான் இராமரின் புதல்வர்களான லவரும் குசரும் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர். பகவான் பலராமரும் வந்துள்ளார்.

210 தூண்களுடன கம்பீரமாகக் காட்சியளிக்கும் கோயிலின் கட்டமைப்பு.

 *சைதன்ய மஹாபிரபுவின் வருகை* 

       சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது 1512ஆம் ஆண்டு கூர்ம க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைதன்ய மஹாபிரபுவின் கூர்ம க்ஷேத்திர வருகையை நினைவூட்டும் வகையில் ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் 1930ஆம் ஆண்டு சைதன்ய மஹாபிரபுவின் திருப்பாத சின்னத்தை இவ்விடத்தில் நிறுவினார்.

      கூர்ம க்ஷேத்திரத்திலிருந்த கூர்ம பிராமணர், வாஸுதேவ பிராமணர் ஆகிய இருவரின் மூலமாக உலக மக்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டு, நாம் மற்ற ஜீவராசிகளிடம் செலுத்துவது உண்மையான கருணையாகும். இராமானுஜர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு என பலரும் வருகை புரிந்துள்ள கூர்ம க்ஷேத்திரத்திற்கு செல்பவர்களின் பக்தி ஸ்திரமாக அமையும் என்பது உறுதி.

இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளைமுதல்  ஸ்ரீவராகவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment