*தஸாவதாரம்*
*ஸ்ரீகிருஷ்ணாவதாரம்*
*பகுதி 03*
ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்-
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,* உன்னை-
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*பாசுர விசேஷம்:*
தேவகிக்கு மைந்தனாய் மதுராவில் பிறந்து, பிறந்த அன்றே கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாக வளர்ந்த மாயக்கண்ணனின் அவதாரப்பெருமையை சூடிக் கொடுத்த நாச்சியார் திருப்பாவையில் அழகாகப் பாடியுள்ளார் ! ஆதியும் அந்தமும் இல்லா அப்பரந்தாமன் 'பிறப்பு அற்றவன்' என்பது வேறு விஷயம் !
"ஒருத்தி மகனாய் பிறந்து" எனும்போது தேவகி என்னும் தெய்வத்தாயின் கர்ப்பத்தில், ஒரு ஜீவாத்மா போலவே உருவெடுத்துப் பிறந்த பரமாத்வாவின் உன்னதத் தன்மையை ஆண்டாள் சொல்கிறாள்.
ஜீவாத்மாக்கள் கர்மபலன் காரணமாகப் பிறப்பெடுக்கின்றனர். பரமனோ, தன் பரம அடியவரைக் காக்கவும், அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவும் இப்படிக் கண்ணனாகப் பிறப்பெடுத்தான்! மனிதரின் பிறப்பு அவரை பரமனிடமிருந்து பிரித்து வைக்கிறது. ஆனால், பரமனின் பிறப்போ, அவனை மனிதருக்கு அருகில் கொண்டு வருகிறது!
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - எப்படிப்பட்ட இரவு அது? வசுதேவர், சிறையில் பிறந்த சிசுவான கண்ணனை ஒரு கூடையிலிட்டு, இருளும், பெருமழையும், பேய்க்காற்றும் அவரை அலைக்கழிக்க, பெருக்கெடுத்து ஓடிய யமுனை ஆற்று வெள்ளத்தைக் கடந்து (அத்தூயப் பெருநீர் யமுனையும் பிளந்து அன்று பரமனுக்கு வழி விட்டதல்லவா?) பரமனை ஆய்ப்பாடியில் (இன்னொரு பாகவதையின் மகனாக வளர) கொண்டு சேர்த்த புண்ணிய இரவல்லவா அது! கண்ணனின் அவதார ரகசியம் இப்பாசுரத்தில் பொதிந்துள்ளதாக பெரியோர் கூறுவர். உபநிடதத்தில் பரமனின் அவதாரங்கள் குறித்துச் சொல்லப்பட்ட *"அஜாயமானோ பஹுதா விஜாயதே"* என்பதன் பொருள் *"பிறப்பில் பல் பிறவிப் பெருமான்"* என்பதாகும்! அதாவது, பிறப்பில்லாத பகவான் பலமுறை பிறக்கிறான் தன் சங்கல்பத்தால். நம் பிறவி கர்மம் காரணமாக இப்புவியில் தள்ளப்படுகிறோம், ஆனால் பகவான் தன் கருணையால் பிறவி எடுக்கிறார், பரமன் தன் பரம பக்தைகளின் வயிற்றில் பிறப்பதென்பதே ஒரு வித மாயை தான்!
ஆண்டாள் பேர் சொல்லாமல் தேவகியை "ஒருத்தி" என்கிறளே! காரணம் இருக்கிறது!
புண்ணியத் தாயான தேவகியின் வேண்டுகோளின் பேரிலேயே, தன்னுடைய தெய்வாம்சத்தை மறைத்துக் கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தான் கண்ணன். பரமனே மைந்தனாக வந்திருக்கிறான் என்று தெரிந்தும், பிறந்த கணமே, தெய்வக் குழந்தையை பிரிய வேண்டிய சூழ்நிலை தேவகிக்கு!
தேவகியின் பக்தியும், பேரன்பும் போற்றுதலுக்குரியது! அண்ணனான கம்சனால் தேவகி அனுபவித்த துன்பங்கள் தான் எத்தனை? அத்தனையையும், தன் கண்ணனுக்காகத் தாங்கிக் கொண்ட உத்தமத் தாய் அவள்!
தனது ஆறு குழந்தைகளை தனது அண்ணன் கல்லில் அடித்து கொன்ற குரூரத்தை நேரில் காணும் அவலத்துக்கு ஆளானவள் தேவகி.
அவளைப்போல் இன்னொருத்தி இல்லை என்பதாலேயே, ஆண்டாள் தேவகியை "ஒருத்தி" என்றாள்!
யசோதை தேவகியைக் காட்டிலும் பெருமை மிக்கவள். கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தான். ஆனால் யசோதையோ, கண்ணனை தாலாட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கி, அவனது ரசிக்கத்தக்க சிறுதொல்லைகளையும், பால லீலைகளையும் பக்கத்தில் இருந்து அனுபவிக்கும் பெரும்பேறு பெற்றவள்! தாய்க்கெல்லாம் தாயன்றோ அவள்! பரமனின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பெற்ற புண்ணியவதி அவள்!
கிருஷ்ண லீலைகள் அத்தனை இனிமை யானவை! கோகு லத்தில் தவழ்ந்த பால கிருஷ்ணனின் விளையா ட்டுகளில் மனதைப் பறி கொடுக்காத பக்தர்களே இல்லை எனலாம். கிருஷ்ணானுபவத்திலே மூழ்கித்
திளைத்த மகான்கள், அந்த மாயக்கண்ணனை நினைத்து, நினைத்து நெஞ்சுருகி, அவன் செய்த
குறும்புகள் யாவையும் மனக்கண்ணில் நிலை நிறுத்தி, தாங்கள் பெற்ற அந்த இன்ப அனுபவங்களையெல்லாம் மிகச் சிறந்த பாடல்களாக, உயர் தோத்திரங்களாக, கவிதா ரத்தினங்களாக படைத்துத்
தந்திருக்கிறார்கள். அத்தகைய மகான்களில், கேரளத்தைச் சேர்ந்த லீலா சுகரும் ஒருவர். 328 சுலோகங்கள் அடங்கிய "கிருஷ்ண கர்ணாம்ருதம்' என்ற நூல் அவரால் இயற்றப்பட்டது. "கர்ணாம்ருதம்' என்றால் "செவிக்கு அமுதம் போன்று இனியது' என்று பொருள். அந்த நூலிலிருந்து ஒரு சில துளிகள் இங்கே....! ஒரு சமயம், குழந்தை கிருஷ்ணன் அன்னை யசோதையின் மடியில் படுத்திருந்தான். "அம்மா! பசிக்கிறது. குடிக்கப் பால் கொடு' என்றான். "இப்போது ஏதும் இல்லையடா' என்கிறாள் தாய். "எப்பொழுது இருக்கும்?' எனக் கேட்கிறது குழந்தை. "ராத்திரியில் இருக்கும்' என்கிறாள் யசோதை. "ராத்திரி என்றாள் என்ன?' என்று ஒன்றும் அறியாதவன் போல வினவுகிறான் மாயக்கண்ணன்.
"ராத்திரி என்றால் இருட்டாக இருக்கும்' எனப் பதில் தருகிறாள் யசோதை. உடனே கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்ட குழந்தை, "ராத்திரி வந்துவிட்டது... கொடு' என்று அம்மாவின் புடவைத் தலைப்பை இழுத்து அடம் பிடித்ததாம். நான்கே வரிகள் அடங்கிய சமஸ்கிருத சுலோகத்தின் மூலம் இந்த நாடகம் முழுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் லீலாசுகர். கிருஷ்ணன் மண் தின்ற கதையை மற்றொரு சுலோகத்தின் மூலம் அற்புதமாகச் சித்தரிக்கிறார் லீலாசுகர். விளையாடச் சென்ற கண்ணன் "மண்ணைத் தின்றான்' என்ற புகார் வரவே, யசோதை கண்ணனைக் கூப்பிட்டு, "மண்ணைத் தின்றாயா? உண்மையைச் சொல்' என்று மிரட்டுகிறாள். "யார் சொன்னது மண்ணைத் தின்றதாக?' என்கிறான் மண்ணை உண்ட மாயன். "உன் அண்ணன் பலராமன் சொன்னான்' என்கிறாள் யசோதை. "அண்ணன் பொய் சொல்லுகிறான் அம்மா. வேண்டுமானால் என் வாயைப் பார்' என்று தனது பவளச் செவ்வாயைத் திறந்து காட்டுகிறான் கண்ணன். அந்த வாயினில் உலகம் அனைத்தையும் கண்டு மிகுந்த ஆச்சரியத்தை அடைகிறாள் யசோதை.
"அப்படி தாயை ஒரு நொடியில் பிரமிக்க வைத்து, (மீண்டும் மாயையால் அவளுடைய கண்களை மறைத்து) விந்தை புரிந்த அந்த கிருஷ்ணன் நம்மையெல்லாம் காப்பவனாக இருக்கட்டும்' என்கிறார் லீலாசுகர். இன்னொரு இனிமையான சம்பவத்தைக் காண்போம். கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக்கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி, "யார் நீ?' எனக் கேட்கிறாள். "பலராமனின் தம்பி' என்று சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை. "இங்கு எங்கு வந்தாய்?' என வினவுகிறார் அந்தப் பெண். "என் வீடு என நினைத்து நுழைந்துவிட்டேன்' என்கிறான் கண்ணன். ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா? அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். "அது சரி, வெண்ணெய் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?' என்கிறாள்.
"கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை. ஒரு வேளை அது இந்த வெண்ணெய் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்' என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன். கன்றுக்குட்டியை வெண்ணெய் இருக்குமிடத்தில் தேடிய அந்தக் குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள்? கோகுலத்திலே கிருஷ்ணன், வெண்ணெயை மட்டும் திருடவில்லை; கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால்தான் "தயிர், மோர், பால்' எனக் கூவி விற்க வேண்டிய ஒரு பெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த அன்பின் மிகுதியால் "கோவிந்தா, தாமோதரா, மாதவா' என கூவிக் கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர். கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் ஒவ்வொரு சுலோகமும் ஒரு அரிய ரத்தினமாகும். கிருஷ்ணனின் திருமேனி அழகைப் பற்றி லீலாசுகர் கூறுகிறார். "ஆலிலை மேல் பள்ளி கொண்ட அந்த பாலகிருஷ்ணன், தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற பாதத்தை எடுத்து, தாமரை போன்ற வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய முகுந்தனை தியானம் செய்வோம்' என்கிறார் லீலாசுகர். கிருஷ்ணனின் அழகிய உருவத்தினை நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும் வண்ணம் கூறுகிறது லீலாசுகரின் மற்றொரு அழகிய சுலோகம். நெற்றியில் கஸ்தூரி திலகம், மார்பில் கெüஸ்துப மணி, மூக்கு நுனியில் புதிய முத்து, கையில் புல்லாங்குழல், கையில் வளை, திருமேனி முழுவதிலும் சந்தனம், கழுத்தில் முத்துமாலை இவற்றையெல்லாம் அணிந்து கொண்டு, கோபிகைகள் சூழ வெற்றி வலம் வருவானாம் ஆயர் தலைவனான கோபால சூடாமணி. அந்தக் கோபால சூடாமணியை நம் மனக்கண்முன் கொண்டு வந்துவிட்டால் எல்லையற்ற இன்பத்தை நாமும் பெறலாமே!
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளைமுதல் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment