Thursday, July 1, 2021

Adhyatama ramayanam bala kandam part 6 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அத்யாத்ம ராமாயணம் - பால காண்டம்

அத்தியாயம் 6

அஹல்யை கௌதமருடன் சென்ற பின்பு விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுடன் மிதிலை சென்றார். அவர்களுடைய தேஜஸைக் கண்ட ஜனகர் அவர்கள் யாரென்று வினவ விஸ்வாமித்திரர் ராமனுடைய வீர செயல்களையும் அஹல்யையின் சாப விமொசனத்தைப் பற்றியும் கூறி ஜனகருடைய சிவதனுஸைப் பார்க்க வந்துள்ளனர் என்று கூறினார்.

உடனே ஜனகர் அதை எடுத்து வரும்படி கட்டளை பிறப்பித்து ராமன் அதை எடுத்து நாணேற்றுவானாகில் தன் மகளான சீதையை மணம் செய்து தருவதாகக் கூறினார்.
ராமன் பலர் கூடி எடுத்து வந்த அந்த வில்லை அனாயாசமாக எடுத்து நாணேற்ற, அது முறிந்த சப்தம் மூவுலகிலும் ப்ரதிபலித்தது.

வானத்து தேவர்கள் மலர் மாரி பொழிய தேவ துந்துபிகள் முழங்கின. ஜனகர் மிகுந்த மகிழ்வுற மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சீதை அங்கு வந்து ராமனுக்கு மாலையிட்டாள்.

விஸ்பவாமித்திரரின் அனுமதி பெற்று ஜனகர் தசரதருக்கு செய்தி அனுப்ப அவரும் பரிவாரம் சூழ மிதிலை வந்தார். சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும், மாண்டவி ஸ்ருதகீர்த்தி இவர்களை முறையே பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகர் சுபமுஹூர்த்தத்தில் மணம் செய்வித்தார்.

பிறகு ஜனகர் முன்பு நாரத மஹரிஷி சீதையைப் பற்றிக் கூறியதை விஸ்வாமித்திருக்கும் வசிஷ்டருக்கும் தெரிவித்தார். அவர் யாகத்திற்காக நிலத்தை உழுகையில் கொழு முகத்தில் கிடைத்த குழந்தையான சீதையை மகளாக வளர்த்து வரும்போது அங்கு வந்த நாரதர் ஒரு தேவ ரகசியத்தைக் கூறினார்.

நாராயணனே ராவணவதத்தின் பொருட்டு ராமனாக அயொத்தியில் அவதரித்ததாகவும் சீதை பகவானின் யோகமாயை என்றும் அவளை ராமனுக்கு மணமுடிக்கும்படியும் கூறிச் சென்றுவிட்டார். பிறகு அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்று சிந்தித்த ஜனகர் தன்னிடம் உள்ள சிவதனுஸ்ஸை யார் நாணேற்றுவாரோ அவருக்கே சீதையை மணமுடிப்பதாக அறிவித்தார்.

தன் பூர்வஜன்ம புண்ணிய பலனாக இந்த அனுக்ரஹம் கிடைத்ததாகக் கூறியவர் ராமனை ஸ்ரீமந்நாராயணனாக உணர்ந்து அவனைத் துதித்தார் .
"எவருடைய பாதங்களை அலம்பிய நீரை உட்கொண்டதனால் பிரமன் ஸ்ருஷ்டி செய்யும் திறன் படைத்தானோ , பலி இந்திரபதவி அடைந்தானோ, அஹல்யை சாபம் தீர்ந்தவள் ஆனாளோ, எவருடைய பாததூளியை சிரமேற்கொண்ட யோகிகள் காலத்தை வென்றார்களோ, தேவர்கள் துன்பம் தீர்ந்தார்களோ, அந்த பாதங்களை நான் சரணடைகிறேன்."

பின்னர் ராமனும் சீதையும் மற்றவர்களும் அயோத்திக்குப் புறப்பட்டார்கள். .

இந்த சீதா கல்யாணம் வால்மீகி, கம்பன் இவர்களின் சொல்லமுதத்தைப் பருகாமல் நிறைவேறாது அல்லவா! அதை அடுத்து காண்போம் .

  

No comments:

Post a Comment